Anjeneya Puranam

King Rama

ஆஞ்சநேய புராணம்
ஆசிரியர் பேரா. அ. திருமலைமுத்துசாமி

ஆஞ்சநேய புராணம்

ஆக்கியோன்
நூலகக் கலாநிதி, அருங்கலைக்கோன்
அறநெறிச் செல்வர், சைவ மணி
அ. திருமலைமுத்துசுவாமி

தொகுத்துப் பதிப்பித்தவர்
திருமதி பகவதி திருமலைமுத்துசுவாமி

நூலைப் பற்றி


⁠பேராசிரியர் அ. திருமலைமுத்து சுவாமி அவர்கள் சோளிங்கபுரத்தில் கடிகையில் வீற்றிருக்கும் ஆஞ்சநேய சுவாமியைப் பற்றி உள்ளம் உருகப் பாடிய “ஆஞ்சநேய புராணம்” என்னும் இச் சிறு நூலை, அடியவர்கள் படித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக தான் வெளியிடுகின்றேன்.

⁠ஆற்றல் மிகு ஆஞ்சநேய சுவாமிகளைப் பற்றிய இப்பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுகின்றவர்கள் தாயே அனைய கருணை உடைய ஆஞ்சநேய சுவாமிகளின் அருளைப் பெறுவார்கள். அத்துடன் அவர்கள் பேரின்பப் பெருவாழ்வு எய்துவார்கள்.

ஆதிபராசக்தி துணை
ஆஞ்சநேய புராணம்
அ. திருமலைமுத்துசுவாமி


காப்பு
(கட்டளைக் கலித்துறை)


மங்கா புகழ் நங்கைநல்லூரின் நல்லன்பர் நாயகனே
குங்கும மங்கல வைமெய்க் கணிந்திட்ட கோலத்தினய்
எங்களின் வித்தக னேவர சித்திவி நாயகனே
அங்கணன் மைந்த அனுமனைப் பாடற் கருளுவையே!

நூல்
(இணைக்குறளாசிரியப்பா)


ஆஞ்சநேய வாஅழ்க! ஐயன்தாள் வாழ்க !
புங்கமில் பெருங்குணத்தா னருந்தாள் வாழ்க!
என்றுமென் னெஞ்சி லிருப்பான்தன் தாள் வாழ்க !
அன்று கடிகையிலெனை யாண்டான் தாள் வாழ்க !

5 தன்றுயிர் தானறப் பெற்றான் தாள் வாழ்க !
மன்னுயிர் காக்கும் மாருதிதன் தாள் வாழ்க !
அழுக்கா றவாவறவே களைந்தான்றன் தாள் வாழ்க !
ஒழுக்க முயிரினு மோம்பினுன் தாள் வாழ்க !
அறனறிங் தான்றமைந்த அண்ணல் அடிவாழ்க !

10 திறனறிந்து தீதகற்றும் தீர னடிவாழ்க !
ஆழியா னருள் நின்ற வடியவன்றன் அடிவாழ்க !
பாழியந் தடங்தோள்ப் பாவனன் அடிவெல்க !
நிலையிற் றிரியாது நின்றான் அடிவெல்க !
கலையெல்லாம் கற்றான்றன் கவினார் அடிவெல்க !

15 வேண்டிய வேண்டியாங் கெய்துவிப்பான் அடிவெல்க !
யாண்டு மிடும்பை அகற்றுவான் அடிவெல்க !
பேராண்மை பெற்றான்தன் பெய்கழல்கள் வெல்க!
ஊராண்மை யுள்ளான் உயர்கழல்கள் வெல்க !
பொறிவாயில் ஐந்தவித்தான் பொற்கழல்கள் வெல்க!

20 நெறிநின்ற வித்தகன்தன் நீள்கழல்கள் வெல்க !
அருவுருவாய் அமைந்தான் அருங்கழல்கள் வெல்க!
குருவுமெனப் பொலிந்தான் குரைகழல்கள் வெல்க !
அறத்தாற்றில் நின்றான் அருங்கழல்கள் வெல்க!
புறத்தாற்றில் போகாதான் பூங்கழல்கள் வெல்க !

25 கரம்குவிவார் உள்ளக் கருத்தன் கழல்வெல்க !
சிரம்குவிவார் சிந்தையிலுறைவான் கழல்வெல்க !
அருந்தவ முடித்தான் அவனடி போற்றி!
இராமனை இதயத்தில் வைத்தா னடிபோற்றி!
ஆடல் மாக்களிறு அனையான் அடிபோற்றி!

30 பாடல் இசையொடு பயின்றான் அடிபோற்றி!
சீரார் சொல்லின் செல்வன் அடிபோற்றி !
பேரார் நரசிம்மப் பெருந்தொண்டன் அடிபோற்றி!
அறத்தார்க்கு அருள்செய் அமலன் அடிபோற்றி!
புறத்தாரைப் புறங்காணும் பொலனார் அடிபோற்றி!

35 கடலெனப் பரந்த கலைஞன் அடிபோற்றி!
அடலே றனையவெம் அத்தன் அடிபோற்றி!
அருமருந் தாதிவங் தாண்டான் அடிபோற்றி!
கருணையின் கடலே யனையான் அடிபோற்றி!
நன்றருளித் தீதகற்றும் நம்பி அடிபோற்றி!

40 என்றும் எவர்க்கு மருள்வான் அடிபோற்றி!
சீரிய னவனென் சிங்தையுள் கின்றன் !
நேரிலா அறிவன் அவன்தாள் வணங்கி
எங்கு நிறைந்தஎம் பெருமாற் பணிந்து
நங்கை நல்லூர் நாச்சியை வழுத்தி

45 அஞ்சு கரத்தனின் அருளது பெற்று
வெஞ்சமர் புரிந்த வேலனை நினைத்து
சங்குசக் கரத்தான் தாளினை பரவி
இங்கி ராமன்அடி யான்றிறல் பகர்வேன்.
அஞ்சிலே ஒன்று பெற்றவன்; அவன்தான்

50 அஞ்சலை யன்புச்சேய் அகில மெங்கணும்
பங்தெனப் பறந்து சென்றா னேர்நாள்
காயுங் கதிர்ஒர் கனியெனப் பாய
சேயெனப் பரிதியும் சினந்தில னிருந்தான்
கண்ணில் தெரிந்த ராகுவும் கனியென

55 நண்ணிட அமரர்கோன் சினந்துவச் சிரத்தால்
வாயு தநயனைப் புடைத்ததன் பின்னர்
தாய்போ லவனைப் பரிவுட னெடுத்து
‘அநுமன்’ என்று அன்புட னழைத்து
அந்தரத் தமரர் தமைவரம் பலவும்

60 சுந்தரற் கருளச் செய்தனன் ஐயனும்
அமரர்க் கமர னாகி யத்துடன்
தமர்அனை வர்க்கும் தண்ணளி சுரங்தான்
பரிவொடு பகலவன் பண்டை நூல் சொல்ல
பருகுமார் வலனாய்ப் படிவம் படித்து

65 பார்புகழ் பண்டித னாக விளங்கி
அரும்பிய துளவப் பைந்தா ரணிந்து
அரியின் அடியவ னாயினன் , அவன்தான்
மாட்சியில் மாபெரும் மலை யாவான்
காட்சியில் கயிலையங் கிரி யாவான்

70 பூத்த மரம்போல் பொன்பொலி மேனியன்
பொன்னெடுங் கிரிகள் போற் பொலிந்ததிண் தோளான்
அருந்தவ முடித்தங் காற்றல் மிகப்பெற்று
அரிக்குலத் தர்சன் அமைச்சனா யமர்ந்து
அரும்பணி யாற்றி நின்றா னவன்தன்

75 அருந்துயர் களைந்தான் , ஆரணிய மடைந்து
அன்பு மனைவியை இழந்தல் லலுற்று
என்பு மிளைத்திளை யோனுடன் திரிந்த
அன்பனை யடியாரிடர் நீக்கியைக் கண்டு
அன்பு கொண்டே யகனமர் காதலில்

80 அற்புத ரறியும் அற்புத னவனென
அறிந்தங் கவன்தன் அருந்துய ரகற்ற
ஓதநீர் கடந்து உறுபகை தடிந்து
வேதநா யகன்வெற்றிக் கடிகோ லினனால்
அன்னற் பூமகள் அடியவ னாகி

85 கள்ள வரக்கரைக் கருவறுத் திடுவான்
மன்னன் நடத்திய மாபெரும் போரில்
தன்பே ராற்றலால் தரணியள வுயர்ந்து
மருத்துமலை கொணர்ந்து மயங்கிய வீரரை
தருக்குட னெழச்செய்தே யுலகளித்தாய்

90 தங்தை வேகமும் தனதுநா யகன்சிலை
முந்துறும் ஆற்றலும் ஆசியும் கொண்டு
அவனி காவலற் காயமர் புரிந்து
புவனப் பூமக ளருளது பெற்று
மன்னற் கரியணை தாங்கு மாவீர !

95 நின்னடி தொழுதனன் நீயெனக் கருள் வாய் !

ஆஞ்சநேய புராணம் முற்றும்

சொற்குறிப்பு
அங்கனன் – சிவபெருமான்
அஞ்சிலே ஒன்று- ஐம்பூதங்களில் ஒன்றாகிய வாயு
அஞ்சுகரத்தான்- விநாயகர்
அடியார் இடர் நீக்கி – அடியார் துயர் நீக்கும் இராமபிரான்
அமரர்கோன் – இந்திரன்
அரிக்குலத்தரசன் – சுக்ரீவன்
அவனி காவலற்கு – இராமபிரானுக்கு
அள்ளற் பூமகள் – இலக்குமியாகிய சீதாப்பிராட்டி
அன்பனை – இராமபிரானை
அன்பு மனைவி – இராமபிரானின் மனைவி சீதாப்பிராட்டி
ஆழியான் – திருமால்
இளையோன் – இலக்குமணன்
ஊராண்மை – உபகாரியாந்தன்மை
ஐந்தவித்தான் – ஐந்து அவாவினையும் வெறுத்தவன்
கடிகை – சோளிங்கபுரமதில் உள்ள ஆஞ்சநேயர்மலை
காயுங்கதிர் – சூரியன்
சங்குசக்கரத்தான் – திருமால்.
தந்தை – வாயு பகவான்
தனது நாயகன் – இராமபிரான்
தானறப் பெற்றான் – தவமாகிய தன் கருமஞ்செய்தான்
நங்கைநல்லூர் நாயகி – இராஜராஜேஸ்வரி
புவனிநாதன் – இராமபிரான்
பேராண்மை – பெரிய ஆண்தகைமை
பொறிவாயில் – ஐம்பொறிகளின் வாயில்
மாருதி – அனுமன்
வித்தகன் – அறிஞன்
வேத நாயகன் – இராமபிரான்