தெய்வமணி மாலை
ஒருமையுட னினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவா ருறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும் பொய்ம்மைபேசா திருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனைமறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வினான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத் துள்வளர் தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே!