Siva Vakyar 200 to 300

——————————————————

சிவ வாக்கியார் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு தல யாத்திரை மத வாதம் வேதம் ஓதல் சாதி யாசாரம் முதலானவற்றை எதிர்த்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் உள்ளமே கோயில் என்னும் கொள்கையை அவர் உலகிற்கு உணர்த்துகிறார்.

——————————————————

210 வரை


ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே (201)

அங்கவிங்க பீடமும் அசவை மூன்று எழுத்தினும்
சங்கு சக்கரத்திலும் சகல வானத்திலும்
பங்கு கொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும்
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே (202)

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்கள்
அஞ்செழுத்தும்மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்து நெஞ்சழுத்தி அவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின் வண்ணம் ஆனதே சிவாயமே (203)

ஆதரித்த மந்திரம் அமைந்த ஆக மங்களும்
மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே (204)

அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ
மிக்க வந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே (205)

ஒன்பதான வாசல் தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே (206)

அள்ளி நீரை இட்டதேது அங்கையில் குழைத்ததேது
மெள்ளவே மிணமிண வென்று விளம்புகிற்கி மூடர்கள்
கள்ள வேடம் இட்ட தேது கண்ணை மூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர் (207)

அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
மின்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே
உன்னிதொக் குளழலும் தூமையுள் அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே (208)

அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த அவ்விடம் அழுக்கிலாத்து எவ்விடம்
அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோடு அணுகி வாழலாகுமே (209)

அனுத் திரண்ட கண்டமாய் அனைத்து பல்லி போனியாய்
மனுப்பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே (210)

220 வரை


ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே (211)

ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே
நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடி யூடுபோய்
எக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல்
பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே (212)

அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே (213)

அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்து நின்றது ஏதடா
நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீ செபிப்பது ஏதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே (214)

உயிரிருந்தது எவ்விடம் உடம்பெடுப்பதின் முனம்
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா (215)

சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப இன்பமுங் கடந்து சொல்லுமூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆறுபங்கயம் கலந்து அப்புறத் தலத்துளே (216)

உருத்தரிப்ப தற்குமுன் உயிர் புகுந்த நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன் அறிவு மூலா தாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே (217)

எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்று அணுகிலார்
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே (218)

அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே (219)

வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே (220)

230 வரை


அகார காரணத்திலே அனேகனேக ருபமாய்
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயக்குகின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே (221)

அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றைஒன்றி நின்றதோ
செவ்வைஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (222)

ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொருபம் அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே (223)

வானிலாத்து ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாத்து ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நானிலாத்து ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாத்து ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே (224)

சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல்முகந்து இருத்தியே
துன்ப இன்பமுங்கடந்து சொல்லும் நாடி யூடுபோய்
அழுத்தமான வக்கரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறுபங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே

விழித்த கண் குவித்தபோது அடைந்துபோய் எழுத்தெலாம்
விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை நாருமில்லை ஆனதே (225)

நல்லமஞ்சனங்கள் தேடி நாடி நாடி ஓடு றீர்
நல்லமஞ்சனங்களுண்டு நாதன் உண்டு நம்முளே
எல்லை மஞ்சனங்கள் தேடி ஏகபூசை பண்ணினால்
தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே (226)

உயிர் அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்ததற்கு முன்
உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்
உயிரினால் உடம்புதான் எடுப்பவாறு உரைக்கினே (227)

அண்டம் ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே
பண்டைமால் அயனுடன் பரந்து நின்று உழலவே
எண்திசை கடந்து நின்ற இரூண்டசத்தி உழலவே
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே (228)

உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே
கரியமாலும் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே (229)

பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைந்து வைத்து அளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே (230)

240 வரை
நாலதான யோனியும் நவின்ற விந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (231)

அருவமாய் இருந்தபோது அன்னை அங்கு அறிந்திலை
உருவமாய் இருந்தபோது உன்னை நான் அறிந்தனன்
குருவினால் தெளிந்து கொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே (232)

பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே (233)

கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே இருப்பனே மேவி அங்கு நிற்பனே
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே (234)

ஆடுநாடு தேடினும் ஆனை சேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடிஇட்ட பிச்சையும் உகந்து நெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல தர்மம் வந்து நிற்குமே (235)

எள இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம்
அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வஸ்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால்
மெள்ள வந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே (236)

ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமன தாய்க்கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பை வைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் பிரளிபாரும் பாருமே (237)

மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல்
குருக்கொடுத்த தொண்டரும் குகனொடிந்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டுபாடுதான் படுவரே (238)

அன்னை கர்ப்ப அறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய்
அந்தறைக்குள் வந்திருந்து அரியவிந்து ரூபமாய்
தன்னை ஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே

உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ
உள்ள மீது உறைந்தெனை மறைப்பிலாத சோதியை
பொன்னைவென்ற பேரெளிப் பொருவிலாத ஈசனே
பொன்னடிப் பிறப்பில்லாமை என்று நல்க வேணுமே (239)

பிடித்ததொண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோலம் அத்தை விட்டு சாதிபே தங்கொண்மினோ
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மை கூற வல்லிரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்று கூடலாகுமே (240)

250 வரை
சத்தி நீ தயவும்நீ தயங்குசங்கின் ஓசை நீ
சித்தி நீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்து நீ
முத்திநீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே (241)

சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொஸ்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே
நிட்டை ஏது ஞானமேது நீரிருந்த அக்ஷரம்
பட்டை ஏது சொல்லிரே பாதகக் கபடரே (242)

உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்து நீரதானதும்
தண்மையான காயமே தரித்து உருவம் ஆனதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே (243)

வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிவிலாத மாந்தர்காள்
வஞ்சகம் பிறவியை வதைத்திடவம் வல்லிரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்து கொள்ள லாகுமே (244)

காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே (245)

பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின் றபேயர்காள்
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுதோ
ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுதோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே (246)

மூல மண்டலத்திலே முச்சதுரம் ஆதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம்
கோலி எட்டி தழுமாய் குளிர்ந் தலர்ந்த தீட்டமாய்
மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே (247)

ஆதிகூடு நாடிஓடி காலைமாலை நீரிலே
சோதி மூலமான நாடி சொல்லிறந்த தூவெளி
ஆதிகூடி நெற்பறித்த காரமாதி ஆகமம்
பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே (248)

பாங்கினோடு இருந்து கொண்டு பரமன் அஞ்செழுத்துளே
ஓங்கிநாடி மேல் இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில் வெட்டி நார் உரித்து முச்சில் செய்விதத்தினில்
ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்துணர்ந்து கொள்ளுமே (249)

புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடுமன்னுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லிரேல்
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே (250)

260 வரை


அம்பலங்கள சந்தியில் ஆடுகின்ற வம்பனை
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பன் ஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்ற ஆதி நாயனே
உன்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே (251)

அண்ணலாவது ஏதடா அறிந்துரைத்த மந்திரம்
தண்ணலாக வந்தவன் சகல புராணம் கற்றவன்
கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன்
ஒண்ணதாவது ஏதடா உண்மையான மந்திரம் (252)

உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்
உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாசலைத் திறந்து காணவேணும் அப்பனே (253)

ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே (254)

என்னகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னே நான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னை அன்றி யாதுமென்றும் இல்லையே (255)

விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கும் ஆறுபோல்
என்னுள் நின்றும் எண்ணும் ஈசன் என்னகத்து இருக்கையால்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
என்னுள் நின்ற என்னையும் யான்றிந்தது இல்லையே (256)

அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே (257)

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புனல்சுழல்
விட்டு வீழில் தாகபோக விண்ணில் மண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதலின்பம் ஆகுமே (258)

ஏகமுத்தி மூன்று முத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தாய்
நாகமுற்ற சயனமாய் நலங் கடல் கடந்த தீ
யாகமுற்றி ஆகி நின்ற தென்கொலாதி தேவனே (259)

மூன்று முப்பது ஆறினோடு மூன்று மூன்று மாயமாய்
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்
தோன்றுசாதி மூன்றதாய் துலக்கமில் விளக்கதாய்
ஏன்றனாவின் உள்புகுந்த தென்கொலோ நம் ஈசனே (260)

270 வரை


ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவற்றுள் ஆயுமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்தும் நின்ற நீ
ஐந்தும் ஐந்தும் ஆயநின்னை யாவர் காண வல்லரே (261)

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறுசீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாமாயம் மாயனே (262)

எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்ற ஆதிதேவனே
எட்டுமாய் பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே (263)

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஒன்பதாய்
பத்து நாற் திசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையா
பத்துமாய் கொத்தமோடும் அத்தலமிக் காதிமால்
பத்தர்கட்க லாதுமுத்தி முத்தி முத்தியாகுமே (264)

வாசியாகி நேசம் ஒன்றி வந்தெதிர்ந்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பவங்களில்
வீசிமேல் நிமிர்ந்த தோளியில்லையாக்கி னாய்கழல்
ஆசையால் மறக்கலாது அமரர் ஆகல் ஆகுமே (265)

எளியதான காயமீதும் எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான ஜோதியும் குலாவிநின்றது அவ்விடம்
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே (266)

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே (267)

பொய்யுரைக்க போதமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தில் உண்மை தன்னை வாய்திறக்க அஞ்சினேன்
நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே (268)

ஒன்றை ஒன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லிரேல்
அன்றுதேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே (269)

மச்சகத்து ளே இவர்ந்து மாயைபேசும் வாயூவை
அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்தி கொள்விரேல்
அச்சகத்து ளேயிருந்து அறுஉணர்த்தி கொண்டபின்
இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே (270)

280 வரை


வயலிலே முளைத்த நெல் களையதான வாறுபோல்
உலகினோரும் வண்மைகூறில் உய்யுமாறது எங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே (271)

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்று நீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடுநாடு வீடுவீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே (272)

ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற மதிப்புறம்
தேடுநாலு வேதமும் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்றதோர் நிலைகளும்
ஆடுவாழின் ஒழியலா தனைத்தும் இல்லை இல்லையே (273)

ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானும் அப் பரத்துளே (274)

ஏழுபார் எழுகடல் இடங்கள் எட்டு வெற்புடன்
குழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிர்மாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே (275)

கயத்துநீர் இறைக்குறீர் கைகள் சோர்ந்து நிற்பதேன்
மனத்துள் ஈரம் ஒன்றில்லாத மதியிலாத மாந்தர்காள்
அகத்துள் ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லிரேல்
நினைத்திருந்த வோதியும் நீயும் நானும் ஒன்றலோ (276)

நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்
ஆரை உன்னிநீரெலாம்அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழும்
சீரை உன்ன வல்லிரேல் சிவபதம் அடைவிரே (277)

பத்தொடுற்ற வாசலில் பரந்து மூல வக்கர
முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே
மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே
அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே (278)

அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியை
குணமதாகி உம்முளே குறித்திருக்கில் முத்தியாம்
முணமுணென்று உம்முளே விர லைஒன்றி மீளவும்
தின ந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே (279)

மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது மூடரே
காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ (280)

290 வரை


முச்சதுர மூலமூகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுரம் ஆகியே அடங்கியோர் எழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே (281)

வண்டுலங்கள் போலும்நீர் மனத்துமாசு அறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகிறீர்
பண்டும் உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே (282)

நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே (283)

பொருந்துநீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம்
எருதிரண்டு கன்றை ஈன்ற வேகமொன்றை ஓர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற யாவையும் அறிந்திலீர்
குருவிருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே (284)

அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய் பரந்து நின்ற சிற்பரமும் நீயலோ
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே (285)

ஈரொளிய திங்களே இயங்கி நின்றது அப்புறம்
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர்
காரொளிப் படலமும் கடந்துபோன தற்பரம்
பேரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே (286)

கொள்ளொணாது மெல்லொணாது கோதறக் குதட்டடா
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்ளொணாத பொருளை நான் விளம்புமாறது எங்ஙனே (287)

வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கை எங்கள் நோக்குமே (288)

உள்ளினும் புறம்பினும் உலகம் எங்ஙணும் பரந்து
எள்ளில் எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான்
மெள்ளவந்து என்னுட் புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே (289)

வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால்
போதம் நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்
சோதியுள் ஒளியுமாய்த் துரியமொடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே (290)

300 வரை

சாண் இரு மடங்கினால் சரிந்த கொண்டை தன்னுளே 
பேணி அப்பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர் 
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லிரேல் 
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே (291) 

அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால் 
நெஞ்சு கூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே 
அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால் 
அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே (292) 

அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம் 
சக்கரத்து சிவ்வையுண்டு சம்புளத் திருந்ததும் 
எள்கரந்த எண்ணெய்போய் எவ்வெழுத்தும் எம்பிரான் 
உள்கரந்து நின்ற நேர்மை யாவர் காணவல்லரே (293) 

ஆகமதின் உட் பொருள் அகண்டமூலம் ஆதலால் 
தாகபோகம் அன்றியே தரித்ததற் பரமும் நீ 
ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே 
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே (294) 

மூலவாசல் மீதுளே முச்சதுரம் ஆகியே 
நாலுவாசல் எண்விரல் நடுஉதித்த மந்திரம் 
கோலம் ஒன்றும் அஞ்சுமாகுமெ இங்கலைந்து நின்ற நீ 
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே (295) 

சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே 
அக்கரத் தடியுளே அமர்ந்த ஆதிசோதி நீ 
உக்கரத் தடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே 
அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே (296) 

குண்டலத்து ளேயுளே குறித்தகத்து நாயகன் 
கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை 
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள் 
கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் அல்லது இல்லையே (297) 

சுற்றும் ஐந்து கூடமொன்று சொல்லிறந்ததோர்வெளி 
சக்தியும் சிவனுமாக நின்றதன்மை ஒக்கிலீர் 
சக்தியாவது உம்முடல் தயங்குசீவ னுட்சிவம் 
பித்தர்காள் அறிந்திலீர் பிரான் இருந்த கோலமே (298) 

மூலம் என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே 
நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே 
ஆலம்உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால் 
ஓலம் என்ற மந்திரம் சிவாயம் அல்லது இல்லையே (299) 

தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள் 
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ 
முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின் 
அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே (300)