Siva Vakyar 400 to 526

——————————————————

சிவ வாக்கியார் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு தல யாத்திரை மத வாதம் வேதம் ஓதல் சாதி யாசாரம் முதலானவற்றை எதிர்த்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் உள்ளமே கோயில் என்னும் கொள்கையை அவர் உலகிற்கு உணர்த்துகிறார்.

——————————————————

410 வரை
சுற்றி ஐந்து கூடம் ஒன்று சொல்லிறந்த தோர் வெளி
சத்தியும் சிவமுமாகி நின்ற தன்மை ஓர்கிலீர்
சத்தியாவது எம்முடன் தயங்குசீவன் உட்சிவம்
பித்தர்காள் அறிந்துகொள்பிரான் இருந்த கொலமே (401)

அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகாரமானது அம்பலம் வடிவமானது அம்பலம்
சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே (402)

சக்கரம் பறந்ததோடி சக்கரமேல் பலகாயாய்
செக்கிலாமல் எண்ணெய்போல சிங்குவாயு தேயுவு
முக்கிலே ஒளிகலந்து உகங்களும் கலக்கமாய்
புக்கிலே புகுந்தபோது போனவாறது எங்ஙனே (403)

வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர்
அருள்கொள்சீவ ராருடம்பு உடைமையாகத் தோர்வீர்காள்
விளங்குஞானம் மேவியே மிக்கோர் சொல்லைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே (404)

நாலுவேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ
நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய்
ஆலம்உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சால உன்னிநெஞ்சுளே தரித்ததே சிவாயமே (405)

சுற்றம் என்று சொல்வதும் சுருதி முடிவில் வைத்திடீர்
அத்தன் நித்தம் ஆடியே அமர்ந்திருந்தது எவ்விடம்
பத்திமுற்றி அன்பர்கள் பரத்தில் ஒன்றுபாழது
பித்தரே இதைக்கருதி பேசலாவது எங்ஙனே (406)

எங்ஙஙனே விளக்கதுக்குள் ஏற்றவாறு நின்றுதான்
எங்ஙனே எழுந்தருளி ஈசன்நேசர் என்பரேல்
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கம் அண்மி யானை போலத் திரிமலங்கள் அற்றவே (407)

அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும்
மெத்ததீபம் இட்டதில் பிற வாதபூசை ஏத்தியே
நற்றவம் புரிந்து ஏக நாதர் பாதம் நாடியே
கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளும் உம்முளே (408)

பார்த்துநின்றது அம்பலம் பரமன் ஆடும் அம்பலம்
கூத்துநின்றது அம்பலம் கோரமானது அம்பலம்
வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம்
சீற்றமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே (409)

சென்று சென்று இடந்தோறும்சிறந்த செம்பொன் அம்பலம்
அன்றும் இன்றும் நின்றதோர் அனாதியான அம்பலம்
என்றும் என்றும் இருப்பதோர் உறுதியான அம்பலம்
ஒன்றி ஒன்றி நின்றதுள் ஒழிந்ததே சிவாயமே (410)

420 வரை


தந்தைதாய் தமரும் நீ சகலதே வதையும் நீ
சிந்தைநீ தெளிவும்நீ சித்தி முத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய வேதம் நீ
எந்தைநீ இறைவன்நீ என்னை ஆண்ட ஈசனே (411)

எப்பிறப்பி லும்பிறந்து இறந்து அழிந்த ஏழைகாள்
இப்பிறப்பிலும்பிறந்து என்ன நீறு பூசுறீர்
அப்புடன் மலம் அறுத்து ஆசை நீக்க வல்லிரேல்
செப்புநாத ஓசையில் தெளிந்துகாணல் ஆகுமே (412)

எட்டுயோகம் ஆனதும் இயங்குகின்ற நாதமும்
எட்டு அக்கரத்துளே உகாரமும் மகாரமும்
விட்டலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்
அட்ட அக்ஷரத்துளே அமர்ந்ததே சிவாயமே (413)

பிரான்பிரான் என்றுநீர் பினத்துகின்ற மூடரே
பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே
பிரானுமாய் பிரானுமாய் பேருலகு தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல் (414)

ஆதியில்லை அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழுத்தும் இல்லையே (415)

அம்மையப்பன் அப்ப நீர் அமர்ந்தபோது அறிகிலீர்
அம்மையப்பன் ஆனநீர் ஆதியான பாசமே
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை ஆனபின்
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை இல்லையே (416)

நூறுகோடி மந்திரம் நூறு கோடி ஆகமம்
நூறுகோடி நாளிருந்து ஊடாடினாலும் என் பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்ததாய்
சீரை ஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் (417)

முந்த ஓர் எழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுடர்
அந்த ஓர் எழுத்துளே பிறந்துகாயம் ஆனதும்
அந்த ஓர் எழுத்துளே ஏகமாகி நின்றதும்
அந்த ஓர் எழுத்தையும் அறிந்துணர்ந்து கொள்ளுமே (418)

கூட்டம் இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர்
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென் எழுத்துளே
நாட்டம் இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மை ஆணை உண்மையே (419)

காக்கை மூக்கை ஆமையர் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்
ஏக்கை நோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்தபார்த்த திக்கெல்லாம் பரப்பிரமம் ஆனதே (420)

430 வரை


ஓசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே (421)

ஓட்டுவைத்து கட்டி நீர் உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கர்ந்தன் அங்கு வாழுமோ
எட்டும் எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டம் இட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே (422)

இந்த ஊரில் இல்லை என்று எங்குநாடி ஓடுறீர்
அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே
அந்தமான பொந்திலாரில் மேவி நின்ற நாதனை
அந்தமான சீயில் அவ்வில்அறிந்துணர்ந்து கொள்ளுமே (423)

புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்குசட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்ந்திடில்
அக்குமணி கொன்றைசூடி அம்பலத்துள் ஆடுவார்
மிக்க சோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே (424)

பின்னெழுந்த மாங்கிசத்தை பேதையர் கண்பற்றியே
பின்புமாங் கிஷத்தினால் போகமாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தான் சூழ்ந்திடும்பின் என்றலோ
அன்பராய் இருந்த பேர்கள் ஆறுநீந்தல் போல்விடே (425)

விட்டிருந்த தும்முளே விதனமற்று இருக்கிறீர்
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசல் ஒன்று
கட்டி வைத்த வாசலும் கதவு தாள் திறந்துபோய்த்
திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிஷத்துளே (426)

ஆகும்ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி ஏத்தி நிற்க வல்லிரேல்
பாகுசேர் மொழி உமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர் (427)

உண்மையான தொன்ற தொன்றை உற்றுநோக்கி உம்முளே
வண்மையான வாசியுண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல்
தண்மைபெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும்
கன்மதன்மம் ஆகும் ஈசர் காட்சிதானுங் காணுமே (428)

பாலகனாக வேணும் என்று பத்திமுற்றும் என்பரே
நாலுபாதம் உண்டதில் நனைந்திரண்டு அடுத்ததால்
மூல நாடி தன்னில் வன்னி மூட்டி அந்த நீருண்
ஏலவார் குழலியோடே ஈசர்பாதம் எய்துமே (429)

எய்து நின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்த வல்லிரேல்
எய்தும் உண்மை தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்
மைஇலங்கு கண்ணிபங்கன் வாசிவானில் ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறும் அது திண்ணமே (430)

440 வரை தொகு
திண்ணம் என்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல் அன்புளன்புருகி அறிந்து நோக்கலாயிடும்
மண்ணதிர விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணி எங்கள் ஈசனும் நமதுடலில் இருப்பனே (431)

இருப்பன் எட்டெட் டெண்ணிலே இருந்து வேறது ஆகுவன்
நெருப்புவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவான்
கருப்புகுந்து காலமே கலந்த சோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே (432)

கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள்
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால்
உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே (433)

தெளிந்தநற் சரியை தன்னில் சென்றுசா லோகம்பெறும்
தெளிந்தநற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே
தெளிந்தநல்ல யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே (434)

சேருவார்கள் ஞானம் என்று செப்புவார் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மை என்றது இல்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டு நாலும் செய்தொழில் திடப்படே (435)

திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே
குறியதனைக் காட்டி உள்குறித்து நோக்கவல்லிரேல்
வெறிகமழ் சடையுடை யோன்மெய்ப்பதம் அடைவரே (436)

அடைவுளோர்கள் முத்தியை அறிந்திடாத மூடரே
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ
மடைதிறக்க வாரியின் மடையில் ஏறுமாறுபோல்
உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றிடே (437)

ஊன்றியேற்றி மண்டலம் உருவிமூன்று தாள் திறந்து
ஆன்றுதந்தி ஏறிடில் அமுர் தம் வந்து இறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர்பரம் பொருந்தி வாழ்வதாகவே (438)

ஆகமூல நாடியில் அனல்எழுப்பி அன்புடன்
மோகமான மாயையில் மியல்வதும் ஒழிந்திடில்
தாகமேரு நாடி ஏகர் ஏகமான வாறுபோல்
ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே (439)

அறிந்து நோக்கி உம்முளே அயன் தியானம் உம்முளே
இருந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரும் உம்முளே (440)

450 வரை தொகு
சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல்
சோதிவந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடும்
ஆதிசக் கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே (441)

திருவுமாய் சிவனுமாய் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கனமவாதனை யெலாம்
ப,உதிமுன் இருளதாய் பறியும் அங்கி பாருமே (442)

பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்து தேடி மால் அயன்
பார் இடந்து விண்ணிலே பறந்தும் கண்டது இல்லையே (443)

கண்டிலாது அயன்மால் என்று காட்சியாகச் சொல்லுறீர்
மிண்டினால் அரனுடன் மேவலாய் இருக்குமோ
தொண்டுமட்டும் அன்புடன்தொழுது நோக்க வல்லீரேல்
பண்டுமுப் புரம் எரித்த பத்தி வந்து முற்றுமே (444)

முற்றுமே அவன் ஒழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்று தன்னை பற்றிநிற்க வல்லது
கற்றதாலே ஈசர்பாதம் காண லாயிருக்குமோ
பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே (445)

கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலத்துளே
வாட்டம் உள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியாகும் விளங்கவந்து நேரிடும்
கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே (446)

எழுப்பி மூல நாடியை இதப்படுத்தலாகுமோ
மழுப்பிலாத சபையை நீர் மலித்துவாங்க வல்லிரேல்
சுழுத்தியும் கடந்துபோய் சொப்பன த்தில் அப்புறம்
அழுத்தி ஓர் எழுத்துளே அமைப்பது உண்மை ஐயனே (447)

அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல்
நல்லஈசர் தாள் இணைக்கு நாதனுக்கும் ஈந்திலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருத்தினால்
தொல்லையாம் வினைவிடென்று தூர தூரம் ஆனதே (448)

ஆனதே பதியது அற்றதே பசுபாசம்
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ
ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே (449)

உலாவும் உவ்வும் மவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்
உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும்
நிலாவும் அங்கு நேசமாகி நின்றமுர் தம் உண்டுதாம்
குலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே (450)

460 வரை தொகு
கும்பிடும் கருத்துளே குகனை ஐங்கரனையும்
நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவணைத்
தும்பிபோல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே (451)

நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்தடர்ந்த பாவமும்
ஓங்காரத்தின் உள்ளிருந்த ஒன்பதொழிந் தொன்றிலத்
தூங்கீசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே (452)

கருக்கலந்த காலமேகண்டு நின்ற காரணம்
உருக்கலந்த போதலோ உன்னை நான் உணர்ந்தது
விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கிசைந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ (453)

ஞான நூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள்
ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர்
ஞானம் ஆகி நின்றதோர் நாதனை அறிந்தபின்
ஞானம் அல்லது இல்லை வேறு நாம் உரைத்தது உண்மையே (454)

கருத்தரிப்பதற்கு முன் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருட்பொதிந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடம்
உருப்புணர்ந்த ஞானிகள் விரித்துரைக்க வேணுமே (455)

கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்
மருவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்
உருவினைப் பயன் இதென்று உணர்ந்த ஞானி சொல்லுமே (456)

வாயில் எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில் போன வாறதென்ன எவ்விடம்
வாயில் எச்சில் அல்லவோ நீர் உரைத்த மந்திரம்
நாதனை அறிந்தபோது நாடும் எச்சில் ஏது சொல் (457)

தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கிருந்தது எவ்விடம் சுத்தியானது எவ்விடம்
தொடக்கிருந்த வாறறிந்து சுத்திபண்ண வல்லிரேல்
தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்து காணலாகுமே (458)

மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபேதமாய் உருத்தரிக்கும் ஆறுபோலவே
வேதம் ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே (459)

வகைக்குலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக் குலங்கள் ஆன நேர்மை நாடியே உணர்ந்தபின்
மிகைத்தசுக்கிலம் அன்றியே வேறு ஒன்று கண்டிலீர்
. . . (460)

470 வரை தொகு
ஓதும் நாலு வேதமும் உரைத்த சாஸ்திரங்களும்
பூததத் துவங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம் ஆகியே பிறந்து உழன்று இருந்ததே (461)

உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என்
புறம்பும் உள்ளும் எங்கணும் பொதிந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்பதும் ஏதும் இல்லையே (462)

அங்கலிங்கம் பூண்டு நீர் அகண்ட பூசை செய்கிறீர்
அங்கலிங்கம் பூண்டு நீ அமர்ந்திருந்த மார்பனே
எங்கும் ஓடி எங்கும் எங்கும் ஆடழிந்து மாய்கிறீர்
செங்கல் செம்பு கல்லெலாம் சிறந்து பார்க்கும் மூடரே (463)

தீட்டம் தீட்டம் என்று நீர் தினம் முழுகும் மூடரே
தீட்டமாகி அல்லவோ திரண்டு காயம் ஆனது
பூட்ட காயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டு வந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே (464)

உந்திமேலே நாலுமூன்று ஓம் நம சிவாயமாம்
சந்தி சந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
முந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்தி சந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே (465)

வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும்
கன்னியான துள்ளிருக்கக் காதல் கொண்டது எவ்விடம்
சென்னிநாலு கையிரண்டுசிந்தையில் இரண்டில் ஒன்று
உன்னி உன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே (466)

தொண்டு செய்து நீங்களும் சூழ ஓடி மாள்கிறீர்
உண்டு உழன்று நம்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுளாடு சோலை சூழ் வாழும் எங்கள் நாதனும்
பண்டுபோல நம்முளே பகுத்திருப்பன் ஈசனே (467)

பரம் உனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா
கரம் உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே
உரம் எனக்கு நீ அளித்த உண்மை உண்மை உண்மையே (468)

மூலவட்ட மீதிலே முளைத்த ஐந்து எழுத்திலே
கோலவட்டம் மூன்றுமாய்க் குளிர்ந்தலர்ந்து நின்ற தீ
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானி மேலதாய்
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே (469)

முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
அச்சதுரம் உம்முளே அடங்கவாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம் நமசிவாயமே (470)

480 வரை தொகு
இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும் ஞானம் எவ்விடம்
அடங்குகின் றது எவ்விடம் அறிந்து பூசை செய்யுமே (471)

புத்தகங்களைச் சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்
செத்திடம் பிறந்திடம் அது எங்ஙன் என்றுஅறிகிலீர்
அத்தனைய சித்தனை அறிந்து நோக்க வல்லிரேல்
உத்தமத் தூள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே (472)

அருளிலே பிறந்துதித்து மாயைருபம் ஆகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லிரேல்
மருள் அது ஏது வன்னியின் மறைந்ததே சிவாயமே (473)

தன்மசிந்தை ஆம் அளவும் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தமிழ்ந்த கசடரே
சென்ம சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்து காண வேண்டுமே (474)

கள்ளவுள்ள மேயிருக்க கடந்த ஞானம் ஓதுவீர்
கள்ளம்உள் அறுத்தபோது கதி இதன்றிக் காண்கிலீர்
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லிரேல்
தெள்ளுஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே (475)

காண வேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணும் என்றவ் வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்றசீவன் தான்சிவம் அதாகுமே (476)

அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாக உம்முளே குறித்து நோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலை எண்ணி மீளொணாத மயக்கமாய்
துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர் (477)

எச்சில் எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும்
வைத்த எச்சில் தேனலோ வண்டின் எச்சில் பூவலோ
கைச்சுதாவில் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே (478)

தீர்த்தலிங்கமூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே
தீர்த்தலிங்கம் உள்ளில் நின்ற சீவனைத் தெளியுமே
தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லிரேல்
தீர்த்தலிங்கம் தான் அதாய்ச் சிறந்ததே சிவாயமே (479)

ஆடுகொண்டு கூறு செய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல்
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடுதர்ப்பபூசை என்ன பூசை என்ன பூசையே (480)

490 வரை தொகு
என்னை அற்ப நேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமோ
உனது நாட்டம் எனதுநாவில் உதவி செய்வீர் ஈசனே (481)

எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே
எந்தைபூர ணப்பிரகாசர் ஏகபோகம் ஆகியே
நல்லின்ப மோனசாக ரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தம் உண்டு நான் அழிந்து நின்றநாள் (482)

ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லிரேல்
ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம்
வான நாடும் ஆளலாம் வண்ண நாடார் ஆணையே (483)

நித்தமும் மணி துலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்
எத்தனை பேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ
அத்தனுக்கு இது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே (484)

எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லிரேல்
கட்டமான பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே (485)

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீற தானதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே (486)

பன்னிரண்டு நாள் இருத்திப் பஞ்சவன்னம் ஒத்திட
மின்னி அவ்வெளிக்குள் நின்று வேரெடுத்து அமர்ந்தது
சென்னியான தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரமம் ஆவரே (487)

தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டு மூண்டெழுந்த தீச்சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்து நின்றது எவ்விடம்
இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது எங்ஙனே (488)

முத்திசித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அப்புலன்
அத்தனித்த காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே (489)

வல்லவாசல் ஒன்பதும் மருத்தடைத்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்பது இல்லையே (490)

500 வரை தொகு
வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம்
உண்டுளே அடங்கும் வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க்
கண்டுகண்டு வேரிலே கருத் தொடுங்க வல்லிரேல்
பண்டுகொண்ட வல்லினை பறந்திடும் சிவாயமே (491)

ஓரெழுத்தி லிங்கமாகஓதும் அக் கரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே (482)

தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்
பாரபார பாரம் என்று பரிந்திருந்த பாவிகாள்
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே (493)

குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள் தோறும் மூழ்குறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின்மா சறுக்கிலீர்
மண்டை ஏந்துகையரை மனத்திருத்த வல்லிரேல்
பண்டைமால் அயன் தொழப்பணிந்து வாழ லாகுமே (494)

கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றை ஈன்ற அம்பலத்துள் ஆடுதே
மாடுகொண்டு வெண்ணெய் உண்ணும் மானிடப் பசுக்களே
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே (495)

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ (496)

நானும் அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன்
வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே
நானும் நீயும் ஒத்தபோது நாடிக்காண லாகுமோ
தானதான தத்ததான நாதனான தான்னா (497)

நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான்
நல்லதென்ற போத்து நல்லதாகி நின்றுபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே (498)

பேய்கள் கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா
நாய்கள்பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால்
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கிப்பாரும் உம்முளே (499)

உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில் நீ
அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா
தப்பிலிப்பொய் மானம் கெட்ட தடியனாகும் மனமேகேள்
ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே (500)

510 வரை தொகு
பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ
நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே (501)

சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத்
திட்டநெட்டு எழுத்தறியாது ஏங்கிநோக்கு மதவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ
கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏதுகாண் (502)

வேதம் ஓது வேலையோ வீணதாகும் பாரிலே
காதகாத தூரம் ஓடிக் காதல் பூசை வேணுமோ
ஆதிநாதன் வெண்ணெயுண்ட அவனிருக்க நம்முளே
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே (503)

பரம் இலாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம்
அறம் இலாத பாவிகட்குப் பரம் இலை அது உண்மையே
கரம் இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது
பரம் இலாத சூன்யமாகும் பாழ் நரகம் ஆகுமே (504)

மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர் வாழ் சிறக்குமே
மாதராகுஞ் சத்தியொன்று மாட்டிக் கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே (505)

சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள்
சித்தர் இங்கு இருந்தபோது பித்தன் என்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்தும் என்ன பித்தன் நாட்டிருப்பரே
அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலாமொன்றே (506)

மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே
சாந்தனான ஆவியை சரிப்படுத்த வல்லிரேல்
வேந்தன் ஆகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம்
கூந்தலம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இது உண்மையே (507)

சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்
சருகருந்தி தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே (508)

காடுமேடு குன்றுபள்ளம் கானின் ஆறகற்றியும்
நாடுதேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ
கூடுவிட்டு அகன்று உன் ஆலி கூத்தனூர்க்கே நோக்கலால்
வீடுபெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே (509)

கட்டையால் செய் தேவரும் கல்லினால்செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாடியால்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே (510)

520 வரை தொகு
தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே (511)

ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் ஏழுநரகைக் காத்திருப்பது உண்மையே (512)

நேசமுற்றுப் பூசை செய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர்தம் இட்டுமே
மோசம் பொய்புனை சுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரிக ளம்புரண்ட வெண்ணீறாகும் மேனியே (513)

வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தர வெனச்
சாதனை செய் தெத்திச் சொத்து தந்ததைக் கவர்ந்துமே
காததூரம் ஓடிச் செல்வர் காண்பதும் அருமையே (514)

யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே (515)

காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர்
நேயமாக் கஞ்சா அடித்துநேர் அபினைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே (516)

நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம் என்று
ஊரினில் பறை அடித்து உதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்கு ஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும் கைப்பற்றுவார் (517)

காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம் யோகத் தண்டு கொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே
பாவியேன்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே (518)

முத்திசேரச் சித்தி இங்கு முன்னளிப்பேன் பாரென
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தயம் வயிறு வளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே (519)

செம்மை சேர்மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடு செய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்
இம்மளமும் மும்மளமும் எம்மளமும் அல்லவே (520)

526 வரை தொகு
எத்திசை எங்கும் எங்கும் ஓடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்த ஞானி யாவரோ
பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்
முத்தி இன்றி பாழ்நரகில் மூழ்கி நொந்து அலைவரே (521)

கல்லு வெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ருபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லை அற்றிடப்பெரும் சகந்தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே (522)

இச்சகம் சனித்ததுவும் ஈசன் ஐந்து எழுத்திலே
மெச்சவும் சராசரங்கள் மேவம் ஐந்து எழுத்திலே
உச்சிதப் பலுயிர்கள் ஓங்கல் அஞ்சு எழுத்திலே
நிச்சயம் மெய்ஞ் ஞானபோதம் நிற்கும் ஐந்து எழுத்திலே (523)

சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடு ஆவதால்
நேத்திரம் கெட வெய்யோனை நேர்துதி செய் மூடர்கள்
பாத்திரம் அறிந்து மோன பக்தி செய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே (524)

மனவுறுதி தானிலாத மட்டிப் பிண மாடுகள்
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர்
இனமதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள் (525)

சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்க யாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்க வானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத் தீ ஆகுமே (526)