Siva Vakyar – 100 to 200

——————————————————

சிவ வாக்கியார் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு தல யாத்திரை மத வாதம் வேதம் ஓதல் சாதி யாசாரம் முதலானவற்றை எதிர்த்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் உள்ளமே கோயில் என்னும் கொள்கையை அவர் உலகிற்கு உணர்த்துகிறார்.

——————————————————

110 வரை தொகு
நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராஞமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்கு உரை செய் நாதனே (101)

பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா
கரம் எடுத்து நித்தலும் குவித்திடக் கடவதும்
சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமச்சிவாயவே (102)

பச்சை மண் பதிப்பிலே புழுப்பதிந்த வேட்டுவன்
நிச்சலும் நினைந்திட நினைந்தவண்ணம் ஆயிடும்
பச்சைமண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்து கொள்பிரான் இயற்று கோலமே (103)

ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநா தனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமவிந்த நாமமே (104)

விழியினோடு புனல் விளைந்த வில்லவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே
வெளிபரந்த தேசமும் வெளிக்குள் மூல வித்தையும்
தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே (105)

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே (106)

அல்லல் வாசல் ஒன்பதும் அடைத்தடைந்த வாசலும்
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றது
நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப் பிறப்பது இல்லையே (107)

ஆதியானது ஒன்றுமே அநேக அநேக ரூபமாய்
சாதிபேதமாய் எழுந்து சர்வ ஜீவன் ஆனது
ஆதுயோடு இருந்து மீண்டு எழுந்து ஜென்மம் ஆனபின்
சோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே (108)

மலர்ந்ததாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும்
பலன்கள் ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்ற மாயம் நின்ன மாயம் ஈசனே (109)

பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண்சுடர்
அரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவன் சிவன் தெரிந்த ஞானியே (110)

120 வரை தொகு
தல யாத்திரை நீக்கல்
மண்கிடார மேசுமந்து மலையுள் ஏறி மறுகுறீர்
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்
தம்பிரானை நாள் தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே (111)

ஞான நிலை
நாவினூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விகாரமும் குறைந்ததும்
பாவிகாள் இதென்ன மாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார் (112)

இல்லை இல்லை என்று நீர் இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்றஃ நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ
இல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே (113)

காரகார காரகார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள் ஏழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே (114)

நீடுபாரிபல பிறந்து நேயமான காயந்தான்
வீடுவேறு இதுஎன்றபோது வேண்டி இன்பம் வேண்டுமே
பாடி நாலுவேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடுராம ராமராம ராம என்னும் நாமமே (115)

உயிரு நன்மையால் உடல்எடுத்துவந்து இருந்திடும்
உயிர் உடம்பு ஒழிந்தபோது ரூபரூபமாயிடும்
உயிர் சிவத்தின் மாயை ஆகி ஒன்றைஒன்று கொன்றிடும்
உயிரும் சத்திமாயை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே (116)

நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தமல்லி யோனியும்
நெட்டெழுத்திர் வட்ட மொன்று நின்றதொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தின் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே (117)

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்து நின்ற தென்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே (118)

விண் கடந்து நின்ற சோதி மேலை வாசலைத் திறந்து
கண் களிக்க உள்ளுளே கலந்து பிக்கிருந்தபின்
மண் பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே (119)

மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாளுநாளு முன்னிலோரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மைஆணை உண்மையே (120)

130 வரை தொகு
மின்எழுந்து மின்பந்து மின் ஒடுங்கும் வாறு போல்
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுளே அடங்குமே
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால்
என்னுள் நின்ற வென்னியானி நான் அறிந்தது இல்லையே (121)

இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்குமால் பிரமனும் அண்டம் ஏழு அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிலாத கண்ணிலே
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே (122)

ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே
ஆகிலும் அழிகிலும் அதன் கண்நேயம் ஆனபின்
சாகிலும் பிறக்கிலும் இவை இல்லை இல்லையே (123)

வேதம் நாலும் பூதமாய் விரவும் அங்கி நீரதாய்
பாதமே இலிங்கமாய்ப் பரிந்து பூசைபண்ணினால்
காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதி அந்தமும் கடந்து அரிய வீடு அடைவரே (124)

ஞான நிலை
பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்நதரே
துருத்தி நூல் முறுக்கிவிட்டுத் துன்பம் நீங்க வல்லிரேல்
கருத்தில் நூல் கலைபடும் காலநூல் கழிந்திடும்
திருத்தி நூல் கவலறும் சிவாய அஞ்சு எழுத்துமே (125)

சாவதான தத்துவச் சசடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே (126)
காலைமாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கண் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி ஆகுமே (127)

மதவாதம் மறுத்தல்
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய்புழுத்து மாள்வரே (128)

அறிவு நிலை
அறையறை இடைக்கிட அன்று தூமை என்கிறீர்
முறை அறிந்து பிறந்தபோதும் அன்றஃ தூமை என்கிறீர்
துரை அறிந்து நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர்
பொறை இலாத நீசரோடும் பொருந்து மாறது எங்ஙனே (129)

சுத்தம் வந்த வெளியிலே சிலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே
சுத்தம் ஏது கட்டதேது தூய்மைகண்டு நின்றது ஏது
பித்தர்காயம் உற்றதேது பேதம் ஏதுபோதமே (130)

140 வரை தொகு
மாதாமாதம் தூமைதான் மறந்து போன தூமைதான்
மாதம் அற்று நின்றலோ வளர்ந்துருபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா (131)

தூமை அற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது
ஆண்மை அற்று நின்றலோ வழக்கமற்று நின்றது
தாண்மை அற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற
தூமைதூமை அற்றகாலம் சொல்லும் அற்று நின்றதே (132)

ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை
வேறு பேசி மூடரே விளைந்தவாறது ஏதடா
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன
சீறுகின்ற மூடனே அத்தூமை நின்ற கோலமே (133)

தூமைகண்டு நின்ற பெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே
தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே (134)

வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின்
வேணும் என்ற அப்பொருள் விரைந்து காணல் ஆகுமே (135)

சிட்டர் ஓது வேதமும் சிறந்து ஆக மங்களும்
நட்ட காரணங்களும் நவின்ற மெய்மை நூல்களும்
கட்டி வைத்த போதகம் கதைக்கு கந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின் (136)

நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள் இருந்தும் ஓதினால் அதன்பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமே (137)

காலைமாலை தம்மிலே கலந்து நின்ற காலனார்
மாலைகாலையாச் சிவந்தமாயம் ஏது செப்பிடீர்
காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால்
காலைமாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே (138)

எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து
இட்ட மண்டலத்துளே எண்ணி ஆறு மண்டலம்
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்றுமண்டலம்
நட்ட மண்டபத்துளே நாதன் ஆடி நின்றதே (139)

நாலிரண்டு மண்டலத்துள் நாத நின்றது எவ்விடம்
காலிரண்டு மூலநாடி கண்ட தங்கு உருத்திரன்
சேரிரண்டு கண்கலந்து திசைகள் எட்டு மூடியே
மேலிரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே (140)

150 வரை தொகு
அம்மை அப்பன் அப்புநீர் அறிந்ததே அறிகிலீர்
அம்மை அப்பன் அப்புநீர் அரிஅயன் அரனுமாய்
அம்மை அப்பன் அப்புநீர் ஆதியாகி ஆனபின்
அம்மை அப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே (141)

உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்கள் எங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறது எங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே (142)

ஆதி உண்டு அந்தம் அல்லை அன்றிநாலு வேதம் இல்லை
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல்லிறந்தது ஏதும் இல்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதி அன்று தன்னையும் யார் அறிவது அண்ணலே (143)

புலால் புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுறீர்
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே (144)

உதிரமான பால்குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்தது ஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாமிசப்புலால் அதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே (145)

உண்டகல்லை எச்சில் என்று உள்ளெறிந்து போடுறீர்
கண்ட எச்சில் கையலோ பரமனுக்கும் ஏறுமோ
கண்ட எச்சில் கேளடா கலந்தபாணி அப்பிலே
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே (146)

ஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும்
மாதுமக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ எங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே (147)

ஈனெருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல்
மூணு நாலு சீலையில் முடிந்த விழ்க்கும் மூடர்காள்
மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே (148)

சாவல்நாலு குஞ்சது அஞ்சு தாயதீன வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநரி கூட்டிலே புகுந்தபின்
சாவல் நாலு குஞ்சது அஞ்சும் தான் இறந்து போனவே (149)

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மைபாதம் உண்மையே (150)

160 வரை தொகு
செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே
சீவனுக்கு அழிவுவந்த சேதி ஏது செப்பிடீர்
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட
செம்பினில் களிம்புவிட்ட சேதி ஏது காணுமே(151)

நாடி நாடி தம்முளே நயந்து காண வல்லிரேல்
ஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும்
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறது எங்ஙனே (152)

பிணங்குகின்றது ஏதடா பிரஞ்ஞை கெட்ட மூடரே
பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்
பிணங்கும் ஓர் இருவினைப் பிணக்கு அறுக்க வல்லிரேல்
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்க லாகுமே (153)

மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மீன் இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மான் உரித்த தோல்லோ மார்பில் நூல் அணிவதும் (154)

ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது (155)

அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பதும்
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டதும்
மைக்கிடில் பிறந்து இறந்து மாண்டுமாண்டு போவதும்
ஒக்கிடில் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே (156)

ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே (157)

நவ்வுமவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல்
வவ்வுயவ்வுளும் சிறந்த வண்மை ஞான போதகம்
ஒவ்வுசுத்தி யுள் நிறைந்து உச்சியூடுருவியே
இவ்வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே (158)

அக்கரம் அனாதியோ ஆத்துமம் அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ (159)

பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ பழிந்திடும்
கூத்ததாய் இருப்பிரேல் குறிப்பில் அச் சிவம் அதாம்
பார்த்த பார்த்த போதெலாம் பார்வையும் இகந்துநீர்
பூத்த பூத்த காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே (160)

170 வரை தொகு
நெற்றி பற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்தி ஒத்தி நின்று நின்று பற்றறுத்தது என்பலன்
உற்றிருந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே (161)

நீரை அள்ளி நீரில்விட்டு நீ நினைந்த காரியம்
ஆரை உன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் (162)

நெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர்
அத்தலத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே (163)

கருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர் (164)

கருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்
அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர் (165)

தாதரான தூதரும் தலத்தில் உள்ள சைவரும்
கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த கார்ரியம்
வீதிபோகும் ஞானியை விரைந்து கல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே (166)

ஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும்
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும்
இழை அறுந்து போனதும் என்ன மாயம் ஈசனே (167)

சதுரம் நாலு மறையும் எட்டு தானதங்கி மூன்றுமே
எதிரதான வாயு ஆறு எண்ணும் வட்ட மேவியே
உதிரந்தான் வரைகள் எட்டும் எண்ணும் என்சிரசின்மேல்
கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே (168)

நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்
மேலுபத்து மாறுடனூ மேதிரண்ட தொன்றுமே
கோல்அஞ் செழுத்துடே குருவி வந்து கூறிடில்
தோலுமேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே (169)

கோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும்
தேசமாய் பிறந்ததும் சிவாயம் அஞ்செழுத்துமே
ஈசனார் இருந்திடம் அனேகனேக மந்திரம்
ஆசனம் நிறைந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே (170)

180 வரை தொகு
அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும்
பொங்குதா மரையிதும் பொருந்துவார் அகத்தினும்
பங்குகொண்ட சோதியும் பரந்த அஞ்சு எழுத்துமே
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே (171)

உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்
உவலையாகி அண்டத்தில் உருவி நின்றது எவ்விடம்
தவமதான பரமனார் தரித்து நின்றது எவ்விடம்
தற்பரத்தில் சலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம்

சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம்
சொல்லுகீழு லோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம்
அவளதான மேருவும் அம்மைதானது எவ்விடம்
அவனும் அவளும் ஆடலாம் அருஞ்சீவன் பிறந்ததே (172)

உதிக்கின்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம்
கதிக்குகின்றது எவ்விடம் கன்றுறக்கம் எவ்விடம்
மதிக்க நின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம்
விதிக்கவல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (173)

திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு
மருங்கிலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு
துரும்பிலாத கோலம் எட்டு சுற்றிவந்த மருளரே
அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே (174)

தானிருந்து மூல அங்கி தணல் எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே
வானிருந்து மதியமூன்று மண்டலம் புகுந்தபின்
ஊனிருந் தளவு கொண்ட யோகி நல்ல யோகியே (175)

முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்டத்து ச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார்
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள்
அத்தன் ஆடல் உற்றபோது அடங்கல் ஆடல் உற்றவே (176)

ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றும் இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே (177)

நட்டதாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதமும்
கட்டுவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே (178)

வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி
சட்டமீ படைத்திலே சங்குசக்கரங்களாய்
விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்தபின்
முட்டையில் எழுந்தசீவன் விட்டவாறது எங்ஙனே (179)

கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே (180)

190 வரை தொகு
நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லுநாகம் மூன்றதாக் குலாவு செம்பொன் இரண்டதாய்
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல்
எல்லைஒத்த சோதியானை எட்டுமாற்ற தாகுமே (181)

மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கறுத்த மவுன ஞான யோகிகாள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே (182)

உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே (183)

ஈரெழுத்து உலகெலாம் உதித்தஅட் சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே (184)

ஆதி அந்த மூலவிந்து நாதம் ஐந்து பூதமாம்
ஆதி அந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்
ஆதி அந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்
ஆதி அந்த மூலவிந்து நாதமே சிவாயமே (185)

அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே
சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னம் இட்ட பேரெலாம் கடந்துநின்ற திண்ணமே (186)

ஓதொணமல் நின்றநீர் உறக்கம் ஊணும் அற்றநீர்
சாதிபேதம் அற்றநீர் சங்கையின்றி நின்ற நீர்
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர்
ஏதும் இன்றி நின்றநீர் இயங்குமாறது எங்ஙனே (187)

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்குநாள் சடங்கெலாம்
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
நிலம்பிளந்து வான் இடிந்து நின்றது என்ன வல்லிரே (188)

துருத்தியுண்டு கொல்லன் உண்டு சொர்னமான சோதி யுண்டு
திருத்தமாய் மனத்தில் உன்னித் திகழ ஊத வல்லிரேல்
பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே (189)

வேடமிட்டு மணிதுலக்கி மிக்க தூபதீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்
தேடிவைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசை என்ன பூசையே (190)

200 வரை தொகு
முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிகொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல்
முட்டும் அற்று சுட்டும் அற்று முடியில் நின்ற நாதனை
எட்டுதிக்கும் கையினால் இருந்தவீட தாகுமே (191)

அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே
இருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே (192)

மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு எழுத்தின் மேல்
கோலவட்டம் மூன்று மாய் குலைந்தலைந்துநின்ற நீர்
ஞானவட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே (193)

சுக்கிலத் திசையுளே சுரோணிதத் தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார வரையிலே
அச்சமற்ற சவ்வுளே அரி அரன் அயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே (194)

பூவம் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம்
ஆவிஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினால்
மேவுகின்ற ஐவரும் விளங்கு தூபதீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே (195)

உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது
இருக்கில் என் மறக்கில் ஏன் நினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே (196)

சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்து கொண்ட வான் பொருள்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்து கொள்ளும் உண்மையே (197)

பொய்க் குடத்தில் ஐந்நொ துங்கி போகம் வீசுமாறுபோல்
இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல்
இச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே (198)

பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்து நீ படுமுடிச்சு போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை (199)

அல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்துபோய்
அண்டரண்ட மும்கடந்த அனேகனேக ருபமாய்
சொல்லிறந்து மனமிறந்த சுக சொருப உண்மையைச்
சொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை ஆனதே (200)