Sekkizhar

தனிப் பாடல்களாக இருந்த சங்கத் தமிழ், கதைபொதி பாடல்களாக வளர்ந்து, தொடர்நிலைச் செய்யுள்கள், காப்பியம், புராணம் என்பனவாக விரிந்தது.

புராணத்திற்கும், காப்பியத்திற்கும் மிகுதியான வேறுபாடுகள் இல்லை எனலாம். பெருங்காப்பிய இலக்கணங்களில் பெரும்பாலானவற்றைத் தனக்குரியதாகக் கொண்டு பழமையான வரலாற்றின் அடிப்படையில் அமைந்த நூல் புராணம் எனப்படும். சமயக் கருத்துகளை வலியுறுத்தவே காப்பியங்களும், புராணங்களும் எழுந்தன.

கி.பி. 2-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய சமயப் போராட்டங்கள் கி.பி. 9ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் நிலவின. இடைக்காலத்தில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) தோன்றியது பக்தி இயக்கம். இவ்வியக்கம் தமிழிற்குப் பல பக்தி இலக்கியங்களைத் தந்தது. அவற்றுள் சைவ இலக்கியங்களின் சாரமாகத் திகழ்வது சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணமாகும்.

இந்நூல் இறைவனுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்த 63 சைவ அடியார்களான நாயன்மார்கள் சிறப்பையும், அவர்களின் வரலாற்றையும், தொண்டின் சிறப்பையும் விளக்குகின்றது. சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றது.

சுந்தரரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட இந்நூலில், பக்தியின் பெருமை, மக்களின் வாழ்க்கை முறை, ஆட்சி முறை, தமிழ்நாட்டின் திருத்தலங்கள் ஆகிய பல செய்திகள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

தமிழில் தோன்றிய மற்ற காப்பியங்களில் வெளிப்படையாகக் காணமுடியாத ஒரு தனிச் சுவையாகப் பக்திச் சுவையைக் கொண்டும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டும் பாடப்பட்டதே இந்நூல் எனலாம்.

இத்தகு சிறப்பினைக் கொண்ட புராண நூலைத் தேசிய இலக்கியம் என்று ஆன்றோர்கள் பாராட்டியுள்ளனர்.

பெரிய புராணம்


செயற்கு அரிய செய்வர் பெரியர் என்னும் குறள் வரிக்கேற்ப அறுபத்து மூன்று நாயன்மார்கள் புரிந்த இறைப் பக்தியையும், தொண்டு நெறியையும் வரலாற்று முறையில் கூறும் நூலே பெரிய புராணம் (பெரியர் புராணம்) ஆகும்.

இந்நூல் பல்வேறு நாடு, ஊர், சாதி, தொழில் கொண்ட நாயன்மார்களுடைய வாழ்க்கையை விவரிக்கிறது. அக்காலச் சமுதாய வரலாற்றையும் எளிய, இனிய நடையில் எடுத்து சொல்கிறது.

தில்லை அம்பலத்தே ஆடும் சிவபெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கச் சேக்கிழார், பக்தி வளமும், இறையருட் திறமும் குறைவிலாது சிறக்குமாறு இலக்கியப் பெருங்களஞ்சியமாக, பெரிய புராணத்தை இயற்றி அருளினார்.

காப்பிய அமைப்பு


பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.

இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது. 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.

சுந்தரரின் சிறப்பு, அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருட்திறம், குரு (ஆசிரியன்), இலிங்கம் (இறைவன் திருமேனி), சங்கமம் (அடியார்) ஆகிய முறைகளில் சிவனை வழிபட்ட நிலைகள், தொண்டின் திறம், சாதி, மத, இன வேறுபாடில்லாமல் அடியார் நோக்கில் கண்டு வழிபட்டு முத்தி பெற்ற தன்மைகள், சிவன் அடியார்களை ஆட்கொண்ட விதம் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது.

அடியார்களின் வரலாறும். அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறியும், இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதமும் இந்நூல் முழுதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார், திருத்தொண்டர் மாக்கதை என்று பெயரிட்டார்.

செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் (பெரியார்களின்) சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் பெரியர் புராணம் என்று கூற காலப் போக்கில் பெரிய புராணம் என்று வழங்கப்பட்டது.

காப்பிய நோக்கம்
கி.பி.11, 12-ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆட்சி செய்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனாவான் (அநபாய சோழன்). அம்மன்னனின் அவையில் முதல் அமைச்சராகப் பணி புரிந்தவர் சேக்கிழார். சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவனடியார்களின் உயர்ந்த வாழ்க்கையைக் கதைப் பின்னலாகக் கொண்டு பெரிய புராணத்தைப் பாடினார் சேக்கிழார்.

சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரிய புராணத்தைச் சார்பு நூலாகப் படைத்தார் சேக்கிழார்.

சிவனை முதன்மைப்படுத்தி வழிபடும் சமயமாகிய சைவத்தையும், அடியார்களது வரலாறு, தொண்டு நிறைந்த வாழ்வு, முத்தி பெற்ற நிலை ஆகியவற்றையும் விரிவாகவும் தெளிவாகவும் புலப்படுத்துவதே பெரிய புராணத்தின் நோக்கம் ஆகும்.

காப்பியச் சிறப்பு


அறுபத்து மூன்று நாயன்மார்களின் புகழ் மிக்க வரலாற்றினை உலகறிய, பக்திச் சுவையோடு விரிவாக எழுதிய பெருமைக்கு உரியவர் சேக்கிழார் ஆவார். அவர் சோழ நாட்டு அமைச்சராக இருந்தமையால் நாட்டின் பல பகுதிகளுக்கும், நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கும் நேரில் சென்று, அவ்விடத்தில் செவிவழி மரபாக வழங்கும் வரலாற்றுச் செய்திகளையும் தொகுத்து இந்நூலை அமைத்தார் என்பர்.

பிற மொழிக் கதைகளைத் தழுவாமல், தமிழ் மக்களையும், தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களைப் போலவே பெரியபுராணம் என்னும் நூல் சிறப்புற்றுத் திகழ்கின்றது.

ஆண் பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும், தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர்.

நூலாசிரியர்


சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்தவர் அருண்மொழித் தேவர். இப்பெயரே அவருக்குப் பெற்றோர் இட்டு வழங்கியதாகும். சேக்கிழார் என்பது இவரது குடிப்பெயராகும்.

இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால், இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதலமைச்சராகப் பணிபுரிந்தார். அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று, அடியார்களின் பெருமையை வரலாறாக எழுதினார்.

இந்நூலின் பெருமையை உணர்ந்த மன்னன், அவரைப் பட்டத்து யானையின் மீதேற்றி நகர்வலம் செய்து உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் தந்து சிறப்பித்தான்.

இவருடைய காலம் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். சிவத் தொண்டர்களின் வரலாற்றைச் சிறப்பித்த காரணத்தால் இவருக்குத் தொண்டர் சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.

கல்வெட்டுகள் இவரை மாதேவடிகள் என்றும், இராமதேவர் என்றும் சிறப்பிக்கின்றன. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று இவரைப் பாராட்டுகின்றார்