Tholkappiyam – Akathinai

இப்பகுதி என்ன சொல்கிறது?

  • தொல்காப்பியர் கூறும் அகத்திணைப் பாகுபாட்டைப் பற்றி விளக்கிக் கூறுகிறது.
  • திணை என்றால் என்ன என்பதையும், அகத்திணை, புறத்திணை பிரிக்கப்பட்டதையும் இது விளக்கியுரைக்கிறது.
  • அகத்திணை வகைகளையும், அகத்திணைக்கு இணையான புறத்திணைகளையும் பற்றிக் கூறுகின்றது.
  • களவியல் என்பதையும், கற்பியல் என்பதையும் விளக்குகின்றது.
  • அகத்திணையால் உணரப்படும் பண்டைய பண்பாட்டையும் விளக்குகின்றது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


• திணைகள் என்றால் என்ன என்பதையும், அகத்திணை, புறத்திணை என்ற பிரிவிற்கான காரணத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

  • அகத்திணையில் உள்ள வகைகளையும், களவியல் கற்பியல் பிரிவுகளையும் விளங்கிக் கொள்ளலாம்.
  • அகத்திணையால் உணர்த்தப்படும் பண்டைய பண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

முன்னுரை
2500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தொல்காப்பியர், தான் எழுதிய தொல்காப்பிய இலக்கண நூலினை மூன்று அதிகாரங்களாகப் பகுத்தார் என்பதை அறிந்திருப்பீர்கள். எழுத்துகள் பிறந்தது முதல் அவை ஒன்றோடு ஒன்று இணைந்து மொழியாகும் தன்மைகளைக் கூறுவது எழுத்ததிகாரம். இவ்வெழுத்துகள் சொல்லாகி, அச்சொற்கள் அமையும் பாகுபாடுகள், அவற்றின் பெயர் வகைகள் முதலியவற்றைக் கூறுவது சொல்லதிகாரமாகும். இச்சொற்கள் இணைந்து பல்வேறு பொருள்களை உணர்த்தும். இது பொருளதிகாரம் என்று அழைக்கப் பெறுகிறது. பொருள் என்றவுடன் உடனே நாம் உணரும் செய்தி நம் உடைமைப் பொருள்களைத்தான். ஆனால் தொல்காப்பியர் பொருள் என்பதற்கு நம் உடைமைப் பொருளைக் குறிக்கவில்லை. அவர் வாழ்வியல் நிலைகளைக் குறிக்கின்றார். வாழ்வியல் நிலைகளை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார். இவை பற்றிய விளக்கங்கள் தொல்காப்பியரின் அகத்திணையியலில் வருகின்றன. இவ்வகத்திணை இயல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் முதல் இயலாகும்.

தொல்காப்பியரின் பொருளதிகாரம்
பொருளதிகாரம் ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

  1. அகத்திணையியல்
  2. புறத்திணையியல்
  3. களவியல்
  4. கற்பியல்
  5. பொருளியல்
  6. மெய்ப்பாட்டியல்
  7. உவமவியல்
  8. செய்யுளியல்
  9. மரபியல்

என்று ஒன்பது இயல்களாகும். இவற்றுள் அகத்திணையியல் களவியல், கற்பியல் ஆகியவை அகத்திணை பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. பொருளியல் என்பது அகத்திணை பற்றிய செய்திகள் சிலவற்றையும், புறத்திணைக்குரிய செய்திகள் சிலவற்றையும் கூறுகின்றது. மெய்ப்பாட்டியல் எட்டுவகை மெய்ப்பாடுகளைக் கூறுகின்றது. மெய்ப்பாடு என்பது உடம்பில் தோன்றும் உணர்வுகளாகும். உள்ளத்தில் தோன்றிய உணர்வுகள், அவ்வுள்ளத்தில் இருந்து எவ்வாறாவது வெளிப்பட்டு விடும். அதுவே மெய்ப்பாடாகும். உவமையியல் இரண்டு பொருள்களுக்கிடையே காணும் ஒப்புமைத் தன்மைகளைக் கூறுகின்றது. செய்யுளியல் செய்யுள் இலக்கணத்தையும், மரபியல் தமிழில் பழைய காலந்தொட்டு இருந்து வரும் சொற்பொருள் மரபு பற்றியும், முறைமைகள் பற்றியும் கூறுகின்றன.

தொல்காப்பியர் கூறும் திணைப்பாகுபாடு
திணைகளை அகம், புறம் என்று பிரித்த தொல்காப்பியர், அகத்திணையை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பார். அவை

  1. குறிஞ்சி
  2. முல்லை
  3. மருதம்
  4. நெய்தல்
  5. பாலை
  6. கைக்கிளை
  7. பெருந்திணை

எனப் பெயரிடப்பட்டன. தொல்காப்பிய அகத்திணையியலின் முதல் நூற்பா அகத்திணையைப் பற்றிக் கூறும் போது,

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப

என்கிறது. திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்படும். அகமாவது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் தமக்குள்ளே கண்டு, காதல் கொண்டு ஒன்றுபடுதல்; சில காரணங்களால் பிரிதல்; பிரிந்து தனித்திருத்தல்; அத்தனிமைக்கு இரங்குதல்; சில நேரங்களில் பிணக்குக் கொள்ளுதல் என ஐந்துவகை அன்பு உரிப்பொருளைக் கொண்டுள்ளது. இவற்றைக் கூடல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பர். இவை குறிஞ்சி, பாலை, முல்லை , நெய்தல், மருதம் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

அன்பின் ஐந்திணை
ஒருவனும், ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்வது குறிஞ்சித் திணை என்று பெயர் பெறுகிறது. காதலன் பொருளீட்டுவதற்கோ, போர்க்களத்திற்கோ, கல்வி கற்பதற்கோ, தூதுவனாகவோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி காத்திருப்பது முல்லைத் திணை என்னும் பெயர் பெறுகிறது. தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிணக்குகள் வரலாம். இதனை ஊடல் என்று கூறுவர். இந்த ஊடலைக் குறிக்கும் திணை மருதத் திணை எனப்படும். கடலில் மீன் பிடிக்கச் சென்றோ , பிற காரணங்களாலோ தலைவன் பிரிந்து சென்று, திரும்பி வர இயலாத சூழலில் தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கி நிற்றலை நெய்தல் திணை என்பர்.

தன் ஊரிலே வறட்சியின் காரணமாக வெளியூர் சென்று பொருளீட்டி வரலாம் என்று தலைவன் பிரிந்து செல்லும் நேரத்தில் இல்லத்தில் இருக்கும் தலைவியின் நிலை குறித்து அவன் கவலைப்படுதலும், செல்லும் வழியில் தலைவனுக்கு என்ன நேருமோ என்று தலைவி இல்லத்தில் இருந்து கவலைப்படுதலும் பாலைத் திணை எனப்படும். இவையே அன்பின் ஐந்திணை என்றும் அழைக்கப்படும்.

கைக்கிளை, பெருந்திணை
ஆண் விரும்பி, பெண் விரும்பாமலோ அல்லது பெண் விரும்பி, ஆண் விரும்பாமலோ இருப்பின் அது கைக்கிளை. அதாவது ஒரு தலைக் காமம். காதலிக்கும் ஆணைவிடப் பெண் மிகவும் மூத்தவளாகவோ, பெண்ணைவிட ஆண் மிகவும் மூத்தவனாகவோ இருப்பின் அது பெருந்திணை என்று பெயர் பெறும். இது பொருந்தாக் காமம். கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் தமிழ்ச் சான்றோர்களால் போற்றப்படாத ஒழுக்கங்களாகும். ஒருவனும் ஒருத்தியும் விரும்புகின்ற ஐந்திணைகள் மட்டுமே அன்பின் ஐந்திணை என்று போற்றப்பட்டது.

முப்பொருள்கள்
தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறும்போது, அவற்றிற்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை விளக்கியுரைக்கின்றார்.

முதற்பொருள்
முதற்பொருள் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இருக்கும் நிலமும் பொழுதும் ஆகும்.

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (4)

என்று தொல்காப்பிய நூற்பா கூறும். நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார்.

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை , குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(அகத்.5)

என்றுரைக்கின்றார், தொல்காப்பியர். முல்லை நிலத்தை ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்றார். காடும், காட்டைச் சார்ந்த இடமும் என்று கூறி, அக்காட்டிற்கு உரிய தெய்வமாகத் திருமாலை மாயோன் என்ற பெயரில் குறிப்பிடுகின்றார். குறிஞ்சி நிலத்தை மலையும், மலையைச் சார்ந்த இடமும் என்று கூறி, அம்மலைக்கு உரிய தெய்வமாக முருகனைக் கூறுகிறார். ‘வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ எனக் கூறுவது வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தையே ஆகும். இந்திரனுக்கு வேந்தன் என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்திரனே வயலும் வயலைச் சார்ந்த இடத்திற்குக் கடவுளாகும். ‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்று கூறுவது மணல் மிகுந்திருக்கக் கூடிய கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். இந்த நிலத்திற்குக் கடவுளாக வருணன் உரைக்கப்படுகிறான். பாலைத் திணை என்பது பாலைவனப் பகுதியாகும். இதற்கான தெய்வத்தைத் தொல்காப்பியர் கூறவில்லை. தமிழ்நாட்டில் பாலைநிலம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். பாலை என்ற நிலம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் காலத்தால் சற்றுப் பிற்பட்ட சிலப்பதிகாரம் தான் சொல்கிறது. முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

(காடுகாண் காதை, 64-66)

என்று கூறுகிறது. இப்பாலை நிலத்திற்குக் கடவுள் கொற்றவை எனத், தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் கூறுகிறார். நிலங்களுக்கு இடமும், கடவுளும் கூறிய தொல்காப்பியர் அந்நிலங்களுக்குரிய காதல் ஒழுக்கங்களுக்கு ஏற்ற வண்ணம் பெரும் பொழுது, சிறுபொழுதுகளைக் கூறுகிறார். பெரும்பொழுது என்றால் ஓர் ஆண்டை இரண்டிரண்டு மாதங்களாக – ஆறு பிரிவுகளாகப் பிரித்து அமைத்துக் கொள்வதாகும்.

இவை

  1. கார்காலம்
  2. கூதிர்காலம்
  3. முன்பனிக் காலம்
  4. பின்பனிக் காலம்
  5. இளவேனிற் காலம்
  6. முதுவேனிற் காலம்

என ஆறுவகைப்படும். சிறுபொழுது என்பது ஒரு நாளை ஆறு பிரிவுகளாகப் பிரித்துக் கணக்கிடப்படும் காலமாகும். இது

  1. வைகறை
  2. விடியல்
  3. நண்பகல்
  4. எற்பாடு (பிற்பகல்)
  5. மாலை
  6. யாமம் (நள்ளிரவு)

எனப் பிரிக்கப்படும். (எற்பாடு – எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு – இளம்பூரணர் உரை, தொல்.பொருள். 10)

கருப்பொருள்
மேலே குறித்த நிலம் முதலிய இடத்தாலும் காலம் முதலியவற்றாலும் தோற்றம் கொள்ளும் பொருள்களைக் கருப்பொருள் என்று குறிப்பிடுவர். அவை தேவர் என்றும், மக்கள் என்றும், விலங்கு என்றும் பலவாறு பகுக்கப்படும். அங்கு வாழும் மக்கள் உண்ணுகின்ற உணவு, செய்கின்ற தொழில் இவையும் கருப்பொருளாகும். ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வங்கள், உணவு வகைகள், மரங்கள், பறவைகள், செய்தொழில்கள், யாழ் போன்ற இசைக் கருவிகள் எல்லாம் கருப்பொருள் என்பதில் அடங்கும்.

உரிப்பொருள்
மக்களுக்கு உரிய பொருள் உரிப்பொருள் எனப்படும். இதனை ஒழுக்கம் என்பர். இது அக வாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்கும் உரியது. புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவற்றோடு கைக்கிளை, பெருந்திணை ஆகியவை சேர்ந்து ஏழும் அகத்திணைக்குரிய உரிப்பொருள்களாகக் கொள்ளப்படும்.

  1. வெட்சி
  2. வஞ்சி
  3. உழிஞை
  4. தும்பை
  5. வாகை
  6. காஞ்சி
  7. பாடாண்

ஆகிய ஏழும் புறத்திணைக்கு உரியனவாகும்.

அகத்திணைகளுக்கு உரிய புறத்திணைகள்
அகப்பொருளில் கூறப்பட்ட முதற்பொருளும், கருப்பொருளும் புறப்பொருள் இலக்கியத்திற்கும் பொருந்துவனவாகும். ஒவ்வொரு புறத்திணையும் ஓர் அகத்திணையோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. அவை கீழ்க்காணுமாறு தொடர்புபடும் எனத் தொல்காப்பியர் கூறுவார்.

அகத்திணை

புறத்திணை

குறிஞ்சி

வெட்சி

முல்லை

வஞ்சி

மருதம்

உழிஞை

நெய்தல்

தும்பை

பாலை

வாகை

கைக்கிளை

பாடாண்

அகத்திணையியலும் அன்பின் ஐந்திணைகளும்
அகத்திணை அன்பின் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை எனப்படும். அன்பின் ஐந்திணைகளாகிய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைக் காணலாம்.

குறிஞ்சித் திணை
முதற்பொருள்

நிலம் – மலையும் மலையைச் சார்ந்த இடமும்

பொழுது – அ) பெரும்பொழுது – கூதிர்காலமும், முன்பனிக்காலமும், ஆ) சிறு பொழுது – யாமம்

கருப்பொருள்கள்

  1. தெய்வம் – சேயோன்
  2. உணவு – ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி, கிழங்கு
  3. விலங்கு – புலி, யானை, கரடி, பன்றி
  4. மரம் – அகில், ஆரம், தேக்கு, வேங்கை
  5. பறவை – கிளி, மயில்
  6. பறை – முருகியம், தொண்டகப் பறை
  7. தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை விதைத்தல், வேட்டையாடுதல்
  8. யாழ் – குறிஞ்சி யாழ்
  9. பண் – குறிஞ்சிப் பண்
  10. ஊர் – சிறுகுடி, குறிச்சி
  11. நீர் – அருவி நீர், சுனை நீர்
  12. மலர் – காந்தள், வேங்கை , குறிஞ்சி

உரிப்பொருள்

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)

முல்லைத் திணை
முதற்பொருள்

நிலம் – காடும் காட்டைச் சார்ந்த இடமும்

பொழுது – அ) பெரும்பொழுது : கார்காலம், ஆ) சிறுபொழுது: மாலை

கருப்பொருள்கள்

  1. தெய்வம் – மாயோன்
  2. உணவு – வரகு, சாமை
  3. விலங்கு – மான், முயல்ம்
  4. மரம் – தோன்றி, காயா, பிடவம், குருந்தம்
  5. பறவை – காட்டுக்கோழி, சேவல்
  6. பறை – ஏறுகோட் பறை
  7. தொழில் – ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்
  8. யாழ் – முல்லை யாழ்
  9. பண் – குறிஞ்சிப் பண்
  10. ஊர் – பாடி, சேரி
  11. நீர் – குறுஞ்சுனை, கான்யாறு
  12. மலர் – முல்லை , குல்லை , தோன்றி, பிடவம்

உரிப்பொருள்

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

மருதத் திணை
முதற்பொருள்

நிலம் – வயலும் வயல்சார்ந்த இடமும்

பொழுது – அ) பெரும் பொழுது – ஆண்டு முழுதும், ஆ) சிறுபொழுது – வைகறை, விடியல்

கருப்பொருள்கள்

  1. தெய்வம் – இந்திரன் (வேந்தன்)
  2. உணவு – செந்நெல், கரும்பு
  3. விலங்கு – எருமை, நீர்நாய்
  4. மரம் – வஞ்சி, காஞ்சி, மருதம்
  5. பறவை – தாரா, நீர்க்கோழி
  6. பறை – மணமுழவு, நெல்லரி கிணை
  7. தொழில் – விதைத்தல், விளைத்தல்
  8. யாழ் – மருத யாழ்
  9. பண் – மருதப் பண்
  10. ஊர் – ஊர்கள்
  11. நீர் – ஆற்றுநீர், பொய்கை நீர்
  12. மலர் – தாமரை, கழுநீர்

உரிப்பொருள்

ஊடலும் ஊடல் நிமித்தமும்.

நெய்தல் திணை
முதற்பொருள்

நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும்

பொழுது – அ) பெரும் பொழுது – ஆண்டு முழுதும், ஆ) சிறுபொழுது – எற்பாடு

கருப்பொருள்கள்

  1. தெய்வம் – வருணன்
  2. உணவு – மீன், உப்பு
  3. விலங்கு – உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும் எருது), சுறா
  4. மரம் – புன்னை , ஞாழல், கண்டல்
  5. பறவை – அன்றில், அன்னம்
  6. பறை – மீன்கோட் பறை
  7. தொழில் – மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு விளைவித்தல், நாவாய் ஓட்டல்
  8. யாழ் – நெய்தல் யாழ்
  9. பண் – நெய்தல் பண்
  10. ஊர் – பட்டினம், பாக்கம்
  11. நீர் – உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு
  12. மலர் – நெய்தல், கைதை (தாழை)

உரிப்பொருள்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலைத் திணை
முதற்பொருள்

நிலம் – பாலை நிலம்

பொழுது – அ) பெரும்பொழுது – வேனிற் காலம், பின்பனிக் காலம், ஆ) சிறுபொழுது – நண்பகல்

கருப்பொருள்கள்

  1. தெய்வம் – கொற்றவை
  2. உணவு – வழிப்போக்கரிடம் திருடிய உணவு
  3. விலங்கு – யானை, புலி, செந்நாய்
  4. மரம் – இருப்பை, உழிஞை
  5. பறவை – கழுகு, பருந்து, புறா
  6. பறை – சூறை கோட் பறை
  7. தொழில் – வழிப்பறி, சூறையாடல்
  8. யாழ் – பாலை யாழ்
  9. பண் – பாலைப் பண்
  10. ஊர் – பறந்தலை
  11. நீர் – கூவல் (கிணறு, குழி)
  12. மலர் – மரா, குரா

உரிப்பொருள்

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

இவ்வாறு வரும் திணைக் கருப்பொருள்கள் தத்தம் திணையில் இடம்பெறுவதுடன் பிற திணையிலும் இடம் பெறுவதுண்டு. அதற்குத் திணை மயக்கம் என்று பெயர்.

களவியல்
காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு என்று வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும். களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் இருப்பர். களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை . தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது. களவு என்பது இன்ப உணர்வின் அடிப்படையில் நிகழக் கூடியது. இக் களவு ஒழுக்கம் நான்கு வகையாகப் பகுத்துக் கூறப்படும். அவை :

  1. காமப் புணர்ச்சி
  2. இடந்தலைப்பாடு
  3. பாங்கொடு தழாஅல்
  4. தோழியிற் கூட்டம்

என நான்கு வகை ஆகும்.

காமப் புணர்ச்சி
அன்புடைய இருவர் நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது ஆகும். காம வேட்கை மிகுதியால் தான் இக்காதல் உருவாகிறது. இதுவே காமப் புணர்ச்சி எனப்படுகிறது. இது நல்வினைப் பயனால் தன்னியல்பில் நிகழும் புணர்ச்சியாதலின் இயற்கைப் புணர்ச்சி எனவும், தெய்வப் புணர்ச்சி எனவும்படும். முன்னுறு புணர்ச்சி எனவும் இது வழங்கப்படும். காதல் எவ்வாறு உண்டாகும் என்பதைத் தொல்காப்பியர் களவியல் நூற்பாவில் (2) விளக்குகிறார். ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் இல்லறத்தின் பயனால் அவ்விருவரையும் ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்தும், பிரித்தும் வைப்பதுமான இருவகை ஊழ்வினை உண்டு. அவற்றுள் நல்லூழின் ஆணையால் ஒத்த பிறப்பு, குடி, ஆண்மை , ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்துப் பண்புகளுடன் இருக்கும் ஓர் ஆணும், பெண்ணும் கண்டு காதல் வயப்படுவர். இதில் தலைவன் தலைவியுடன் ஒத்த பண்புடையனாகவோ தலைவியின் மிக்கோனாகவோ இருத்தல் வேண்டும்.

தலைவி தன்னுடன் ஒத்த நலன்களால் சிறந்து தோன்றிய வழி தலைவனுக்கு ‘இவள் – தெய்வ மகளோ?’ என்ற ஐயம் தோன்றும். ஆனால் அவள் அணிந்துள்ள மாலை, அணிகலன் ஆகியவற்றைக் கண்டு அவள் மானிட மகளே எனத் தெளிவான்.’ பிறகு அவள் தன்மேல் விருப்பம் கொண்டிருக்கிறாளா என அறிய அவள் கண்களை நோக்குவான். காம வேட்கையினால் அந்நான்கு கண்களும் தாம் கொண்ட காதலை உரைக்கும். ஒருவரை ஒருவர் காணும் முதற்காட்சியிலேயே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படாது, உள்ளப் புணர்ச்சி அளவிலேயே ஒழுகி மணந்து கொண்ட பின்னரே கூடி மகிழ்வர்.

இடந்தலைப்பாடு
இயற்கைப் புணர்ச்சி எனப்படுகின்ற இருவரும் கூடி மகிழ்கின்ற நிலையை நாள்தோறும் நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்படும். முதல்நாள் சந்தித்த அதே இடத்திற்கு ஒவ்வொரு நாளும் தலைவன் சென்று காதலியைச் சந்தித்து மகிழ்வான். இதுவே இடந்தலைப்பாடு ஆகும்.

பாங்கொடு தழாஅல்
இடந்தலைப்பாடு இடையூறு இன்றி நிகழ்தல் அரிது. ஆதலால் தலைவியோடு தனக்குள்ள உறவினைப் பாங்கனுக்குக் (தோழனுக்கு) கூறுவான். பிறகு அத்தோழன் அப்பெண் எவ்விடத்தைச் சேர்ந்தவள்? எத்தன்மை உடையவள்? என வினவி, அவள் இருப்பிடம் அறிவான். அவளிடம் சென்று அத்தலைவியைக் கண்டு வருவான். கண்டு வந்து அவள் நிலையைத் தலைவனுக்குக் கூறுவான்.

தோழியில் புணர்வு
தலைவியை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து கூட விழையும் தலைவனுக்குப் பாங்கற் கூட்டம் பயன்தராது. அதனால் தலைவியோடு பழகிவரும் உயிர்த்தோழியை நட்பாக்கிக் கொண்டு அவளை இரந்து, அவள் பின் நிற்பான். பிறகு அவள் வாயிலாகத் தலைவியைக் கூடுவதே தோழியிற் புணர்வாம். இது தோழியிற் கூட்டம் எனவும் உரைக்கப்படும்.

இருவகைக் குறிகள்
தலைவியைத் தோழி குறிப்பிட்ட ஓரிடத்தில் இருக்கச் செய்து, பின்னர்த் தலைவனிடம் சென்று தலைவி தலைவனுக்காகக் காத்திருக்கும் இடத்தைக் குறிப்பிடுவாள். தலைவன் அவ்விடம் சென்று தலைவியுடன் கூடி மகிழ்வான். இக்கூட்டம் பகலில் நிகழ்ந்தால் பகற்குறி என்றும் இரவில் நிகழ்ந்தால் இரவுக் குறி என்றும் அழைக்கப் பெறும்.

கற்பியல்
களவு இன்பம் நீண்ட நாட்கள் தொடர முடியாது. களவிற்குப் பல்வேறு இடையூறுகள் உண்டு. அவை அம்பல், அலர் என இருவகைப்படும். அம்பல் என்பது பிறர் அறியாமல் இருவர் தமக்குள் தலைவன், தலைவியின் காதல் செய்தியைப் பரிமாறிக் கொள்வதாகும். அலர் என்பது பலரும் அறியக் காதல் செய்தியைப் பரிமாறிக் கொள்வது. இது விரிந்த மலரின் நறுமணத்தோடு ஒப்புமைப்படுத்தப்படும். ஊரில் அலர் தூற்றத் தொடங்கி விடுவார்கள். அலர் என்றால் ஊரில் உள்ள மக்கள் இந்தத் தலைவன் – தலைவி காதல் பற்றி ஆங்காங்கே பேசத் தலைப்படுதல் ஆகும். இத்தகு சூழல் வரும்போது காதல் வெளிப்பட்டு, பெற்றோரின் செவிகளுக்குச் செய்தி எட்டிவிடுவதும் உண்டு. பெற்றோரில் சிலர் இக்காதலை ஏற்றுக்கொண்டு திருமண ஏற்பாட்டைச் செய்வர். பெற்றோரே காதலை அறிந்து, திருமணத்தை முடிக்காமல் பெண்ணையோ, ஆணையோ காதல் நிலையில் இருந்து பிரிக்க நினைத்தால் இருவரும் சேர்ந்து யாருமறியாமல் ஊரைவிட்டு வெளியூர் சென்றுவிடுதலும் உண்டு. இதற்கு உடன்போக்கு என்று பெயர்.

திருமணம் தோன்றிய சூழல்
களவில் ஈடுபட்ட இளைஞர் சிலர், அக்களவு வெளிப்பட்ட பின் நான் இவளை அறிந்ததில்லை என்று பேசியும், காதல் மணம் கொண்டவளைக் கைவிட்டும் வந்தனர். இப்பழக்கம் பலரிடம் பரவாதிருப்பதற்காகக் களவு வெளிப்பட்ட பின் பலர் அறியத் திருமணம் நடத்தும் வழக்கம் வந்ததாகத் தொல்காப்பியர் கூறுவார்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப

(கற்பியல், 4)

என்று விளக்கியுரைப்பார்.

திருமணம் முடிந்த பின்னர் முதன் முதலில் தலைவன், தலைவியைக் கண்ணுற்ற நேரம், தலைவன்பால் உண்டான பெருமையும் உரனும், தலைவியிடம் உண்டான அச்சமும் நாணும், மடனும் நீங்கி இருவரின் நெஞ்சமும் அன்பு வயப்பட்டுக் கூடுவர்.

அகத்திணையில் தோழி
களவு, கற்பு என்ற இரு நிலைகளிலும் தலைவன், தலைவி ஆகிய இருவருக்கும் உற்ற துணையாய் இருந்து உதவுபவள் தோழியே ஆவாள். தலைவியின் உயிர்க்குயிராய் இருக்கும் தோழி காதலுக்கு உதவுவதிலும், இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்வதிலும், தலைவனைத் திருமணத்திற்கு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுவதிலும் களவியல் நிலையில் உதவியாக இருப்பாள். திருமணம் முடிந்த பின்னர், மணம் முடித்து வைத்தமைக்காகத் தலைவன் தோழியைப் பாராட்ட, அது கேட்ட தோழி அது என் கடமை ஆதலின் என்னைச் சிறப்பித்தல் வேண்டாம் என்று கூறுவாள். கிடைத்தற்கு அரியவளாகக் களவுக் காலத்தில் இருந்த தலைவி, திருமணத்திற்குப் பின் எளியவளாய் ஆனபின் அவளிடம் அன்பு காட்டுவதைக் குறைத்து விட்டாய் என்று தோழி கடிந்து கொள்ளுதலும் உண்டு. திருமணத்திற்குப் பிறகு தலைவியின் அழகை முழுமையாகத் துய்த்த தலைவன் இன்னொரு பெண்ணைத் தேடிப் பிரிதலும் உண்டு. இது பரத்தையிற் பிரிவு என்று அழைக்கப் பெறும். இத்தகு நேரங்களில் தலைவனுக்கு அறிவுரை கூறி அவனை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் தோழிக்கு உண்டு.

பாங்கனின் பங்கு
தலைவனின் நண்பன் பாங்கன் எனப்படுவான். தலைவன் களவுக்காலத்தில் தலைவியின் இருப்பிடம் அறிந்து, அவள் தலைவனிடம் கொண்டிருக்கும் காதலைத் தெரிந்து, தலைவனுக்கு உண்மை நிலையைத் தெரிவிப்பான். காதலுக்குத் துணை நிற்பான். மணம் முடிந்து, பரத்தையிற்பிரிவு நிகழும் போது இது நியாயமில்லை என அறிவுரை கூறுவான்.

கூத்தர், பாணர் நிலைகள்
ஆட்டமும், இசையும் வல்லார் சிலர் காதல் வாழ்வில் ஆங்காங்கே தலையிடுவர். தலைவன் எது செய்தாலும் அவனைப் புகழ்ந்துரைக்க வல்லார் கூத்தராவார். தலைவன் பிரிந்து சென்ற போது தலைவியிடம் சென்று ஆறுதல் கூறுதலும், தலைவியின் நிலையைத் தலைவனுக்குக் கூறுதலும் கூத்தர், பாணர் செயல்களாகும்.

அகத்திணையால் உணரப்படும் பண்டைய பண்பாடு
சங்க இலக்கியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த தொல்காப்பியம் வாயிலாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாட்டுச் செய்திகளை நாம் அறிய முடிகிறது. அக வாழ்க்கை என்பது ஒருவனும் ஒருத்தியும் காதலிப்பது, மணந்து கொள்வது மட்டுமல்ல. காதலிக்கும் போது ஏற்படும் இடையூறுகள், அந்த இடையூறுகளை நீக்கப் போராடும் தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோரின் செயல்பாடுகள் இன்றைய வாழ்வோடும் ஒத்துப் போகின்றன. திருமணத்திற்குப் பெற்றோர் ஒத்துக் கொள்ளாத நிலையில் உடன்போக்கு நிகழுதலும் இன்றும் உள்ளதுதான்.

திருமணம் என்கிற சடங்கு, ஒரு பெண்ணைக் காதலித்து ஏமாற்றும் இளைஞர்கள் பெருகி விட்ட சூழலில்தான் நிகழ்ந்ததாக அறிகிறோம். காதல்கூட, ஒத்த குணமும், ஒத்த செல்வமும், ஒத்த பிறப்பும் போன்ற பத்துப் பண்புகள் ஒத்திருந்தால்தான் நிகழும் எனத் தொல்காப்பியம் கூறுகிறது. ஆண் அக ஒழுக்கமும், புறவொழுக்கமும் உடையவனாக விளங்கினான். பெண் இல்லத்தில் இருந்து இல்லறத்தை மட்டும் நடத்தி மகிழ்வுற்றாள். ஆதலின் அவள் அக ஒழுக்கத்திற்கு உரியவள் எனக் கருதப்பட்டாள். பெண் வெளிநாடு செல்லவும், படிக்கச் செல்லவும், போர்க்களத்திற்குச் செல்லவும் அனுமதி கிடையாது. தினைப் புனம் காக்க மட்டுமே பெண் அனுமதிக்கப் பட்டிருக்கிறாள். பெண், கடல் கடந்து செல்லக் கூடாது. பெண்களுக்குக் கற்பொழுக்கம் மிகுதியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கற்பொழுக்கம் இல்லாதவள் பரத்தை என அழைக்கப்பட்டாள். ஆண்கள் பரத்தையர் வீடுகளுக்குச் செல்வது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. பெண்கள் ஆண்களைத் தம் உயிரினும் மலோகக் கருதினர். ஆண்கள் தம் தொழிலையே மிகுதியும் விரும்பினர். இதனை,

வினையே ஆடவர்க்குயிரே வாள்நுதல்

மனையுறை மகளிருக்கு ஆடவர் உயிர்என (135)

எனவரும் குறுந்தொகைப் பாடல் வரிஅடிகளால் உணரலாம்.

தொகுப்புரை
அகத்திணைப் பாகுபாட்டினைத் தொல்காப்பியர் மிகவும் ஆழமாகப் பகுத்துக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு சூழலிலும் யார், யார் உரையாற்ற வேண்டும், என்ன செயல்கள் செய்யவேண்டும் என்பதை விளக்கியுரைத்துள்ளார். பொருளதிகாரத்தில் உள்ள அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகியவற்றில், காதல் தோன்றுவது முதலாகக் காதல் வாழ்வின் அனைத்துச் செய்திகளையும் கூறிவிடுகிறார். மேலும் மெய்ப்பாட்டியலில் அகத்திணைக்கு உரிய மெய்ப்பாடுகளையும் விளக்குகிறார்; பொருளியலிலும் அகத்திணையியலிலும் சொல்லாமல் விட்ட செய்திகளை எடுத்துரைக்கிறார். சங்க இலக்கியங்கள் பெரும்பான்மையும் இத்தொல்காப்பிய அகத்திணைப் பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன.

கேள்வி பதில்கள்

  1. அகத்திணை எத்தனை வகைப்படும்? அவற்றின் பெயர்களைக் கூறுக.

விடை : அகத்திணை ஏழு வகைப்படும். அவை : கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பால், பெருந்திணை என்பன.

  1. ‘அகம்’ – விளக்கம் தருக.

விடை : ‘அகம்’ – ஒத்த அன்பால் ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் கண்டு காதல் கொள்ளுதல்.

  1. முதற்பொருள் என்றால் என்ன?

விடை : முதன்மையாகத் தோன்றிய பொருள்கள் முதற்பொருள்கள். அதாவது, நிலமும், பொழுதும்.

  1. கருப்பொருளை விளக்குக.

விடை : கருப்பொருள் – ஐவகை நிலத்திற்கும் உரிய தெய்வம், உணவு, பறவை, விலங்குகள், பறை, தொழில், யாழ், பண், ஊர், பூ போன்றவை கருப்பொருள்களாம்.

  1. உரிப்பொருள் என்றால் என்ன?

விடை : ஐவகை நிலத்திற்கும், அறுவகைப் பெரும்பொழுதுக்கும், அறுவகைச் சிறுபொழுதுக்கும் உரிய காதல் நிலைகள் உரிப்பொருள் எனப்படும்.

  1. பாலை நிலம் எவ்வாறு உருவாவதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது?

விடை : முல்லை, குறிஞ்சி போன்ற நிலங்கள் நீண்ட காலம் வறட்சியில் காய்ந்துகிடக்கும்போது பாலை நிலம் உருவாகும். முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் – (சிலப்பதிகாரம்)

  1. பெரும்பொழுது என்றால் என்ன? அவற்றின் பெயர்களைக் கூறுக.

விடை : ஓர் ஆண்டின் ஆறு பிரிவுகள் பெரும்பொழுது என்று குறிக்கப்படும். அவை: கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில் காலம், முதுவேனிற் காலம் என்பன.

  1. சிறுபொழுதினை விளக்கியுரைக்க.

விடை : சிறுபொழுது என்பது ஒரு நாளின் ஆறு பகுதிகளாம். அவை: வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் ஆகும்.

  1. ஒவ்வொரு அகத்திணைக்கும் உரிய புறத்திணைகளைக் கூறுக.

விடை : அகத்திணை – புறத்திணை

குறிஞ்சி – வெட்சி

முல்லை – வஞ்சி

மருதம் – உழிஞை

நெய்தல் – தும்பை

பாலை – வாகை

கைக்கிளை – பாடாண்

பெருந்திணை- காஞ்சி

  1. களவு என்றால் என்ன? – விளக்குக.

விடை : களவாவது பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் காதல் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, செல்வநிலை முதலிய வற்றால் ஒப்புமை உடைய ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு யாருமறியாமல் காதலித்தல்.

  1. களவு ஒழுக்கத்தின் வகைகளைக் கூறுக

விடை : களவு ஒழுக்கத்தின் வகைகள் நான்கு.

  1. காமப் புணர்ச்சி
  2. இடந்தலைப்பாடு
  3. பாங்கொடு தழாஅல்
  4. தோழியிற் கூட்டம்
  5. ‘இடந்தலைப்பாடு’ – விளக்குக.

விடை : நாள்தோறும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்படும். முதல் நாள் சந்தித்த அதே இடத்தில் சந்திப்பது இடந்தலைப்பாடு ஆகும்.

  1. பாங்கொடு தழால் என்றால் என்ன?

விடை : நண்பன் தலைவனது காதலுக்கு உதவுதல் பாங்கொடு தழால்.

  1. தோழியிற் புணர்வு – விளக்கம் தருக

விடை : தோழியிற் புணர்வு – தோழியின் உதவியுடன் காதலித்தல்.

  1. கற்பு என்றால் என்ன? – விளக்குக.

விடை : கற்பு என்பது காதல் நிலையில் இருந்து பெற்றோர் உதவியுடன் மணந்து கொள்ளல்.

  1. தோழியின் பங்கு யாது?

விடை : தோழி தலைவிக்கு உதவுதல், தலைவனுக்கு அவன் வரைவு நீட்டித்தவிடத்தும் (திருமணத்தைத் தள்ளிப் போடும் போதும்) பரத்தையிற் பிரிவு நேரத்திலும் அறிவுரை கூறல்.

ஆசிரியர்கள் : முனைவர். ச. மணி & முனைவர். நை.மு. இக்பால்