புறத்திணை என்பது என்ன எனச் சொல்கிறது?
புறத்திணைகளும் அகத்திணைகளும் எவ்வாறு பொருந்துகின்றன எனச் சொல்கிறது. புறத்திணைகளின் எண்ணிக்கை பற்றி விளக்குகிறது.
புறத்திணைகளையும் அவற்றிற்குரிய துறைகளையும் விளக்குகிறது. புறத்திணைப் பாகுபாடுகளால் அறியப்படும் சமூகம் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
புறத்திணைகளைப் பற்றிப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
• இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காதலும் வீரமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புற்று விளங்கின என்பதை அறியலாம்.
- சங்க காலப் போர் முறைகளையும், அவற்றில் இருந்த ஒழுங்கமைப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.
- சங்க காலச் சமுதாயத்தில் புறவாழ்க்கை பெரும்பாலும் வீரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.
முன்னுரை
அகம் என்னும் சொல்லைப் போலவே புறம் என்பதும் ஓர் இலக்கியக் கலைச் சொல்லாகும். புறம் என்பது காதல் தவிர்ந்த ஏனைய பொருள்களைப் பற்றியது. அதாவது போர், வீரம், கொடை, புகழ், அறநெறி போன்ற வாழ்க்கையின் புறக்கூறுகளைப் பற்றியது. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் அகம், புறம் ஆகியவற்றைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
“அகப்பொருளானது போக நுகர்ச்சியாகலான் அதனாலாய பயன் தானே அறிதலின் அகம் என்றார். புறப்பொருளாவது மறஞ் செய்தலும் அறஞ் செய்தலும் ஆகலான் அவற்றாலாய பயன் பிறருக்குப் புலனாதலின் புறம் என்றார்”. புறப்பொருள் என்பது போர், வீரம், கொடை, புகழ், பிறப்பு, இறப்பு முதலிய சமுதாயப் புறச் செய்திகளைச் சுட்டுகின்றது. இப்பகுதிக்குப் புறத்திணையியல் எனத் தொல்காப்பியர் பெயரிட்டுள்ளார். அகத்திணையியல் காதலை மட்டுமே கூறும். ஆனால் புறத்திணையியலோ, காதல் தவிர மற்ற எல்லாவற்றையும் கூறும். புறத்திணைகளைப் பற்றி நாம் அறியும் போதுதான் சமூக வாழ்க்கை பழங்காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும். சங்க காலப் புறத்திணைப் பாடல்கள் போர் பற்றிய செய்திகளையும், அரசர்களின் ஆட்சியின் சிறப்பையும், புலவர்கள் மேல் அவர்கள் கொண்டிருந்த பேரன்பையும், மிகச்சிறப்பாக விளக்குகின்றன. மேலும் அப்பாடல்களில் சொல்லப்படும் கருத்துகள் அக்கால மக்களின் வாழ்வியலை முழுமையாக எடுத்துக்காட்டுகின்றன.
தொல்காப்பியப் புறத்திணையியல்
தொல்காப்பியர் அகத்திணையியல் கூறியதற்குப் பிறகு புறத்திணையியலைக் கூறக் காரணம் என்னவென்றால் அகப் பொருள் பகுதிக்குப் புறனாய பகுதிகளைக் கூறுவதற்கேயாகும். தொல்காப்பியர் முன்னர் அகத்திணைகள் ஏழு வகைப்படும் என்று கூறினார். அந்த அகத்திணைகளுக்கு இவ்வியலில் கூறப்பெறும் புறப்பகுதிகள் அவ்வகத்திணைகளுக்கே புறத்திணைகளாய் அமைந்த சிறப்பினையும் உணர்த்துகின்றார்.
புறத்திணைப் பாகுபாடு
காதல் தவிர, பிறவற்றைக் கூறும் புறத்திணைப் பகுதியில் ஏழு திணைகள் உள்ளதாகத் தொல்காப்பியர் கூறுவார். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் பெயர் பெறும். அன்பின் ஐந்திணை எனப் பெறும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போலவே, இப்புறத்திணைகளும் பூக்களின் பெயரைக் கொண்டு பெயர் பெற்றிருப்பதைக் காணலாம். ‘பாடாண்’ மட்டுமே பூப்பெயரைக் கொள்ளவில்லை. ஏழு அகத்திணைகளுக்கு இணையாக ஏழு புறத்திணைகளைத் தொல்காப்பியர் கூறுகிறார். அகத்திணைக்குரிய குறிஞ்சி இங்கு வெட்சி என்னும் திணை ஒழுக்கத்தைத் தனக்குப் புறத்திணையாகக் கொள்ளும். முல்லைக்கு வஞ்சித் திணை புறத்திணையாகும். மருத ஒழுக்கத்திற்குப் புறத்திணையாவது உழிஞைத் திணையாகும். நெய்தலுக்குத் தும்பை என்பது புறத்திணையாகும். பாலை என்னும் நடுவுநிலைத் திணைக்குப் புறத்திணையாக வாகைத்திணை அமையும். பெருந்திணை என்னும் பொருந்தாக் காமப் பொருளுடைய அகப் புறத்திணைக்கு – நிலையாமைப் பொருள் குறித்த காஞ்சித் திணை புறத்திணையாகும். கைக்கிளை என்னும் ஒரு தலைக் காமத்திற்குப் புறத்திணையாகப் பாடாண் திணை அமையும். இவ்வகத்திணைகள் ஏழும், புறத்திணைகள் ஏழும் ஒன்றிற்கொன்று தொடர்புடையனவாகக் கூறப் பெறுதல், தொல்காப்பியரின் நுண்மாண் நுழை புலத்தைக் காட்டுகின்றது.
அகத்திணைகளும் புறத்திணைகளும்
அகத்திணைகள் ஏழற்கும் ஏழு புறத்திணைகளை இணைத்து இன்னின்ன அகத்திணைகளுக்கு இன்னின்ன புறத்திணைகள் உரியனவாகும் எனப் பிரித்து விளக்கியுள்ளமையை முன்னர்க் கண்டோம்.
தொல்காப்பியர் புறத்திணையியலின் முதல் நூற்பாவில்
அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்
வெட்சி தானே குறிஞ்சியது புறனே ;
உட்குவரத் தோன்றும் ஈர்ஏழ் துறைத்தே
என்பதன் மூலம் அகத்திணை இலக்கணத்தை முழுமையாக உணர்ந்தோர் மட்டுமே புறத்திணை இலக்கணத்தைச் சிறப்பாக அறிய இயலும் என்ற கருத்தினைக் கூறுகிறார். தொல்காப்பியர் அகப் புறப் பொருள்களைப் பிரித்து விளக்கியுள்ள அடிப்படையில் புறத்திணைப் பாகுபாடுகளைக் காண்போம்.
குறிஞ்சியும் வெட்சியும்
அகத்திணைக்குரிய குறிஞ்சி, புறத்திணையாகிய வெட்சி என்னும் திணை ஒழுக்கத்தைத் தனக்குப் புறத்திணையாகக் கொண்டமைக்கு நுண்ணிய காரணங்கள் உண்டு. தொல்காப்பியர்,
வெட்சி தானே குறிஞ்சியது புறனே
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே
-(புறத்திணையியல், 1)
என்று கூறுவார்.
இந்நூற்பாவால் வெட்சித்திணைக்குரிய இடத்தையும், துறையையும் வரையறுத்துக் கூறியுள்ளார். வெட்சி என்ற புறத்திணைகுறிஞ்சி என்ற அகத்திணைக்குப் புறமாக அமைந்தமைக்குரிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிக்கலாம்:
(1) பகை நாட்டினர் ஆநிரைகளைக் கவர்ந்து கொள்ளுதல் என்பது பசுக்கள் மேயும் குறிஞ்சி நிலத்தில் கோட்டைக்கு வெளியே (காவல் காட்டில்) கட்டப்பட்டுள்ள ஆநிரைகளைக் கவர்வதால் அதுகுறிஞ்சிக்குப் புறமாயிற்று எனலாம்.
(2) மகளின் உள்ளத்தை இளைஞன் ஒருவன் களவாடுவதே குறிஞ்சித் திணை. அதே போல் ஒரு மன்னன் ஆநிரைகளை, வேற்று மன்னனின் வேளையில் கவர்ந்து வருதல் இரவு வெட்சித் திணையாகும்.
முல்லையும் வஞ்சியும்
வஞ்சியாகிய புறத்திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறமாகும். மாற்றார் நாடெல்லாம் தனக்கே வேண்டுமென்று நினைத்துப் போருக்குச் சென்ற வேந்தனை, ஒரு மன்னன் அஞ்சாது எதிர் சென்று போர் செய்ய முற்படுவதை வஞ்சி கூறும். இதனைத் தொல்காப்பியர், வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே (புறத்திணையில்,6) என்று கூறுவார். இத்திணையை முல்லைத் திணைக்குப் புறமாகக் கூறியதற்கு நுண்ணிய காரணம் உண்டு. படையெடுத்துச் செல்லும்போது படை இளைப்பாறவும் நீர் அருந்தி, உணவு சமைத்து உண்ணவும், நிழல் சூழ்ந்த இடம் தேவைப்படும். நிழல் சூழ்ந்த காடும், கார் காலத்தில் வேண்டுமளவு நீரும் தேவைப்படுவதால் முல்லைக்கு வஞ்சி புறத்திணையாயிற்று. மேலும் தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் நிலையும் இங்குப் போர்க்களத்தில் வெற்றிக்காகக் காத்திருக்கும் வீரனுக்குப் பொருந்தும்.
மருதமும் உழிஞையும்
உழிஞை தானே மருதத்துப் புறனே
முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற்று ஆகும் என்ப
(புறத்திணையில்,8)
என்று தொல்காப்பியர் உழிஞைத் திணையை மருதத்துக்குப் புறத்திணையாகக் கூறுவார். அரண் என்பது இயற்கையான, மற்றும் செயற்கையான அரண்களாகும். உழிஞைத் திணை மருதத்திற்குப் புறமாதற்குரிய காரணம் வருமாறு வஞ்சியில் போரிட்டுத் தோற்ற வேந்தன், தன் நாடு சென்று அரண்மனைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டிருப்பான். போரிட்டு வென்ற வேந்தன் அவன் நாட்டில் புகுந்து இரவில் முற்றுகையிடுவான். போரிடும் காலம் விடியற்காலமாகும். மருதத் திணையில் ஊடல் கொண்ட மகளிர், கணவன் மார்களுக்குக் கதவடைத்துத் தனிமையில் இருப்பர். தலைவனும் விடியற்காலையில் வந்து கதவினைத் திறந்து உள்புக நினைப்பது மருத ஒழுக்கமாகும். இதனால் உழிஞையும் மருதமும் இணையாயின.
நெய்தலும் தும்பையும்
தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறமாகும். இருபெரும் வேந்தரும் ஒரு களத்தில் போரிடுவர். அதற்கு, களரும் மணலும் பரந்த நிலமே போரிடும் களமாக அமையும். அவ்வாறு போரிடுவதற்குப் போதிய இடம் கடலைச் சார்ந்த மணல் பகுதியாக இருப்பது சிறப்புடையது கதிரவன் மறையும் காலம் போர் முடியும் நேரமாகும். எனவே நெய்தலுக்கு உரிய எற்பாடு நேரமே தும்பைக்கும் உரியதாயிற்று. மேலும் போர்க்களம் சென்ற காதலன் உயிருடன் திரும்பி வருதல் அவ்வளவு உறுதியில்லை. எனவே நெய்தலின் உரிப்பொருளாகிய இரங்கலும் இரங்கல் நிமித்தமும் தும்பைக்குப் பொருந்துவதாயின.
இதனைத் தொல்காப்பியரும்
தும்பை தானே நெய்தலது புறனே ;
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப
(புறத்திணையில், 12)
என்று உரைப்பர்.
பாலையும் வாகையும்
வாகை தானே பாலையது புறனே தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப (புறத்திணையில், 15) என்று தொல்காப்பிய நூற்பா கூறும். வாகை என்பது வெற்றியைக் குறிக்கும். வாகைத் திணை பாலை என்னும் அகத்திணையினது புறமாகும். பாலைக்கு வாகை எவ்வாறு புறமானது என்பதற்குக் கீழ்வரும் காரணங்களைக் கூறலாம்.
- பாலை தனக்கென ஒரு நிலமின்றி எல்லா நிலத்திலும் வறட்சிக் காலத்தில் உருவாகும். அதுபோல வாகையும் எல்லா நிலத்திலும் நிகழ்வது.
- காதலுற்ற தலைவனும் தலைவியும் புணர்ச்சியினின்று நீங்கி இல்லறம் நிகழ்த்தி, பொருள் தேடுவதற்காகப் பிரிவது பாலைத் திணை யாகும். வாகையில் புகழ் எய்துவதற்காக, வெற்றி பெற்ற வேந்தன் துறக்கம் (வீடுபேறு) பெறும் கருத்தினால் பிரிவான். எனவே இரண்டிலும் பிரிவு உண்டு.
- பாலை அறக் காதலை வளர்த்து, மீண்டும் இன்பத்தை மிகுவிப்பது போல, வாகை மறக் காதலை வளர்த்து வெற்றி இன்பம் விளைவிப்பதாலும், பாலை போல வாகையும் குறிப்பிட்ட நிலம் என்ற வரையரையின்றி எங்கும் நிகழுவதாதலாலும் இரண்டும் ஒப்புமையாயின.
- பாலைக்குரிய பெரும்பொழுதும், சிறுபொழுதுமே போர் நிகழ்ச்சி முடிவு பெறுதற்குச் சிறந்தனவாதலின் நிலம், பொழுது என்னும் இரண்டு முதற்பொருள்களால் வாகை பாலைக்குப் புறமாயிற்று. எத்துறையிலும் வெற்றி காண வேண்டுமாயின் தலைவியைப் பிரிந்தே ஆதல் வேண்டும். எனவே உரிப்பொருளாலும் புறமாயிற்று.
கைக்கிளையும், பாடாண் திணையும்
பாடாண் திணையானது கைக்கிளைக்குப் புறத்திணையாகும். கைக்கிளையாவது ஒரு நிலத்திற்கோ, ஒரு பொழுதுக்கோ உரியதாகாமல் எல்லா நிலத்திற்கும், எல்லாப் பொழுதுக்கும் உரிய ஒருதலைக் காமமாகும். அதுபோல இதுவும் ஒரு பாலுக்கு உரியது அன்று. ஒருவனை ஒருவன் ஏதேனும் காரணம் பற்றிப் பாராட்டி நிற்பது பாடாண் திணையாகும். வெட்சி முதல் வாகை ஈறாக உள்ள திணைகள் போர் தொடுப்போரும் எதிர்ப்போருமாகிய இருவருக்கும் உரியது; காஞ்சியாவருக்கும் உரியது ;அவ்வாறு இல்லாமல் பாடாண் திணை பாடப்படுபவர், பாடுபவர் என்னும் இருவருள் பாடுவோர் விருப்பம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருத்தலின் கைக்கிளை போல இதுவும் ஒருவர் விருப்பமாயிற்று. இதனைத் தொல்காப்பியர்,
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண்டுடைத்தே
(புறத்திணையில், 20)
எனக் கூறுவார்.
பெருந்திணையும் காஞ்சியும்
காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். காஞ்சித் திணை அகத்திணையாகிய பெருந்திணைக்குப் புறத்திணையாகும். அது நன்று அல்லாத சிறப்பினை உடையது; மேலும் நிலைபேறில்லாத இவ்வுலகத்தைப் பற்றிய வழியினைக் கூறுவது ஆகும். நன்றல்லாத சிறப்பாவது செயலால் நன்றல்லாதது போல் தோன்றி, கொள்கையால் சிறந்திருத்தல். அன்பின் ஐந்திணைகளில் பெருந்திணையாகிய மடல் ஏறுதல் போல்வன வரின் அவற்றிற்குப் புறமாக ஒதுக்கப்படுதல் போல, வெட்சி முதலிய புறத்திணைகளில் நிலையாமை உணர்வு வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுதலின், காஞ்சி பெருந்திணைப் புறமாயிற்று. இதனைத் தொல்காப்பியர்,
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே.
(புறத்திணையில், 18) எனக் கூறுகிறார்.
புறத்திணைகளின் எண்ணிக்கை
புறத்திணைகளை அகத்திணைகளுக்கு இணையாக வைத்து ஏழு என்று தொல்காப்பியர் வகுத்தாலும், பிற்கால இலக்கண நூலாகிய புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணைகளைப் பன்னிரண்டு என்று கூறுகிறது. தொல்காப்பியர் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்று ஏழு திணைகளாகக் கூறுகிறார். தொல்காப்பியருக்குப் பின் வந்த இலக்கண ஆசிரியர்கள் புறத்திணைகளைப் பன்னிரண்டாகப் பிரித்தனர். அவை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனப்பட்டன. பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற புற இலக்கண நூல்கள் பன்னிரண்டு திணைகளாக விளக்கியுரைக்கின்றன. எனவே தொல்காப்பியருக்குப் பிறகு புறப்பொருள் மேலும் பிரிக்கப்பட்டதை உணருகிறோம். ஆனால் உரையாசிரியர் இளம்பூரணர் அகங்கை ஐந்து உடையாருக்குப் புறங்கை ஐந்தாற்போல அகத்திணை ஏழு என்றால் புறத்திணையும் ஏழுதான் என்றுரைப்பர்.
இவற்றுள் கரந்தை, நொச்சி, பொதுவியல் புதிதாகக் கொள்ளப்பட்ட புறத்திணைகளாகும். அகத்திணையுள் அடங்கிய கைக்கிளை, பெருந்திணை புறத்திணையிலும் இணைக்கப்படவே இவற்றின் எண்ணிக்கை பன்னிரண்டாயிற்று. ஆநிரை கவர்தலைக் கூறிய தொல்காப்பியர், ஆநிரை மீட்டலாகிய கரந்தையைக் கூறவில்லை. ஏனெனில் அகத்திணைகளுக்கு இணையாகவே புறத்திணைகளைக் கூறும்போது ஒருவனும் ஒருத்தியும் காதல் கொள்ளும் களவினைக் கூறியவர் ஆநிரை கவர்தல் என்னும் களவினைக் கூறி ஒப்புமைப்படுத்துகிறார். ஆநிரை மீட்டல் என்றால் களவு நிலை மாறி, அடுத்தவர் தலையீடு நிகழ்ந்து, காதல் முறிக்கப்படுதல் வந்துவிடும் என அவர் நினைத்திருக்கக் கூடும்.
அதே போல், நொச்சித் திணையையும் அவர் கூறவில்லை. நொச்சித் திணை என்பது கோட்டையின் உள்ளே இருந்துகொண்டு தன் மதில் அழிவு படாமல் காத்தலாகும். பகைவேந்தன் மதிலை வளைப்பான். இது, பகைவர் மதிலை அழித்துக் கோட்டைக்குள் நுழையும் உழிஞைத் திணையுள் அடங்கி விடுகிறது. ஏனெனில் ஊடலும், ஊடல் நிமித்தமும் உள்ள மருதத் திணையின் புறத்திணை, உழிஞைத் திணையாகும். வாயில் அடைத்து ஊடல் கொள்ளும் தலைவியின் ஊடல் தீர்த்துத் தலைவன் உள்ளே நுழைந்து விடுவதைக் குறிக்கும் மருதத் திணைக்குப் புறத்திணையாகிய உழிஞையுடன் நொச்சித்திணைச் செய்திகளும் அடங்கிவிடுவதால் அதனைத் தொல்காப்பியர் பிரிக்கவில்லை. மேலும் கைக்கிளை, பெருந்திணை ஆகியன காதல் பற்றிய செய்திகளுக்கு உரிய ஆகலான் அவற்றைத் தொல்காப்பியர் புறத்திணையில் சேர்க்கவில்லை. பொதுவியல் என்பது புறத்திணைகளில் கூறப்படாது விட்ட துறைகளும் கூறப்பட்ட புறத்திணைகளுக்குப் பொதுவாய் வருவனவும் ஆகியவற்றுக்கு இலக்கணம் கூறுவதாகும். இதனையும் தொல்காப்பியர் கூற வேண்டிய தேவையில்லை என்பதால் விட்டு விட்டார். எனவே தொல்காப்பியர் மிகச் சிறப்பாகப் பாகுபாடு செய்த புறத்திணைகளை ஏதோ காரணம் கருதி, பிற்காலத்தார் பன்னிரண்டாகப் பிரித்தனர் என நாம் கருதலாம்.
திணையும் துறைகளும்
தொல்காப்பியர் ஆநிரை கவர்தல், மண் கவர்தல், கோட்டையைக் கவர்தல் ஆகிய போர்ச் செயல்களில் கவர்பவர், அதனை எதிர்ப்பவர் ஆகியோரின் செயல்களை முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை ஆகிய திணைகளில் விளக்குகிறார். கவர்தல், எதிர்த்தல் என்ற இரு செயல்களுக்கும் தனித் திணைகளை உருவாக்கி ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலையில் வெட்சி – கரந்தை, வஞ்சி – காஞ்சி, உழிஞை – நொச்சி எனப்பகுத்துக் காட்டுகிறார். கரந்தையும் நொச்சியும் முறையே ஆநிரையை மீட்டலையும் கோட்டையை மீட்டலையும் குறிப்பன. இவை தொல்காப்பியரால் வெட்சியிலும் உழிஞையிலும் சுட்டப்பட்டிருக்கின்றன. பல்வேறு நிலையாமைகள் பற்றிக் கூறும் பகுதிக்குத் தொல்காப்பியர் காஞ்சித் திணை எனப் பெயரிட்டிருக்க, ஐயனாரிதனார் அதனை மண் மீட்டலைக் குறிக்கும் திணையாகக் காட்டியிருப்பது மிகப்பெரிய மாற்றமாகும். தொல்காப்பியர் சுட்டிய புறத்திணைகளின் உரிப்பொருளையும் அவற்றின் துறைகள் குறித்த செய்திகளையும் இப்பகுதியில் காண்போம். திணை என்பது முழுச்செயலைக் குறிப்பது. துறை என்பது முழுச்செயலுக்குள் இருக்கும் சிறுசிறு நிகழ்வுகளைக் குறிப்பது.
வெட்சித் திணையும் துறைகளும்
பகைவர் நாட்டின் மேல் போர் தொடுக்க எண்ணும் அரசன் போர் தொடங்கும் முன், அறவோர், பிணியாளர், பெண்டிர் முதலியவர்களைப் போர் நடக்கும் இடத்தை விட்டு வெளியேறப் பணிப்பான். தாமே வெளியேற முடியாத பசுக்கூட்டங்களைத் தன்படை வீரர்களைக் கொண்டு கைப்பற்றி வருவான். இது வெட்சிப் போர் ஆகும். ஆநிரை கவர்வோர் வெட்சிப் பூமாலை சூடியிருப்பர். ஆநிரை மீட்போர் கரந்தைப் பூ மாலை சூடியிருப்பர். ஆநிரை கவர்தலைப் போர் தொடங்கு முன் தன் கருத்தைப் பகைவர்க்கு அறிவிப்பது போலவும் கொள்ளலாம். தொல்காப்பியர் வெட்சித்திணைக்கு 14 துறைகள் கூறியுள்ளார். நிரை கவர்தலுக்கும் (வெட்சி) மீட்டலுக்கும் (கரந்தை) இத்துறைகள் பொதுவானவை.
வெட்சியில் கரந்தை
வெட்சித் திணையில் கரந்தை என்ற பகுதியையும் தொல்காப்பியர் கூறுவார். கரந்தையை ஒரு தனித் திணையாகக் கொள்ளவில்லை. புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரிதனார் ஆநிரை கவர்தலை மட்டும் வெட்சிப் படலமென்று பெயரிட்டு 19 துறைகள் வகுத்தார். வெட்சிப் படையினர் தம் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதைக் கண்டு இடைமறித்துப் போரிடுதலைத் தனித் திணையாக்கிக் கரந்தைப் படலம் எனப் பெயரிட்டு ஐயனாரிதனார் 13 துறைகளை வகுத்துள்ளார்.
வஞ்சித் திணையும் துறைகளும்
தன்னை மதியாது தனது நாட்டைக் கைப்பற்றக் கருதிய பகைமன்னன் மேல் தான் படையெடுத்துச் செல்வது வஞ்சித் திணையாகும். இதற்குத் தொல்காப்பியர் 13 துறைகளை வகுத்துள்ளார். படையெடுத்து வருவோரை எதிர்கொள்வதும் வஞ்சித் திணையுள் கூறப்பட்டுள்ளது. வெண்பாமாலை ஆசிரியர் நாட்டைக் கைப்பற்றுதலை மட்டும் வஞ்சிப் படலம் என்று கூறி அதற்கு 20 துறைகளை வகுத்தார். படையெடுப்பை எதிர்த்தலைக் காஞ்சிப் படலம் எனப் பிரித்துக் குறிப்பிட்டு அதற்கு 21 துறைகளை வகுத்துள்ளார். தொல்காப்பியர் காஞ்சி என்பதற்கு வேறு பொருள் கொண்டார்.
உழிஞைத் திணையும் துறைகளும்
பகைவர் மதிலை அழித்துக் கோட்டைக்குள் உழிஞை மன்னன் புகுதலைக் கூறுவது உழிஞை ஆகும். தொல்காப்பியர் படையெடுத்து முற்றுகையிடுதல் (உழிஞை), உள்ளேயிருப்பவன் அதைத் தடுத்துக் காத்தல் (நொச்சி) இரண்டையுமே உழிஞையாகக் கொண்டு 12 துறைகள் வகுத்தார்.
உழிஞையில் நொச்சி
நொச்சித் திணையைத் தொல்காப்பியர் தனித்திணையாகக் கொள்ளவில்லை. உழிஞையில் இணைத்தே கூறுகிறார். கோட்டையின் உள்ளே இருந்து கொண்டு தன் மதில் அழிவுபடாமல் காத்தல் நொச்சித் திணையாகும். மதில் காப்போர் நொச்சிப் பூவைச் சூடியிருப்பர். ஐயனாரிதனார் மதிலை வளைத்தலை மட்டும் உழிஞைப் படலம் என்று கூறி அதற்கு 28 துறைகளை வகுத்தார். மதில் காத்தலை நொச்சிப் படலம் என்று தனியாகப் பிரித்து அதற்கு 8 துறைகள் வகுத்தார்.
தும்பைத் திணையும் துறைகளும்
பகை அரசர் இருவர் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அவ்விடத்தைப் போர்க்களமாகக் கொண்டு போரிடுதல் தும்பைத்திணையாகும். இவ்வாறு போரிடுவோர் தும்பைப் பூவைச் சூடிப்போரிடுவர். இத்திணை 12 துறைகளை உடையது. ஐயனாரிதனார் இதற்குத் தும்பைப் படலம் என்று பெயரிட்டு 23 துறைகளை வகுத்தார்.
வாகைத் திணையும் துறைகளும்
தன் பகை அரசனை வென்று வெற்றி பெறுதல் வாகைத்திணையாகும். வென்ற மன்னன் வாகைப்பூச் சூடி வருவான். வெற்றி பெற்றதும், அதைச் சிறப்பாகக் கொண்டாடுவதும் வாகைத் திணையின் பாற்படும். வாகையின் துறைகள் 18 ஆகும். அரசர்கள் மட்டுமன்றி மற்றவர்களும் அவரவர் துறையில் வெற்றி பெறுதலும் வாகையுள் அடங்கும். புறப்பொருள் வெண்பா மாலை இதனை வாகைப் படலம் எனப் பெயரிட்டு 32 துறைகள் வகுத்துள்ளது.
காஞ்சித் திணையும் துறைகளும்
நிலைபேறு இல்லாத உலக இயற்கையைப் பற்றி எடுத்துரைப்பது காஞ்சித் திணையாகும். இதற்கு 20 துறைகள் கூறப்பட்டுள்ளன. வெண்பாமாலை காஞ்சி என்பதற்கு வேறு பொருள் கொண்டு பகைவரைத் தன் நாட்டின் எல்லையைத் தாண்ட விடாமல் தடுத்தல் காஞ்சிப் படலம் என்கிறது. இவர்கள் காஞ்சிப் பூவைச் சூடியிருப்பர். இதற்கு 21 துறைகளைப் புறப்பொருள் வெண்பாமாலை காட்டுகிறது.
பாடாண் திணையும் துறைகளும்
வெற்றி பெற்ற அரசனின் வீரம், புகழ், கொடை முதலிய பண்புகளைப் புகழ்ந்து பாடுதல் பாடாண் திணையாகும். இத்திணையில் 25 துறைகள் உள்ளன. புறப்பொருள் வெண்பா மாலை இதனைப் பாடாண் படலம் என்று கூறி 48துறைகளைக் காட்டுகிறது. திணைகள், துறைகள் ஆகியவற்றின் விரிவும் விளக்கமும் புறப்பொருள் வெண்பா மாலை பற்றிய பாடங்களில் படிக்கலாம்.
புறத்திணைகள் கூறும் சமூகச் செய்திகள்
புறத்திணைகள் போர்ப் பிரிவுகளை விளக்குகின்றன. ஆநிரைகளைக் கவர்தல் தான் போருக்குத் தொடக்கமாக அமைகின்றது. ஆநிரை கவர்வோர் செயலை ஆநிரையை மீட்போர் மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிடுவர். பகைவன் நாட்டைக் கைப்பற்றவோ, அவ்வரசனின் மகளைப் பெண் கேட்டு, அவன் தர மறுக்கும்போதோ, போர் நடத்தப்பெறுதல் பெரும்பான்மை நிகழ்வாக இருக்கும். சில நேரங்களில் இகழ்ந்து பேசியதாலும் இகழ்ச்சிக்கு ஆட்பட்டவன் போர்தொடுத்தலும் நடைபெற்றுள்ளது. புறத்திணைகள் போர்ப் பிரிவுகளைக் கூறினாலும் அவற்றிற்குரிய துறைகள் போரின் சிறு சிறு நிகழ்வுகளைக் கூறுவன ஆகும்.
போருக்கு அடிப்படைக் காரணம் உலகப் பொருள்கள் மேல் ஆசையும், பெண்ணாசையுமே ஆகும். புறத்திணைகளில் ஒன்றான காஞ்சித் திணை உலக நிலையாமையை எடுத்துரைக்கிறது. வாழ்வில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும் இது எடுத்துக்கூறுகின்றது. ஆசைகளால் பயன் இல்லை என்கிறது இது. போர் தொடங்குவதில் இருந்து போர் முடிந்து வெற்றி பெற்றோ, தோல்வியுற்றோ வரும்வரை ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் தான் போர் நிகழ்விற்கும் ஓர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் உள்ள புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவையும், பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை இலக்கியங்களும் மதுரைக் காஞ்சியும் மேற்கண்ட புற இலக்கணப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன.
தொகுப்புரை
இப்பகுதி புறத்திணைப் பாகுபாட்டில் தொல்காப்பியர் கூறியதிணைகளையும், துறைகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், பிற்காலப் புறப்பொருள் வெண்பாமாலையின் திணை துறைகளையும் நாம் மேம்போக்காக அறிந்து கொண்டோம். கைக்கிளை, பெருந்திணை ஆகியவை அகத்திணைகளாக இருந்தாலும் அன்பின் ஐந்திணை என்னும் வரையறைக்குள் அடங்காததால் பிற்காலத்தில் புறத்திணையில் இணைக்கப்பட்டன.
கேள்வி பதில்கள்
- புறப்பொருள் என்றால் என்ன?
விடை : அகப்பொருள் என்பது போலவே புறப்பொருள் என்பதும் ஓர் இலக்கியக் கலைச் சொல்லாகும். புறம் என்பது காதல் தவிர்ந்த ஏனைய மானுடப் பொருள்களைப் பற்றியது. அதாவது போர், வீரம், கொடை, புகழ், அறநெறி போன்ற வாழ்க்கையின் புறக்கூறுகளைப் பற்றியது.
- தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறி, அதன் பிறகு புறத்திணையியல் கூறக் காரணம் யாது?
விடை : தொல்காப்பியர் அகத்திணையியல் கூறியதற்குப் பிறகு புறத்திணையியலைக் கூறக் காரணம், அகப்பொருள் பகுதிக்குப் புறனாய் அமையும் (புறப்) பகுதிகளைக் கூறுவதற்கே யாகும்.
- புறத்திணைகள் ஏழனைக் கூறுக.
விடை : வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
- குறிஞ்சியும் வெட்சியும் பொருந்துமாற்றை விளக்குக.
விடை : ‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே’ என்பார் தொல்காப்பியர். ஆநிரை கவர்தல் வெட்சி. ஆநிரை கவர்தல் அவை மேயும் குறிஞ்சி நிலத்தில் நிகழும். குறிஞ்சிக்குரிய உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆகும். இது மற்றோர் அறியாமல் நிகழும். நள்ளிரவில் யாரும் அறியா வண்ணம் ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் நிகழ்த்தும் காதல் ஒழுக்கமே குறிஞ்சிக்குரியது. அதே போல் மாற்றான் நாட்டில் யாரும் அறியாமல் ஆநிரைகளைக் கவர்ந்து வருதல் வெட்சியாகும்.
- மருதமும் உழிஞையும் எவ்வாறு பொருந்தும்?
விடை : ‘உழஞை தானே மருதத்துப் புறனே’ என்பார் தொல்காப்பியர். போரிட்டுத் தோற்ற வேந்தன் தன் நாடு சென்று அரண்மனைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டிருப்பான். போரிட்டு வென்ற வேந்தன் அவன் நாட்டில் புகுந்து இரவில் முற்றுகையிடுவான். போரிடும் காலம் விடியற் காலமாகும். மருத நிலத்தில் ஊடல் கொண்ட மகளிர் கணவன்மார்களுக்குக் கதவடைத்து விடுவர். தலைவன் விடியற்காலை வந்து ஊடல் தீர்த்து வீட்டில் நுழைவான். எனவே உழிஞை மருதத்துக்குப் புறனாயிற்று.
- கைக்கிளையும் பாடாண் திணையும் குறித்து எழுதுக
விடை : பாடாண் திணையானது கைக்கிளைக்குப் புறத்திணையாகும். கைக்கிளையாவது ஒரு நிலத்திற்கோ, ஒரு பொழுதுக்கோ உரியதாகாமல், எல்லா நிலத்திற்கும் எல்லாப் பொழுதுக்கும் உரிய ஒருதலைக் காமமாகும். அதுபோல, பாடாண் திணையும் ஒரு பாலுக்கு உரியது அன்று. ஒருவனை ஒருவன் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் பாராட்டி நிற்பது பாடாண் திணையாகும்.
- புறத்திணைகளின் எண்ணிக்கை குறித்து விளக்குக.
விடை : புறத்திணைகளை அகத்திணைகளுக்கு இணையாக ஏழு எனக் கூறுவார் தொல்காப்பியர். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழு திணைகளாகும். தொல்காப்பியருக்குப் பின் வந்த இலக்கண ஆசிரியர்கள் பன்னிரண்டு திணைகளாகப் பிரித்தனர். முன்னர்க் கூறிய ஏழு திணைகள் தவிர, கரந்தை, நொச்சி, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்னும் ஐந்தும் பிற்காலத்தில் தனிப் புறத்திணைகளாக இணைக்கப்பட்டன. ஆனால் தொல்காப்பியர் கரந்தையை வெட்சியுடன் இணைத்தும், நொச்சியை உழிஞையுடன் இணைத்தும் கூறினார். கைக்கிளை, பெருந்திணையை அகத்திணைகளாகவே தொல்காப்பியர் கருதினார். பொதுவியல் என ஓர் இயல் கூறவேண்டிய தேவை தொல்காப்பியருக்கு ஏற்படவில்லை.
- வெட்சியும் கரந்தையும் குறித்து விளக்குக.
விடை : வெட்சித் திணையின் ஒரு பகுதியாகவே கரந்தையைக் கூறுவார் தொல்காப்பியர். அவர் ஏழு திணையே கொண்டார். கரந்தையை ஒரு தனித் திணையாகக் கொள்ளவில்லை. வெட்சிப் படையினர் தம் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதைக் கண்டு இடைமறித்துப் போரிடுதல் கரந்தைத் திணையாகும். இது 14 துறைகளைக் கொண்டது.
- உழிஞைத் திணையின் துறைகள் குறித்து எழுதுக.
விடை : போரில் தோல்வியுற்ற வேந்தன் தன் நாடு சென்று அரண்மனையில் புகுந்து அடைத்துக் கொள்வான். அவனொடு பொருத வெற்றி வேந்தன் அவன் நாட்டிடப்புகுந்து அரணை விடியற்காலையில் முற்றுகையிடுவான். இதில் தொல்காப்பியர் 20 துறைகளைக் கூறுவார். புறப்பொருள் வெண்பாமாலை 28 துறைகளைக் குறிப்பிடுகிறது.
- நொச்சித் திணை என்றால் என்ன?
விடை : தொல்காப்பியர் கூறிய புறத்திணைகள் ஏழனுள் நொச்சித் திணை என்பது அடங்காது. உழிஞைத் திணையிலேயே நொச்சித் திணைச் செய்தி ஒரு பகுதியாக வருகிறது. கோட்டையின் உள்ளே இருந்து கொண்டு தன் மதில் அழிவுபடாமல் காத்தல் இத்திணையாகும். பகைவன் மதிலை வளைப்பான். மதில் காப்போர் நொச்சிப் பூவைச் சூடியிருப்பர். இதில் ஒன்பது துறைகள் உள்ளன.
- தும்பைத் திணை பற்றிக் கூறுக.
விடை : பகை அரசர் இருவர் ஓர் இடம் குறிப்பிட்டு, அவ்விடத்தைப் போர்க்களமாகக் கொண்டு போரிடுதல் தும்பைத் திணையாகும். இவ்வாறு போரிடுவோர் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவர். இத்திணை 24 துறைகளை உடையது
- புறத்திணைகளில் சமூகச் செய்திகளை விளக்குக.
விடை : புறத்திணைகள் போர்ப் பிரிவுகளை விளக்குகின்றன. ஆநிரை கவர்தல் தொடங்கி, பாடாண் திணை வரை ஓர் ஒழுங்கு காணப்படுகிறது. போர் தொடங்கும் போது, பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வந்து பாதுகாப்பர். பசுக்கூட்டங்களைக் கவர்வதே போருக்கு அடிப்படையாக அமைகிறது. போருக்கு அடிப்படைக் காரணம் உலகப் பொருள்கள் மேல் ஆசையும், பெண்ணாசையுமே ஆகும். புறத்திணைகளில் ஒன்றான காஞ்சித் திணை உலக நிலையாமையை எடுத்துரைக்கிறது. வாழ்வில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும் இது எடுத்துக் கூறுகின்றது. சங்கப் புற இலக்கியங்கள் புறத்திணைகளையும் அவற்றின் துறைகளையும் அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் : முனைவர். ச. மணி & முனைவர். நை.மு. இக்பால்
ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு