Thirukkural – Arathuppal

அறத்துப்பால்


CONTENTS


பாயிரவியல்
கடவுள் வாழ்த்து
வான்சிறப்பு
நீத்தார் பெருமை
அறன் வலியுறுத்தல்
இல்லறவியல்
இல்வாழ்க்கை
வாழ்க்கைத் துணைநலம்
புதல்வரைப் பெறுதல்
அன்புடைமை
விருந்தோம்பல்
இனியவை கூறல்
செய்ந்நன்றி அறிதல்
நடுவு நிலைமை
அடக்கமுடைமை
ஒழுக்கமுடைமை
பிறனில் விழையாமை
பொறையுடைமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை
பயனில சொல்லாமை
தீவினையச்சம்
ஒப்புரவறிதல்
ஈகை
புகழ்
துறவறவியல்
அருளுடைமை
புலான் மறுத்தல்
தவம்
கூடாவொழுக்கம்
கள்ளாமை
வாய்மை
வெகுளாமை
இன்னாசெய்யாமை
கொல்லாமை
நிலையாமை
துறவு
மெய்யுணர்தல்
அவாவறுத்தல்
ஊழியல்
ஊழ்
பாயிரவியல்
பொருள் விளக்கம்

கடவுள் வாழ்த்து
1, அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

2, கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

3, மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

4, வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

5, இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

6, பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

7, தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

8, அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

9, கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

10,பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

வான்சிறப்பு
11, வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

12, துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

13, விண்இன்று பொய்ப்பின் விரி நீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

14, ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

15, கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

16, விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

17, நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

18, சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

19, தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

20, நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.

நீத்தார் பெருமை
21, ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

22, துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

23, இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

24, உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

25, ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

26, செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

27, சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

28, நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

29, குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

30, அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

அறன் வலியுறுத்தல்
31, சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

32, அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

33, ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

34, மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.

35, அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

36, அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

37, அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

38, வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

39, அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

40, செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

இல்லறவியல் இல்வாழ்க்கை
41, இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

42, துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

43, தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

44, பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

45, அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

46, அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்?

47, இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
48, ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

49, அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

50, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

வாழ்க்கைத் துணைநலம்
51, மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

52, மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

53, இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

54, பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

55, தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

56, தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

57, சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

58, பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

59, புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

60, மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

புதல்வரைப் பெறுதல்
61, பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

62, எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

63, தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

64, அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

65, மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

66, குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

67, தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

68, தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

69, ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

70, மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

அன்புடைமை
71, அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

72, அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

73, அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

74, அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

75, அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

76, அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

77, என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

78, அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

79, புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

80, அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

விருந்தோம்பல்
81, இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

82, விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

83, வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

84, அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

85, வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

86, செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

87, இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

88, பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

89, உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

90, மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

இனியவை கூறல்
91, இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

92, அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

93, முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

94, துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு .

95, பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

96, அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

97, நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

98, சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

99, இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

100, இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

செய்ந்நன்றி அறிதல்
101, செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

102, காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

103, பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

104, தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

105, உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

106, மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

107, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

108, நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

109, கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

110, எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

நடுவு நிலைமை
111, தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

112, செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

113, நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

114, தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

115, கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

116, கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

117, கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

118, சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

119, சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

120, வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

அடக்கமுடைமை
121, அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

122, காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

123, செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

124, நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

125, எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

126, ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

127, யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

128, ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

129, தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

130, கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

ஒழுக்கமுடைமை

  1. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.
  2. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை.
  3. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்.
  4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
  5. அழுக்கா றுடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு.
  6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து.
  7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.
  8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும்.
  9. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்.
  10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்.

பிறனில் விழையாமை

  1. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
    அறம்பொருள் கண்டார்கண் இல்.
  2. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரின் பேதையார் இல்.
  3. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்து ஒழுகு வார்.

144, எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

145, எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

146, பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

147, அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

148, பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

149, நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

150, அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

பொறையுடைமை

  1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
  2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று.
  3. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை.
  4. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
    போற்றி யொழுகப் படும்.
  5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
    பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
  6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ்.
  7. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று.
  8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
    தகுதியான் வென்று விடல்.
  9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
  10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

அழுக்காறாமை

  1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
    அழுக்காறு இலாத இயல்பு.
  2. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்.
  3. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
    பேணாது அழுக்கறுப் பான்.
  4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
    ஏதம் படுபாக்கு அறிந்து.
  5. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
    வழுக்கியும் கேடீன் பது.

166, கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

  1. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.
  2. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்.
  3. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்.

170 அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

வெஃகாமை

  1. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
    குற்றமும் ஆங்கே தரும்.
  2. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
    நடுவன்மை நாணு பவர்.
  3. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
    மற்றின்பம் வேண்டு பவர்.
  4. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
    புன்மையில் காட்சி யவர்.
  5. அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
    வெஃகி வெறிய செயின்.
  6. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
    பொல்லாத சூழக் கெடும்.
  7. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
    மாண்டற் கரிதாம் பயன்.
  8. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
    வேண்டும் பிறன்கைப் பொருள்.
  9. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
    திறன்அறிந் தாங்கே திரு.
  10. இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
    வேண்டாமை என்னுஞ் செருக்கு.

புறங்கூறாமை

  1. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறான் என்றல் இனிது.
  2. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
    புறனழீஇப் பொய்த்து நகை.
  3. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
    அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
  4. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
    முன்னின்று பின்நோக்காச் சொல்.
  5. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
    புன்மையாற் காணப் படும்.
  6. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
    திறன்தெரிந்து கூறப் படும்.
  7. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர்.
  8. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
    என்னைகொல் ஏதிலார் மாட்டு.
  9. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
    புன்சொல் உரைப்பான் பொறை.
  10. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பயனில சொல்லாமை

  1. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
    எல்லாரும் எள்ளப் படும்.
  2. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
    நட்டார்கண் செய்தலிற் றீ து.
  3. நயனிலன் என்பது சொல்லும் பயனில
    பாரித் துரைக்கும் உரை.
  4. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
    பண்பில்சொல் பல்லா ரகத்து.
  5. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
    நீர்மை யுடையார் சொலின்.
  6. பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்
    மக்கட் பதடி யெனல்.
  7. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
    பயனில சொல்லாமை நன்று.
  8. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
    பெரும்பயன் இல்லாத சொல்.
  9. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
    மாசறு காட்சி யவர்< /p>
  10. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்.

தீவினையச்சம்

  1. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
    தீவினை என்னும் செருக்கு.
  2. தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும்.
  3. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்கும் செய்யா விடல்.
  4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
    அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
  5. இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
    இலனாகும் மற்றும் பெயர்த்து.
  6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால்
    தன்னை அடல்வேண்டா தான்.
  7. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
    வீயாது பின்சென்று அடும்.
  8. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயாது அடிஉறைந் தற்று.
  9. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
    துன்னற்க தீவினைப் பால்.
  10. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
    தீவினை செய்யான் எனின்.

ஒப்புரவறிதல்

  1. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
    என்ஆற்றுங் கொல்லோ உலகு.
  2. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு.
  3. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
    ஒப்புரவின் நல்ல பிற.
  4. ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்.
  5. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
    பேரறி வாளன் திரு.
  6. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின்.
  7. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
    பெருந்தகை யான்கண் படின்.
  8. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
    கடனறி காட்சி யவர்.
  9. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
    செய்யாது அமைகலா வாறு.
  10. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
    விற்றுக்கோள் தக்க துடைத்து.

ஈகை

  1. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து.
  2. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று.
  3. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையான் கண்ணே யுள்.
  4. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகங் காணும் அளவு.
  5. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்.
  6. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி.
  7. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது.
  8. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர்.
  9. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல்.
  10. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
    ஈதல் இயையாக் கடை.

புகழ்

  1. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு.
  2. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
    ஈவார்மேல் நிற்கும் புகழ்.
  3. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதொன் றில்.
  4. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
    போற்றாது புத்தேள் உலகு.
  5. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
    வித்தகர்க் கல்லால் அரிது.
  6. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று.
  7. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
    இகழ்வாரை நோவது எவன்?
  8. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
    எச்சம் பெறாஅ விடின்.
  9. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
    யாக்கை பொறுத்த நிலம்.
  10. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
    வாழ்வாரே வாழா தவர்.

துறவறவியல் அருளுடைமை

  1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள்.
  2. நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
    தேரினும் அஃதே துணை.
  3. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல்.
  4. மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
    தன்னுயிர் அஞ்சும் வினை.
  5. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
    மல்லன்மா ஞாலங் கரி.
  6. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர்அருள் நீங்கி
    அல்லவை செய்தொழுகு வார்.
  7. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
  8. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
    அற்றார்மற் றாதல் அரிது.
  9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம்.
  10. வலியார்முன் தன்னை நினைக்க தான்தன்னின்
    மெலியார்மேல் செல்லு மிடத்து.

புலான் மறுத்தல்

  1. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்?
  2. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
  3. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
    உடல்சுவை உண்டார் மனம்.
  4. அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
    பொருளல்லது அவ்வூன் தினல்.
  5. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
    அண்ணாத்தல் செய்யாது அளறு.
  6. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
    விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
  7. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
    புண்ணது உணர்வார்ப் பெறின்.
  8. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
  9. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று.
  10. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்.

தவம்

  1. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு.
  2. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
    அஃதிலார் மேற்கொள் வது.
  3. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்.
  4. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
    எண்ணின் தவத்தான் வரும்.
  5. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்.
  6. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
    அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
  7. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
    சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
  8. தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
    மன்னுயி ரெல்லாந் தொழும்.
  9. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
    ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
  10. இலர்பல ராகிய காரணம் நோற்பார்
    சிலர்பலர் நோலா தவர்.

கூடாவொழுக்கம்

  1. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்.
  2. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
    தான்அறி குற்றப் படின்.
  3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
    புலியின்தோல் போர்த்து மேய்ந் தற்று.
  4. தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
  5. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
    ஏதம் பலவுந் தரும்.
  6. நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
    வாழ்வாரின் வன்கணார் இல்.
  7. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
    முக்கிற் கரியார் உடைத்து.
  8. மனத்தது மாசாக மாண்டார் நீராடி
    மறைந்தொழுகு மாந்தர் பலர்.
  9. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
    வினைபடு பாலால் கொளல்.
  10. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்.

கள்ளாமை

  1. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
    கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
  2. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்.
  3. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
    ஆவது போலக் கெடும்.
  4. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
    வீயா விழுமம் தரும்.
  5. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
    பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
  6. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
    கன்றிய காத லவர்.
  7. களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
    ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
  8. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
    களவறிந்தார் நெஞ்சில் கரவு.
  9. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
    மற்றைய தேற்றா தவர்.
  10. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
    தள்ளாது புத்தே ளுளகு.

வாய்மை

  1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.
  2. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.
  3. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
  4. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன்.
  5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
    தானஞ்செய் வாரின் தலை.
  6. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
    எல்லா அறமுந் தரும்.
  7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று.
  8. புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
    வாய்மையால் காணப் படும்.
  9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு.
  10. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற.

வெகுளாமை

  1. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
    காக்கின் என் காவாக்கால் என்ன?
  2. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
    இல்அதனின் தீய பிற.
  3. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
    பிறத்தல் அதனான் வரும்.
  4. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
    பகையும் உளவோ பிற.
  5. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லுஞ் சினம்.
  6. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்.
  7. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

308 .இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

  1. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி எனின்.
  2. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை.

இன்னாசெய்யாமை

  1. சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
    செய்யாமை மாசற்றார் கோள்.
  2. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்.
  3. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
    உய்யா விழுமந் தரும்.
  4. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்.
  5. அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போல் போற்றாக் கடை.
  6. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
    வேண்டும் பிறன்கண் செயல்.
  7. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை.
  8. தன்னுயிர்க்கு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
    மன்னுயிர்க்கு இன்னா செயல்.
  9. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
    பிற்பகல் தாமே வரும்.
  10. நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
    நோயின்மை வேண்டு பவர்.

கொல்லாமை

  1. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
    பிறவினை எல்லாந் தரும்.
  2. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
  3. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று.
  4. நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    கொல்லாமை சூழும் நெறி.
  5. நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
    கொல்லாமை சூழ்வான் தலை.
  6. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லாது உயிருண்ணுங் கூற்று.
  7. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை.
  8. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
    கொன்றாகும் ஆக்கங் கடை.
  9. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
    புன்மை தெரிவா ரகத்து.
  10. உயிர்உடம்பின் நீக்கியார் என்பசெயிர் உடம்பின்
    செல்லாத்தி வாழ்க்கை யவர்.

நிலையாமை

  1. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
    புல்லறி வாண்மை கடை.
  2. கூத்தாட்டு அவைக் குழாத்தற்றே பெருஞ்செல்வம்
    போக்கும் அதுவிளிந் தற்று.
  3. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
    அற்குப ஆங்கே செயல்.
  4. நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
    வாளது உணர்வார்ப் பெறின்.
  5. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
    மேற்சென்று செய்யப் படும்.
  6. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்து இவ்வுலகு.
  7. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப்
    கோடியும் அல்ல பல.
  8. குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே
    உடம்பொடு உயிரிடை நட்பு.
  9. உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு.
  10. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
    துச்சில் இருந்த உயிர்க்கு.

துறவு

  1. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.
  2. வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டு இயற்பால பல.
  3. அடல்வேண்டும் உந்தன் புலத்தை விடல்வேண்டும்
    வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
  4. இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
    மயலாகும் மற்றும் பெயர்த்து.
  5. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
    உற்றார்க்கு உடம்பும் மிகை.
  6. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
    உயர்ந்த உலகம் புகும்.
  7. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
    பற்றி விடாஅ தவர்க்கு.
  8. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
    வலைப்பட்டார் மற்றை யவர்.
  9. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
    நிலையாமை காணப் படும்.
  10. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு.

மெய்யுணர்தல்

  1. பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.
  2. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு.
  3. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
    வானம் நணிய துடைத்து.
  4. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
  5. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
  6. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி.
  7. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
  8. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
    செம்பொருள் காண்பது அறிவு.
  9. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய்.
  10. காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்
    நாமம் கெடக்கெடும் நோய்.

அவாவறுத்தல்
361 அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

  1. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
    வேண்டாமை வேண்ட வரும்.
  2. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    ஆண்டும் அஃதொப்பது இல்.
  3. தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
    வாஅய்மை வேண்ட வரும்.
  4. அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
    அற்றாக அற்றது இலர்.
  5. அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
    வஞ்சிப்ப தோரும் அவா.

367.அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

  1. அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
    தவாஅது மேன்மேல் வரும்.
  2. இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்.
  3. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
    பேரா இயற்கை தரும்.

ஊழியல் ஊழ்

  1. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
    போகூழால் தோன்றும் மடி.
  2. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூழ் உற்றக் கடை.

373 .நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

  1. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு.
  2. நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
    நல்லவாம் செல்வம் செயற்கு.
  3. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம்.
  4. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
  5. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
    ஊட்டா கழியு மெனின்.
  6. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
    அல்லற் படுவ தெவன்?
  7. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்.