29 favourite Shetras of Lord Muruga – Arunagiri Nathar

அருணகிரிநாதர் அருளிய

முருகனுக்கு மிகவும் உகந்த 29 க்ஷேத்திரங்கள்.

(1) கும்பகோணம் – காசி விஸ்வநாதர், கும்பேசர், நாகேஸ்வரர் கோயில்கள் உள்ள மகாமகத் தலம்,

(2) திருவாரூர் – சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையான தலம்,

(3) சிதம்பரம் – பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம் – நடராஜப் பெருமான் நடனமாடிய கனகசபை,

(4) சீகாழி – சம்பந்தர் அவதரித்த தலம், சூரனுக்கு அஞ்சி இந்திரன் மூங்கிலாக மாறி ஒளிந்த இடம்,

(5) மாயூரம் – பார்வதி மயிலாக மாறி சிவனை வழிபட்ட தலம்,

(6) சிவகாசி – பாண்டிய நாட்டில் வட நாட்டுக் காசிக்கு சமமான புண்ணியத் தலம்,

(7) ராமேஸ்வரம் – சிவனை ஸ்ரீராமன் பூஜை செய்து வழிபட்ட க்ஷேத்திரம்,

(8) வைத்தீஸ்வரன்கோயில் – முருகன் முத்துக்குமரனாகக் காட்சி தரும் தலம், செவ்வாய்த் தலம்,

(9) திருப்பரங்குன்றம் – ஆறு படைவீடுகளில் முதலாவது, மதுரைக்கு அருகில் உள்ளது,

(10) ஜம்புகேஸ்வரம் – திருவானைக்கா – பஞ்ச பூதத் தலங்களில் அப்புத்தலம், திருச்சிக்கு வடக்கே 2 மைல்,

(11) திருவாடானை – மானாமதுரைக்கு 40 மைலில் சிவகங்கைக்கு அருகே உள்ள தலம்,

(12) திருச்செந்தூர் – ஆறுபடைவீட்டில் இரண்டாம் படைவீடு, திருநெல்வேலியிலிருந்து 35 மைல்,

(13) திருவேடகம் – சம்பந்தர் மதுரையில் இட்ட ஏடு வைகையில் மேற்கே எதிர்த்துச் சென்று தங்கிய தலம்,

(14) பழமுதிர்ச்சோலை – மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள ஆறாவது படைவீடு,

(15) பொதியமலை – பாபநாசம், அம்பாசமுத்திரத்திலிருந்து 7 மைலில் உள்ளது, அகத்தியர் க்ஷேத்திரம்,

(16) பூரி ஜெகந்நாதம் – ஒரிஸ்ஸா கடற்கரையிலுள்ள விஷ்ணு, ஸ்வாமிகளுக்கு முருகனாகத் தெரிகிறார்,

(17) திருவேரகம் – சுவாமிமலை – தந்தை சிவனுக்கு முருகன் உபதேசித்த நான்காம் படைவீடு,

(18) திருஆவினன்குடி – பழநி மலையிலும் ஆவினன்குடி அடிவாரத்திலும் உள்ள மூன்றாம் படைவீடு,

(19) குன்றுதோறாடல் – பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் ஐந்தாவது படைவீடு,

(20) மூதூர் – திருப்புனவாயில் – வேதங்கள் பூஜித்த தலம், திருவாடானைக்கு 12 மைலில் உள்ளது,

(21) விரிஞ்சை – விரிஞ்சிபுரம், வேலூருக்கு மேற்கே 8 மைலில் உள்ளது,

(22) வஞ்சி – சோணாட்டுவஞ்சி கருவூர், திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ளது,

(23) கம்பை மாவடி – காஞ்சீபுரத்தில், ஏகாம்பரநாதர் கோயிலில் மாமரத்தின் கீழ் இருக்கும் முருகன்,

(24) காவேரி சங்கமுகம் – காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) – சீகாழிக்குத் தென்கிழக்கில் 10 மைல், பட்டினத்தார் ஊர்,
(2 கோயில்கள் – பல்லவனீச்சரம், சாயாவனம் – இவை வைப்புத்தலங்கள்).

(25) சிராமலை – திருச்சிராப்பள்ளி, திரிசிரன் என்ற அரக்கன் பூஜித்த திருப்பதி, தாயுமானவர் தலம்,

(26) வயலூர் – திருச்சிக்கு 6 மைல், ஸ்வாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரம் கிடைத்த தலம்,

(27) திருப்போரூர் – செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைல், சமரமராபுரி, என்று வழங்கும் தலம்,

(28) சிவாயம் – வாட்போக்கி – குழித்தலைக்கு தெற்கே 5 மைலில் உள்ள ரத்னகிரி, என்ற தலம்,

(29) திருக்கண்டியூர் – தஞ்சாவூருக்கு வடக்கே 6 மைலில் உள்ள சப்தஸ்தான க்ஷேத்திரம்.

  • உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் உள்ள கடவுள் முருகனே என
    ஸ்வாமிகள் சொல்வதன் மூலம் உலகில் எல்லா மதத்துக் கடவுளும் ஒருவனே
    என்ற அவரது பரந்த கொள்கை தெரிகிறது. தந்த தானன தானான தந்தன
    தந்த தானன தானான தந்தன …… தனதான

……… பாடல் ………

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு …… சிவகாசி

கொந்து லாவிய ராமே சுரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரி …… தனில்வாழ்வே

செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவ …… செகநாதஞ்

செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் …… வருதேவே

கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு
கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர …… வயலூரா

கந்த மேவிய போரூர் நடம்புரி
தென்சி வாயமு மேயா யகம்படு
கண்டி யூர்வரு சாமீக டம்பணி …… மணிமார்பா

எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு …… துதியோதும்

இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல
கெங்கு மேவிய தேவால யந்தொறு …… பெருமாளே.