Ramalinga Swamigal – makātēva mālai


முதல் திருமுறை / First Thirumurai 

005. மகாதேவ மாலை 
makātēva mālai

 • 1. கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந் 
  துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித் 
  தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற 
  கண்ணுடையோய் சிதையா ஞானப் 
  பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற 
  மலர்வாயோய் பொய்ய னேன்றன் 
  மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட் 
  கசிந்துருக்கும் வடிவத் தோயே. 
 • 2. உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள 
  உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக் 
  கலகநிலை அறியாத காட்சி யாகிக் 
  கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி 
  இலகுசிதா காசமதாய்ப் பரமா காச 
  இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி 
  அலகில்அறி வானந்த மாகிச் சச்சி 
  தானந்த மயமாகி அமர்ந்த தேவே. 
 • 3. உலகமெலாந் தனிநிறைந்த உண்மை யாகி 
  யோகியர்தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் 
  கலகமுறா உபசாந்த நிலைய தாகிக் 
  களங்கமற்ற அருண்ஞானக் காட்சி யாகி 
  விலகலுறா நிபிடஆ னந்த மாகி 
  மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி 
  இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர் 
  இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே. 
 • 4. வித்தாகி முளையாகி விளைவ தாகி 
  விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக் 
  கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக் 
  குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத 
  சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச் 
  சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி 
  முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ 
  முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே. 
 • 5. வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின் 
  மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி 
  நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின் 
  நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி 
  மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற 
  முதலாகி மனாதீத முத்தி யாகி 
  வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும் 
  மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே. 
 • 6. தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத் 
  துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச் 
  சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த 
  சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி 
  ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும் 
  உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம் 
  ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி 
  எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே. 
 • 7. பரமாகிச் சூக்குமமாய்த் தூல மாகிப் 
  பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம் 
  சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம 
  சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித் 
  திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச் 
  சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி 
  அரமாகி ஆனந்த போத மாகி 
  ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே. 
 • 8. இந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி 
  இயல்புருட னாய்க்கால பரமு மாகிப் 
  பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால் 
  பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி 
  வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி 
  மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற 
  அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும் 
  அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே. 
 • 9. நின்மயமாய் என்மயமாய் ஒன்றுங் காட்டா 
  நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம் 
  தன்மயமாய்த் தற்பரமாய் விமல மாகித் 
  தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகச மாகிச் 
  சின்மயமாய்ச் சிற்பரமாய் அசல மாகிச் 
  சிற்சொலித மாய்அகண்ட சிவமாய் எங்கும் 
  மன்மயமாய் வாசகா தீத மாகி 
  மனாதீத மாய்அமர்ந்த மவுனத் தேவே. 
 • 10. அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர் 
  அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம் 
  களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் 
  கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி 
  உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே 
  ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப் 
  பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப் 
  பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே. 
 • 11. வாயாகி வாயிறந்த மவுன மாகி 
  மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக் 
  காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக் 
  கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற 
  தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித் 
  தானாகி நானாகிச் சகல மாகி 
  ஓயாத சத்தியெலாம் உடைய தாகி 
  ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே. 
 • 12. அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும் 
  அளவாகி அளவாத அதீத மாகிப் 
  பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம் 
  பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும் 
  பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும் 
  பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம் 
  கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக் 
  கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே. 
 • 13. பொன்னாகி மணியாகிப் போக மாகிப் 
  புறமாகி அகமாகிப் புனித மாகி 
  மன்னாகி மலையாகிக் கடலு மாகி 
  மதியாகி ரவியாகி மற்று மாகி 
  முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி 
  முழுதாகி நாதமுற முழங்கி எங்கும் 
  மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க 
  வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே. 
 • 14. அரிதாகி அரியதினும் அரிய தாகி 
  அநாதியாய் ஆதியாய் அருள தாகிப் 
  பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப் 
  பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற 
  கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக் 
  கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத் 
  தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச் 
  செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே. 
 • 15. உருவாகி உருவினில்உள் உருவ மாகி 
  உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய் 
  அருவாகி அருவினில்உள் அருவ மாகி 
  அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க் 
  குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக் 
  குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற 
  மருவாகி மலராகி வல்லி யாகி 
  மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே. 
 • 16. சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச் 
  சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய் 
  அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி 
  அவையனைத்தும் அணுகாத அசல மாகி 
  இகலுறாத் துணையாகித் தனிய தாகி 
  எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும் 
  உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம் 
  ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே. 
 • 17. வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த 
  வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித் 
  தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச் 
  சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த 
  பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப் 
  பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி 
  நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி 
  நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே. 
 • 18. சகமாகிச் சீவனாய் ஈச னாகிச் 
  சதுமுகனாய்த் திருமாலாய் அரன்றா னாகி 
  மகமாயை முதலாய்க்கூ டத்த னாகி 
  வான்பிரம மாகிஅல்லா வழக்கு மாகி 
  இகமாகிப் பதமாகிச் சமய கோடி 
  எத்தனையு மாகிஅவை எட்டா வான்கற் 
  பகமாகிப் பரமாகிப் பரம மாகிப் 
  பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே. 
 • 19. விதியாகி அரியாகிக் கிரீச னாகி 
  விளங்குமகேச் சுரனாகி விமல மான 
  நிதியாகுஞ் சதாசிவனாய் விந்து வாகி 
  நிகழ்நாத மாய்ப்பரையாய் நிமலா னந்தப் 
  பதியாகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப் 
  பக்கமிரண் டாயிரண்டும் பகரா தாகிக் 
  கதியாகி அளவிறந்த கதிக ளெல்லாம் 
  கடந்துநின்று நிறைந்தபெருங் கருணைத் தேவே. 
 • 20. மானாகி மோகினியாய் விந்து மாகி 
  மற்றவையால் காணாத வான மாகி 
  நானாகி நானல்ல னாகி நானே 
  நானாகும் பதமாகி நான்றான் கண்ட 
  தானாகித் தானல்ல னாகித் தானே 
  தானாகும் பதமாகிச் சகச ஞான 
  வானாகி வான்நடுவில் வயங்கு கின்ற 
  மவுனநிலை யாகியெங்கும் வளருந் தேவே. 
 • 21. மந்திரமாய்ப் பதமாகி வன்ன மாகி 
  வளர்கலையாய்த் தத்துவமாய்ப் புவன மாகிச் 
  சந்திரனாய் இந்திரனாய் இரவி யாகித் 
  தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற 
  தந்திரமாய் இவையொன்றும் அல்ல வாகித் 
  தானாகித் தனதாகித் தானான் காட்டா 
  அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய் 
  அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே. 
 • 22. மலைமேலும் கடன்மேலும் மலரின் மேலும் 
  வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே 
  நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற 
  நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக் 
  கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும் 
  கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும் 
  தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும் 
  தகுமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே. 
 • 23. பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற 
  பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும் 
  கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான 
  கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச் 
  சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம் 
  தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண் 
  நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும் 
  நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே. 
 • 24. தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித் 
  திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை 
  மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ 
  மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் 
  காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற 
  காரணமே சாந்தமெனக் கருதா நின்ற 
  தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச் 
  சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே. 
 • 25. கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக் 
  கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக் 
  காவேமெய் அறிவின்ப மயமே என்றன் 
  கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத் 
  தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத் 
  தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப் 
  பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும் 
  பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே. 
 • 26. வானேஅவ் வானுலவும் காற்றே காற்றின் 
  வருநெருப்பே நெருப்புறுநீர் வடிவே நீரில் 
  தானேயும் புவியேஅப் புவியில் தங்கும் 
  தாபரமே சங்கமமே சாற்று கின்ற 
  ஊனேநல் உயிரேஉள் ஒளியே உள்ளத் 
  துணர்வேஅவ் வுணர்வுகலந் தூறு கின்ற 
  தேனேமுக் கனியேசெங் கரும்பே பாகின் 
  தீஞ்சுவையே சுவையனைத்தும் திரண்ட தேவே. 
 • 27. விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள் 
  வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன் 
  கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட் 
  கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே 
  தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த 
  தண்ணமுதே தண்ணமுத சார மேசொல் 
  பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின் 
  பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே. 
 • 28. மாணேயத் தவருளத்தே மலர்ந்த செந்தா 
  மரைமலரின் வயங்குகின்ற மணியே ஞானப் 
  பூணேமெய்ப் பொருளேஅற் புதமே மோனப் 
  புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே 
  ஆணேபெண் உருவமே அலியே ஒன்றும் 
  அல்லாத பேரொளியே அனைத்துந் தாங்குந் 
  தூணேசிற் சுகமேஅச் சுகமேல் பொங்குஞ் 
  சொரூபானந் தக்கடலே சோதித் தேவே. 
 • 29. பூதமே அவைதோன்றிப் புகுந்தொ டுங்கும் 
  புகலிடமே இடம்புரிந்த பொருளே போற்றும் 
  வேதமே வேதத்தின் விளைவே வேத 
  வியன்முடிவே அம்முடிவின் விளங்கும் கோவே 
  நாதமே நாதாந்த நடமே அந்த 
  நடத்தினையுள் நடத்துகின்ற நலமே ஞான 
  போதமே போதமெலாம் கடந்து நின்ற 
  பூரணமே யோகியருள் பொலிந்த தேவே. 
 • 30. ஞாலமே ஞாலமெலாம் விளங்க வைத்த 
  நாயகமே கற்பமுதல் நவிலா நின்ற 
  காலமே காலமெலாம் கடந்த ஞானக் 
  கதியேமெய்க் கதியளிக்குங் கடவு ளேசிற் 
  கோலமே குணமேஉட் குறியே கோலங் 
  குணங்குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர் 
  சீலமே மாலறியா மனத்திற் கண்ட 
  செம்பொருளே உம்பர்பதஞ் செழிக்கும் தேவே. 
 • 31. தத்துவமே தத்துவா தீத மேசிற் 
  சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச் 
  சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் 
  தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம் 
  சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் 
  தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும் 
  சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த 
  சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே. 
 • 32. யோகமே யோகத்தின் பயனே யோகத் 
  தொருமுதலே யோகத்தின் ஓங்குந் தூய 
  போகமே போகத்தின் பொலிவே போகம் 
  புரிந்தருளும் புண்ணியமே புனித ஞான 
  யாகமே யாகத்தின் விளைவே யாகத் 
  திறையேஅவ் விறைபுரியும் இன்பே அன்பர் 
  மோகமே மோகமெலாம் அழித்து வீறு 
  மோனமே மோனத்தின் முளைத்த தேவே. 
 • 33. காட்சியே காண்பதுவே ஞேய மேஉள் 
  கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும் 
  மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன 
  வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி 
  ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த 
  அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல 
  சூட்சியே140 சூட்சியெலாம் கடந்து நின்ற 
  துரியமே துரியமுடிச் சோதித் தேவே. 
 • 34. மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான 
  வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற 
  குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக் 
  கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப் 
  பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப் 
  பெம்மானே செங்கமலப் பிரானே இந்த 
  இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற 
  இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே. 
 • 35. கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழும் 
  குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச 
  வாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும் 
  வானமுதே ஆனந்த மழையே மாயை 
  வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான 
  வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில் 
  தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த 
  செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே. 
 • 36. அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும் 
  ஆனந்தத் தனிமலையே அமல வேதப் 
  பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப் 
  பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி 
  இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த 
  ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே 
  தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு 
  தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே. 
 • 37. அளவையெலாங் கடந்துமனங் கடந்து மற்றை
  அறிவையெலாங் கடந்துகடந் தமல யோகர் 
  உளவையெலாங் கடந்துபதங் கடந்து மேலை 
  ஒன்றுகடந் திரண்டுகடந் துணரச் சூழ்ந்த 
  களவையெலாங் கடந்தண்ட பிண்ட மெல்லாம் 
  கடந்துநிறை வானசுகக் கடலே அன்பர் 
  வளவையெலாம் இருளகற்றும் ஒளியே மோன 
  வாழ்வேஎன் உயிர்க்குயிராய் வதியும் தேவே. 
 • 38. வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள் 
  மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற 
  என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும் 
  இந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற 
  அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம் 
  ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி 
  இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி 
  எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே. 
 • 39. தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத் 
  தடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச 
  எண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேஇன் 
  இசைவீசத் தண்பனிநீர் எடுத்து வீசப் 
  பெண்ணமுதம் அனையவர்விண் ணமுதம் ஊட்டப் 
  பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட் டோடக் 
  கண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்தும் இன்பங் 
  கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே. 
 • 40. சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந் 
  தூண்டாத மணிவிளக்கின் சோதி யேவான் 
  ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க் 
  கோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர் 
  விழியாலும் மொழியாலும் மனத்தி னாலும் 
  விழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த 
  வழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த 
  மவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே. 
 • 41. சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம் 
  சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
  அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற 
  ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே 
  நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப 
  நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக் 
  கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங் 
  கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே. 
 • 42. அலைகடலும் புவிவரையும் அனல்கால் நீரும் 
  அந்தரமும் மற்றைஅகி லாண்டம் யாவும் 
  நிலைகுலையா வண்ணம்அருள் வெளியி னூடு 
  நிரைநிரையா நிறுத்திஉயிர் நிகழும் வண்ணம் 
  தலைகுலையாத் தத்துவஞ்செய் திரோதை யென்னும் 
  தனியாணை நடத்திஅருள் தலத்தில் என்றும் 
  மலைவறவீற் றிருந்தருளும் அரசே முத்தி 
  வழித்துணையே விழித்துணையுள் மணியாம் தேவே. 
 • 43. வரம்பழுத்த நெறியேமெய்ந் நெறியில் இன்ப 
  வளம்பழுத்த பெருவாழ்வே வானோர் தங்கள் 
  சிரம்பழுத்த பதப்பொருளே அறிவா னந்தச் 
  சிவம்பழுத்த அநுபவமே சிதாகா சத்தில் 
  பரம்பழுத்த நடத்தரசே கருணை என்னும் 
  பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத் 
  திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே 
  தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே. 
 • 44. அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற் 
  கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம் 
  விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன 
  வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே 
  கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும் 
  கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம் 
  சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும் 
  சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே. 
 • 45. பேதமுறா மெய்ப்போத வடிவ மாகிப் 
  பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச் 
  சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச் 
  சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா 
  ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண் 
  டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும் 
  சேதமுறா தறிஞருளந் தித்தித் தோங்கும் 
  செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே. 
 • 46. உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க 
  உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே 
  கடலனைய பேரின்பம் துளும்ப நாளும் 
  கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே 
  விடலரிய எம்போல்வார் இதயந் தோறும் 
  வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம் 
  தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச் 
  சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே. 
 • 47. கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று 
  கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற் 
  கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே 
  காணாமற் காண்கின்ற காட்சியே உள் 
  அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும் 
  அறியாமல் அறிகின்ற அறிவே என்றும் 
  உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர் 
  உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே. 
 • 48. சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித் 
  தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப் 
  பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற 
  பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும் 
  தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித் 
  ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச் 
  சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற 
  சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே. 
 • 49. பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம் 
  புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும் 
  கங்குகரை காணாத கடலே எங்கும் 
  கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர் 
  தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந் 
  தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச் 
  செங்குமுத மலரவரு மதியே எல்லாம் 
  செய்யவல்ல கடவுளே தேவ தேவே. 
 • 50. வான்காணா மறைகாணா மலரோன் காணான் 
  மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான் 
  நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று 
  நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை 
  மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற 
  வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற 
  ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும் 
  அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே. 
 • 51. மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி 
  மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி 
  அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை 
  அறிந்தபடி நிலைஏறி அதுநான் என்னும் 
  கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம் 
  கடந்தேறி மவுனவியற் கதியில் ஏறி 
  எஞ்ஞானம் அறத்தெளிந்தோர் கண்டுங் காணேம்
  என்கின்ற அநுபவமே இன்பத் தேவே. 
 • 52. பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப் 
  பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு 
  பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும் 
  பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே 
  உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம் 
  ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும் 
  கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம் 
  கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே. 
 • 53. மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த 
  வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும் 
  பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம் 
  புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர் 
  கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம் 
  கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே 
  உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும் 
  ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே. 
 • 54. ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம் 
  உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும் 
  மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும் 
  மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச் 
  சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம் 
  தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண் 
  அலிவகையல் லாதவகை கடந்து நின்ற 
  அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே. 
 • 55. பேராய அண்டங்கள் பலவும் பிண்ட 
  பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின் 
  வாராய பலபொருளும் கடலும் மண்ணும் 
  மலையுளவும் கடலுளவும் மணலும் வானும் 
  ஊராத வான்மீனும் அணுவும் மற்றை 
  உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை 
  ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம் 
  அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே. 
 • 56. கற்பங்கள் பலகோடி செல்லத் தீய 
  கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப் 
  பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப் 
  புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி 
  நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக 
  நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம் 
  சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத் 
  திருவாளர் உட்கலந்த தேவ தேவே. 
 • 57. மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
  மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே 
  கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக் 
  கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை 
  விட்டகன்று கருமமல போதம் யாவும் 
  விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச் 
  சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும் 
  சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே. 
 • 58. உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற 
  உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற 
  ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ் 
  வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே 
  இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும் 
  எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக் 
  கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட் 
  கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே. 
 • 59. பாங்குளநாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப் 
  பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி 
  ஈங்குளதென் றாங்குளதென் றோடி யோடி 
  இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந் தெட்டுந் தோறும் 
  வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு 
  மறைந்துமறைந் தொளிக்கின்ற மணியே எங்கும் 
  தேங்குபர மானந்த வெள்ள மேசச் 
  சிதானந்த அருட்சிவமே தேவே தேவே. 
 • 60. எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத் 
  தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி 
  பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப் 
  பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக் 
  கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும் 
  கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி 
  விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன 
  வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே. 
 • 61. உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர் 
  உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர் 
  மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை 
  வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக் 
  கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங் 
  களைவினவ மற்றவையுங் காணேம் என்று 
  வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற 
  வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே. 
 • 62. பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும் 
  பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி 
  ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள் 
  அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா 
  தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித் 
  திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற 
  தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத் 
  தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே. 
 • 63. அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம் 
  அடுக்கடுக்காய் அமைந்தஉள வறிவோம் ஆங்கே 
  உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன் 
  உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும் 
  எந்தைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ 
  எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று 
  முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற 
  முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே. 
 • 64. தோன்றுபர சாக்கிரமும் கண்டோம் அந்தச் 
  சொப்பனமும் கண்டோம்மேல் சுழுத்தி கண்டோம் 
  ஆன்றபர துரியநிலை கண்டோம் அப்பால் 
  அதுகண்டோம் அப்பாலாம் அதுவும் கண்டோம் 
  ஏன்றஉப சாந்தநிலை கண்டோம் அப்பால் 
  இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று 
  சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற 
  தன்மயமே சின்மயமே சகசத் தேவே. 
 • 65. பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோம் மேலைப் 
  பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம் 
  எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல 
  எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம் 
  தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும் 
  சிவமேநின் சின்மயம்ஓர் சிறிதும் தேறோம் 
  தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத் 
  தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே. 
 • 66. மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல 
  வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம் 
  இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற் 
  கியற்கைநிலை யாததுதான் எம்மாற் கூறும் 
  கணக்குவழக் கனைத்தினையும் கடந்த தந்தோ 
  காண்பரிதிங் கெவர்க்கும்எனக் கலைக ளெல்லாம் 
  பிணக்கறநின் றோலமிடத் தனித்து நின்ற 
  பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே. 
 • 67. பொதுவென்றும் பொதுவில்நடம் புரியா நின்ற 
  பூரணசிற் சிவமென்றும் போதா னந்த 
  மதுவென்றும் பிரமமென்றும் பரம மென்றும் 
  வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும் 
  இதுவென்றும் சுட்டவொணா ததனால் சும்மா 
  இருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின் றோரை 
  விதுவென்ற141 தண்ணளியால் கலந்து கொண்டு
  விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே. 
 • 68. அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம் 
  அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக் 
  கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக் 
  கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத் 
  திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும் 
  திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப் 
  பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட் 
  பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே. 
 • 69. என்னுயிர்நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன் 
  இன்னுயிர்க்குத் துணைவனீ என்னை ஈன்ற 
  அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன் 
  அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன் 
  நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன் 
  நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீஎன் 
  தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந் 
  தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே. 
 • 70. தானாகித் தானல்ல தொன்று மில்லாத் 
  தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி 
  வானாகி வளியனலாய் நீரு மாகி 
  மலர் தலைய உலகாகி மற்று மாகித் 
  தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித் 
  தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற 
  நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை 
  நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே. 
 • 71. ஆனேறும் பெருமானே அரசே என்றன் 
  ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத் 
  தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச் 
  செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன் 
  ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம் 
  உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர் 
  வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி 
  மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே. 
 • 72. செஞ்சடைஎம் பெருமானே சிறுமான் ஏற்ற 
  செழுங்கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து 
  மஞ்சடையும் மதிற்றில்லை மணியே ஒற்றி 
  வளர்மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை 
  அஞ்சடைய வஞ்சியர்மால் அடைய வஞ்சம் 
  அடையநெடுந் துயரடைய அகன்ற பாவி 
  நெஞ்சடைய நினைதியோ நினைதி யேல்மெய்ந் 
  நெறியுடையார் நெஞ்சமர்ந்த நீத னன்றே. 
 • 73. அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும் 
  ஆரமுதே என்னுறவே அரசே இந்த 
  மன்னுலகில் அடியேனை என்னே துன்ப 
  வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ 
  பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து
  போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன் 
  என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ
  என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே. 
 • 74. படித்தேன்பொய் உலகியனூல் எந்தாய் நீயே 
  படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை 
  ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின் 
  உன்னடியே துணையெனநான் உறுதி யாகப் 
  பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப் 
  பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல 
  நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே 
  நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ. 
 • 75. மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை 
  மயலேறி விருப்பேறி மதத்தி னோடு 
  பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ 
  பேயேறி நலிகின்ற பேதை யானேன் 
  வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல் 
  மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார் 
  ஒத்தேறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் 
  உடையானே இதுதகுமோ உணர்கி லேனே. 
 • 76. மதியணிந்த முடிக்கனியே மணியே எல்லாம் 
  வல்லஅருட் குருவேநின் மலர்த்தாள் வாழ்த்திக் 
  கதியணிந்தார் அன்பரெலாம் அடியேன் ஒன்றும் 
  கண்டறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ 
  பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப் 
  பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன் 
  துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ 
  இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே. 
 • 77. என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற 
  என்தாயே என்குருவே எளியேன் இங்கே 
  தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற 
  சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ 
  மின்னரசே பெண்ணமுதே என்று மாதர் 
  வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி 
  கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே 
  குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே. 
 • 78. அல்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத் 
  தமர்ந்தருளும் சிவகுருவே அடியேன் இங்கே 
  இல்விலங்கு மடந்தையென்றே எந்தாய் அந்த 
  இருப்புவிலங் கினைஒழித்தும் என்னே பின்னும் 
  மல்விலங்கு பரத்தையர்தம் ஆசை என்னும் 
  வல்விலங்கு பூண்டந்தோ மயங்கி நின்றேன் 
  புல்விலங்கும் இதுசெய்யா ஓகோ இந்தப் 
  புலைநாயேன் பிழைபொறுக்கில் புதிதே அன்றோ. 
 • 79. வன்கொடுமை மலநீக்கி அடியார் தம்மை 
  வாழ்விக்குங் குருவேநின் மலர்த்தாள் எண்ண 
  முன்கொடுசென் றிடுமடியேன் தன்னை இந்த 
  மூடமனம் இவ்வுலக முயற்சி நாடிப் 
  பின்கொடுசென் றலைத்திழுக்கு142 தந்தோ நாயேன் 
  பேய்பிடித்த பித்தனைப்போல் பிதற்றா நின்றேன் 
  என்கொடுமை என்பாவம் எந்தாய் எந்தாய் 
  என்னுரைப்பேன் எங்குறுவேன் என்செய் வேனே. 
 • 80. உய்குவித்து143 மெய்யடியார் தம்மை எல்லாம் 
  உண்மைநிலை பெறஅருளும் உடையாய் இங்கே 
  மைகுவித்த நெடுங்கண்ணார் மயக்கில் ஆழ்ந்து 
  வருந்துகின்றேன் அல்லால்உன் மலர்த்தாள் எண்ணிக் 
  கைகுவித்துக் கண்களில்நீர் பொழிந்து நானோர் 
  கணமேனும் கருதிநினைக் கலந்த துண்டோ 
  செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கி லாயோ
  திருவுளத்தை அறியேன்என் செய்கு வேனே. 
 • 81. அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின் 
  றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த 
  மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ 
  மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே 
  இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல் 
  எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி 
  உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன் 
  உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே. 
 • 82. கற்றவளை தனக்கும்உண வளிக்கும் உன்றன் 
  கருணைநிலை தனைஅறியேன் கடையேன் இங்கே 
  எற்றவளை எறும்பேபோல் திரிந்து நாளும் 
  இளைத்துநின தருள்காணா தெந்தாய் அந்தோ 
  பெற்றவளைக் காணாத பிள்ளை போலப் 
  பேதுறுகின் றேன்செய்யும் பிழையை நோக்கி 
  இற்றவளைக்144 கேள்விடல்போல் விடுதி யேல்யான் 
  என்செய்வேன் எங்குறுவேன் என்சொல் வேனே. 
 • 83. அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம் 
  ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன் 
  கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ 
  குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன்
  கடுமைசெயப் பிறர்துணிந்தால் அடிமை தன்னைக் 
  கண்டிருத்தல் அழகன்றே கருணைக் கெந்தாய் 
  செடிமையுளப் பாதகனேன் என்செய் வேன்நின் 
  திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின் றேனே. 
 • 84. கூம்பாத மெய்ந்நெறியோர் உளத்தே என்றும் 
  குறையாத இன்பளிக்கும் குருவே ஆசைத் 
  தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் 
  தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து 
  ஓம்பாமல் உவர்நீருண் டுயங்கு கின்றேன் 
  உன்னடியர் அக்கரைமேல் உவந்து நின்றே 
  தீம்பாலுஞ் சருக்கரையுந் தேனும் நெய்யும் 
  தேக்குகின்றார் இதுதகுமோ தேவ தேவே. 
 • 85. வெள்ளமணி சடைக்கனியே மூவ ராகி 
  விரிந்தருளும் ஒருதனியே விழல னேனைக் 
  கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம் 
  கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே 
  உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன் பின்னர் 
  உய்யும்வகை எவ்வகையீ துன்னுந் தோறும் 
  பொள்ளெனமெய் வியர்க்கஉளம் பதைக்கச் சோபம் 
  பொங்கிவழி கின்றதுநான் பொறுக்கி லேனே. 
 • 86. எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட 
  என்னரசே என்குருவே இறையே இன்று 
  மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல 
  மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே 
  தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய் 
  தடங்கருணைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய் 
  அனையறியாச் சிறுகுழவி யாகி இங்கே 
  அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ. 
 • 87. தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச் 
  சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் 
  ஏவினைநேர் கண்மடவார் மையற் பேயால் 
  இடருழந்தும் சலிப்பின்றி என்னே இன்னும் 
  நாவினைஎன் பால்வருந்திக் கரண்டு கின்ற 
  நாய்க்கும்நகை தோன்றநின்று நயக்கின் றேனான் 
  ஆவினைவிட் டெருதுகறந் திடுவான் செல்லும் 
  அறிவிலிக்கும் அறிவிலியேன் ஆன வாறே. 
 • 88. எம்பெருமான் நின்விளையாட் டென்சொல் கேன்நான் 
  ஏதுமறி யாச்சிறியேன் எனைத்தான் இங்கே 
  செம்புனலால் குழைத்தபுலால் சுவர்சூழ் பொத்தைச் 
  சிறுவீட்டில் இருட்டறையில் சிறைசெய் தந்தோ 
  கம்பமுறப் பசித்தழலுங் கொளுந்த அந்தக் 
  கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து 
  வம்பியற்றக் காமாதி அரட்டர் எல்லாம் 
  மடிபிடித்து வருத்தவென்றோ வளர்த்தாய் எந்தாய். 
 • 89. அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும் 
  ஆடுகின்ற மாமணியே அரசே நாயேன் 
  இம்பரத்தம் எனும்உலக நடையில் அந்தோ 
  இடருழந்தேன் பன்னெறியில் எனைஇ ழுத்தே 
  பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப் 
  பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை 
  கொம்பரற்ற இளங்கொடிபோல் தளர்ந்தேன் என்னைக் 
  குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்தி டாயோ. 
 • 90. கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும் 
  காரணகா ரியங்கடந்த கடவு ளேநின் 
  தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு 
  சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன் 
  பெண்ணுடைய மயலாலே சுழல்கின் றேன்என் 
  பேதைமையை என்புகல்வேன் பேய னேனைப் 
  புண்ணுடைய புழுவிரும்பும் புள்ளென் கேனோ 
  புலைவிழைந்து நிலைவெறுத்தேன் புலைய னேனே. 
 • 91. பொன்னுடையார் இடம்புகவோ அவர்கட் கேற்கப் 
  பொய்ம்மொழிகள் புகன்றிடவோ பொதிபோல் இந்தக் 
  கொன்னுடையா உடல்பருக்கப் பசிக்குச் சோறு 
  கொடுக்கவோ குளிர்க்காடை கொளவோ வஞ்ச 
  மின்னிடையார் முடைச்சிறுநீர்க் குழிக்கண் அந்தோ 
  வீழ்ந்திடவோ தாழ்ந்திளைத்து விழிக்க வோதான் 
  என்னுடையாய் என்னுடையாய் என்னை இங்கே 
  எடுத்துவளர்த் தனைஅறியேன் என்சொல் வேனே. 
 • 92. வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த 
  மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும் 
  அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக் 
  கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே 
  இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான 
  இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால் 
  ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை 
  உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே 
 • 93. பொன்மலையோ சிறிதெனப்பே ராசை பொங்கிப் 
  புவிநடையில் பற்பலகால் போந்து போந்து 
  நென்மலையோ நிதிமலையோ என்று தேடி 
  நிலைகுலைந்த தன்றிஉனை நினைந்து நேடி 
  மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று 
  வழுத்தியதே இல்லைஇந்த வஞ்ச நெஞ்சம் 
  கன்மலையோ இரும்போசெம் மரமோ பாறைக் 
  கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ. 
 • 94. தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும் 
  தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன் 
  வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி 
  விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும் 
  செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு 
  செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம் 
  இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த 
  இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே. 
 • 95. அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட 
  அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள் 
  கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே 
  கொள்ளுதியோ கொண்டுகுலங் குறிப்ப துண்டோ 
  நெடியனே முதற்கடவுட் சமுகத் தோர்தம் 
  நெடும்பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை 
  ஒடியநேர் நின்றபெருங் கருணை வள்ளல் 
  எனமறைகள் ஓதுவதிங் குனைத்தா னன்றே. 
 • 96. கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில் 
  கருத்தறியாச் சிறுவனைஓர் கடுங்கா னத்தே 
  உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம் 
  ஒருதாய்போல் மாயைஇருள் ஓங்கும் போதின் 
  மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ 
  மதியிலேன் மாழாந்து மயங்க நீதான் 
  வண்மையுற்ற நியதியின்பின் என்னை விட்டே 
  மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே. 
 • 97. நற்றாயும் பிழைகுறிக்கக் கண்டோம் இந்த 
  நானிலத்தே மற்றவர்யார் நாடார் வீணே 
  பற்றாயும் அவர்தமைநாம் பற்றோம் பற்றில் 
  பற்றாத பற்றுடையார் பற்றி உள்ளே 
  உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே 
  உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன் 
  பொற்றாளை விரும்பியது மன்று ளாடும் 
  பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே. 
 • 98. எண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள் 
  எம்பெருமான் என்றுமகிழ்ந் திறுமாந் திங்கே 
  நண்ணியமற் றையர்தம்மை உறாமை பேசி 
  நன்குமதி யாதிருந்த நாயி னேனைத் 
  தண்ணியநல் அருட்கடலே மன்றில் இன்பத் 
  தாண்டவஞ்செய் கின்றபெருந் தகையே எங்கள் 
  புண்ணியனே பிழைகுறித்து விடுத்தி யாயில் 
  பொய்யனேன் எங்குற்றென் புரிவேன் அந்தோ. 
 • 99. அன்பர்திரு வுளங்கோயி லாகக்கொண்டே 
  அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு 
  வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து 
  மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத் 
  துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர் 
  துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம் 
  இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ 
  என்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே. 
 • 100. புற்றோங்கும் அரவமெல்லாம் பணியாக் கொண்டு 
  பொன்மேனி தனில்அணிந்த பொருளே மாயை 
  உற்றோங்கு வஞ்சமனக் கள்வ னேனை 
  உளங்கொண்டு பணிகொள்வ துனக்கே ஒக்கும் 
  மற்றோங்கும் அவரெல்லாம் பெருமை வேண்டும் 
  வன்மனத்தர் எனைவேண்டார் வள்ள லேநான் 
  கற்றோங்கும் அறிவறியேன் பலவாச் சொல்லும் 
  கருத்தறியேன் எனக்கருளக் கருது வாயே. 
 • 101. அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும் 
  ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம் 
  தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட 
  சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம் 
  மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய் 
  வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில் 
  இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை 
  ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.