திருப்புகழ் ஆசிரியர் அருணகிரிநாதர் திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல்.
அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர்.
திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.
திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர்.
திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை. அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ்
தந்ததனத் தானதனத் …… தனதான
தந்ததனத் தானதனத் …… தனதான
……… பாடல் ………
உம்பர்தருத் தேநுமணிக் …… கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் …… துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் …… பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் …… றருள்வாயே
தம்பிதனக் காகவனத் …… தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் …… கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் …… பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் …… பெருமாளே.
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன …… தனதான
……… பாடல் ………
நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு …… நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் …… இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை …… வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை …… மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் …… செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் …… செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் …… எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் …… பெருமாளே.
தனதனன தான தனதனன தான
தனதனன தான …… தனதான
……… பாடல் ………
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண …… மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் …… அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி …… வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர …… அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை …… அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம …… முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் …… அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை …… முகவோனே.
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன …… தனதான
……… பாடல் ………
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர …… கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை …… வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப …… னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை …… மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை …… இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை …… தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் …… அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய …… பெருமாளே.
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன …… தனதான
……… பாடல் ………
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக …… னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை …… கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய …… மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய …… முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த …… அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை …… இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய
கரிமுகன் அடிபேணி … கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம்,
அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின்
திருவடிகளை விரும்பி,
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை
கடிதேகும் … அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில்
நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே,
என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில்
ஓடிப் போய்விடும்.
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு
திரள்புய மதயானை … ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும்
சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க
திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும்,
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ்
மலர்கொ(ண்)டு பணிவேனே … மத்தளம் போன்ற பெருவயிறு
உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத்
தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய
முதல்வோனே … இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல்
முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல்
முதலில் எழுதிய முதன்மையானவனே,
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது
பொடிசெய்த அதிதீரா … (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த
அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத்
தூளாக்கிய மிகுந்த தீரனே*,
அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும் அப்புனம்
அதனிடை இபமாகி … (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத்
துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப்
புனத்திடையில் யானையாகத் தோன்றி,
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம்
அருள் பெருமாளே. … அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச்
சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள்
பாலித்த பெருமாளே.
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே. 2
முருகன் துதி
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
முத்தைத்தருரு பத்தித் திருநகை
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன …… தனதான
……… பாடல் ………
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
முத்தைத்தரு பத்தித் திருநகை … வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த
அத்திக்கு இறை … தேவயானை* தேவியின் தலைவனே,
சத்திச் சரவண … சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,
முத்திக்கொரு வித்துக் குருபர … மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே,
எனவோதும் முக்கட்பரமற்கு … என்று துதிக்கும் முக்கண்ணர்
பரமசிவனார்க்கு
சுருதியின் முற்பட்டது கற்பித்து … வேதங்களுக்கு முதன்மையான
ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,
இருவரும் … (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
இருவரும்,
முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண … முப்பத்து முக்கோடி
தேவர்களும் அடி பணிய நின்றவனே,
பத்துத்தலை தத்தக் கணைதொடு … ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது … ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக … ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,
பத்தற்கு இரதத்தைக் கடவிய … நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் … பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே … பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?
(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை
விரிவாக வருணிக்கிறது).
தித்தித்தெய ஒத்தப் பரிபுர … தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
சிலம்புகள் அணிந்த
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி … நாட்டியப் பாதங்களை வைத்து
காளிதேவி
திக்கொட்க நடிக்க … திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
செய்யவும்,
கழுகொடு கழுதாட … கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,
திக்குப்பரி அட்டப் பயிரவர் … எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**
சித்ரப்பவுரிக்கு … இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத … ‘தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக’
என்ற தாள ஓசையைக் கூறவும்,
கொத்துப்பறை கொட்ட … கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,
களமிசை முதுகூகை … போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்
குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ … ‘குக்குக்குகு குக்குக் குகுகுகு’ என்ற ஓசையோடு
‘குத்திப் புதை, புகுந்து பிடி’ என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,
நட்பற்ற அவுணரை … சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை
வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட … கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,
ஒத்துப் பொரவல பெருமாளே. … தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
போர் செய்யவல்ல பெருமாளே.
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன …… தனதான
……… பாடல் ………
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம …… பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம …… கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம …… அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு …… மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக …… வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி …… லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் …… பெருமாளே.
“நாதம்: லிங்கம்; விந்து: பீடம்; நாதவிந்துகலாதி என்பது இறைவன் பஞ்சமூர்த்தியாய்ப் பஞ்ச கிருத்தியத் தலைவராய்த் திகழ்வதைக் குறிக்கின்றது.” குகத்திரு தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்களின் குறிப்பு. இதன் விளக்கம் மிக நீண்ட ஒன்று. வாரியார் சுவாமிகள் செய்த திருப்புகழ் உரையின் இரண்டாம் தொகுதியில் முதற்பாடல் இது. வேண்டுவோர் அவருடைய விளக்கத்தைப் படித்து இன்புறவும்.
நாத விந்து கலாதீ நமோநம … லிங்கமும் பீடமுமான சிவசக்தித் தத்துவங்களுக்கு மூலப் பொருளே போற்றி போற்றி;
வேத மந்த்ர சொரூபா நமோநம … வேதங்களுக்கும் மந்திரங்களுக்கும் உருவமாக நிற்பவனே போற்றி போற்றி;
ஞான பண்டித சாமீ நமோநம … ஞானமூர்த்தியாகத் திகழும் தலைவனே போற்றி போற்றி;
வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம … பலகோடி திருநாமங்களையுடைய சிவபிரானுடைய குமாரனே போற்றி போற்றி;
போக அந்தரி பாலா நமோநம … வினைப் பயன்களைத் துய்க்கச் செய்யும் உமாதேவியாரின் பாலகனே போற்றி போற்றி;
நாக பந்த மயூரா நமோநம … தன்னுடைய காலில் பாம்பை அடக்கி பந்தித்த—கட்டிய—மயில்வாகனனே போற்றி போற்றி;
பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம … எதிரிகளான சூரர்களை வெட்டி வீழ்த்தித் தண்டிக்கும் திருவிளையாடலைச் செய்தவனே போற்றி போற்றி;
கீத கிண்கிணி பாதா நமோநம … இன்னிசை எழுப்பும் சதங்கைகளை அணிந்த திருப்பாதத்தவனே போற்றி போற்றி;
தீர சம்ப்ரம வீரா நமோநம … தைரியமும் களிப்பும் மிக்க போர்வீரனே போற்றி போற்றி;
கிரிராஜ … எல்லா மலைகளும் தலைவனே!
தீப மங்கள ஜோதீ நமோநம … சுடர்விடும் தீபத்தின் மங்களகரமான திருவொளியே போற்றி போற்றி;
தூய அம்பல லீலா நமோநம … தூய்மையான ஆகாசவெளியில் லீலைகளைச் செய்பவனே போற்றி போற்றி;
தேவ குஞ்சரி பாகா நமோநம … பக்கத்திலே தேவானையை உடையவனே போற்றி போற்றி;
அருள்தாராய் … எனக்குன் திருவருளைத் தந்தருள வேண்டும்.
ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் … பக்தர் களுக்கு அளித்தலையும்; பலவிதமான சிறப்பான பூசைகளையும்; நூல்களை ஓதுவதையும்; நல்ல குணத்தையும்; நன்னெறியையும்; நீதியையும்;
ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத … கருணையையும்; குருவின் திருப்பாதங்களுக்குத் தொண்டாற்றுவதையும் என்றும் மறக்காத (சோழ நாட்டிலே),
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை … ஏழுலகும் போற்றிப் புகழும்படியான காவேரி நதி பாய்வதால் செழிப்புற்று வளம் பெரு.குகின்ற,
சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும் நாயக … சோழ மண்டலத்திலே மனத்துக்கு இன்பமான ராஜகெம்பீரம் என்னும் நாட்டை ஆளும் தலைவனே!
வயலூரா … வயலூரில் வீற்றிருப்பவனே!
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை … அன்பு பொருந்தியவரான ஆரூரருடைய—சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய—நட்பை,
சேர்தல் கொண்டவரோடே முனாளினில் … சேர்ந்தவராக, முன்னொரு காலத்தில்,
ஆடல்* வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி … ஆடுவதும் கொடிய விரைந்த தன்மை கொண்டதுமான குதிரை மீதேறி, கயிலைக்குப் போய்,
(ஆடுகின்ற தன்மையைக் கொண்டது என்பதால் குதிரைக்கு ‘ஆடல்மா’ என்றும் பெயர்)
ஆதி அந்தவுலா ஆசு பாடிய … ஆசுகவியாக ஆதி உலா எனப்படும் திருக்கயிலாய ஞான உலாவைப் பாடியவரான,
சேரர் கொங்கு வைகாவூர் நனாடதில்… சேரமான் பெருமான் நாயானாருடைய கொங்கு மண்டலத்திலுள்ள வைகாவூர் என்ற நல்ல நாட்டிலிருக்கின்ற,
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … திருவாவினன் குடியின் செல்வமாக வீற்றிருப்பவனே, தேவர்களுடைய பெருமாளே!
சுருக்க உரை
பலவிதமான சிறப்பான பூசைகளையும்; நல்ல நூல்களை ஓதுவதையும்; நல்ல குணங்களையும்; ஒழுக்கத்தையும்; நீதியையும் எப்போதும் மறவாதவர்கள் வாழ்வதும்; ஏழுலகத்தாலும் போற்றப்படும் காவிரி பாய்வதால் வளம்பெருகியுள்ளதுமான சோழ நாட்டிலே, மனத்துக்கு இனிதான ராஜகெம்பீர நாட்டையாளும் நாயகனே! அந்நாட்டில் சிறப்புற்று விளங்கும் வயலூரில் கோவில்கொண்டிருப்பவனே!
முன்னொரு நாளில், தன்னிடத்திலே மிகுந்த அன்பு பூண்டவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் கயிலாயத்துக்குச் சென்றபோது, வேகமும் தீரமும் மிக்க குதிரையில் ஏறிய சேரமான் பெருமான் நாயனார், திருக்கயிலையில் ஆதி உலா என்னும் பிரபந்தத்தை ஆசுகவியாகப் பாடினாரே, அவர் ஆண்ட கொங்குநாட்டிலே, வைகாவூரிலுள்ள திருவாவினன்குடியில் எழுந்தருளியிருப்பவனே! தேவர்கள் பெருமாளே!
நாதம், விந்து கலை என்பனவற்றுக்கு முதல்வனே போற்றி போற்றி!
வேதங்களுக்கும் மந்திரங்களுக்கும் உருவமாகத் திகழ்பவனே போற்றி போற்றி! ஞான பண்டிதனே, தலைவனே போற்றி போற்றி!
பலகோடி திருநாமங்களையுடைய சிவபெருமானாரின் திருமகனே போற்றி போற்றி! எல்லா உயிர்களும் அவரவர் வினைப்பயன்களை அனுபவிக்கச் செய்யும் போக சக்தியான உமாகுமாரனே போற்றி போற்றி! காலிலே பாம்புகள் சுற்றியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே போற்றி போற்றி!
பகைத்து வந்த சூரபத்மனையும் அவனுடைய சேனைகளையும் அழித்த திருவிளையாடலைச் செய்தவனே போற்றி போற்றி! இன்னொலி எழுப்பும் சதங்கைகளை அணிந்த திருப்பாதனே போற்றி போற்றி!
தைரியமும் களிப்பும் நிறைந்த வீரனே போற்றி போற்றி! சுடர்விடுகின்ற தீபத்தின் ஞானச் சுடராகத் திகழ்பவனே போற்றி போற்றி!
அருளாகிய பரவெளியில் ஆனந்தக்கூத்தாடுபவனே போற்றி போற்றி!
தேவானையம்மையை அருகில் கொண்டவனே போற்றி போற்றி! அடியேனுக்கு உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.
அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ்
- நூற் சிறப்பு
எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர்சொல்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? – பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்குஞ் செவி? 1
மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ?
ஆணிப்பொன் கையுறுவார்க் கையுறவேன்? – பேணிப்பின்
செவ்வேல் விநோதன் திருப்புகழ்சிந் தித்திருப்பார்க்
கெவ்வேலை வேண்டும் இனி? 2
சீராந் திருப்புகழைச் செவ்வேள்மேல் அன்பாக
ஆராய்ந் துரைத்தான் அருணகிரி; – நேராக
அந்தப் புகழை அநுதினமும் ஓதாமல்
எந்தப் புகழோது வீர்? 3
அருணகிரி நாதன் அகிலதலத் துன்னைக்
கருணையினாற் பாடுங் கவிபோற் – பிரியமுற
வேறுமோர் புன்கவிகள், வேலோனே! நின் செவியில்
ஏறுமோ? என்னே இனி? 4
ஆனைமுக வற்கிளைய ஐயா! அருணகிரி
தேனனைய சொல்லான் திருப்புகழை – யானினைந்து
போற்றிடவும் நின்னைப் புகழ்ந்திடவும் பொற்கமலஞ்
சாத்திடவும் ஓதிடவும் தா. 5
- திருப்புகழ்ச் சிரவணத்தால் வேதார்த்தாதி அனைத்து அறியலாம்; ஆதலால் அதனையே கேட்க என்றது
வேதம்வேண் டாம் சகல வித்தைவேண் டாம்கீத
நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம், – ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்
திருப்புகழைக் கேளீர் தினம். 6
- நூற் பயன்
ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந் நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம் – மோனாவீ
டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக்
கூறினார்க் காமேஇக் கூறு. 7
ஆறுமுகந் தோன்றும் அழகியவேல் தோன் றுமவன்
ஏறுமயில் தோன்றும் எழில்தோன்றும் – சீறிவரு
சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப்
பாரில் வழுத்தினோர் பால். 8
- அன்பர் வினவ ஆண்டவன் விடையருளியதாக மேலையதை வற்புறுத்தியது
பொருப்பது பொடிப்பட விடுத்திடுகை வேலா
இருப்பிடம் உனக்கெது எனக்கரு ளியம்பாய்;
உருக்க நல் விழுக்குலம் ஒழுக்கமில ரேனும்
திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம். 9
- அங்ஙனம் அருளக் கேட்ட அன்பர் ஆண்டவனை நோக்கிக் கூறியதாகத் திருப்புகழ் படிப்போர் தீரங் கூறியது
திருப்புகழ் படிக்குமவர் சிந்தைவலு வாலே
ஒருத்தரை மதிப்பதிலை உன்றனரு ளாலே
பொருப்புக மிகப்பொருது வென்றுமயில் மீதே
தரித்தொரு திருத்தணியில் நின்றபெரு மாளே. 10
- நூலாசிரியர் பெயரோடு நூற்பண்பும் பெயரும் உணர்த்தி அதனைத் துதிப்போர் பேறுங் கூறியது
ஓராறு மாமுகனாம் உச்சிதமெய்ஞ் ஞானகுகன்
பேரால் அருணகிரி பேருலகில் – சீராருந்
தோத்திரம தாகத் துதிக்குந் திருப்புகழை
ஏத்தினவர் ஈடேறு வார். 11
வள்ளிமண வாளன் மயிலேறும் வள்ளல்தனைத்
தெள் ளுதமி ழாற்புனைந்து சீர்பெறவே – உள்ளபடி
வைப்பாம் அருணகிரி வாழ்த்துந் திருப்புகழைக்
கற்பார் கரையேறு வார். 12
- திருப்புகழ் இன்ன இன்னதற்கு இன்ன இன்னதாம் எனல்
அருணகிரி நாதர்பதி னாயிறா யிரமென்
றுரைசெய் திருப்புகழை யோதீர், – பரகதிக்கஃ
தேணி; அருட்கடலுக் கேற்றம்; மனத்தளர்ச்சிக்
காணி; பிறவிக் கரம். 13
- திருப்புகழ் வழிபாட்டாற் கூற்றையும் வெல்லலாம் எனக் கெடி பெற உரைத்தது
திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத்
திருப்புகழை நித்தஞ் செபிக்கத் – திருப்புகழை
அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று
கெர்ச்சிக்க லாமே கெடீ. 14
- திருப்புகழின் பிரபாவம்
மடங்கல் நடுங்கும் தனைச்சுடும் ஈதென்று; மாதிரத்தோர்
அடங்கி நடுங்குவர் சூலா யுதமென், றசுரர் கடல்
ஒடுங்கி நடுங்குவர் வேலா யுதமென், றுரகனுங்கீழ்க்
கிடங்கில் நடுங்கும், மயிலோன் திருப்புகழ் கேட்டளவே. 15
- திருப்புகழடியார் பெருமை
திருப்புகழ் வல்ல சூரர்மகன் நாயகன், சங்கரற்குக்
குருப்புகழ் வல்ல குமரேசன், சண்முகன், குன்றெறிந்தோன்
மருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல் சொன்ன
திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் தூளிஎன் சென்னியதே. 16
திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் முற்றிற்று