Sidham Sivamayam

சித்தம் சிவமயம்!

சித்தர் பாடல்கள் – மெய்ஞ்ஞானத்தை மறைபொருளாக தன்னுள் பொதிந்து திகழும் பொக்கிஷங்கள். அவற்றுள் ஒளிந்துகிடக்கும் உண்மை பொருளைக் கண்டுகொண்டால், அவையே துயரங்கள் சூழ்ந்த மனித வாழ்க்கைக்கான அருமருந்தாகத் திகழ்வதையும் அறிந்துகொள்ள முடியும். ‘சித்தர்களின் பாடல்கள் மகத்துவமான மந்திரங்கள்’ என்பது பெரியோர் வாக்கு. அவ்வகையில், அனுதினமும் படித்துப் பயன்பெறும் வகையிலான சித்தர் பாடல்கள் சிலவற்றை விளக்கங்களோடு அறிந்துகொள்வோம்.

முன்னதாக, `சித்தி’ என்றால் என்ன, சித்தர் மரபின் மூலம் என்ன, சித்தர்களைத் துதிப்பதற்கான துதிப்பாடல் என்ன என்பதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை அறிவோம்.

சித்த நிலை மூன்று வகை…

சித்த நிலையை `சிவநிலையாகிய முக்தியின்பம்’ என்கின்றன ஞான நூல்கள். ‘அருள்திறலால் எளிதாகச் செய்து முடிக்கும் செயல்’ இதுதான் சித்தி என்பதற்கு சித்தர்பெருமக்கள் சொல்லும் அரும்பொருள். ‘அருள்சேர் அனுபவம்’ என்பது வள்ளலார் வாக்கு. சித்தியை மூவகையாகப் பிரித்துச் சொல்வார்கள். அவை: ஞான சித்தி, யோக சித்தி, கரும சித்தி.

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!
ஞான சித்தி: மூவகை சித்திகளில் முதன்மையானது. கலை அறிவு, ஆன்ம விசாரணை, அகமுக பாவனை, பிரமானுபவம் பெறுதல் ஆகியவற்றால் ஞானசித்தி கைகூடும் என்கின்றன ஞானநூல்கள். இதைப் பெற்றவர்களுக்கு 647 கோடி சித்திகள் ஏவல் செய்யக் காத்திருக்குமாம்.

யோக சித்தி: யோகநிலைக்கானது இது. மூலாதாரத்தை விழிப்பித்து, ஆறு ஆதாரங்களைக் கடந்து சித்தி அனுபவம் பெறுவது. இப்படியான யோக சித்தி கைவரப்பெற்றவர்கள் அரிய சாதனைகளைப் புரியும் வல்லமை கொண்டவர்களாகத் திகழ்வார்களாம்.

கரும சித்தி: மூன்றாவதான கரும வகை சித்திகளைப் பெரியோர்கள் போற்றுவதில்லை.

சித்தர்களின் மரபு

உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டே மனித மனம் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் அதிகம். அவ்வாறு அவன் வெளியே தேடிக்கண்டு கொண்டவை இவ்வுலக வாழ்க்கைக்குப் பயன்பட்டன.

உள்ளே தேடிக் கண்டு கொண்டவையே மெய்ஞ் ஞானம். இது, இக-பரம் இரண்டுக்கும் உற்றத் துணை யான ஞானம் ஆகும். இப்படி, சித்தமாகிய அறிவின் அற்புதத்தை அறிந்து இயற்கையை வென்றவர்களே சித்தர்கள் எனலாம்.

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!

இவர்கள் காயசித்தி பெற்ற உடலுடன் இறவா வரமும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். தாங்கள் அறிந்த ரகசியத்தை உபதேசமாக சீடர்களுக்கு போதித்தனர். யோகம், வைத்தியம், மந்திரம், ஜோதிடம், பூஜா விதிகள் முதலானவற்றையும் சீடர்களுக்குப் பயிற்சியாய் வழங்கினார்கள்.

இப்படி குருவும் சீடர்களுமாய் சித்த பரம்பரை வாழ்ந்த இடங்களை சித்தர் காடு, சித்தன் வாழ்வு, சித்தர் வனம் என்று அழைப்பார்கள். பழநி, வேதாரண் யம், பொதிகை மலை, சதுரகிரி முதலான தலங்களில் இவ்வகையான சித்தர் வனங்கள் இருந்தன என்பார்கள்.

சித்தர்கள் பெரும்பாலும் சிவபெருமானையே தங்களின் முழுமுதற் தெய்வமாக ஏற்றுத் தொழுதவர்கள். எல்லாம்வல்ல சிவபெருமான், தானே சித்தராகத் தோன்றி அடியவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் களைந்த அருள்கதைகள் உண்டு.

அவரை எல்லாம்வல்ல சித்தர் என்கின்றன ஞான நூல்கள். சித்தர்களால் வழிபடப்படுபவர் என்பதால், சித்தீஸ்வரர் என்றும் சிறப்பிப்பார்கள். அவருடன் இணைந்து அருள்பாலிக்கும் அம்பிகையை சித்தீஸ்வரி என்று அழைத்து வழிபடுவார்கள்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கோயிலில் எல்லாம் வல்ல சித்தரின் திருவுருவம் மூலவராகவும், உற்சவ திருமேனியாகவும் காட்சி அளிக்கிறது. சுந்தரேஸ்வர பெருமானின் சந்நிதிக்கு வடமேற்கு முனையில் கிழக்குநோக்கி வீராசனத்தில் அருளும் எல்லாம்வல்ல சித்தரைத் தரிசிக்கலாம்.

சித்தர் கணம்

புராணங்களில் சித்தர் கணத்தவர் பற்றிய விளக்கங் கள் உண்டு. இவர்கள் காசிப முனிவருக்கு அனகை என்பவள் மூலம் பிறந்தவர்கள். விண்ணில் பறந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள் என்கின்றன புராணங்கள். அதேபோல் பிரம்மதேவனின் மானச புத்திரர்களாக தோன்றிய சித்தகணமும் உண்டு.

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!
இவர்களைத் தவிர பூமியில் மனிதர்களாகத் தோன்றி, தங்களது ஒப்பற்ற தவ ஆற்றலால் சித்த நிலை எய்திய அருளாளர்கள் நிறைய உண்டு. இவர்களின் கூட்டத்தையும் சித்தர்கணம் என்றே சொல்வார்கள்.

இப்படி சித்தர்கள் எண்ணற்றோர் தோன்றினாலும் பதினெண் சித்தர்களைப் போற்றும் மரபு நெடுங் காலமாக வழங்கி வருகிறது. ஆன்மிகத்தில் பதினெட்டு என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் உண்டு. யோக நெறியின் பதினெட்டுப் படிகளைக் கடந்தவர்களே சித்தனாக முடியும் என்பார்கள். இவற்றைக் கடப்பது எளிதன்று.

இதற்கு, ஏற்கெனவே சித்தி பெற்ற அருளாளர்களின் ஆசியும் உதவியும் தேவை. அவ்வகையில் தங்களில் முன்னோடிகளான பதினெட்டு சித்தர்களைப் போற்றி வழிபடும் மரபு உருவாகியிருக்கலாம் என்பது ஆன்றோர் கருத்து. அந்த வகையில், பதினெண் சித்தர் களைத் துதிக்கும் பாடல்களும் உண்டு.

அவற்றில் ஒன்று…

நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர்
நல்தவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
நந்தியிடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார் கொங்கணவர் காலாங்கி அன்பின்
சிந்தில் அழுகண்ணார் அகப்பையர் பாம்பாட்டி
தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர்
செந்தமிழ்ச்சீர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தையிலுன்னி சிரந்தாழ்த்தி சேர்ந்து துதிப்போமே

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!

பதினெட்டு சித்தர்களின் பெயர்களையும் வரிசை யாகச் சொல்லி வழிபட்டு துதிக்கும் இந்தப் பாடலை அனுதினமும் பாடித் துதித்தால் பதினெண் சித்தர் களின் திருவருளையும் ஒருங்கே பெற்றுச் சிறக்கலாம்.

நவ சித்தர்களும் நவநாத சித்தர்களும்

பதினெட்டு சித்தர்களை வழிபடுவது போன்று நவ சித்தர்கள் எனப்படும் ஒன்பது சித்தர்களைப் போற் றும் வழக்கமும் உண்டு. அவர்கள்: கடுவெளி சித்தர், வல்ல சித்தர், முறங்காட்டு சித்தர், வரகுல சித்தர், பாம்பாட்டி சித்தர், கல்லுளி சித்தர், குகைச் சித்தர், குரு சித்தர், பஞ்சாட்சர சித்தர்.

அதேபோல், சித்தர்களில் நாத சித்தர்கள் எனும் வகையினரையும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவர்களின் தலைவர்கள் ஒன்பது பேர்.

சத்துவ நாதர், சாலோக நாதர், ஆதி நாதர், அருளி நாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கடயந்திர நாதர், கோரக்க நாதர், குக்குட நாதர் ஆகியோரை நவநாத சித்தர்கள் எனச் சிறப்பிப்பார்கள் (நவநாத சித்தர்கள் என்று வேறு ஒன்பதுபேரின் பெயர்களையும் சில நூல்கள் குறிப்பிடுகின்றன).

அட்டமா சித்திகள்

ஆத்ம சாதனையால் சித்தத்தில் தெளிந்த நிலை பெற்று, தனது சீவனே சிவன் என்பதை உணர்ந்த சித்தபுருஷர்களுக்குச் சிவபெருமான் அஷ்டமா சித்திகளையும் அளித்து அருள்வதாகப் புராணங்கள் சொல்கின்றன. அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, பிரகாமியம், ஈசத்வம், வசியத்வம் ஆகிய எட்டுமே அஷ்டமா சித்திகள் ஆகும்.

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!
அணிமா: சித்தன் தன் உடலை அணு அளவுக்குச் சுருக்கிக் கொள்ளுதல் அணிமா ஆகும்.

மகிமா: தன் உடம்பை மிகப் பிரமாண்டமாக்கி நிற்பது.

கரிமா: மிகவும் நுணுக்கமான சக்தி. தன் உடலை மட்டுமின்றி, பார்க்கும் பொருள்களை தனது பார்வையாலேயே அதிக எடை கொண்டதாக மாற்றும் சித்தி.

லகிமா: இலகுவாதல். அதாவது தன்னுடம்பை பஞ்சை விடவும் லேசாக இருக்கும்படி செய்தல். இதனால் காற்றில் மிதக்கவும், வானில் பறக்கவும் முடியும் என்பார்கள்.

மேற்சொன்ன நான்கும் உடம்புக்கானவை. அடுத்து வரும் நான்கும் மனதுக்கானவை.

பிராப்தி: எந்தப் பொருளையும் இருந்த இடத்திலிருந்தே அடைவது.

பிரகாமியம்: எதிர்ப்படும் எந்தப் பொருளும் தனக்கு தடையாகாமல் இருக்கச் செய்தல். அதாவது, பாறை ஒன்று எதிர்ப்பட்டாலும் அதையும் உடறுத்து அதனுள் புகுந்து செல்லும் வல்லமை. இந்த வல்லமையால் பூமிக்குள்ளும் புகுந்து செல்ல முடியுமாம்.

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!

ஈசத்துவம்: எல்லாவற்றிலும் தனது ஆற்றலைச் செலுத்தி அவற்றைத் தன் மனம்போல் நடக்க வைத்தலாகும். தண்ணீரை திரட்டி பெரும் தூண் போல் எழுப்புவது, பெரும் மலைகளையும் நகர்த்திக் காட்டுவது ஆகிய சாதனைகளைச் செய்ய முடியும்.

வசித்துவம்: உலகப் பொருள்களை, உயிர்களை தன் வயப்படுத்துவது. இந்த எட்டுவழிகளை அடைவதற்கான தவயோக முறைகளையும் திருமந்திரம் உட்பட வேறு சில சித்தர் நூல்கள் விவரிக்கின்றன.

இதுவரையிலும் சித்தர்கள், சித்த வல்லமைகள் குறித்துப் பார்த்தோம். இனி, அருமருந்தாகவும், அரிய மந்திரங்களாகவும் திகழும் சித்தர் பாடல்கள் சிலவற் றைப் பார்ப்போம்.

உயிரின் ரகசியம்!

மனிதப் பிறப்பு என்பது, ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைவதால் ஏற்படு கிறது என்பது தெரியும். ஆனால், கரு உண்டானதும் குறிப்பிட்ட காலத்தில் அதனுள் உயிர் எனும் சாந்நித் தியம் குடியேறுவது எப்படி?

மனித உடலைப் பற்றிச் சொல்லும்போது, ‘ஓட்டை வீடு ஒன்பது வாசல் கொண்டது’ என்று சொல்வார்கள். உயிரானது அந்த ஓட்டை வீட்டினுள் எப்படி நிலை பெற்றிருக்கிறது? இது அதிசயம்தானே!

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!
மனித உடலில் உயிர் எங்கிருக்கிறது என்பது பற்றி யும், உயிரின் அளவென்ன என்பது பற்றியும் பல்வேறு கோணத்தில் ஆய்வுகள் செய்தும், அவைகுறித்த தீர்க்க மான முடிவுக்கு வர இயலவில்லை என்கிறார்கள்.

ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர் கள் தங்கள் பாடல்களில் மனித உடலில் உயிர் எங்கிருக்கிறது என்பது பற்றியும், அதன் அளவு என்ன என்பது பற்றியும் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.

ஆம்! மனித உயிர் எங்கிருக்கிறது, அதன் அளவு எவ்வளவு என்பது பற்றி, திருமூலர் தமது திருமந்திரப் பாடல்களில் எவ்வளவு அற்புதமாக தெளிவுபடுத்தி இருக்கிறார், பாருங்கள்…

பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலுமென்னை நினையென்ற அப்பொருள்
உச்சிக்குங் கீழது உண்ணாக்கு மேலது
வைச்ச பதமிது வாய் திறவாதே

மனித உடலில் உச்சிக்குக் கீழேயும், உள்நாக்குக்கு மேலேயும் உயிர் இருப்பதாகக் கூறியிருக்கிறார் திரு மூலர். அவரே, உயிரின் அளவு எவ்வளவு என்பதையும் மற்றொரு பாடலில் விளக்கியிருக்கிறார்.

அந்தப் பாடல்…

மேவிய சிவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரமாயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே

உடம்பில் இருக்கும் உயிரின் வடிவானது, ஒரு பசுவின் மயிரொன்றை நூறாகக் கூறு செய்து, அதில் ஒன்றை எடுத்து அதை ஆயிரமாக கூறுசெய்தால், அந்த ஆயிரத்தில் ஒன்றின் அளவே உயிரின் அளவு என்கிறார் திருமூலர். இந்த நுட்பமான உயிரில் இறை வன் உள்ளான் என்றும். அந்த இறைவனை தவத்தின் மூலம் அறியலாம் என்றும் திருமூலர் கூறுகிறார்.

உண்மையான பேரின்பம்!

வினைப்பயன்களின் காரணமாகவே மனிதர்களுக் குப் பிறவி ஏற்படுகிறது. நம்முடைய கர்மவினைகளைப் போக்கிக்கொண்டு, பிறப்பும் இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை அடைய வேண்டும் என்பதுதான் மனிதர்களின் லட்சியமாக இருக்க வேண்டும். அதற்கு பாசம், பற்றுகளையெல்லாம் நீக்கி, இறைவனை வழிபட வேண்டும்.

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!

நமக்குக் கிடைத்திருக்கும் வீடு, வாசல், சொத்து, சுகம், மனைவி, மக்கள் எல்லாம் சாசுவதம் கிடையாது. பிறவாப் பேரின்ப நிலையே நிரந்தரமானது.

அப்படியான நிலையை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்று பட்டினத்தடிகள் பின்வரும் பாடலின் மூலமாக வலியுறுத்தியிருக்கிறார்.

நல்லாரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே

அதாவது, நல்லவர்களின் சத்சங்கமும், ஈசனின் பூசையும், அதன் பயனாக நாம் பெறும் ஞானமும்தான் நிலையான பேரின்பமாகும்; மனைவி-மக்களும், சுற்றமும், நம் எழிலுடம்பும் உட்பட மற்றவையெல்லாம் நிரந்தரமற்றவையே என்கிறார் பட்டினத்தார்.

ஸ்ரீராம நாம மகிமை

கலியுகத்தில் நாம ஜபமே முக்திக்கு வழி என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்தர் சிவ வாக்கியர் தனது பாடல்மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

ஒருமுறை ஆஞ்சநேயர் ராமபிரானுடன் போரிட நேரிட்டது. ராமபிரான் விடுத்த அம்புகள் எதுவும் ஆஞ்சநேயரைத் தாக்கவில்லை. காரணம், அவர் ராம நாமத்தை ஜபித்துக்கொண்டிருந்ததுதான். ராம நாம மகிமையை உணர்த்துவதுபோல் அந்தச் சம்பவம் அமைந்திருக்கிறது. ராமநாமத்தை ஜபிப்பதால், எத்த கைய ஆபத்துகளிலிருந்தும் நாம் விடுபடலாம்.

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!
அத்தகைய ராம நாமத்தின் மகிமையைப் பற்றி சிவ வாக்கியர் பாடியிருக்கும் பாடல் இங்கே…

அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே

சந்தியாவந்தனம், புனித நீராடல், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணங்கள், தவங்கள் ஆகிய வற்றால் கிடைக்கும் புண்ணிய பலன், ராமநாமத்தை ஜபிப்பதால் நமக்குக் கிடைத்துவிடும் என்கிறார் சிவ வாக்கியர். மேலும், ராமனின் மகிமையை அவர் எப்படிச் சிலாகிக்கிறார் பாருங்களேன்…

கார கார கார கார காவலூழி காவலன்
போர போர போர போர போரினின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்களேழுமெய்த ஸ்ரீ
ராம ராம ராம ராம ராமவென்னும் நாமமே

என்றும் போற்றிப் பாடி மகிழ்கிறார் சிவவாக்கியர்.

பிறவியும் நன்றே!

கர்மவினைகளின் பயனாக நமக்கு ஏற்படும் பிறவி கூட மிகவும் நல்லதுதான் எனக் கூறுகிறார் அழுகணிச் சித்தர். ஏன் அப்படி?

பிறப்பு இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை அடைய வேண்டும் என்று சித்தர்களும், ஞானியரும் கூறும்போது, அழுகணிச் சித்தர் இப்படிக் கூறுவது நமக்கு வியப்பாகத்தான் இருக்கும். ஆனால், அவர் அப்படிக் கூறியிருக்கும் பாடலில் உள்ள தத்துவத்தைப் புரிந்துகொண்டால், அவர் சொல்வது உண்மைதான் என்பது நமக்குப் புரியும்.

அந்தப் பாடல்…

பையூரிலேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ…

உடலையே இறைவன் வாழும் கோயி லாகக் கருதி, யோக நியமங்களைத் தவறா மல் செய்தீர்களானால், நம் உடலே ஆகாய வெளியாக இறைவன் வாழும் திருக்கோயி லாக மாறாதா என்று கேட்கிறார்.

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!
இந்த உண்மையை அறிந்து உடம்பை இறைவன் வாழும் கோயிலாக்கிவிட்டால், இந்தப் பிறவி கசக்குமா என்ன?

பிணிக்கு மருந்து

சித்தர்கள் ஆன்மிக உண்மைகளை நமக்கு உணர்த்தியிருப்பதுடன், எண்ணற்ற மருத்துவக் குறிப்புகளையும் பாடல்கள் மூலம் நமக்குக் கொடுத்திருக்கின்றனர். அவற்றில், தன்வந்திரி சித்தரின் பாடல்களும் அடங்கும்.

பல நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகளை அருளியிருக்கும் தன்வந்திரி சித்தர், குறிப்பாக நீரிழிவு நோய் எனும் சர்க்கரை நோயும், நீர்க்கட்டு பாதிப்பும் நீங்கிட, மிக அருமையான வைத்திய முறையை கீழ்க் காணும் பாடலில் கொடுத்திருக்கிறார்.

போற்றினேன் தன்வந்த்ரி பகவான்தானும்
புகலுகிறேன் மானிடர்க்கு மருந்தொன்று
சாற்றுகிறேன் நீரிழிவு கண்டபேர்க்கு
தப்பாது வெடியுப்பு பழங்கலுப்பு
ஆற்றுகிறேன் யெள்ளெண்ணெய் இந்த மூன்றும்
அன்பாகவே காய்த்துக் கொடுத்தாயானால்
தூற்றுகின்ற நீரிழிவு நீர்க்கட்டும் போம்
துலையாத சதையடைப்பும் நீக்குந்தானே

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!
முதலில் வேண்டத் தகுந்தது முக்திதான்!

மனிதராகப் பிறந்தவர்கள் அடையவேண்டிய இலக்கு முக்திப்பேறு. அதை அருளவல்ல மூர்த்தியைத் தினமும் தொழுது வழிபட்டு, முக்திப்பேறுக்கு வழி செய்துகொள்ளவேண்டும். அப்போதுதான் சித்திகளும், பக்தியும், உண்மை ஞானமும், நிறைவாக முக்தியும் நம்மைச் சேரும்.

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!

முக்திக்கு வழி செய்துகொள்ளாத நிலையில், நமக்கு சித்தி, பக்தி, உண்மை, ஞானம் எதுவுமே கிடைக்காது.

இதைத்தான் சித்தர் இடைக்காடர் பின்வரும் பாடல் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

முத்திக்கு வித்தான
மூர்த்தியைத் தொழுது
முத்திக் குறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியுஞ் சத்தியு
முத்தியுஞ் சேரா வாகுமே கோனாரே

எங்கும் நிறைந்தவன் இறைவன்!

அங்கிங்கெனாதபதி எங்கும் நிறைந்திருக்கும் இறைவன், நம் உடலிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவரை நம் உடலினுள்ளேயே நாம் தரிசிக்கலாம் என்று எளியதொரு வழியை நமக்குக் காட்டுகிறார் குதம்பைச் சித்தர்.

எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி.
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி…

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!
இந்தப் பாடலின் மூலம் நமக்குள்ளேயே இறை வனைத் தரிசிக்க முடியும் என்று கூறும் குதம்பைச் சித்தர், மறைமுகமாக மற்ற ஜீவன்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறார் என்ற பேருண்மையை நமக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மோட்சம் அருளும் வழி!

வெறுமனே சாஸ்திரங்கள் படிப்பதாலோ, பூஜை களைச் செய்வதாலோ நமக்கு மோட்சம் கிடைத்து விடாது என்பது அகத்திய சித்தரின் அருள்வாக்கு. பின்னர் எப்படி மோட்சம் வாய்க்குமாம்?

கீழ்க்காணும் பாடலைப் படியுங்கள்…

மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன்
மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே;
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு
காசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே…

பிறரை மோசம் செய்யாமலும், பொய், திருட்டு, கொலை செய்யாமலும், கோபத்தை விலக்கி வைத்தும், உலகத்தில் புண்ணியத்தைத் தேடிக்கொண்டால் மட்டுமே மோட்சம் கிடைக்குமாம்.

அவரது வழிகாட்டுதலை நாமும் கடைப்பிடித்து மோட்சப்பேறு வேண்டிப் பெறுவோம்.

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!
பக்தியும் சித்தியும்…

உலகத்தில் உயர்ந்தது பக்தி ஒன்று மட்டும்தான். பக்தி நெறியில் இருப்பவர்களுக்குத்தான் அட்டமா சித்திகளுடன் முக்தியும் வாய்க்குமாம். சரி, அப்படியான பக்தியுணர்வு நமக்கு வாய்ப்பதற்கான வழி என்ன?

பாரி லுயர்ந்தது பத்தி – அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி…

என்று பாடியருளியிருக்கிறார் கடுவெளிச் சித்தர்.

அதாவது, நாம் பக்தியின் வசப்படுவதும்கூட இறை வனின் அருளால்தான் நடக்கும் என்பது அவரது திருவாக்கு. இதையே மாணிக்கவாசகப் பெருமான், ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்று பாடியிருக்கிறார். நாமும், இமைப்பொழுதும் இறை வனை மறவாமல் திருவடிதொழுது பணிந்துகிடக்கும் பெரும் வரத்தை வேண்டிப் பெறுவோம்.