Thiruvasakam-Piditha Pathu

திருவாசகம்/பிடித்த பத்து

பிடித்த பத்து

உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே! செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே! எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே! முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து, கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே! இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே! பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு, செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே! இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே! பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே! தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே! இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே! மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே! செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே! எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே? உரை அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி, பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே! திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே! இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

பாச வேர் அறுக்கும் பழம் பொருள்! தன்னைப் பற்றும் ஆறு, அடியனேற்கு அருளி, பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே! தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே! ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச் சித்தனே! பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே! பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும் எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே! யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

புன் புலால் யாக்கை புரை புரை கனிய பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என் என்பு எலாம் உருக்கி, எளியை ஆய், ஆண்ட ஈசனே! மாசு இலா மணியே! துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதீ! இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?