கேதார கௌரி விரதம்
விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதம் கேதார கெளரி விரதம். திருக்கைலாய மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளை, விநாயகனும் முருகனும்கூட இருந்தனர்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் கூடியிருந்தனர்.
நாரதர் இசை மீட்டினார். நந்தி மத்தளம் கொட்ட, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோரின் நடனம் அமர்க்களமாக நடந்தேறியது.
அப்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் விகடக்கூத்து ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்தார். பிறகு உமாதேவியை விட்டுவிட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர்.
கோபமுற்ற உமாதேவி தன்னை பிருங்கி முனிவரின் உடலிலிருந்த சக்தியை எடுத்துக் கொண்டார். அதனால் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார் அம்முனிவர்.
சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடியொன்றைக் கொடுத்து அதனை ஊன்றுகோலாகக் கொண்டு நடக்க வழி செய்தார். மீண்டும் உமாதேவிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே சிவபெருமானிடம் கோபித்துக்கொண்டு பூவுலகுக்கு வந்து, ஒரு வில்வ மரத்தடியில் வீற்றிருந்தார்.
தேவியின் வருகையால் அந்த வனமே புதுப்பொலிவு பெற்றது. அங்கு வசித்த கௌதம முனிவர் இத்திடீர் மாற்றம் ஏன் அறிய முனைந்தார். உமாதேவியைக் கண்டவுடன் விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.
புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றி விளக்கினார்.
உமை அம்மையும் விரதம் மேற்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் வடிவமானார். ஆண்-பெண் சமத்துவம் அறியப்படாத காலத்தில் உமாதேவி பெண்ணுக்கு சம உரிமை கேட்டு வாதாடி அவ்வுரிமையை பெற்றுத்தந்திருக்கிறார்.
மாங்கல்ய பாக்யமும், மகிழ்ச்சியும் தரும் கேதார கெளரி விரதம் ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசியீறாக (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும்.
கேதார கௌரி விரதம் அம்மை கௌரியே அனுஷ்டித்த விரதம். அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்த்தநாரீசுவராக ஆனது இந்த விரத மகிமையினால்.
கேதார கௌரி விரதம் அனுசரிக்கும் முறை:
ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்லபட்ச தசமியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தோரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்று முதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட பிம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும்.
தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து, பூக்கள், வில்வம் முதலியவற்றால் அர்ச்சனை செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தோரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயசம், சர்க்கரை அன்னம், புளி அன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும்.
இருபத்தோரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தோரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமாவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.
இவ்விரத்தை அனுசரிக்கத் தகுதியானவர்கள்:
ஐந்து மாதங்களிற்கு மேல் கர்ப்பிணியாக இல்லாத பெண்களும், மாதவிலக்கு நீக்கப்பெற்ற பெண்களும் 21 நாட்கள் விரதமிருக்கலாம்.
ஏனையோர் அவரவர்கள் சௌகரியப்படி மாதவிலக்கு அம்முறை வந்தபின் அமாவாசைத் திதிக்கு முன்னுள்ள 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது அன்றைய தினமோ இவ்விரத்த்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்ட கயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம். ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடவேண்டும் ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்டிக்கலாம். முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் “பாரணம்’ பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.
தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.
பூஜைக்காக முதலில் மஞ்சள் பிள்ளையாரை செய்வித்து சந்தனம், குங்குமம், புஷ்பம், அருகு சார்த்தி விநாயகரை பதினாறு நாமம் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் தூப தீபம் காட்டி தாம்பூலம் நைவேத்தியம் செய்து தீபாரதணையான பிறகு, ஸ்ரீ கேதாரீஸ்வரரை ஆவாகனஞ் செய்ய வேண்டும். அதாவது அம்மியையுங் குழவியையும் அலங்கரித்து, அம்மியின் மேல் குழவியை நிறுத்தி, குங்குமம், சந்தனம் முதலிய பரிமள திரவியங்கள் அணிவித்து பருத்திமாலையிட்டு, புஷ்பஞ்சார்த்தி அதனெதிரில் கலசம் நிறுத்தி, அதற்கும் பருத்திமாலை புஷ்பஞ்சார்த்தி பூஜை செய்பவர். கேதாரீஸ்வரரை மனதில் தியானம் செய்து, காசி, கங்கா தீர்த்தமாட்டியது போலும், பட்டுப் பீதாம்பரம் ஆபரணங்களினால் அலங்கரித்தது போலும் மனதில் சங்கல்பம் செய்து கொண்டு, வில்வம், தும்பை, கொன்றை மலர்களினால் கேதாரீஸ்வரரை அர்ச்சனை செய்து, முனை முறியாத விரலி மஞ்சள், வெற்றிலை, கொட்டைப்பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, வாழைப்பழம், அதிரசம், வகைக்கு நாளைக்கு ஒன்றாக 21 சமர்ப்பணம் செய்து , எலுமிச்சம் பழம் இரண்டு, நோன்புக்கயிறு ( 21 இழை, 21 முடிச்சுடன்) சார்த்தி, தேங்காய் இரண்டு (ஒன்று குல தெய்வத்திற்கு), கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து, பிரசாதமாக 21 அதிரசம், சர்க்கரைப் பொங்கல், பாயசம், புளியோதரை முதலியன நைவேத்தியமாக சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து புஷ்ப அக்ஷதை கையில் கொண்டு மூன்று முறை ஸ்ரீ கேதாரீஸ்வரரை வலம் வந்து வணங்கி புஷ்ப அக்ஷதையை சுவாமியின் பாதங்களில் சமர்ப்பித்து, தூப தீபம் காட்டி, நைவேத்தியம், தாம்பூலம் சமர்ப்பித்து, கற்பூர தீபாரதனை காண்பித்து நோன்புக்கயிறை கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.
கேதார விரத பூஜை
தேவி துணை
ஓம் சக்தி ஓம்
காப்பு
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.
வேண்டுதற் கூறு
காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே
காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே
காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்
எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்
பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்
உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக
என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்
காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்
காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்
சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே
அரியை உடையவளே அம்மா காளிதாயே
கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே
அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே
சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்
பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்
அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்
சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்
ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்
விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்
அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே
வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்
நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய்
காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு
நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு
வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு
காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே
காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே
நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா
வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா
நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா
அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா
பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா
பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே
நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா
கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா
செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா
வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா
பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!
ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லபையே
காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா
பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்
நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா
காளமகா தேவியரே காசினிக்கு வித்தவளே
வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே
எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே
காசினியில் வேற்றுமையை கணபொழுதே மாற்றிவிட்டால்
ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியளே
காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்
ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்
தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்
இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்
நம்பி அணிவோர்க்கு ந்ல்லதெல்லாம் பெருகிவரும்
நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்
சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே
குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கௌரியம்மா
காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று
ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்
நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்
பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்
காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்
ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்
காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்
ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்
தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே
காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி
சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை
இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு
பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு
சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்
முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு
எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்
சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே
அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்
கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்
முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர
ஞானம் ஓங்கிவர ந்ல்லறிவு துலங்கிவர
தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே
காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பறுளும்
ஓம் சக்தி ஓம்
பூலோகத்தில் இவ்விரதம் பரவிய முறை:
சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்தர்வராஜனுக்கு கூறியருளினார். விரத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து வைசிய குலத்துப் பெண்களான புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுசரிக்க சிவபெருமான் தோன்றி இவர்களுக்கு வேண்டிய செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் கொடுத்தருளினார்.
விரத பலன்:
கல்வியறிவு, பதவி பட்டம், பரிசு, பதக்கம் என பல வளமும் சேரும். வெற்றிகள் தொடரும். குழந்தை பாக்யம் உண்டாகும். மனை, வீடு, வாகனம் வந்து சேரும். கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழ்வர்.
கேதார கௌரி விரதம் முழுக்க முழுக்க மாங்கல்ய பலத்தை அளிக்கக்கூடியது. ஐப்பசி அமாவாசையன்று வரக்கூடிய கேதார கௌரி விரதம் மிக முக்கியமானது. சிவனை நினைத்து வழிபட்டு எல்லா பலத்தையும் பெற்று சக்தி வெற்றி பெற்ற நாள் அது.
இதனை சுமங்கலிகள் கடைபிடிக்கும்போது அவர்களுடைய மாங்கல்ய பாக்கியம் வலுப்பெற்று தீர்க்க சுமங்கலியாக்கும். கன்னிப் பெண்கள் கடைபிடிக்கும்போது அவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். எனவே கேதார கௌரி விரதம் என்பது விரதங்கள் அனைத்திலும் மிக விசேஷமானது.
கௌரி என்றால் அம்பாள். சிவனை நினைத்து விரதம் இருந்து, தியானித்து எல்லா பலத்தையும் பெற்ற நாள். தான் பெற்றதைப் போல் பெண்கள் அனைவரும் பெற வேண்டும் என்று அம்பாள் அருளும் நாள் அது.
தம்பதிகள் ஷேமமாக இருத்தலும், பிணிநீங்கலும், செல்வம் பெறுவதற்கும், கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது.
கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.
இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ சக்தி அருளால் சகல செளபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன.
கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை.
சக்தியெனும் உமையாள் நமக்குக் காட்டிய வழியில் கேதார கெளரி விரதம் இருந்து வளமான வாழ்வு பெறுவோமாக!