Vaithyanathar Pathikam

அருட்பிரகாச வள்ளலார் அருளிய வயித்தியநாதர் பதிகம்
(பதினான்குசீர்க் கழிநெடிலாசிரியவிருத்தம்)

திருச்சிற்றம்பலம்

பாடல் 01 (ஓகைமடவார்) தொகு
ஓகை மடவா ரல்குலே பிரமபத மவர்கள் உந்தியே வைகுந்தமேல்
ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயினிதழ் ஊறலே யமுத மவர்தம்
பாகனைய மொழியேநல் வேதவாக் கியமவர்கள் பார்வையே கருணை நோக்கம்
பாங்கினவ ரோடுவிளை யாடவரு சுகமதே பரமசுக மாகு மிந்த
யூகமறி யாமலே தேகமிக வாடினீர் உறுசுவைப் பழமெ றிந்தே
உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீ ரென்றுநல் லோரை நிந்திப்ப ரவர்தம்
வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா மணியுலக நாத வள்ளல்
மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற வளர் வயித்திய நாதனே. (01)

பதப்பிரிப்பு:

ஓகை மடவார் அல்குலே பிரமபதம், அவர்கள் உந்தியே வைகுந்தம், மேல்ஓங்கு முலையே கைலை, அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம், அவர்தம்/ பாகு அனைய மொழியே நல் வேதவாக்கியம், அவர்கள் பார்வையே கருணை நோக்கம், பாங்கின் அவரோடு விளையாட வரும் சுகமதே பரமசுகம் ஆகும், இந்த/ யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறுசுவைப் பழம் எறிந்தே, உற்ற வெறும் வாய் மெல்லும் வீணர்நீர் என்று நல்லோரை நிந்திப்பவர் தம் /வாகை வாய்மதம் அற மருந்து அருள்க தவசிகாமணி உலகநாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவரோகம் அற வளர் வயித்திய நாதனே.
பாடல் 02 (உண்டதே) தொகு
உண்டதே யுணவுதான் கண்டதே காட்சியிதை உற்றறிய மாட்டார்களா
உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண் டுறுபிறவி யுண்டு துன்பத்
தொண்டதே செயுநரக வாதையுண் டின்பமுறு சொர்க்கமுண் டிவையு மன்றித்
தொழுகடவு ளுண்டுகதி யுண்டென்று சிலர்சொலுந் துர்ப்புத்தி யாலுலகிலே
கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தங் கொங்கையும் வெறுத்துக் கையில்
கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழங் கொள்ளுவீ ரென்பரந்த
வண்டர்வா யறவொரு மருந்தருள்க தவசிகா மணியுலக நாத வள்ளல்
மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற வளர் வயித்திய நாதனே. (02)

பதப்பிரிப்பு:

“உண்டதே உணவு, தான் கண்டதே காட்சி, இதை உற்றறிய மாட்டார்களா(ய்) உயிருண்டு, பாவம்புண்ணியம் உண்டு, வினைகள் உண்டு, உறு பிறவி உண்டு, துன்பத் தொண்டதே செயு நரகவாதை உண்டு, இன்பம்உறு சொர்க்கம் உண்டு, இவையும் அன்றித் தொழுகடவுள் உண்டு, கதிஉண்டு, என்று சிலர்சொலும் துர்ப்புத்தியால் உலகிலே கொண்டதே சாதகம்வெறுத்து மடமாதர்தம் கொங்கையும்வெறுத்துக் கையில் கொண்ட தீங்கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர்” என்பர் அந்த வண்டர் வாய்அற ஒரு மருந்து அருள்க தவசிகாமணி உலக நாத வள்ளல் மகிழவரு வேளூரில் அன்பர் பவரோகம் அற வளர் வயித்திய நாதனே.

பாடல் 03 (உம்பர்வானமுத) தொகு
உம்பர்வா னமுதனைய சொற்களாற் பெரியோர் உரைத்தவாய் மைகளை நாடி
ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில் ஒதிபோல நிற்பது மலால்
கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங் காக்கைவாய்க் கத்த லிவர்வாய்க்
கத்தலிற் சிறிதென்பர் சூடேறு நெய்யொரு கலங்கொள்ள வேண்டு மென்பர்
இம்பர்நாங் கேட்டகதை யிதுவென்ப ரன்றியும் இவர்க்கேது தெரியு மென்பர்
இவையெலா மெவனோவொர் வம்பனாம் வீணன்முன் இட்டகட் டென்பர் மெத்த
வம்பர்வா யறவொரு மருந்தருள்க தவசிகா மணியுலக நாத வள்ளல்
மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற வளர் வயித்திய நாதனே. (03)

பதப்பிரிப்பு

(உம்பர் வான் அமுது அனைய சொற்களால், பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி ஓதுகின்றார் த(ம்)மைக் கண்டு, அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும்அலால், கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர், சிறு கரும் காக்கைவாய்க் காத்தல் இவர்வாய்க் கத்தலிற் சிறிது என்பர், சூடேறு நெய் ஒருகலம் கொள்ளவேண்டும் என்பர், இம்பர் நாம் கேட்டகதை இதுவென்பர், அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர், இவை எலாம் எவனோ ஒர் வம்பனாம் வாணன் முன் இட்ட கட்டு என்பர், மெத்த வம்பர்வாய் அற, ஒரு மருந்து அருள்க, தவசிகாமணி, உலகநாத வள்ளல், மகிழ வரு வேளூரில், அன்பர் பவரோகம் அற, வளர் வயித்தியநாதனே.)

பாடல் 04 (கல்லையு) தொகு
கல்லையு முருக்கலாம் நாருரித் திடலாம் கனிந்த கனியாச் செய்யலாம்
கடுவிடமு முண்ணலா மமுதமாக்க லாங்கொடுங் கரடிபுலி சிங்க முதலா
வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாமன்றி வித்தையுங் கற்பிக்கலாம்
மிக்க வாழைத் தண்டை விறகாக்க லாமணலை மேவுதேர் வடமாக்கலாம்
இல்லையொரு தெய்வம்வே றில்லையெம் பாலின்பம் ஈகின்ற பெண்கள் குறியே
யெங்கள்குல தெய்வமெனு மூடரைத் தேற்றவெனில் எத்துணையு மரிதரிது காண்
வல்லையவ ருணர்வற மருந்தருள்க தவசிகா மணியுலக நாத வள்ளல்
மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற வளர் வயித்திய நாதனே. (04)

பதப்பிரிப்பு:

(கல்லையும் உருக்கலாம், நார் உரித்திடலாம், கனிந்த கனியாச் செயயலாம், கடுவிடமும் உண்ணலாம், அமுதம் ஆக்கலாம், கொடும் கரடி புலி சிங்கம் முதலா வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம், அன்றி வித்தையும் கற்பிக்கலாம், மிக்க வாழைத்தண்டை விறகாக்கலாம், மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம், இல்லை, ஒருதெய்வம் வேறு இல்லை, எம்பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குலதெய்வம், எனும் மூடரைத் தேற்றவெனில், எத்துணையும் அரிது அரிது காண். வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க, தவசிகாமணி, உலகநாத வள்ளல், மகிழ வரு வேளூரில் அன்பர் பவரோகம் அற வளர் வயித்தியநாதனே.)

பாடல் 05 (படியளவு) தொகு
படியளவு சாம்பலைப் பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணைப்
பழமோ வெனக்கருங் கல்போலு மசையாது பாழா குகின்றார் களோர்
பிடியளவு சாதமுங் கொள்ளார்கள் அல்லதொரு பெண்ணை யெனினுங் கொள்கிலார்
பேய்கொண்ட தோவன்றி நோய்கொண்ட தோபெரும் பித்தேற் றதோவறி கிலேன்
செடியளவு வூத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாந் தெரிந்திடக் காட்டி நகைதான்
செய்துவளை யாப்பெருஞ் செம்மரத் துண்டுபோற் செம்மாப்ப ரவர்வாய் மதம்
மடியளவ தாவொரு மருந்தருள்க தவசிகா மணியுலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற வளர் வயித்திய நாதனே. (05)

பாடல் (06) (பெண்கொண்ட) தொகு
பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலனிது பிடிக்கவறி யாது சிலர்தாம்
பேரூரி லாதவொரு வெறுவெளி யிலேசுகம் பெறவே விரும்பி வீணிற்
பண்கொண்ட வுடல்வெளுத் துள்ளே நரம்பெலாம் பசையற்று மேலெ ழும்பப்
பட்டினி கிடந்து சாகின்றார்க ளீதென்ன பாவமிவ ருண்மை யறியார்
கண்கொண்ட குருடரே யென்றுவாய்ப் பல்லெலாங் காட்டிச் சிரித்து நீண்ட
கழுமரக் கட்டைபோல் நிற்பார்க ளையவிக் கயவர்வாய் மதமுழுதுமே
மண்கொண்டு போகவொர் மருந்தருள்க தவசிகா மணியுலக நாத வள்ளல்
மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற வளர் வயித்திய நாதனே. (06)

பாடல் 07 (திருத்தமுடைய) தொகு
திருத்தமுடைய யோர்கருணை யாலிந்த வுலகில் தியங்குவீ ரழியாச்சுகம்
சேருலக மாம்பரம பதமதனை யடையுநெறி சேரவா ருங்க ளென்றால்
இருத்தினிய சுவையுணவு வேண்டுமணி யாடைதரும் இடம்வேண்டு மிவைக ளெல்லாம்
இல்லை யாயினு மிரவுபக லென்ப தறியாமல் இறுகப்பிடித் தணைக்கப்
பெருத்த முலையோ டிளம்பருவ முடனழ குடையபெண் ணகப்படு மாகிலோ
பேசிடீ ரப்பரம பதநாட்டி னுக்குநும் பிறகிதோ வருவ மென்பார்
வருத்துமவ ருறவற மருந்தருள்க தவசிகா மணியுலக நாத வள்ளல்
மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற வளர் வயித்திய நாதனே. (07)
பாடல் 08 (பேதையுலகீர்) தொகு
பேதையுல கீர்விரத மேதுதவ மேதுவீண் பேச்சிவை யெலாம் வேதனாம்
பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய பெரும்புரட் டாகு மல்லால்
ஓதையுறும் உலகாயதத்தினுள வுண்மைபோல் ஒருசிறிது மில்லை யில்லை
உள்ளதறி யாதிலவு காத்தகிளி போலுடல் உலர்ந்தீர்க ளினியா கினும்
மேதையுண வாதிவேண் டுவவெலா முண்டுநீர் விரைமலர்த் தொடை யாதியா
வேண்டுவ வெலாங்கொண்டு மேடைமேற் பெண்களொடு விளையாடு வீர்களென்பார்நா
வாதையவர் சார்பற மருந்தருள்க தவசிகா மணியுலக நாத வள்ளல்
மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற வளர் வயித்திய நாதனே. (08)

பாடல் 09 (ஈனம்பழுத்த) தொகு
ஈனம் பழுத்தமன வாதையற நின்னருளை எண்ணிநல் லோர்க ளொருபால்
இறைவநின் தோத்திர மியம்பியிரு கண்ணீர் இறைப்ப வதுகண்டு நின்று
ஞானம் பழுத்துவிழி யாலொழுகு கின்றநீர் நம்முலகி லொருவ ரலவே
ஞானியிவர் யோனிவழி தோன்றியவ ரோவென நகைப்பர் சும்மா வழுகிலோ
ஊனங் குழுத்தகண் ணாமென்ப ருலகத்தில் உயர்பெண்டு சாக்கொ டுத்த
ஒருவன் முகமென்ன விவர்முகம் வாடு கின்றதென உளறுவார் வாயடங்க
மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகாமணி யுலக நாத வள்ளல்
மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற வளர் வயித்திய நாதனே. (09)
பாடல் 10 (கற்பவையெலாங்) தொகு
கற்பவை யெலாங்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக் காண்பதே யருமை யருமை
கற்பதரு மிடியனிவ னிடையடைந் தாலெனக் கருணையா லவர் வலியவந்
திற்புற னிருப்பவது கண்டுமந் தோகடி தெழுந்துபோய்த் தொழுது தங்கட்
கியலுறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல் ஏமாந் திருப்ப ரிவர்தாம்
பொற்பி னறுசுவை யறியு மறிவுடைய ரன்றுமேற் புல்லாதி யுணுமுயிர்களும்
போன்றிடா ரிவர்களைக் கூரைபோய்ப் பாழாம் புறச்சுவ ரெனப்புகலலாம்
வற்புறும் படிதரும வழியோங்கு தவசிகாமணி யுலக நாத வள்ளல்
மகிழவரு வேளூரில் லன்பர்பவ ரோகமற வளர் வயி்த்திய நாதனே. (10)

பாடல் 11 (மெய்யோர்) தொகு
மெய்யோர் தினைத்தனையு மறிகிலார் பொய்க்கதை விளம்ப வெனிலிவ் வுலகிலோ
மேலுலகி லேறுகினு மஞ்சாது மொழிவர்தெரு மேவுமண் ணெனினு முதவக்
கையோ மனத்தையும் விடுக்கவிசை யார்கள்கொலை களவுகட் காம முதலாக்
கண்ட தீமைக ளன்றி நன்மையென் பதனையொரு கனவிலுங் கண்டறிகிலார்
ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி யங்கைதாங் கங்கை யென்னும்
ஆற்றிற் குளிக்கினுந் தீமூழ்கி யெழினுமவ் வசுத்த நீங்காது கண்டாய்
மையோ ரணுத்துணையு மேவுறாத் தவசிகா மணியுலக நாத வள்ளல்
மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற வளர் வயித்திய நாதனே. (11)

பாடல் 12 (இளவேனின்) தொகு
இளவேனின் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர் இலஞ்சிபூம் பொய்கை யருகாய்
ஏற்றசந் திரகாந்த மேடையா யதன்மேல் இலங்கு மரமிய வணையுமாய்
தளவேயு மல்லிகைப் பந்தராய்ப் பால்போற் றழைத்திடு நிலாக் காலமாய்த்
தனியிளந் தென்றலாய் நிறைநரம் புளவீணை தன்னிசைப் பாட லிடமாய்க்
களவே கலந்தகற் புடையமட வரல்புடை கலந்தநய வார்த்தை யுடனாய்க்
களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடிக் கழனிழற் சுக நிகருமே
வளவேலை சூழுலுலகு புகழ்கின்ற தவசிகா மணியுலக நாத வள்ளல்
மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற வளர் வயித்திய நாதனே. (12)

அருட்பிரகாச வள்ளற்பெருமான் பாடிய வயித்திய நாதர் பதிகம் முற்றும்.