Aludiya Adigal

ஆளுடைய அடிகள் அருள்மாலை
(திருவருட்பா – நான்காந் திருமுறை)

வள்ளற்பெருமான் அருளிய ஆளுடைய அடிகள் அருண்மாலை

(குறிப்பு: ஆளுடையவடிகள் என்று இங்குக் குறிக்கப்படுவோர் மாணி்க்கவாசக அடிகள் ஆவார்; திருவாசகம் அருளிய பெருந்தகை!)

திருச்சிற்றம்பலம்

(தரவுக் கொச்சகக் கலிப்பா)

பாடல் 01 (தேசகத்தில்) தொகு
தேசகத்தி லினிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
வாசகனே யானந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
ஆசகன்ற வநுபவநா னநுபவிக்க வருளுதியே.

பாடல் 02 (கருவெளிக்குட்) தொகு
கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்ததனி
உருவெளிக்கே மறைபுகழு முயர்வாத வூர்மணியே.

பாடல் 03 (மன்புருவ) தொகு
மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
என்புருவாய்த் தவஞ்செய்வா ரெல்லாரு மேமாக்க
அன்புருவம் பெற்றதன்பின் னருளுருவ மடைந்துபின்னர்
இன்புருவ மாயினைநீ யெழில்வாத வூரிறையே.

பாடல் 04 (உருவண்டப்) தொகு
உருவண்டப் பெருமறையென் றுலகமெலாம் புகழ்கின்ற
திருவண்டப் பகுதியெனுந் திருவகவல் வாய்மலர்ந்த
குருவென்றெப் பெருந்தவருங் கூறுகின்ற கோவேநீ
இருவென்ற தனியகவ லெண்ணமெனக் கியம்புதியே.

பாடல் 05 (தேடுகின்ற) தொகு
தேடுகின்ற வானந்தச் சிற்சபையிற் சின்மயமாய்
ஆடுகின்ற சேவடிக்கீ ழாடுகின்ற வாரமுதே
நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கான் மாற்றுதியே.

பாடல் 06 (சேமமிகு) தொகு
சேமமிகுந் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
மாமணியே நீயுரைத்த வாசகத்தை யெண்ணுதொறுங்
காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
ஏமமுறு கற்புடையா ளின்பினுமின் பெய்துவதே.
பாடல் 07 (வான்கலந்த) தொகு
வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாம லினிப்பதுவே.

பாடல் 08 (வருமொழிசெய்) தொகு
வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
ஒருமொழியே யென்னையுமென் னுடையனையு மொன்றுவித்துத்
தருமொழியா மென்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன்
குருமொழியை விரும்பியயல் கூடுவதேன் கூறுதியே.

பாடல் 09 (பெண்சுமந்த) தொகு
பெண்சுமந்த பாகப் பெருமா னொருமாமேல்
எண்சுமந்த சேவகன்போ லெய்தியதும் வைகைநதி
மண்சுமந்து நின்றதுமோர் மாறன் பிரம்படியாற்
புண்சுமந்து கொண்டதுநின் பொருட்டன்றோ புண்ணியனே.

பாடல் 10 (வாட்டமிலா) தொகு
வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளு மெய்ஞ்ஞான
நாட்டுமுறு மென்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே.

திருச்சிற்றம்பலம்

வள்ளற்பெருமான் அருளிய ஆளுடைய அடிகள் அருண்மாலை முற்றியது. தொகு