Arul Vilakka Malai Part 3

அருள்விளக்க மாலை (41-60)

திருவருட்பிரகாச வள்ளலார்
திருவாய் மலர்ந்தருளிய
அருள்விளக்க மாலை (41-60)
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)

பாடல்: 41 (திரையிலதாய்)
திரையிலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும் சினைப்பிலதாய் பனிப்பிலதாய் செறிந்திடுகோ திலதாய்
விரையிலதாய்ப் புரையிலதாய் நாரிலதாய் மெய்யே மெய்யாகி அருள்வண்ணம் விளங்கியின்ப மயமாய்ப்
பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில் ஓங்கும்நடத் தரசேஎன் உரையுமணிந் தருளே!


பாடல்: 42 (கார்ப்பிலதாய்) தொகு
கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும் கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய்தருமத் தீமையொன்றும் இலதாய்ப்
பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கியறி வின்பம் படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கியபே ரரசேஎன் உரையுமணிந் தருளே!

பாடல்: 43 (தெற்றியிலே)
தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம் திருவமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி உவந்துகொடுத் தருளியவென் உயிர்க்கினிதாந் தாயே
பற்றியவென் பற்றனைத்தும் தன்னடிப்பற் றாகப் பரிந்தருளி எனையீன்ற பண்புடையெந் தாயே
பெற்றியுளார் சுற்றிநின்று போற்றுமணிப் பொதுவில் பெருநடஞ்செய் அரசேயென் பிதற்றுமுவந் தருளே!


பாடல்: 44 (தாய்முதலோ) தொகு
தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத் தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாகக் காட்டியஎன் மெய்யுறவாம் பொருளே
காய்வகையில் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும் சோதிநடத் தரசேஎன் சொல்லுமணிந் தருளே!

பாடல்: 45 (ஓங்கியவோர்)
ஓங்கியவோர் துணையின்றிப் பாதியிர வதிலே உயர்ந்தவொட் டுத்திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே தூக்கியெடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே
தாங்கியவென் னுயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே
ஏங்கியவென் னேக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில் இலங்குநடத் தரசேயென் னிசையுமணிந் தருளே!

பாடல்: 46 (தனிச்சிறியேன்)
தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத் தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
பனிப்புறுமவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே பயமுனக்கென் என்றென்னைப் பரிந்தணைந்த குருவே
இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால் இணையமர்த்தி யெனையாண்ட என்னுயிர்நற் றுணையே
கனித்தநறுங் கனியேயென் கண்ணேசிற் சபையில் கலந்தநடத் தரசேயென் கருத்துமணிந் தருளே!

பாடல்: 47 (ஒருமடந்தை)
ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர் உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
பெருமடஞ்சேர் பிள்ளாயென் கெட்டதொன்றும் இலைநம் பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
திருமடந்தை மாரிருவர் என்னெதிரே நடிக்கச் செய்தருளிச் சிறுமையெலாம் தீர்த்ததனிச் சிவமே
கருமடந் தீர்ந்தவரெல்லாம் போற்றமணி மன்றில் காட்டும்நடத் தரசேயென் பாட்டுமணிந் தருளே!

பாடல்: 48 (இருளிரவில்)
இருளிரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
பொருளுணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப் போக்கியருள் புரிந்தவென் புண்ணியநற் றுணையே
மருளிரவு நீக்கியெல்லா வாழ்வுமெனக் கருளி மணிமேடை நடுவிருக்க வைத்தவொரு மணியே
அருளுணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே அம்பலத்தென் அரசேயென் அலங்கலணிந் தருளே!

பாடல்: 49 (நான்பசித்த)
நான்பசித்த போதெல்லாந் தான்பசித்த தாகி நல்லுணவு கொடுத்தென்னைச் செல்வமுற வளர்த்தே
ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வெனக்கே ஆகியுற வரமளித்த பதியே
தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத் திருநடம்செய் யரசேயென் சிறுமொழியேற் றருளே

பாடல்: 50 (நடைக்குரிய)
நடைக்குரிய உலகிடையோர் நல்லநண்பன் ஆகி நான்குறி்த்த பொருள்களெலாம் நாழிகையொன் றதிலே
கிடைக்கவெனக் களி்த்தகத்தும் புறத்துமகப் புறத்தும் கிளர்ந்தொளிகொண் டோங்கியமெய்க் கிளையெனும்பே ரொளியே
படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கவெனக் குறித்தே பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
கடைப்படுமென் கரத்திலொரு கங்கணமும் தரித்த ககனநடத் தரசேயென் கருத்துமணிந் தருளே!

பாடல்: 51 (நீநினைத்த)
நீநினைத்த நன்மையெலாம் யாமறிந்தோம் நினையேநேர்காண வந்தனமென் றென்முடிமேல் மலர்க்கால்
தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித் தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத் தான்நகைத்தே
ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரமென் மகனே எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே தெய்வநடத் தரசேஎன் சிறுமொழியேற் றருளே!

பாடல்: 52 (மூர்த்திகளும்)
மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவெல்லாம் முன்னியவோர் தினத்தே
ஆர்த்தியுடன் அறியவெனக் களித்தருளி அடியேன் அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தவருட் குருவே
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப் பரநாத நாட்டரசு பாலித்த பதியே
ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத்தரசே என்னுடைய சொன்மாலை இலங்கவணிந் தருளே!

பாடல்: 53 (இச்சையொன்றும்)
இச்சையொன்று மில்லாதே யிருந்தஎனக் கிங்கே இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையை உண்டாக்கி
தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறு மவற்றைத் தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே இருந்தவெனக்கருளி இசைவித்த இறையே
முச்சகமும் புகழ்மணி மன்றிடத்தே நடிக்கும் முதலரசே என்னுடைய மொழியுமணிந் தருளே!

பாடல்: 54 (கையாத)
கையாத தீங்கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே போகாத புனலேஉள் வேகாத காலே
கொய்யாத நறுமலரே கோவாத மணியே குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே தெய்வநடத் தரசேஎன் சிறுமொழியேற் றருளே!

பாடல்: 55 (எண்ணாத)
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
அண்ணாஎன் அப்பாவென் ஐயாவென் அரசே அடியிணைக்கென் சொன்மாலை யணிந்துமகிழ்ந் தருளே!

பாடல்: 56 (சாகாத)
சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில் மாநடஞ்செய் அரசேஎன் மாலையுமேற் றருளே!

பாடல்: 57 (சுத்தநிலை)
சுத்தநிலை அனுபவங்கள் தோன்றிவெளி யாகித் தோற்றும்வெளி யாகியவை தோற்றுவிக்கும் வெளியாய்
நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி நீயாகி நானாகி நின்றதனிப் பொருளே
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
புத்தமுதே சித்தியெலாம் வல்லதிருப் பொதுவில் புனிதநடத் தரசேயென் புகலுமணிந் தருளே!

பாடல்: 58 (நானளக்குந்)
நானளக்குந் தோறுமதற் குற்றதுபோல் காட்டி, நாட்டியபின் ஒருசிறிதும் அளவிலுறா தாகித்
தானளக்கும் அளவதிலே முடிவதெனத் தோற்றித் தன்னளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
வானளக்க முடியாதே வான்அனந்தங் கோடி வைத்தபெரு வானளக்க வசமோஎன் றுரைத்துத்
தேனளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில் திகழுநடத் தரசேயென் சிறுமொழியேற் றருளே.

பாடல்: 59 (திசையறிய)
திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத் தெளிவித்து மணிமாடத் திருத்தவிசி லேற்றி
நசையறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து நயப்பவருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
வசையறியாப் பெருவாழ்வே மயலறியா அறிவே வானடுவே இன்பவடி வாயிருந்த பொருளே
பசையறியா மனத்தவர்க்கும் பசையறிவித் தருளப் பரிந்தநடத் தரசேயென் பாட்டுமணிந் தருளே!

பாடல்: 60 (என்னுயிரும்)
என்னுயிரும் என்னுடலும் என்பொருளும் யானே இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
தன்னுயிரும் தன்னுடலும் தன்பொருளும் எனக்கே தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்த பெருஞ்சுடரே
மன்னுயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த மணியேயென் கண்ணேயென் வாழ்முதலே மருந்தே
மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே மெய்யுமணிந் தருள்வோயென் பொய்யுமணிந் தருளே!