Arul Vilakka Malai Part 5

அருள்விளக்க மாலை (81-100)

திருவருட்பிரகாச வள்ளலார்
திருவாய் மலர்ந்தருளிய
அருள்விளக்க மாலை (81-100)
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)

பாடல்: 81 (சத்தியநான்)
சத்தியநான் முகரனந்தர் நாரணர்மற் றுளவாம் தலைவரவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
இத்திசைஅத் திசையாக இசைக்கும் அண்டப்பகுதி எத்தனையோ கோடிகளில் இருக்குமுயிர்த் திரள்கள்
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே தூயநடத் தரசேயென் சொல்லுமணிந் தருளே.

பாடல்: 82 (உண்ணுகின்ற)
உண்ணுகின்ற வூன்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும் ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய பயல்களினுஞ் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
எண்ணுகின்றபடியெல்லாம் அருள்கின்ற சிவமே இலங்குநடத் தரசேயென் னிசையுமணிந் தருளே!

பாடல்: 83 (கொள்ளைவினைக்)
கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக் கூட்டமுமக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறு மக்கலைகள் காட்டியபல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே பிள்ளையெனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில் தனிநடஞ்செய் அரசேயென் சாற்றுமணிந் தருளே!

பாடல்: 84 (நால்வருணம்)
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
கால்வருணங் கலையாதே விணிலலை யாதே காண்பனவெல் லாமெனக்குக் காட்டியமெய்ப் பொருளே
மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற வயங்குநடத் தரசேயென் மாலையணிந் தருளே!

பாடல்: 85 (எவ்விடத்தும்)
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
ஒவ்விடச்சிற் சபையிடத்தும் பொற்சபையி னிடத்தும் ஓங்குநடத் தரசேயென் உரையுமணிந் தருளே!

பாடல்: 86 (இயல்வேதாகமங்)
இயல்வேதா கமங்கள்புரா ணங்களிதி காச மிவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பர்
மயலொருநூல் மாத்திரந்தான் சாலமென அறிந்தார் மகனேநீ நூலனைத்தும் சாலமென வறிக
செயலனைத்து மருளொளியால் காண்கவென எனக்கே திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
அயலறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற வரசேயென் னலங்கலணிந் தருளே!

பாடல்: 87 (தோன்றியவேதா)
தோன்றியவே தாகமத்தைச் சாலமென உரைத்தேம் சொற்பொருளு மிலக்கியமும் பொய்யெனக்கண் டறியேல்
ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும் உலகறிவே தாகமத்தைப் பொய்யெனக்கண் டுணர்வாய்
ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே ஆள்கவருள் ஒளியாலென் றளித்ததனிச் சிவமே
ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே இலங்குநடத் தரசேயென் இசையுமணிந் தருளே!

பாடல்: 88 (நான்முகர்)
நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள் நவிலருகர் புத்தர்முதல் மதத்தலைவ ரெல்லாம்
வான்முகத்தில் தோன்றியருள் ஒளிசிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
தேன்முகந்துண் டவரெனவே விளையாடா நின்ற சிறுபிள்ளைக் கூட்டமென அருட்பெருஞ் சோதியினால்
தான்மிகக்கண் டறிகவெனச் சாற்றியசற் குருவே சபையில்நடத் தரசேயென் சாற்றுமணிந் தருளே!

பாடல்: 89 (தவறாத)
தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச் சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில் இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
தவறாது பெற்றனைநீ வாழ்கவென்ற பதியே சபையில்நடத் தரசேயென் சாற்றுமணிந் தருளே!

பாடல்: 90 (ஐயமுறேல்)
ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலையென் றருளி
வையமிசைத் தனியிருத்தி மணிமுடியும்சூட்டி வாழ்கவென வாழ்த்தியவென் வாழ்க்கைமுதற் பொருளே
துய்யவருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமைநடத் தரசேயென் உரையுமணிந் தருளே!

பாடல்: 91 (காலையிலே)
காலையிலே யென்றனக்கே கிடைத்தபெரும் பொருளே களிப்பேயென் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும்பயனாம் விளைவையெலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே சமரசசன் மார்க்கசங்கத் தலையமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலையணிந் தாடும் மாநடத்தென் அரசேயென் மாலையுமேற் றருளே!

பாடல்: 92 (காலையிலே)
காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே களிப்பேயென் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும்பயனாம் விளைவையெலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே சமரசசன் மார்க்கசங்கத் தலையமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலையணிந் தாடும் மாநடத்தென் அரசேயென் மாலையுமேற் றருளே!

பாடல்: 93 (சிற்பதமும்)
சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும் சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
நற்பதமென் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே நானறிந்து தானாக நல்கியவென் குருவே
பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில் பயிலும்நடத் தரசேயென் பாடலணிந் தருளே!

பாடல்: 94 (ஆதியிலே)
ஆதியிலே எனையாண்டென் னறிவகத்தே யமர்ந்த அப்பாஎன் அன்பேயென் னாருயிரே அமுதே
வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம் மிகப்பெரிய பருவமென வியந்தருளி யருளாம்
சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
நீதியிலே நிறைந்தநடத் தரசேயின் றடியேன் நிகழ்த்தியசொன் மாலையுநீ திகழ்த்தியணிந் தருளே!

பாடல்: 95 (கணக்குவழக்)
கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே கதிர்பரப்பி விளங்குகின்ற கண்ணிறைந்த சுடரே
இணக்கமுறும் அன்பர்கடம் மிதயவெளி முழுதும் இனிதுவிளங் குறநடுவே இலங்குமொளி விளக்கே
மணக்குநறு மணமேசின் மயமாயென் உளத்தே வயங்குதனிப் பொருளேயென் வாழ்வேயென் மருந்தே
பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில் பெருநடஞ்செய் யரசேயென் பிதற்றுமணிந் தருளே!

பாடல்: 96 (அடிச்சிறியேன்)
அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி அருளமுதம் மிகவளித்தோர் அணியுமெனக் கணிந்து
கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக் கதிர்முடியுஞ் சூட்டியெனைக் களி்த்தாண்ட பதியே
வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே மனம்வாக்குக் கடந்தபெரு வானடுவாம் ஒளியே
படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில் பரிந்தநடத் தரசேயென் பாட்டுமணிந் தருளே!

பாடல்: 97 (எத்துணையும்)
எத்துணையுஞ் சிறியேனை நான்முகன்மால் முதலோர் ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றியுடன் இருந்தே
மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதமிக வளித்து வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
சுத்தசிவ சன்மார்க்க நெறியொன்றே எங்கும் துலங்கவருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே சிற்சபையென் அரசேயென் சிறுமொழியேற் றருளே!

பாடல்: 98 (இருந்தவிடந்)
இருந்தவிடந் தெரியாதே யிருந்தசிறி யேனை யெவ்வுலகி லுள்ளவரு மேத்திடமே லேற்றி
அருந்தவரு மயன்முதலாம் தலைவர்களு முளத்தே அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே
திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபி்ல் உணர்ந்தோர் திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும் பெருநடத்தென் அரசேயென் பிதற்றுமணிந் தருளே!

பாடல்: 99 (குணமறியேன்)
குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக் கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
மணமுறுபே ரருளின்ப அமுதெனக் களித்து மணிமுடியுஞ் சூட்டியெனை வாழ்கவென வாழ்த்தித்
தணவிலா தென்னுளத்தே தான்கலந்து நானும் தானுமொரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி யாடுகின்ற வரசேயென் னலங்கலணித் தருளே!

பாடல்: 100 (தலைகாலிங்)
தலைகாலிங் கறியாதே திரிந்தசிறி யேனைத் தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்ந்தே
மலைவறுமெய் யறிவளித்தே யருளமுத மருத்தி வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
நிலையுறவுே தானுமடி யேனுமொரு வடிவாய் நிறையநிறை வித்துயர்ந்த நிலையதன்மே லமர்த்தி
அலர்தலைப்பே ரருட்சோதி அரசுகொடுத் தருளி ஆடுகின்ற அரசேயென் னலங்கலணிந் தருளே!