பட்டினத்தார்
கோயில் திரு அகவல் – 1
1:
நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க !
2:
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;
3:
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன.
4:
தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை;
5:
இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள்
6:
பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி;
7:
சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை.
8:
ஒழிவருஞ் சிவபெரும் போகஇன் பத்தை,
நிலுலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனதற நினைவற இருவினை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபரம் அற ஒரு
9:
முதல்வனைத் தில்லையுள் முனைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினில் அரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத்து ஒளிருஞ் சீவனை,
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
சிவபெரு மானைச் செம் பொனம்பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
கோயில் திரு அகவல் – 2
10:
காதள வோடிய கலகப் பாதகக்
கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும்
காதலும் கருத்தும் அல்லால்நின் இருதாள்
பங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச்
சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கிருந்து
11:
அங்கோடு இங்கோடு அலமருங் கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை; இருவினைப் பெட்டகம்;
வாதபித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை;
12:
நாற்றப் பாண்டம்; நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;
ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்;
13:
மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்;
காற்றில் பறக்கும் கானப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை;
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை;
14:
ஈமக் கனலில் இடுசில விருந்து;
காமக் கனலில் கருகும் சருகு;
கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பவக்கொழுந்து ஏறுங் கவைக் கொழு கொம்பு;
மணமாய் நடக்கும் வடிவின் முடிவில்
15:
பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல்
ஊரில் கிடக்க வொட்டா உபாதி;
கால் எதிர் குவித்தபூளை; காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்;
16:
அதிரும் மேகத்து உருவின் அருநிழல்;
நீரில் குமிழி; நீர்மேல் எழுத்து;
கண்துயில் கனவில் கண்ட காட்சி;
அதனினும் அமையும் பிரானே! அமையும்;
இமைய வல்லி வாழிஎன் றேத்த
ஆனந்தத் தாண்டவம் காட்டி
ஆண்டுகொண்டருள்கை நின் அருளினுக்கு அழகே!
கோயில் திரு அகவல் – 3
17:
பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்!
அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக்
கால்எடுத் தடக்கிய கடவுள் நின் அடைக்கலம்
உலகு அடங் கலும்படைத்து உடையவன் தலைபறித்து
18:
இடக்கையில் அடக்கிய இறைவ! நின் அடைக்கலம்!
செய்யபொன் னம்பலச் செல்வ! நின் அடைக்கலம்;
ஐய! நின் அடைக்கலம்; அடியன் நின் அடைக்கலம்;
மனவழி அலைத்திடும் கனவெனும் வாழ்க்கையும்;
விழுப்பொருள் அறியா வழுக்குமறு மனனும்;
19:
ஆணவ மலத்துதித்து அளைந்ததில் உளைந்திடும்
நிணவைப் புழுவென நெளிந்திடு சிந்தையும்;
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்,
தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சின
20:
இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும்,
பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும்,
முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும்,
இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை;
உயிர் எனுங் குருகுவிட்டு ஓடும் குரம்பையை
21:
எலும்பொடு நரம்புகொண்டு இடையில் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச்
செழும்பெழு உதிரச் சிறுபுழுக் குரம்பையை,
மலவுடல் குடத்தைப் பலவுடல் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக்
22:
கொலை படைக் கலம்பல கிடைக்கும் கூட்டைச்
சலிப்புறு வினைப் பலசரக்குக் குப்பையைக்
கோள்சரக்கு ஒழுகும் பீற்றல் கோணியைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை,
ஐம்புலப் பறவை அடையும்பஞ் சரத்தை.
23:
புலராக் கவலை விளைமரப் பொதும்பை,
ஆசைக் கயிற்றில் ஆடும்பம் பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை,
மக்கள் வினையின் மயக்குந் திகிரியைக்,
கடுவெளி உருட்டிய சகடக் காலைப்
24:
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனைக்
நடுவன்வந் தழைத்திட நடுங்கும் யாக்கையைப்
25:
பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக்கு அபயம்நின் அடைக்கலம்;
வெளியிடை உரும்இடி இடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுள்நின் அடைக்கலம்;
இமையா நாட்டத்து இறையே! அடைக்கலம்;
26:
அடியார்க்கு எளியாய்! அடைக்கலம் அடைக்கலம்;
மறையவர் தில்லை மன்றுள்நின் றாடிக்
கருணை மொண்டு அலையெறி கடலே! அடைக்கலம்,
தேவரும் முனிவரும் சென்றுநின் றேத்தப்
பாசிழைக் கொடியொடு பரிந்து அருள் புரியும்
எம்பெரு மானின் இணையடிக்கு அபயம்
அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே!
கச்சித் திரு அகவல்
27:
திருமால் பயந்த திசைமுகன் அமைத்து
வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து
மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகாது அவமே
மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்
28:
மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்;
முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென உரைத்தும்,
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால்
29:
துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும்,
தசையும் எலும்புந் தக்கபுன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென இயம்பியும்
நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும்,
30:
மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை ஆலிலை யென்றும்,
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந்து ஏறி
உகிரால் கீறல் உலர்ந்து உள் உருகி
31:
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்,
குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன்;
நீட்டவும் முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவும் உதவி இங் கியற்றும்
32:
அலங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும்,
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப்
பாரினில் இனிய கமுகெனப் பகர்ந்தும்,
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்,
33:
அன்ன முங் கறியும் அசைவிட்டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிராது ஒழுகும்
34:
கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்
உள்ளுங் குறும்பி ஒழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும்
கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்
வெய்ய அதரும் பேனும் விளையத்
35:
தக்க தலை யோட்டில் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள் முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்
தோலும் இறைச்சியும் துதைந்து சீப்பாயும்
36:
காமப் பாழி; கருவிளை கழனி;
தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக் காமுக நாய்தான் என்றும்
37:
இச்சித் திருக்கும் இடைகழி வாயில்;
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி;
புண் இது என்று புடவையை மூடி
உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்
38:
மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி;
நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி;
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி;
39:
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்;
இத்தை நீங்கள் இனிது என வேண்டா;
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை
40:
முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட அண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!
திருவேகம்பமாலை
41:
அறந்தான் இயற்றும் அவனிலுங்கோடி அதிகமில்லம்
துறந்தான் அவனிற் சதகோடிஉள்ளத் துறவுடையோன்
மறந்தான் அறக்கற் றறிவோடிருந்திரு வாதனையற்று
இருந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சியேகம்பனே.
42:
கட்டிஅணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டிமுழக்கி அழுவார் மயானங் குறுகியப்பால்
எட்டியடி வைப்பரோ இறைவாகச்சி யேகம்பனே.
43:
கைப்பிடிநாயகன் தூங்கையிலேயவன் கையையெடுத்து
அப்புறந்தன்னில் அசையாமல் முன் வைத்தயல் வளவில்
ஒப்புடன் சென்று துயினீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படி நானம்புவேன் இறைவாகச்சி யேகம்பனே.
44:
நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவைநன் னார்தப்பினால்
தன்னாலுமாடிச் சலித்திடுமோஅந்தத் தன்மையைப்போல்
உன்னா லியானுந் திரிவதல்லான் மற்றுனைப்பிரிந்தால்
என்னா லிங்காவதுண்டோ இறைவாகச்சி யேகம்பனே
45:
நல்லரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே.
46:
பொல்லா தவனெறி நில்லா தவனைப் புலன்கடமை
வெல்லா தவன்கல்வி கல்லாதவன் மெய் யடியவர்பால்
செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்பு
இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன்கச்சி ஏகம்பனே.
47:
பிறக்கும்பொழுது கொடுபோதில்லைப் பிறந்துமண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில்
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.
48:
அன்னவிசாரம் அதுவே விசாரம்அது வொழிந்தாற்
சொன்னவிசாரந் தொலையா விசாரநற் றோகையரைப்
பன்னவிசாரம் பலகால்விசார மிப்பாவி நெஞ்சுக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே.
49:
கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நல்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின்அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையுந் துதியாப்பிழையுந் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.
50:
மாயநட்போரையும் மாயமலமெனும் மாதரையும்
வீயவிட்டோட்டி வெளியேபுறப்பட்டு மெய்யருளாந்
தாயுடன் சென்று பின்தாதையைக் கூடிப்பின்தாயைமறந்து
ஏயுமதேநிட்டை என்றான் எழிற்கச்சி ஏகம்பனே.
திருவேகம்பமாலை
51:
வரிக்கோல வேல்விழி யாரனுராக மயக்கிற்சென்று
சரிக்கோது வேனெழுத் தஞ்சுஞ் சொல்லேன்தமி யேனுடலம்
நரிக்கோ கழுகு பருந்தினுக் கோவெய்ய நாய்தனக்கோ
எரிக்கோஇரையெதுக்கோ இறைவாகச்சி ஏகம்பனே.
52:
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயைத உனை மறலிவிட்ட
தூதென்றுஎண் ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே.
53:
ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.
54:
சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு
கூறு முலையும் இறைச்சியுமாகிக் கொடுமையினால்
பீறு மலமும் உதிரமுஞ்சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங் கரைகண்டிலேன் இறைவாகச்சி ஏகம்பனே.
55:
பொருளுடையோரைச் செயலிலும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற்குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங்கச்சி ஏகம்பனே.
56:
பருத்திப்பொதியினைப் போலவேவயிறு பருக்கத்தங்கள்
துறுத்திக் கறுசுவை போடுகின்றார் துறந் தோர்தமக்கு
வருத்திஅமுதிட மாட்டாரவரை இம்மானிலத்தில்
இருத்திக்கொண் டேனிருந்தா இறைவாகச்சி ஏகம்பனே.
57:
பொல்லாஇருளகற் றுங்கதிர்கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லாயிருந்திடும் ஆறொக்குமேஅறி வோருள்ளத்தில்
வல்லாரறிவார் அறியார்தமக்கு மயக்கங்கண்டாய்
எல்லாம் விழிமயக்கே இறைவாகச்சி ஏகம்பனே.
58:
வாதுக்குச்சண்டைக்குப் போவார்வருவார் வழக்குரைப்பார்
தீதுக்குதவியுஞ் செய்திடுவார்தினந் தேடியொன்றும்
மாதுக்களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார் இறைவாகச்சி ஏகம்பனே.
59:
ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரைநிந்திப்பர் உற்றுப்பெற்ற
தாயாரைவைவர் சதியாயிரஞ்செய்வர் சாத்திரங்கள்
ஆயார்பிறர்க்கு உபகாரஞ்செய்யார்தமை அண்டினர்க்கொன்று
ஈயாரிருந்தென்ன போயென்ன காண்கச்சி ஏகம்பனே.
60:
அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத் தியல்பாய்த்
தப்பின்றி யேகுண வேற்றுமைதான் பல சார்தலினால்
செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்
இப்படியேநிற்பன் எந்தை பிரான்கச்சி ஏகம்பனே.
61:
நாயாய்ப்பிறந்திடின் நல்வேட்டையாடி நயம்புரியும்
தாயார்வயிற்றில் நரராய்ப் பிறந்துபின் சம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமுங் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை ஏன்படைத்தாய் கச்சி ஏகம்பனே.
62:
ஆற்றிற்கரைத்த புளியாக்கி டாமலென் அன்பையெல்லாம்
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்
கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய் குன்ற வில்லுடையாய்
ஏற்றுக் கொடியுடையாய் இறைவாகச்சி ஏகம்பனே.
63:
பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால்மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளியென் போதப் பொருள்பறிக்க
எண்ணா துனைமறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே.
64:
நாவார வேண்டும் இதஞ் சொல்லுவாருனை நான்பிரிந்தால்
சாவேன் என்றேயிருந் தொக்கவுண்பார்கள் கைதான்வறண்டால்
போய்வாரும் என்றுநடுத் தலைக்கே குட்டும் பூவையருக்கு
ஈவார் தலைவிதியோ இறைவாகச்சி ஏகம்பனே.
65:
கல்லார் சிவகதை நல்லார் தமக்குக் கனவிலுமெய்
சொல்லார் பசித்தவர்க் கன்னங் கொடார் குருசொன்னபடி
நில்லார்அறத்தை நினையார்நின்னாமம் நினைவிற்சற்றும்
இல்லார் இருந்தென் இறந்தென் புகல் கச்சி ஏகம்பனே.
66:
வானமுதத்தின் சுவையறி யாதவர்வண்கனியின்
தானமுதத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே
தேனமு தத்தின் தெளிவாயஞானஞ் சிறிது மில்லார்க்கு
ஈனமுதச்சுவை நன்றல்ல வோகச்சி ஏகம்பனே.
67:
ஊற்றைச்சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றற் றுத்தியைச் சோறிடுந்தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே
ஏற்றுத் திரிந்து விட்டேன் இறைவாகச்சி ஏகம்பனே.
68:
சொல்லால் வருங்குற்றஞ் சிந்தையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுஞ் தீங்குக ளாயவுமற்று
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.
69:
முட்டற்ற மஞ்சளை எண்ணெயிற் கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளைஓலை விளக்கியிட்டுப்
பட்டப்பகலில் வெளிமயக்கே செய்யும் பாவையர்மேல்
இட்டத்தை நீ தவிர்ப்பாய் இறைவாகச்சி ஏகம்பனே.
70:
பிறந்துமண் மீதிற் பிணியேகுடி கொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேன்மைய லாகிப்புன் மாதருக்குட்
பறந்துஉழன் றேதடு மாறிப்பொன்தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திட வோபணித்தா யிறைவாகச்சி ஏகம்பனே.
71:
பூதங்க ளற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்
பேதங் குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முனற்றுக்
காதங் கரணங் களுமற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங் களைந்திருப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே.
72:
நல்லாய்எனக்கு மனுவொன்று தந்தருள் ஞானமிலாப்
பொல்லா எனைக்கொன்று போடும் பொழுதியல் பூசைசெபம்
சொல்லார் நற்கோயில் நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லாமுடிந்தபின் கொல்லுகண் டாய்கச்சி ஏகம்பனே.
73:
சடக்கடத் துக்கிரை தேடிப்பலவுயிர் தம்மைக்கொன்று
விடக்கடித் துக்கொண்டு இறுமாந்திருந்து மிகமெலிந்து
படக்கடித் தின்றுழல் வார்கடமைக்கரம் பற்றிநமன்
இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்கச்சி ஏகம்பனே.
74:
நாறுமுடலை நரிப்பொதிச் சோற்றினை நான்தினமுஞ்
சோறுங்கறியும் நிரப்பியபாண்டத்தைத் தோகையர்தங்
கூறுமலமும் இரத்த முஞ்சோறுங் குழியில் விழாது
ஏறும்படி யருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே.
75:
சொக்கிட் டரண்மனைப் புக்குட் டிருடிய துட்டர்வந்து
திக்குற்ற மன்னரைக் கேட்பது பொற்சிவ நிந்தைசெய்து
மிக்குக் குருலிங்க சங்கமம் நிந்தித்து வீடிச்சிக்கும்
எக்குப் பெருத்தவர்க் கென்சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.
76:
விருந்தாக வந்தவர் தங்களுக்கன்னம் மிகக் கொடுக்கப்
பொருந்தார் வளம்பெற வாழ்வார் நின்னாமத்தை போற்றி நித்தம்
அருந்தா முலைப்பங்கர் என்னாத பாதகர் அம்புவியில்
இருந்தாவ தேதுகண்டாய் இறைவாகச்சி ஏகம்பனே.
77:
எல்லாம்அறிந்து படித்தே இருந்தெமக்கு உள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லால் மலைந்துறு சூழ் விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன்செயலே என்பர்காண்கச்சி ஏகம்பனே.
78:
பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர் பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய்உருகுவர் தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசி யாத உலுத்தரெல்லாம்
என்னை இருந்துகண்டாய் இறைவாகச்சி ஏகம்பனே.
79:
கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக்
கொடும் பவமேசெயும் நிர்மூடர்தம்மைக் குவலயத்து
நெடும்பனைபோல் வளர்ந்துநல் லோர் தம் நெறியறியா
இடும்பரை யேன்வகுத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே.
80:
கொன்றேன் அனேகம் உயிரையெலாம் பின்புகொன்றுகொன்று
தின்றேன் அதன்றியும் தீங்குசெய்தேனது தீர்க வென்றே
நின்றேனின் சன்னிதிக்கேஅத னாற்குற்றம் நீபொறுப்பாய்
என்றேஉனைநம்பினேன் இறைவாகச்சி ஏகம்பனே.
81:
ஊரிருந் தென்ன நல்லோரிருந்தென் னுபகாரமுள்ள
பேரிருந் தென்பெற்ற தாயிருந்தென்மடப் பெண்கொடியாள்
சீரிருந்த தென்னற் சிறப்பிருந் தென்னவித் தேயத்தினில்
ஏரிருந் தென்னவல்லாய் இறைவாகச்சி ஏகம்பனே.
82:
வில்லா லடிக்கச் செருப்பா லுதைக்க வெகுண்டொருவன்
கல்லா லெறியப் பிரம்பா லடிக்கக் களிவண்டுகூர்ந்து
அல்லாற் பொழிற்றில்லை அம்பலவாணர்க்கோர் அன்னைபிதா
இல்லாத தாலல்லவோ இறைவாகச்சி ஏகம்பனே.
83:
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பிள்ளை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய்வேன்கச்சி ஏகம்ப நாதனே
திருத் தில்லை
84:
காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் தனித்துச் செத்துப்
போம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டு இனிமேற்
சாம்பிணங் கத்துது ஐயோ! என் செய்வேன் தில்லைச் சங்கரனே!
85:
சோறிடும் நாடு, துணிதருங் குப்பை, தொண்டன் பரைக்கண்டு
ஏறிடுங் கைகள் இறங்கிடுந் தீவினை, எப்பொழுதும்
நீறிடும் மேனியர் சிற்றம் பலவர் நிருத்தங்கண்டால்
ஊறிடும் கண்கள் உருகிடும் நெஞ்சம்என் உள்ளமுமே!
86:
அழலுக்குள் வெண்ணெய் எனவே உருகிப்பொன் னம்பலத்தார்
நிழலுக்குள் நின்று தவமுற் றாமல்நிட் டூரமின்னார்
குழலுக் கிசைந்த வகைமாலை கொண்டுகுற் றேவல்செய்து
விழலுக்கு முத்துலை இட்டிறைத் தேன் என் விதிவசமே.
87:
ஓடாமல் பாழுக்கு உழையாமல் ஓரம் உரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர் கூட்டம் விடாமல்வெங் கோபம் நெஞ்சில்
நாடாமல் நன்மை வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வம் தருவாய்! சிதம்பர தேசிகனே!
88:
பாராமல் ஏற்பவர்க்கு இல்லையென் னாமல் பழுதுசொல்லி
வாராமல் பாவங்கள் வந்தணு காமல் மனம் அயர்ந்து
பேராமல், சேவை பிரியாமல் அன்புபெ றாதவரைச்
சேராமல் செல்வம் தருவாய்! சிதம்பர தேசிகனே!
89:
கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரங் கோள்களவு
கல்லாமல், கைதவ ரோடுஇணங் காமல்கனவி னும்பொய்
சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையிலே
செல்லாமல், செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே!
90:
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம்உய்ய வேண்டுமென்றே அறி வாரில்லையே!
91:
காலை உபாதி மலஞ்சலமாம் அன்றிக் கட்டுச்சியிற்
சால உபாதி பசிதாகம் ஆகும்முன் சஞ்சிதிமாம்
மாலை உபாதி துயில்காமமாம் இவை மாற்றிவிட்டே
ஆலம் உகந்தருள் அம்பலவா, என்னை ஆண்டருளே!
92:
ஆயும் புகழ்த்தில்லை அம்பலவாணர் அருகில் சென்றால்
பாயும் இடபம், கடிக்கும் அரவம், பின்பற்றிச் சென்றால்
பேயுங் கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்;
போயென்செய் வாய்மனமே பிணக் காடவர் போமிடமே?
93:
ஓடும் எடுத்து அதள் ஆடையும் சுற்றி, உலாவிமெள்ள
வீடுகள் தோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்போல்
ஆடும் அருள்கொண்டு இங்கு அம்பலத்தே நிற்கும் ஆண்டிதன்னைத்
தேடுங் கணக்கென்ன காண்! சிவகாம சவுந்தரியே.
94:
ஊட்டுவிப் பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை
காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப் பானும் ஒருவன்உண் டேதில்லை அம்பலத்தே!
95:
அடியார்க்கு எளியவர் அம்பலவாணர் அடிபணிந்தால்
மடியாமல் செல்வ வரம்பெற லாம், வையம் ஏழளந்த
நெடியோனும் வேதனுங் காணாத நித்த நிமலன் அருள்
குடிகாணும் நாங்கள்! அவர்காணும் எங்கள் குலதெய்வமே!
96:
தெய்வச் சிதம்பர தேவா! உன் சித்தம் திரும்பிவிட்டால்
பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியுமெங்கே?
மெய்வைத்த செல்வமெங்கே? மண்ட லீகர்தம் மேடையெங்கே?
கைவைத்த நாடக சாலையெங்கே? இது கண்மயக்கே!
97:
உடுப்பானும் பாலன்னம் உண்பானும் உய்வித்தொருவர் தம்மைக்
கெடுப்பானும் ஏதென்று கேள்விசெய் வானும் கதியடங்கக்
கொடுப்பானும் தேகிஎன்று ஏற்பானும் ஏற்கக் கொடாமல் நின்று
தடுப்பானும் நீயல்லையோ தில்லை ஆனந்தத் தாண்டவனே!
98:
வித்தாரம் பேசினும் சோங்கேறி னும் கம்ப மீதிருந்து
தத்தாஎன் றோதிப் பரிவுகொண்டாடினும் தம்முன்தம்பி
ஒத்தாசை பேசினும் ஆவதுண்டோ? தில்லை யுள்நிறைந்த
கத்தாவின் சொற்படி அல்லாது வேறில்லை கன்மங்களே.
99:
பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும்; பிறந்துவிட்டால்
இறவா திருக்க மருந்துண்டு காண்இது எப்படியோ
அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம்
மறவா திருமனமே! அதுகாண் நல் மருந்துனக்கே!
100:
தவியா திரு நெஞ்சமே தில்லை மேவிய சங்கரனைப்
புவியார்ந் திருக்கின்ற ஞானா கரனைப் புராந்தகனை
அவியாவிளக்கைப் பொன்னம்பலத் தாடியை ஐந்தெழுத்தால்
செவியாமல் நீ செபித்தால் பிறவாமுத்தி சித்திக்குமே!