Pattinathar Padalkal, Veedu Varai…..

பட்டினத்தார் பாடல்களிலிருந்து

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே (12,பொது)

கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)

என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே (28,பொது)

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொண்டு போவதில்லை இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தை
போதுற்ற எப்போதும் புகலும் நெஞ்சே? இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே

“உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”

ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு
உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு; பசித்தோர் முகம் பார்
நல் அறமும் நட்பும் நன்று என்று இரு; நடு நீங்காமலே நமக்கு இட்ட படி
என்றுன்றிரு; மனமே உனக்கு உபதேசம் இதே!

நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதி நெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செப மந்திர யோக நிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

நம் எல்லோருக்கும் பட்டினத்தார் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். அதிக நேரம் உங்கள் கையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் கையில் இருக்கும் நேரம் எல்லாம் மூன்று ஒலிகளுக்குள் அடங்கிவிடும் என்கிறார்.

மூன்று முறை சங்குகள் ஒலிக்குமாம்; பிறகு நாம் இருக்க மாட்டோமாம். புரியவில்லையா?

நான்கே வரிகளில் அவர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் என்று கேளுங்கள்:

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள். நாம் குழந்தையாக இருந்தபோது “நான் பால் குடிக்க மாட்டேன், போ” என்று அடம் பிடிப்போம். நம் தாய் நமக்கு வேடிக்கை காட்டி நமக்கு அமுதூட்ட அந்த சங்கை வாயில் வைத்து ஊதி ஒலி எழுப்பி இருப்பாள். இது நமக்கு இறைவன் விட்ட முதல் எச்சரிக்கை.

இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர். அதாவது அது ஒரு மங்கல வாத்தியம். ஆண்டாள் கூட வாரணம் ஆயிரத்தில் தாம் திருமாலைத் திருமணம் செய்யும் கனவுக் காட்சியை வருணிக்கையில் சங்கு ஊதுவதைக் குறிப்பிடுகிறார்.:—

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டே, தோழீ! நான்.
–ஆண்டாள் நாச்சியார் திருமொழி

பட்டினத்தார் என்ன சொல்கிறார்? திருமணத்தன்று நமக்கு விலங்கு பூட்டப்படுகிறது என்பார். பேச்சுத் தமிழிலும் கூட அவன் திமிர் பிடித்த காளை போலத் திரிகிறான். எல்லாம் ‘கால் கட்டு’ போட்டால் சரியாகி விடும் என்று தானே பெரியோர் அங்கலாய்க்கிறார்கள்!

சம்ஸ்கிருதத்திலும் இதற்கு சம்சார ‘பந்தம்’ (கட்டு) என்றே பெயர். ஆண்டவன் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது!

மூன்றாவது சங்கு? அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

ஆகையால், மெய்யன்பர்களே!

ஒன்றே செய்க!
அதுவும் நன்றே செய்க!!
அதுவும் இன்றே செய்க!!!

என்பது இறைவன் விடுத்த செய்தி ஆகும்.