Pattinathar Part 4

பட்டினத்தார்

இறந்த காலத்து இரங்கல்
401:
தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று
எண்ணும் உணர்வு இல்லாமல் இன்பம் என்று மாண்டேனே.

402:
தோல் எலும்பும் மாங்கிஷமும் தொல் அன்னத்தால் வளரும்
மேல் எலும்பும் சுத்தமென்று வீறாப்பாய் மாண்டேனே.

403:
போக்கு வரத்தும் பொருள் வரத்தும் காணாமல்
வாக்கழிவு சொல்லி மனம்மறுகிக் கெட்டேனே.

நெஞ்சொடு புலம்பல்
404:
மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.

405:
புட்பாசன அணையில் பொன்பட்டு மெத்தையின் மேல்
ஒப்பா அணிந்த பணி யோடாணி நீங்காமல்!
இப்பாய்க் கிடத்தி இயமன் உயிர் கொள்ளும் முன்னே
முப்பாழைப் போற்ற முயங்கிலையே நெஞ்சமே!

406:
முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும் பாழாய்
அப்பாழுக்கு அப்பால் நின்றாடும் அதைப் போற்றாமல்
இப்பாழாம் வாழ்வை நம்பி ஏற்றவர்க்கு ஒன்று ஈயாமல்
துப்பாழாய் வந்தவினை சூழ்ந்தனையே நெஞ்சமே!

407:
அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவிசெயும்
சென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றாமல்
பொன்னும் மனையும் எழில் பூவையரும் வாழ்வும் இவை
இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே!

408:
முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்
இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே!
அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்
கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே.

409:
மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு
ஆணிப்பொன் சிங்கா தனத்தில் இருந்தாலும்
காணித் துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்
காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே!

410:
கற்கட்டும் மோதிரம் நல்கடுக்கன் அரை ஞாண் பூண்டு
திக்கு எட்டும் போற்றத் திசைக்கு ஒருத்தர் ஆனாலும்
பற்கிட்ட எமனுயிர் பந்தாடும் வேளையிலே
கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே!

411:
முன்னம் நீ செய்த தவம் முப்பாலும் சேரும் அன்றிப்
பொன்னும் பணிதிகழும் பூவையும் அங்கேவருமோ?
தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல்
கண்ணற்ற அந்தகன்போல் காட்சியுற்றாய் நெஞ்சமே!

412:
பை அரவம் பூண்ட பரமர் திருப் பொன்தாளைத்
துய்ய மலர் பறித்துத் தொழுது வணங்காமல்
கையில் அணிவளையும், காலில் இடும் பாடகமும்
மெய் என்று இறுமாந்து விட்டனையே நெஞ்சமே!

413:
மாதுக்கு ஒரு பாகம் வைத்த அரன் பொன்தாளைப்
போதுக்கு ஒரு போதும் போற்றி வருந்தாமல்
வாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே
ஏதுக்குப் போக நீ எண்ணினையே நெஞ்சமே!

414:
அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க
நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன்;
வஞ்சகத்தை நீக்கி மறுநினைவு வராமல்
செஞ்சரணத் தானைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே!

415:
அற்புதமாய் இந்த உடல் ஆவி அடங்கு முன்னே
சற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமை பெருவாழ்வை நம்பிச்
சர்ப்பத்தின் வாயில் தவளைபோல் ஆனேனே.

416:
உற்றார்ஆர்? பெற்றார்ஆர்? உடன்பிறப்புஆர்? பிள்ளைகள்ஆர்?
மற்றார் இருந்தால் என்? மாளும்போது உதவுவரோ?
கற்றா இழந்த இளம் கன்றது போலே உருகிச்
சிற்றாகிச் சிற்றின்பம் சேர்ந்தனையே நெஞ்சமே!

417:
வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே?

418:
சந்தனமும், குங்குமமும், சாந்தும், பரிமளமும்
விந்தைகளாகப் பூசிமிகு வேடிக்கை ஒய்யாரக்
கந்த மலர் சூடுகின்ற கன்னியரும் தாம் இருக்க
எந்தவகை போனாய் என்று எண்ணிலையே நெஞ்சமே!

419:
காற்றுத் துருத்தி கடியவினைக் குள்ளான
ஊற்றைச் சடலத்தை உண்டென்று இறுமாந்து
பார்த்திரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்
ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே!

420:
நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயம் என்றே எண்ணிப்
பாக்களவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல்
போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் அப்போது
ஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே!

421:
சின்னஞ் சிறுநுதலாள் செய்த பலவினையால்
முன் அந்த மார்பின் முளைத்த சிலந்தி விம்மி
வன்னம் தளதளப்ப மயங்கி வலைக்குள்ளாகி
அன்னம் பகிர்ந்துண்ண அறிந்திலையே நெஞ்சமே.

422:
ஓட்டைத் துருத்தியை, உடையும் புழுக்கூட்டை
ஆட்டும் சிவசித்தர் அருளை மிகப்போற்றியே
வீட்டைத் திறந்து வெளியைஒளி யால் அழைத்துக்
காட்டும் பொருள் இதென்றுகருதிலையே நெஞ்சமே!

423:
ஊன்பொதிந்த காயம், உளைந்த புழுக்கூட்டைத்
தான் சுமந்த தல்லால்நீ சற்குருவைப் போற்றாமல்
கான் பரந்த வெள்ளம் கரைபுரளக் கண்டு ஏகி
மீன் பரந்தாற் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே!

424:
உடக்கை ஒருக்கி உயிரை அடைத்துவைத்த
சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை!
உடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே
அடக்கமாய் வைத்த பொருள் அங்குவர மாட்டாதே.

425:
தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை,
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்,
பற்றிப்பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றி இருக்கும்வினை சூழ்ந்தனையே நெஞ்சமே!

426:
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
வஞ்சகமாய் உற்றமுலை மாதர்வலைக் குள்ளாகிப்
பஞ்சரித்துத் தேடிப் பாழுக்கு இறைத்தோமே!

427:
அக்கறுகு கொன்றைதும்பை அம்புலியும் சூடுகின்ற
சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
மக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிக நம்பி அன்பாய்
எக்காலமும் உண்டென்று எண்ணினையே நெஞ்சமே!

428:
ஆண்ட குருவின் அருளை மிகப்போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடிகெண்டை ஆனேனே!

429:
ஏணிப் பழுஆம் இருளை அறுத்தாளமுற்றும்
பேணித் தொழும் கயிலை பேறுபெற மாட்டாமல்
காண அரும் பொருளாய்க் கண்கலக்கப் பட்டடியேன்
ஆணிஅற்ற மாமரம் போல் ஆகினனே நெஞ்சமே!

430:
கோத்துப் பிரகாசம் கொண்டுருகி அண்டமெல்லாம்
காத்தப் படியே கயிலாயம் சேராமல்
வேற்றுருவப் பட்டடியேன் வெள்ளம்போல் உள்ளுருகி
ஏற்றும் கழுவில் இருந்த பிணம் ஆனேனே!

431:
நிலைவிட்டு உடலை உயிர் நீங்கி அகலுமுன்னே
சிலைதொட்ட வேடன் எச்சில் தின்றானைச் சேராமல்
வலைபட்டு உழலுகின்ற மான்போல் பரதவித்துத்
தலைகெட்ட நூல் அதுபோல் தட்டழிந்தாய் நெஞ்சமே.

432:
முடிக்குமயிர்ப் பொல்லா புழுக்குரம்பை மின்னாரின்
இடைக்கும் நடைக்கும் இதம் கொண்ட வார்த்தைசொல்லி
அடிக்கொண்ட தில்லைவனத்து ஐயனே! நாய் அனையேன்
விடக்கை இழந்த மிருகமது ஆனேனே!

433:
பூவாணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது
சீர்பாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
தாவாரம் தோறும் தலைபுகுந்த நாய்போலே
ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே.

434:
பத்தெட்டாய் ஈரைந்தாய்ப் பதின்மூன்று இரண்டொன்றாய்
ஒத்திட்டு நின்றதோர் ஓவியத்தைப் போற்றாமல்;
தெத்திட்டு நின்ற திரிகண்ணுக் குள்ளாக்கி
வித்திட்டாய் நெஞ்சே! விடவும் அறியாயே!

435:
அஞ்சும் உருவாகி ஐம்முன்றும் எட்டும் ஒன்றாய்
மிஞ்சி இருந்த விளக்கொளியைப் போற்றாமல்
பஞ்சிலிடு வன்னியைப்போல் பற்றிப் பிடியாமல்
நஞ்சுண்ட கெண்டையைப்போல் நான் அலைந்து கெட்டேனே.

436:
ஊனம் உடனே அடையும் புழுக்கட்டை
மானமுட னேசுமந்து மண்ணுலகில் மாளாமல்
ஆனதொரு பஞ்சவர்கள் ஆண்டிருந்த தேசம்விட்டுப்
போனதுபோ லேநாம் போய்பிழைத்தோம் இல்லையே.

437:
ஊறா இறைக்கின்ற உப்பிருந்த பாண்டத்தை,
நாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை,
வீறாம் புறத்தை விரும்புகின்றது எப்படியென்
றாறாத நாட்டில் அகன்றிருந்தேன் இல்லையே.

438:
அரிய அரிதேடி அறிய ஒரு முதலைப்
பரிவுடனே போற்றும் பரஞ்சுடரைப் போற்றாமல்
கரியபெரு வாழ்வை நம்பிக் காமத்து அழுந்தியே
அரிவாயில் பட்ட கரியது போல் ஆனேனே!

439:
தந்திரத்தை உன்னித் தவத்தை மிகநிறுத்தி,
மந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி
விந்துருகி நாதமாம் மேல் ஒளியைக் காணாமல்
அந்தரத்தே கோல் எறிந்த அந்தகன் போல் ஆனேனே.

440:
விலையாகிப் பாணனுக்கு வீறடிமைப் பட்டதுபின்
சிலையார் கை வேடன் எச்சில் தின்றானைப் போற்றாமல்
அலைவாய் துரும்பதுபோல் ஆணவத்தினால் அழுங்கி,
உலைவாய் மெழுகதுபோல் உருகினையே நெஞ்சமே!

பூரண மாலை
441:
மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே!

442:
உந்திக்கமலத்து உதித்துநின்ற பிருமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே!

443:
நாவிக் கமல நடுநெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே!

444:
உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே!

445:
விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே!

446:
நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே!

447:
நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே!

448:
உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே!

449:
மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே!

450:
இடைபிங் கலையின் இயல்பறிய மாட்டாமல்
தடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே!

பூரண மாலை
451:
ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே!

452:
மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல்
பொய் வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே!

453:
பெண்டுபிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை
உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே!

454:
தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்துகளும்
உண்டென்று நம்பி உணர்வழிந்தேன் பூரணமே!

455:
இந்த உடல் உயிரை எப்போதும்தான் சதமாய்ப்
பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே!

456:
மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே!

457:
சரியை கிரியா யோகம்தான் ஞானம் பாராமல்
பரிதிகண்ட மதியதுபோல பயன் அழிந்தேன் பூரணமே!

458:
மண் பெண் பொன்னாசை மயக்கத்திலே விழுந்து
கண்கெட்ட மாடதுபோல் கலங்கினேன் பூரணமே!

459:
தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல்
அநியாயமாய்ப் பிறந்திங்கு அலைந்து நின்றேன் பூரணமே!

460:
ஈராறு தன் கலைக்குள் இருந்து கூத்து ஆடினதை
ஆராய்ந்து பாராமல் அறிவழிந்தேன் பூரணமே!

461:
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காசிவரை போய்த்திரிந்து கால் அலுத்தேன் பூரணமே!

462:
கருவிகள் தொண்ணூற்றாறில் கலந்து விளையாடினதை
இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே!

463:
உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
கடல்மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே!

464:
எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பம் என்று
உற்றுனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே!

465:
எத்தனை தாய் தந்தை இவர்களிடதே இருந்து
பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே!

466:
பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் யானும்; உன்றன்
பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே!

467:
உற்றார் அழுது அலுத்தார், உறன் முறையார் சுட்டலுத்தார்;
பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் பூரணமே!

468:
பிரமன் படைத்து அலுத்தான்; பிறந்து இறந்து நான் அலுத்தேன்;
உரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே!

469:
எண்பத்து நான்கு நூறாயிரம் செனனமும் செனித்துப்
புண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே!

470:
என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே!

471:
கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய்
அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே!

472:
செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல்
பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே!

473:
எனக்குள்ளே நீ இருக்க, உனக்குள்ளே நான் இருக்க,
மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே!

474:
எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதைப்
பழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே!

475:
சாதி பேதங்கள் தனை அறிய மாட்டாமல்
வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே!

476:
குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான்
மலபாண்டத் துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே!

477:
அண்டபிண்டம் எல்லாம் அணுவுக்கு அணுவாய் நீ
கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே!

478:
சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல்
அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே!

479:
ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே!

480:
என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய்,
உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே!

481:
நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே!

482:
சிலந்தியிடை நூல்போல் சீவசெந்துக் குள்ளிருந்த
நலந்தனைத்தான் பாராமல் நலம் அழிந்தேன் பூரணமே!

483:
குருவாய், பரமாகிக் குடிலை, சத்தி நாதவிந்தாய்,
அருவாய் உருவானது அறிகிலேன் பூரணமே!

484:
ஒளியாய்க் கதிர்மதியாய் உள் இருளாய் அக்கினியாய்
வெளியாகி நின்ற வியன் அறியேன் பூரணமே!

485:
இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழு முனையாய்
உடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே!

486:
மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து
காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே!

487:
உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே!

488:
தாயாகித் தந்தையாய்த் தமர்கிளைஞர் சுற்றம் எல்லாம்
நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே!

489:
விலங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக்
குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே!

490:
ஆணாகிப், பெண்ணாய், அலியாகி, வேற்றுருவாய்,
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே!

491:
வாலையாய்ப், பக்குவமாய், வளர்ந்து கிழம் தானாகி,
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே!

492:
பொய்யாய்ப் புவியாய்ப், புகழ்வா ரிதியாகி
மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே!

493:
பூவாய் மணமாகிப், பொன்னாகி, மாற்றாகி,
நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே!

494:
முதலாய் நடுவாகி, முப்பொருளாய், மூன்றுலகாய்,
இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே!

495:
ஊனாய் உடல் உயிராய், உள் நிறைந்த கண்ணொளியாய்த்
தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே!

496:
வித்தாய், மரமாய், விளைந்த கனியாய்ப், பூவாய்ச்
சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே!

497:
ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எல்லாம்
தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே!

498:
மனமாய்க் கனவாகி, மாய்கையாய், உள்ளிருந்து
நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே!

499:
சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச்
சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே!

500:
பொறியாய்ப், புலன் ஆகிப், பூதபேதப் பிரிவாய்,
அறிவாகி நின்ற அளவறியேன் பூரணமே!

பூரண மாலை
501:
வானில் கதிர்மதியாய் வளர்ந்துபின் ஒன்று ஆனதுபோல்,
ஊன் உடலுக் குள்ளிருந்த உயிர்ப்பறியேன் பூரணமே!

502:
பொய்யும் புலையும் மிகப் பொருந்திவீண் பேசலன்றி
ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே!

503:
நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப்
பரம் அதுவே என்னப் பதம் அறியேன் பூரணமே!

504:
கொல்வாய், பிறப்பிப்பாய்; கூட இருந்தே சுகிப்பாய்;
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே!

505:
வாரிதியாய், வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்டம் எல்லாம்
சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே!

506:
வித்தாய், மரமாய், வெளியாய், ஒளியாய் நீ
சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே!

507:
தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்
உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே!

508:
ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே!

509:
நேற்று என்றும் நாளை என்றும் நினைப்புமறப் பாய்ப்படைத்தும்
மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே!

510:
மனம்புத்தி சித்தம்மகிழ் அறிவு ஆங்காரமதாய்
நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே!

511:
உருப்பேதம் இன்றி உய்ந்தசப்த பேதமதாய்க்
குருப்பேத மாய்வந்த குணம் அறியேன் பூரணமே!

512:
சட்சமய பேதங்கள் தான்வகுத்துப், பின்னும்ஒரு
உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே!

513:
முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்துபடைத்து உள்ளிருந்த
செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே!

514:
என்னதான் கற்றால்என்? எப்பொருளும் பெற்றால்என்?
உன்னை அறியாதார் உய்வரோ? பூரணமே!

515:
கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப்
பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே!

516:
வான்என்பார்; அண்டம்என்பார்; வாய்ஞான மேபேசித்
தான் என்பார் வீணர்; தனை அறியார் பூரணமே!

517:
ஆதி என்பார்; அந்தம் என்பார்; அதற்குள்நடுவாய் இருந்த
சோதிஎன்பார்; நாதத் தொழில் அறியார்; பூரணமே!

518:
மூச்சென்பார்; உள்ளம் என்பார்; மோனம்எனும் மோட்சம்என்பார்
பேச்சென்பார்; உன்னுடைய பேர் அறியார்; பூரணமே!

519:
பரம்என்பார்; பானுஎன்பார்; பாழ்வெளியாய் நின்ற
வரம்என்பார்; உன்றன் வழி அறியார்; பூரணமே!

520:
எத்தனை பேரோ எடுத்தெடுத்துத் தான் உரைத்தார்;
அத்தனை பேர்க்கு ஒன்றானது அறிகிலேன்; பூரணமே!

521:
நகார மகாரம் என்பார்; நடுவே சிகாரம் என்பார்
வகாரயகாரம் என்பார்; வகை அறியார் பூரணமே!

522:
மகத்துவமாய்க் காம மயக்கத்துக் குள்ளிருந்து
பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே!

523:
உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல்
பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன், பூரணமே!

524:
வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காயம் எடுத்துக் கலங்கினேன்! பூரணமே!

525:
சந்திரனை மேகமது தான் மறைத்த வாறது போல்
பந்தமுற யானும்உனைப் பார்க்கிலேன்; பூரணமே!

526:
செந்தா மரைத்தாளைத் தினந்தினமும் போற்றாமல்
அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன்நான் பூரணமே!

527:
நீர்மேல் குமிழிபோல் நிலையற்ற காயம் இதைத்
தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன்; பூரணமே!

528:
நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு
வஞ்சகத்தைப் போக்க வகை அறியேன்; பூரணமே!

529:
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன்; பூரணமே!

530:
மாயாப் பிரபஞ்ச மயக்கத்தி லேவிழுந்தே!
ஓயாச் சனனம் ஒழிந்திலேன்; பூரணமே!

531:
பூசையுடன் புவன போகம்எனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே!

532:
படைத்தும் அழித்திடுவாய்; பார்க்கில் பிரமாவெழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீ வியாய்த் துலங்குவிப்பாய்; பூரணமே!

533:
மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த
தந்திரத்தை நான் அறியத் தகுமோ தான் பூரணமே!

534:
அல்லாய்ப் பகலாய் அனவரத காலம் எனும்
சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன்; பூரணமே!

535:
நரகம் சுவர்க்கம்என நண்ணும் இரண்டு உண்டாயும்
அரகரா என்பது அறிகிலேன்; பூரணமே!

536:
பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு
ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன்; பூரணமே!

537:
சாந்தம் என்றும், கோபம் என்றும், சாதிபேதங்கள் என்றும்
பாந்தம் என்றும், புத்தியென்றும் படைத்தனையே; பூரணமே!

538:
பாசம் உடலாய்ப் பசு அதுவும் தான்உயிராய்
நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே, பூரணமே!

539:
ஏதில் அடியார் இரங்கி இகத்தில் வந்துன்
பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே!

540:
நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியது போல் தெவிட்டாய்நீ பூரணமே!

541:
முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேனே; பூரணமே!

542:
பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய்; பூரணமே!

நெஞ்சொடு மகிழ்தல்
543:
அன்று முதல் இன்றளவும் ஆக்கையொடு சூட்சியுமாய்
நின்ற நிலை அறிய நேசமுற்றாய், நெஞ்சமே!

544:
அங்கங்கு உணர்வாய் அறிவாகி யே நிரம்பி
எங்கெங்கும் ஆனதிலே ஏகரித்தாய்; நெஞ்சமே!

545:
அலையாத பேரின்ப ஆனந்த வெள்ளத்தில்
நிலையாய் உரு இருந்து நின்றனையே; நெஞ்சமே!

546:
பாராமல் பதையாமல் பருகாமல் யாதொன்றும்
ஓராது உணர்வுடனே ஒன்றினையே; நெஞ்சமே!

547:
களவிறந்து, கொலையிறந்து, காண்பனவும் காட்சியும்போய்
அளவிறந்து நின்றதிலே அன்புற்றாய் நெஞ்சமே!

548:
பேச்சிறந்து, சுட்டிறந்து, பின்னிறந்து, முன்னிறந்து,
நீச்சிறந்து நின்றதிலே நேசமுற்றாய்; நெஞ்சமே!

549:
விண்ணிறந்து, மண்ணிறந்து, வெளியிறந்து, ஒளியிறந்து
எண்ணிறந்து நின்றதிலே ஏகரித்தாய்; நெஞ்சமே!

550:
பார்த்த இடம் எங்கும் பரம் எனவே உள் புறம்பும்
கோத்தபடி உண்மையெனக் கொண்டனையே நெஞ்சமே!

நெஞ்சொடு மகிழ்தல்
551:
ஊரிறந்து, பேரிறந்து, ஒளியிறந்து, வெளியிறந்து,
சீரிறந்து நின்றதிலே சேர்ந்தனையே; நெஞ்சமே!

552:
ஆண்பெண் அலியென்று அழைக்கஅரி தாய் நிறைந்து
காண்ப அரி தாய இடம் கண்ணுற்றாய் நெஞ்சமே!

553:
ஆங்காரம் அச்சம் அகற்றி அறிவினொடு
தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்றாய் நெஞ்சமே!

554:
ஆதியாய் நின்ற அகண்டபரி பூரணத்தைச்
சாதியா நின்ற இடம் சார்வுற்றாய் நெஞ்சமே!

555:
விருப்புவெறுப்பு இல்லாத வெட்டவெளி யதனில்
இருப்பே சுகம் என்று இருந்தனையே நெஞ்சமே!

556:
ஆரும் உறாப் பேரண்டத்து அப்புறத்தும் இப்புறத்தும்
நீரும் உப்பும் என்ன நிலை பெற்றாய் நெஞ்சமே!

557:
உடனாகவே இருந்து உணர அரி யானோடு
கடல் நீரும் ஆறும்போல் கலந்தனையே; நெஞ்சமே!

558:
நெடியகத்தைப் போக்கி, நின்ற சழக்கறுத்துப்
படிகத்துக் கும்பம்போல் பற்றினையே; நெஞ்சமே!

559:
மேலாகி எங்கும் விளங்கும் பரம் பொருளில்
பாலூறும் மென் சுவைபோல் பற்றினையே; நெஞ்சமே!

560:
நீரொடுதண் ஆலிவிண்டு நீரான வாறேபோல்
ஊரொடுபேர் இல்லானோடு ஒன்றினையே; நெஞ்சமே!

561:
இப்பிறப்பைப் பாழ்படுத்தி இருந்தபடி யேஇருக்கச்
செப்ப அரிதாய இடம் சேர்ந்தனையே; நெஞ்சமே!

562:
மேலாம் பதங்கள் எல்லாம் விட்டுவிட்டு ஆராய்ந்து
நாலாம் பதத்தில் நடந்தனையே; நெஞ்சமே!

563:
கடங்கடங்கள் தோறும் கதிரவன் ஊடாடி
அடங்கும் இடம்தான் அறிந்து அன்புற்றாய்; நெஞ்சமே!

564:
கற்றவனாய்க், கேட்டவனாய்க், காணானாய்க், காண்பவனாய்
உற்றவனாய் நின்றதிலே ஒன்று பட்டாய் நெஞ்சமே!

565:
நாலு வகைக் கரணம் நல்குபுலன் ஐந்தும் ஒன்றாய்
சீலமுற்று நின்றதிலே சேர்ந்தனையே நெஞ்சமே!

566:
விட்டிடமும், தொட்டிடமும், விண்ணிடமும், மண்ணிடமும்
கட்டும்ஒரு தன்மைஎனக் கண்ணுற்றாய்; நெஞ்சமே!

567:
எந்தெந்த நாளும் இருந்தபடி யேஇருக்க
அந்தச் சுகாதீதம் ஆக்கினையே; நெஞ்சமே!

568:
வாக்கிறந்து நின்ற மனோகோச ரம்தனிலே
தாக்கறவே நின்றதிலே தலைசெய்தாய்; நெஞ்சமே!

569:
எத்தேசமும் நிறைந்தே எக்கால மும்சிறந்து,
சித்தாய சித்தினிடம் சேர்ந்தனையே; நெஞ்சமே!

570:
தாழாதே நீளாதே தன்மய மாய்நிறைந்து
வாழாதே வாழ மருவினையே; நெஞ்சமே!

571:
உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக்
கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய்; நெஞ்சமே!

572:
வாதனை போய், நிட்டையும்போய், மாமௌன ராச்சியம்போய்
பேதம்அற நின்ற இடம் பெற்றனையே; நெஞ்சமே!

573:
இரதம் பிரிந்துகலந்து ஏகமாம் ஆறேபோல்
விரகம் தவிர்ந்து அணல்பால் மேவினையே, நெஞ்சமே!

574:
சோதியான் சூழ்பனிநீர் சூறைகொளும் ஆறேபோல்
நீதிகுரு வின்திருத்தாள் நீபெற்றாய்; நெஞ்சமே!

உடல் கூற்று வண்ணம்
575:
ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணிதம் மீதுகலந்து-

576:
பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று
பார்வைமெய்வாய்செவி கால்கைகள் என்ற-

577:
உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்வி ழுந்து
யோகமும்வாரமும் நாளும் அறிந்து-

578:
மகளிர்கள் சேனை தரவணையாடை மண்படஉந்தி
உதைந்துகவிழ்ந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
ஓரறிவீ ரறி வாகிவளர்ந்து-

579:
ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட
வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைபொழிந்து
வாஇருபோவென நாமம்விளம்ப-

580:
உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர்
தங்களொடுஉண்டு தெருவில் இருந்த புழுகி அளைந்து
தேடியபாலரோ டோடிநடந்து அஞ்சுவயதாகி விளையாடியே

581:
உயர்தருஞான குருஉபதேசம் முத்தமிழின்கலை
யும்கரைகண்டு வளர்பிறைஎன்று பலரும்விளம்ப
வாழ்பதினாறு பிராயமும்வந்து-

582:
மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்தொடை
கொண்டைபுனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து
மாகதர்போகதர் கூடிவணங்க-

583:
மதன சொரூபன் இவன் எனமோக மங்கையர் கண்டு
மருண்டு திரண்டு வரி விழிகொண்டு சுழிய எறிந்து
மாமலர் போல் அவர் போவது கண்டு-

584:
மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி-

585:
ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்
வம்பில் இழந்து மதனசுகந்த விதனம்இதென்று
வாலிபகோலமும் வேறு பிரிந்து-

586:
வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்வி ழுந்துஇரு
கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவி ராத குரோதம் அடைந்து- செங்கையினில் ஓர் தடியும் ஆகியே

587:
வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து-

588:
துயில்வரும்நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும்
உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு

589:
கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர்
சஞ்சலம் மிஞ்ச கலகல என்றுமலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து-

590:
தெளிவும்இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு திடமும் உலைந்துமிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து-

591:
மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
என்று தெளிந்து இனி என கண்டம் இனியென தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற-

592:
கடன் முறை பேசும் என உரைநாவுறங்கி விழுந்துகை
கொண்டு மொழிந்துகடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலுசு வாசமும் நின்று-நெஞ்சுதடுமாறி வரும்நேரமே-

593:
வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல்யம தூதர்கள் வந்து-

594:
வலைகொடுவீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து-

595:
பழையவர்காணும் எனும்அயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியும் என்று-

596:
பலரையும் ஏவி முதியவர் தாமிருந்தசவம் கழு
வும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை-

597:
வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிடவாழ்வென வாழ்வென நொந்து-

598:
விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே!

வெளிப்பட்டபின் பாடிய தலப் பாடல்கள்
திருவிடைமருதூர்
599:
மென்று விழுங்கி விடாய்க்கழிக்க நீர்தேடல்
என்று விடியும் எனக்கு எங்கோவே – நன்றி
கருதார் புரமூன்றும் கட்டழலால் செற்ற
மருதா உன் சந்நிதிக்கே வந்து.

திருவொற்றியூர்
600:
கண்டம் கரியதாம் கண் மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல் அழகியதாம் – தொண்டர்
உடல் உருகத் தித்திக்கும் ஓங்கு புகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு.

திருவொற்றியூர்
601:
ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு
இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன் – கடு அருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியிற் பொடி !

602:
வாவிஎல்லாம் தீர்த்த(ம்) மணல் எல்லாம் வெண்ணீறு
காவனங்கள் எல்லாம் கணநாதர் – பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றியூர் !

திருவாரூர்
603:
ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநா ளென்(று)
ஊரூர்கள் தோறும் உழலுவீர் – நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.

604:
எருவாய்க்கு இருவி ரல்மேல் ஏறுண்டிருக்கும்
கருவாய்கோ கண்கலங்கப் பட்டாய் – திருவாரூர்த்
தேரோடும் வீதியிலே செத்துக் கிடக்கின்றாய்
நீரோடும் தாரைக்கே நீ

திருக்காஞ்சி
605:
எத்தனை ஊர்? எத்தனை வீ(டு) எத்தனை தாய் ? பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் – நித்தம்
எனக்குக் கலையாற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட்டோ?

திருக்கச்சிக்காரோணம்
606:
அத்திமுதல் எறும்பீ றானவுயிர் அத்தனைக்கும்
சித்தமகிழ்ந் தளிக்கும் தேசிகா – மெத்தப்
பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப்பற்றி
இசிக்குதையா காரோண ரே.

திருக்காளத்தி
607:
பொய்யை ஒழியாய் புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய் அறம் செய்யாய் – வெய்ய
சினமே ஒழியாய் திருவெழுத்தைந்து ஓதாய்
மனமே உனக்கென்ன மாண்பு ?

திருவிருப்பையூர்
608:
மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே – நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா

திருவையாறு
609:
மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் – பண்ணுமயன்
கையாறவும் அடியேன் கால் ஆறவும் காண்பார்
ஐயா திருவை யாறா

திருக்குற்றாலம்
610:
காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு !

பொது
611:
சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம்
பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்

612:
தோடவிழும் பூங்கோதைத் தோகை உனை இப்போது
தேடினவர் போய்விட்டார் தேறியிரு – நாடி நீ
என்னை நினைத்தால் இடுப்பில் உதைப்பேன் நான்
உன்னை நினைத்தால் உதை.

613:
வாசற் படிகடந்து வாராத பிச்சைக்குஇங்
காசைப் படுவதில்லை அண்ணலே – ஆசைதனைப்
பட்டிருந்த காலமெல்லாம் போதும் பரமேட்டி
சுட்டிறந்த ஞானத்தைச் சொல்.

614:
நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும்
இச்சையிலே தான் அங் கிருப்பதுவும் – பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலிலே
தூங்குவம் தானே சுகம்.

615:
இருக்கும் இடம் தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் – பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே என்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி.

616:
விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் பட்டது பட்(டு)
எந்நேரமும் சிவனை ஏந்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்.

617:
ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே – மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.

618:
வெட்ட வெளியான வெளிக்கும் தெரியாது
கட்டளையும் கைப்பணமும் காணதே – இட்டமுடன்
பற்றென்றால் பற்றாது பாவியே நெஞ்சில் அவன்
இற்றெனவே வைத்த இனிப்பு

619:
இப்பிறப்பை நம்பி இருப்பாரோ ? நெஞ்சமே
வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் – சொப்பனம்போல்
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப்பஞ் சிட்டு அப்பைக்
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.

620:
மேலும் இருக்க விரும்பினையே வெளிவிடையோன்
சீலம் அறிந்திலையே சிந்தையே கால்கைக்குக்
கொட்டை இட்டு மெத்தை இட்டுக் குத்திமொத்தப் பட்ட உடல்
கட்டை இட்டுச் சுட்டுவிடக் கண்டு

621:
ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே – வன்கழுக்கள்
தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக் குத்தித் தின்னக் கண்டு.

622:
இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே ?
மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை – முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு !

623:
முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும் அம்மட்டோ இம்மட்டோ ?
நாம்பூமி வாழ்ந்த நலம்.

624:
எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம் இவை ?
அத்தனையும் மண்திண்ப தல்லவோ ? – வித்தகனார்
காலைப் பிடித்து மெள்ளக் கங்குல்பகல் அற்ற இடத்தே
மேலைக் குடியிருப்போ மே !

625:
எச்சிலென்று சொல்லி இதமகிதம் பேசாதீர்
எச்சில் இருக்கும் இடம் அறியீர் – எச்சில்தனை
உய்த்திருந்து பார்த்தால் ஒருமை வெளிப்படும் பின்
சித்த நிராமயமா மே.

626:
எத்தனை பேர் நட்டகுழி ? எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ் ? நித்தநித்தம்
பொய்யடா பேசும் புவியில்மட மாதரைவிட்டு
உய்யடா உய்யடா உய் !

627:
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே – பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் !

628:
எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தோ – வித்தகமாய்க்
காதிவிளை யாடிஇரு கைவீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான் !

629:
மாலைப் பொழுதில்நறு மஞ்சள் அரைத் தேகுளித்து
வேலை மினுக்கிட்டு விழித்திருந்து – சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்ற பிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின் ?

630:
வான்றேடு மறையேயோ மறைதேடும் பொருளையோ
ஊன்றேடும் உயிரேயோ உயிர்தேடும் உணர்வேயோ
தான்தேட நான்தேடச் சகலமெலாம் தனைத்தேட
நான்தேடி நான்காண நானாரோ நானாரோ.

631:
நாப்பிளக்கப் பொய் உரைத்துநவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே !

632:
மத்தளை தயிர்உண்டானும் மலர்மிசை மன்னி னானும்
நித்தமும் தேடிக் காணா நிமலனே நீஇன் றேகிச்
செய்தகளை கயல்பாய நாங்கூர் சேந்தனை வேந்தன் இட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண் காட்டு ளானே !

633:
வடிவந்தானும் வாலிபம் மகளும் தாயும் மாமியும்
படிகொண்டாரும் ஊரிலே பழிகொண்டால் நீதியோ
குடிவந்தானும் ஏழையோ ? குயவன் தானும் கூழையோ ?
நடுநின்றானும் வீணனோ ? நகரம் சூறை ஆனதே.

634:
மண்ணும் உருகும் மரம் உருகும் மாயை உருகும் மால்உருகும்
பெண்ணும் உருகும் ஆண் உருகும் பேதாபேத வகை உருகும்
அண்ணல் உருகும் இடத்தமர்த்த ஆத் தாள் உருகும் அரவணையான்
எண்ணி உருகும் குருநாதன் என்பால் உரைத்த ஓர் மொழியே.