செல்வம் அருளும் அற்புதப் பதிகம்..!
செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற செல்வத்தை நல்லபடியாக பயன்படுத்தவேண்டும்.
நமக்கு செல்வத்தை அருளக்கூடியதும், செல்வம் நிலைத்திருக்கச் செய்யவும் இந்தப் மந்திரத்தை தினமும் காலையில் குளித்து, நெற்றியில் திருநீறு அணிந்து, சிவபெருமானை தியானித்து இந்த மந்திரம் பாராயணம் செய்தால், நிச்சயம் செல்வம் பெற்று சிறப்புற வாழலாம். பலரும் அனுபவப் பூர்வமாக உணர்ந்த உண்மை இது.
இந்தப் பதிகத்தை அருளியவர் திருஞானசம்பந்தர். அவர் எந்தச் சூழ்நிலையில் இந்தப் பதிகத்தைப் பாடினார் என்பதைப் பார்ப்போம்.
சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர், இறைவன் அருளால் சிவபக்தியில் சிறந்து ஒவ்வொரு தலமாகச் சென்று சிவபெருமானை தேன் தமிழ்ப் பாடல்களால் போற்றி வழிபட்டு வந்தார். அப்படி அவர் திருவாவடுதுறை தலத்துக்கு வந்திருந்தபோது, சீர்காழியில் இருந்த அவருடைய தந்தை சிவபாத இருதயருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.
அந்தக் காலத்தில் வேதியராகப் பிறந்தவர்களுக்கு உரிய காலங்களில் வேதங்கள் வகுத்த நெறிமுறைகளின்படி வேள்விகளைத் தவறாமல் செய்யவேண்டும் என்று விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் சிவபாதஇருதயரும் வேள்வி செய்யவேண்டிய காலம் வந்தது. ஆனால், அதற்குத் தேவையான செல்வம் அவரிடம் இல்லை.
சிவபாதருக்கு செல்வம் இல்லாத சிக்கல் என்றால், ஞானசம்பந்தருக்கு தந்தைக்கு செய்யவேண்டிய கடமையில் இருந்து தவறிவிடக் கூடாத தர்மசங்கடமான நிலை. உள்ள நிலைமை திருஞானசம்பந்தருக்கு புரிந்தது. ஈசனின் அருளை வேண்டி, ‘இடரினும் தளரினும்’ என்ற பதிகத்தைப் பாடினார்.
பதிகம் பாடி முடித்ததும், சிவபெருமானின் ஆணைப்படி சிவபூதம் ஒன்று தோன்றி, அங்கிருந்த பீடத்தின்மேல் ஆயிரம் பொன் கொண்ட ஒரு பாத்திரத்தை வைத்து, ”உமக்கு ஈசன் அளித்த இந்தப் பொற்கிழி உலவா பொற்கிழியாகும். இதில் எடுக்க எடுக்க வளருமே தவிர, குறையாது” என்று சொல்லி மறைந்தது.
சிவபெருமானின் அருளால் தான் பெற்ற செல்வத்தை தந்தைக்கு அனுப்பி, ”இதில் உள்ள பொற்காசுகள் எடுக்க எடுக்க குறையாமல் வளரும். இதை உங்கள் வேள்விக்கு மட்டுமல்லாமல், சீர்காழிப் பதியில் உள்ள அனைத்து வேதியர்களும் வேள்வி செய்யப் பயன்படட்டும்” என்று கூறி அனுப்பினார்.
திருவாவடுதுறை
பண் :காந்தார பஞ்சமம்
பாடல் எண் : 1
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொழிப்புரை :
திருப்பாற்கடலில் , அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும் , இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும் , தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும் , உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன் . அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?
குறிப்புரை :
இடரினும் – துன்பத்திலும் ; தளரினும் – தளர்ச்சியிலும் ; நோய் தொடரினும் – வினைத் தொடர்ச்சியிலும் , உனகழல் தொழுது எழுவேன் – உம்முடைய திருவடிகளைத் தொழுது எழுவேன் . இங்குத் தளர்ந்தாலும் , நோய் தொடர்ந்தாலும் – எனக்கூறின் இடர் என்பதோடு ஒத்து , தளர், தொடர் என்பன முதனிலைத் தொழிற்பெயராய் நின்றன .
பாடல் எண் : 2
வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொழிப்புரை :
ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும் , பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே ! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும் , தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும் , நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும் , வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும் , உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்காக ) எனக்குப் பொருள் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா ?
குறிப்புரை :
வீழினும் உனகழல் விடுவேன் அலேன் என்பது – வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்று நானறியேன் மறுமாற்றம்
தாழ் – தங்குகின்ற ; வெள்ளம் தாழ்விரிசடையாய்
என்ற திரு வாசகத்திலும் இப்பொருளில் வருகிறது . தடம் புனல் – பரவிய புனல் . போழ் இளமதி – இங்கு இத்திருமுறை இரண்டாம் பதிகம் – 6 ஆம் பாசுரத்தில் உரைத்தது கொள்க .
பாடல் எண் : 3
நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொழிப்புரை :
கங்கையையும் , நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே ! அனைவரின் நம்பிக்கைக்கும் , விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும் , கனவிலும் , மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ ? திரு வாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவை யான பொருளை எனக்குத் தாராவிடில் , அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
குறிப்புரை :
மூன்றாம் அடிக்குப் புனலையும் விரிந்த நறுமண முடைய கொன்றைப் பூவையும் அணிந்த என்க . கனல் எரி அனல் புல்கு கையவனே – சுடுகின்ற பற்றி யெரிவதான நெருப்புத் தங்கிய திருக்கரங்களையுடையவனே .
பாடல் எண் : 4
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொழிப்புரை :
கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே ! தும்மல் , அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
குறிப்புரை :
தும்மல் – அடிக்கடி தும்முவதாகிய ஒரு நோய் . தும்மல் இருமல் தொடர்ந்த போதினும்
( தி .3. ப .22. பா .6.) என்பதிலும் காண்க . கணை ஒன்றினால் மும்மதிள் எரியெழ முனிந்தவனே
என்பதில் அம்பு ஒன்று ; எரிந்த மதில் மூன்று என ஓர் நயம் வந்தவாறு . ஈரம்புகண்டிலம் ஏகம்பர்தம் கையில் ஒர் அம்பே முப்புரம் உந்தீபற
என்ற திருவாசகத்திலும் காண்க .
பாடல் எண் : 5
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொழிப்புரை :
கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும் , மை போன்ற கருநிறக் கண்டத் தையும் உடைய மறையவனே ! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும் , பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும் , உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல் , வேறெதனையும் நான் சிந்தை செய்யேன் . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
குறிப்புரை :
கையது – கையிலுள்ள பொருள் . கொய் அணி நறுமலர் குலாயசென்னி – கொய்யப்பட்ட அழகிய நறிய மலர்கள் விளங்கும் தலை . மையணிமிடறு – கருமை பொருந்திய கழுத்து .
பாடல் எண் : 6
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொழிப்புரை :
ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி , நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனி யில் அணிந்துள்ள சங்கரனே ! கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும் , எம் தந்தையே ! உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது . அங்ஙனமிருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நீ எம்மை ஆட்கொள்ளும் வகை இதுவோ . ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்பும் வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
குறிப்புரை :
ஓர் வெருவு உறினும் – ஓர் அச்சம் உண்டானாலும் . வெருவு – வெருவுதல் ; முதனிலைத் தொழிற்பெயர் . வெரு – முதனிலை .
பாடல் எண் : 7
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொழிப்புரை :
அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை , அவனுடைய வடிவம் அழியு மாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும் , அனைத் துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது . இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
குறிப்புரை :
ஒப்புடை ஒருவனை – அழகில் தனக்குத் தானே யொப் பாகிய மன்மதனை . அப்படி அழல் எழ விழித்தவனே என்ற தொடரில் அப்படியென்ற சொல் – வியப்புப்பொருள் தந்தது . அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
( கோளறு திருப்பதிகம் ) என்புழிப் போல .
பாடல் எண் : 8
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொழிப்புரை :
அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும்படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! தீவினை யால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை . இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
குறிப்புரை :
இராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே – பொறுத்தற்கரிய துன்பமுறும்படி கைலை மலையின்கீழ் அடர்த் தருளியவரே . ஆரிடர் – அருமை + இடர் .
பாடல் எண் : 9
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொழிப்புரை :
திருமாலும் , மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நான் உண்ணும் நிலையிலும் , பசியால் களைத்திருக்கும் நிலையிலும் , உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது . அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும் வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
குறிப்புரை :
உண்ணினும் பசிப்பினும் நின்மலர் அடி அலால் உரையாது என்நா – நலம் தீங்கினும் உன்னை மறந்தறியேன்
என்பதனை நினைவுறுத்துகிறது .
பாடல் எண் : 10
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொழிப்புரை :
புத்தரும் , சமணரும் புறங்கூறினாலும் பொருட் படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே ! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும் , தலைவா ! உன் திரு வடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
குறிப்புரை :
பித்து – பித்தம் . புத்தரும் சமணரும் புறன் உரைக்கப் பத்தர்கட்கருள் செய்து பயின்றவனே – இவ்வடிகளில் வரும் உரைக்க என்னும் செய என் எச்சம் , காரண , காரிய , உடனிகழ்ச்சி யல்லாத பொருளின் கண்வந்தது வாவி தொறும் செங்கமலம் முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள் காட்ட
என்புழிப்போல .
பாடல் எண் : 11
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர் நிலமிசை நிலையிலரே.
பொழிப்புரை :
அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர் . துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார் .
குறிப்புரை :
இலைநுனி வேற்படை – இலைபோன்ற நுனியை யுடைய திரிசூலம் ; இலைமலிந்த மூவிலைய சூலத்தினானை
என்புழியும் ( திருமுறை 7) காண்க . விலையுடை அருந்தமிழ்மாலை
இப்பதிகம் . தந்தையார் பொருட்டுப் பொன்பெறுவது . ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் எனப்பாடினமையால் இங்ஙனம் விலையுடை யருந்தமிழ்மாலை எனப்பட்டது .