இரசம் என்பது உணவாகத் தயாரித்து உண்ணப்படும் திரவமாகும்.
உணவு உண்பதற்குச் சற்று முன்னரோ உணவுடனோ அல்லது உணவின் பின்னரோ ரசம் உட்கொள்ளப்படும்.
உணவின் செரிமானத்தை அதிகரிப்பதற்கும் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் உணவில் ரசம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
புளியை நீரில் கரைத்து, உப்பு மற்றும் மசாலாப் பொடிகள் சேர்த்து, கொதிக்க வைத்த உணவுப்பொருள் ‘ரசம்’ எனப்படும்.
இது தமிழகத்தில் மிகவும் பிரபலமாகும். பொதுவாக தமிழர்களின் மதிய உணவு என்பது சோற்றுடன் முதலில் குழம்பு, பிறகு ரசம், கடைசியில் தயிர் என்ற வரிசையில் பரிமாறப்படும்.
ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லாத் தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் செய்து மகிழ்வர்.
ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும். புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான்
சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லிக்கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும்.
இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.
புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது. கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.
புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன.
கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறிவேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.
ரசம் மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது. வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா,நீரிழிவு, சிறுநீரக் கோளாறு, முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.
நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது.
ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின்களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.
தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.
ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.
ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது. வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.
மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம்.
வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலியவற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.
எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.
அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.
சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.
‘சௌத் இண்டியன் சூப்பர் சூப்!’- இது, நம்ம ஊர் ரசத்துக்கு வெளிநாட்டவர்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர்.
நாக்கின் ருசி நரம்புகளைத் தூண்டி, சாப்பிடும் அனுபவத்தை ஆனந்தமாக்குவதால்தான், நம்முடைய சாப்பாட்டில் ரசத்துக்கு ஸ்பெஷல் இடஒதுக்கீடு கொடுத்திருக்கிறோம்.
அத்தகைய ரசத்தை, இங்கே வித விதமாக சமைத்து திக்குமுக்காட வைக்கிறார் சமையல் கலை நிபுணர் .

1 மிளகு ரசம்- வகை 1
தேவையான பொருட்கள்:
புளி : சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி : 3
மிளகு : 1 ஸ்பூன்
சீரகம் : 1/2 ஸ்பூன்
பூண்டு : 8 பல் (சிறியது)
கருவேப்பிலை : 2 கீற்று
கொத்தமல்லி இலை : சிறு கைபிடி அளவு
தாளிக்க:
கடுகு : ¼ டீஸ்பூன்
சீரகம் : ¼ டீஸ்பூன்
வெந்தயம் : ¼ டீஸ்பூன்
பெருங்காயம் : சிறிதளவு
நல்லெண்ணெய் : தேவைக்கு
உப்பு : தேவைக்கு
செய்முறை:
புளியை தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முதலில் மிளகு, சீரகத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளிக் கரைசல், அரைத்த தக்காளி விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை இவை மூன்றையும் ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து வைத்துக் கொள்ளவும.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும். தணலைக் குறைத்த விட்டு அதனோடு அரைத்த மிளகு சீரகக் கலவையை சேர்த்து ½ நிமிடம் வதக்கி பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
கடைசியாக புளி, தக்காளி மற்றும் கொத்தமல்லி இலை கலந்த கலவையை ஊற்றி, உப்பு சேர்க்கவும். தணலைக் கூட்டி வைக்கவும். ரசம் நுரை கூடியதும் பாத்திரத்தில் மூடி விடவும். சுவையான மிளகு ரசம் தயார்.
குறிப்பு: புளியின் அளவு மிகவும் கூடியோ, குறைந்தோ இருந்தால் ரசம் நன்றாக இருக்காது.
இதே ரசத்தில் புளிப்புச் சுவையை சிறிது அதிகப்படுத்திக் கொண்டு அதோடு வேக வைத்து மசித்த துவரம் பருப்பை ஒரு கைபிடி அளவு சேர்க்க பருப்பு ரசம் தயார்.

2.மிளகு ரசம் வகை 2
தேவையானவை: புளித் தண்ணீர் – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் புளித் தண்ணீரை விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து புளிவாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும்.

3. தக்காளி மிளகு ரசம்
*தேவையானவை*புளி – எலுமிச்சம் பழ அளவு*
*தக்காளி – ஒரு கப் மசித்தது
*மிளகுத்தூள் – முக்கால் தேக்கரண்டி
*நெய் – 2 மேசைக்கரண்டி
*கடுகு – ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை – ஒரு கை பிடி
*பூண்டு – 8 பல்(சிறியது)
*ரசப்பொடி – 2 தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி
*மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
*தண்ணீர் – 6 கப்
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- புளியை போதுமான நீரில் ஊறவைத்து சாறெடுக்கவும். சாறு ஒரு கப் இருக்க வேண்டும்.
- இதில் தண்ணீர், தக்காளி, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
2 நிமிடம் கொதித்த பிறகு, இன்னொரு பக்கம் வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
- கடுகு சேர்த்து அது வெடித்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மிகக்குறைந்த தீயில் சிறிது வதக்கவும்.
- பிறகு தூள்களைச் சேர்த்து மீதமுள்ள கால் தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து, ஒரு தடவை பிரட்டி ரசத்தில் கொட்டி, போதிய உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- தக்காளி மிளகு ரசம் தயார்.

4. மிளகு ரசம் வகை 3
தேவையான பொருட்கள்
புளி – ஒரு எழுமிச்சம் பழ அளவு,
துவரம்பருப்பு – 3 தேக்கரண்டி,
மிளகு – 1 1/2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் – 2,
சீரகம் – 1/2 தேக்கரண்டி,
பெருங்காயம் – சிறிது,
கறிவேப்பிலை – சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
நெய் – 2 ஸ்பூன்.
செய்முறை
புளியை 1/2 லிட்டரில் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
புளித்தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு, துவரம் பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல் தனிதனியாக வறுக்கவும்.
பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்ததை கொதிக்கும் புளித்தண்ணீரில் சேர்த்து, பொங்கி வரும் சமயம் இறக்கவும். மீதியுள்ள நெய்யில் சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

5. சின்ன வெங்காய ரசம்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 10
புளி – ஒரு எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 25 கிராம்
தக்காளி – 2
கடுகு – தாளிக்க தேவையான அளவு
மிளகு – 2 ஸ்பூன்
பூண்டு – 3
சீரகம் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
பெருங்காயதூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லி கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணைய் – 2 ஸ்பூன்
செய்முறை
சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை கையால் நன்கு மசித்து கொள்ளவும்..
துவரம் பருப்பை நன்றாக வேக வைத்து கொள்ளவும்
மிளகு,சீரகம்,பச்சை மிளகாய் மற்றும் பூண்டினை மிக்ஸியில் அரைக்கவும்.
பின்பு புளியை நன்றாக கரைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் பெருங்காயம் மற்றும் மசித்த தக்காளியையும் சேர்க்கவும்.
ஒரு கடாயில் எண்ணை சூடாக்கி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தை வதக்கி அதில் ,மிக்ஸியில் அரைத்த கலவையை போட்டு,புளி தண்ணீரை ஊற்றவும். துவரம் பருப்பை நன்கு மசித்து போடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து,ரசம் நுரை பொங்கி வரும்போது கொத்தமல்லி தழையை துவி இறக்கவும்.
சுவையான சின்ன வெங்காய ரசம் ரெடி.

6. சீரக ரசம்
தேவையான பொருட்கள்
புளி எலுமிச்சை அளவு
உப்பு தேவைக்கு
அரைக்க–
1 டீஸ்பூன்சீரகம்
1/2 டீஸ்பூன்மிளகு
2வற்றல் மிளகாய்
1 கொத்துகறிவேப்பிலை
1 டீஸ்பூன்தனியா
1 டீஸ்பூன்து.பருப்பு
தாளிக்க—
1 டீஸ்பூன்நெய்,கடுகு
அரைக்க கொடுத்தவற்றை 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர்சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
புளி கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
பொடி வாசனை போனதும் அரைத்ததை தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும்
கடுகு தாளித்து கறி வேப்பிலை சேர்க்கவும்

7. தக்காளி ரசம்
தேவையான பொருட்கள்:
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
வரமிளகாய் – 4
புளி – சிறிது
தக்காளி – 4
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
மிக்சியில் மிளகு, சீரகம், வரமிளகாய்-3, புளி, பூண்டு, தக்காளி என அனைத்தையும் போட்டு நன்கு அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு ரசத்துக்கு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் கலந்து வைத்த ரசக்கலவையை ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி பறிமாறலாம்.

8. இஞ்சி-ஜீரா ரசம்
தேவையானவை:
*துவரம் பருப்பு – கால் படி
*ரசப்பொடி – ஒரு தேக்கரண்டி
*புளி – 2 கொட்டைப்பாக்கு அளவு
*சிறிய தக்காளி – ஒன்று
*கடுகு – கால் தேக்கரண்டி
*பெருங்காயம் – ஒரு துண்டு
*இஞ்சி – ஒரு துண்டு
*ஜீரா – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி – வாசனைக்கு
*கறிவேப்பிலை – வாசனைக்கு
*உப்பு – ஒரு தேக்கரண்வு
செய்முறை:
- இந்தச் சாற்றினை மேலாக இறுத்து வைத்துக் கொண்டால் சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும்.
- தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பருப்பை அரை படி தண்ணீரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வைக்கவும்.
- புளியை தண்ணீரில் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைச்சலுடன் உப்பு, பெருங்காயம், நறுக்கிய தக்காளி, ரசப்பொடி, ஜீரகப் பொடி போட்டு 8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- பிறகு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை போட்டு நுரைத்து வந்தவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு தாளித்த கடுகையும் போட்டு இறக்கிவைத்து இஞ்சி சாற்றை சேர்க்கவும்.
விருப்பமானால் அரை தேக்கரண்டி சீரகமும் தாளித்து சேர்க்கலாம்.

9. கொட்டு ரசம்
தேவையானவை: புளித் தண்ணீர் – 2 கப், ரசப்பொடி – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. ரசப்பொடி செய்ய – தேவையானவை: தனியா – 300 கிராம், மிளகு – 100 கிராம், துவரம்பருப்பு – 100 கிராம், கடலைப்பருப்பு – 50 கிராம், சீரகம் – 25 கிராம், மஞ்சள்துண்டு – சிறியது, காய்ந்த மிளகாய் – 20-லிருந்து 30 அல்லது காரத்துக்கு ஏற்றப்படி (கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்). செய்முறை: புளித் தண்ணீரை கொதிக்கவிடவும். புளி வாசனை போனவுடன் உப்பு, ரசப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு பொங்கு பொங்கியவுடன் கீழே இறக்கி… கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

10. முருங்கைப் பிஞ்சு ரசம்
தேவையானவை: முருங்கைப் பிஞ்சு (நறுக்கியது) – ஒரு கப், துவரம்பருப்பு – கால் கப், தக்காளி – 2, மிளகு – சீரகத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பு, தக்காளி, முருங்கைப் பிஞ்சு ஆகியவற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, உப்பு, மிளகு – சீரகத்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.

11. வெங்காய ரசம்
தேவையானவை: தனியா – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 4 பல், தக்காளி – 2, நறுக்கிய வெங்காயம் – கால் கப், புளித் தண்ணீர் – 2 கப், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சித் துருவல், பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கி விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும் (தேவைப்பட்டால் இன்னும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை தூவவும் .

12. வெங்காய ரசம் வகை 2
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 4
புளி – ஒரு எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 1/4 கப்
தக்காளி – 1
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தபருப்பு – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
பூண்டு – 3
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
கொத்தமல்லி தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணை – 1 தேக்கரண்டி
செய்முறை
சின்ன வெங்காயத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும்.தக்காளியை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை நன்றாக வேக வைத்து கொள்ளவும்
புளியை நன்றாக கரைத்துக் கொள்ளவும்.பின் அதில் 1 டம்லர் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் பெருங்காயத்தை போடவும்.
மிளகு,சீரகம்,பச்சை மிளகாய் மற்றும் பூண்டினை மிக்ஸியில் அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணை சூடாக்கி கடுகு,உளுந்த பருப்பு, கருவேப்பிலை போடவும்.கடுகு வெடித்தவுடன் சின்ன வெங்காயத்தை போடவும்.1 நிமிடம் வதக்கிய பின் தக்காளியை போடவும்.
தக்காளி வதங்கிய பின்,மிக்ஸியில் அரைத்த கலவையை போட்டு,புளி தண்ணீரை ஊற்றவும்.
துவரம் பருப்பை நன்கு மசித்து போடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து,ரசம் கொதிக்க ஆரம்பம் ஆகும் போது இறக்கவும்.
கொத்தமல்லி தழையை நன்றாக சுத்தம் செய்து ரசத்தை இறக்கிய பின் தூவவும்.
சுவையான வெங்காய ரசம் தயார்.

13. கொத்தமல்லி ரசம்
தேவையானவை: தக்காளி – 3, தனியா – 2 டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கொத்தமல்லி – ஒரு சிறிய கட்டு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தக்காளி, கொத்தமல்லியுடன் தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பெருங்காயம் தேவை இல்லை.

14. வேப்பிலை ரசம்
தேவையானவை: கறிவேப்பிலை – ஒரு கப், துவரம்பருப்பு – 3 டீஸ்பூன், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், புளி – ஒரு சிறிய உருண்டை, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், நெய் – சிறிதளவு, கடுகு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் ஓரிரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

15. பொரித்த ரசம் – 1
தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் – 2 கப், தக்காளி – 2, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. அரைக்க: துவரம்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, மிளகு – ஒரு டீஸ்பூன் (சிறிது நெய்யில் வறுக்கவும்), சீரகம் – ஒரு டீஸ்பூன் (வறுக்க வேண்டாம்). செய்முறை: பருப்புத் தண்ணீர், தக்காளி துண்டுகள் சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும். (அல்லது பருப்பு, தக்காளி துண்டுகளை ஒன்றாக வேக வைத்து மசிக்கவும்). இதில் தேவையான அளவு அரைத்த பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, பொங்க வைத்து, கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.

16. பொரித்த ரசம் – 2
தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்புத் தண்ணீர் – 2 கப், காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு – ஒரு கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தனியா, உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து, சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, உப்பு கலந்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து…. கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

17. திப்பிலி ரசம்
தேவையானவை: கண்ட திப்பிலி – 10 கிராம், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு – ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சம் பழ அளவு, எண்ணெய், உப்பு – தேவையானஅளவு. செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு திப்பிலியை வறுக்கவும். கீழே இறக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும் காய்ந்த மிளகாய், புளி, மிளகு, சீரகம் ஆகியவற்றை இதில் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கரைத்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும் .

18. ஒப்பட்டு ரசம்
தேவையானவை: வேக வைத்த கடலைப்பருப்பு – அரை கப், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – 3 டேபிள்ஸ்பூன், புளித் தண்ணீர் – 2 கப், ரசப்பொடி – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வேக வைத்த கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியாக அரைத்து, வாணலியிலில் சேர்த்து கிளறிக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். பெருங்காயத்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு, பருப்புக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

19. ஆப்பிள் ரசம்
தேவையானவை: பொடியாக நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) – அரை கப், தக்காளி துண்டுகள் – கால் கப், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. வறுத்து அரைக்க: துவரம்பருப்பு – இரண்டு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2. செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள் ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளை 3 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும் (குழைய வேகவிட வேண்டாம்). பிறகு, இதில் தக்காளி துண்டுகள், மசித்த பருப்பு, வறுத்து அரைத்த விழுது, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, இரண்டு கொதி விட்டு இறக்கவும். எண்ணெ யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப் பிலை கிள்ளிப் போடவும்.

20. துவரம்பருப்பு ரசம்
தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் – 2 கப், தக்காளி சாறு – அரை கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு – மிளகு – மிளகாய் அரைத்த பொடி – 2 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, அரைத்த பொடி, உப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

21. கிள்ளு மிளகாய் ரசம்
தேவையானவை: காய்ந்த மிளகாய் – 2, கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், புளித் தண்ணீர் – 2 கப், கறிவேப்பிலை, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையானஅளவு. செய்முறை: புளித் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்கவிட்டு… உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு மற்றும் இரண்டாக கிள்ளிய மிளகாயை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை கிள்ளி சேர்க்கவும்.

22. மாங்காய் ரசம்
தேவையானவை: மாங்காய் துருவல் – அரை கப், துவரம்பருப்பு, மிளகு – தலா 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, தக்காளி சாறு – கால் கப், கடுகு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆறியபிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தக்காளி சாறு, உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

23. திடீர் ரசம்
தேவையானவை: புளி – எலுமிச்சம் பழ அளவு, துவரம்பருப்பு – 3 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், தனியா – 6 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: புளி, துவரம்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகிவற்றை லேசாக எண்ணெயில் வறுத்து, மிக்ஸியில் பவுடராக செய்து கொள்ளவும். இதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற் றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ரசம் தேவைப்படும் போது ஒரு பாத்திரத்தில் இந்தப் பொடியை போட்டு, தேவையான தண்ணீர் விட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சட்டென்று செய்யக் கூடியது இந்த ரசம்.

24. டொமேட்டோ ப்யூரி ரசம்
தேவையானவை: டொமேட்டோ ப்யூரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், ரசப்பொடி – 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: டொமேட்டோ ப்யூரியில் தேவையான தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு ரசப்பொடி, உப்பு, பெருங்காயத்தூள் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும்.

25. தனியா ரசம்
தேவையானவை: தனியா – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தக்காளி – கால் கிலோ, கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து அரைக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து, வறுத்து அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும்.

26.பார்லி ரசம்
தேவையானவை: பார்லி – ஒரு கப், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு – அரை கப், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடிக்கவும். பார்லியில் 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் இந்த தண்ணீருடன் தக்காளி சாறு, மிளகு – சீரகப் பொடி, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

27. மோர் ரசம்
தேவையானவை: மோர் – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், வெந்தயம், கடுகு – தலா அரை டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு, செய்முறை: துவரம்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகு ஆகியவற்றை வறுத்து, சீரகத்தை சேர்த்து அரைக்கவும். மோரில் மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து லேசாக சூடு செய்து (கொதிக்க வைக்க வேண்டாம்) கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

28. மோர் ரசம் வகை 2
தேவையான பொருட்கள்
மோர் – 2 கப்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
கடுகு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
உப்பு – தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
தனியா – 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
வெந்தயம், மிளகு – தலா கால் டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3.
செய்முறை:
வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். மோருடன் மஞ்சள்தூள், கறிவேப் பிலை, பெருங்காயத்தூள், ஒரு கப் நீர், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, மோர் கரை சலை ஊற்றி நுரைத்து வரும் சமயம் வறுத்துப் பொடித்த பொடி சேர்த்துக் கலந்து, கொத்த மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

29. புளி இல்லாத ரசம்
தேவையானவை: தக்காளி சாறு – 2 கப், வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் – அரை கப், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (நீள வாக்கில் கீறியது) – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு, கடுகு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை : உளுத்தம்பருப்பையும், மிளகையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். தக்காளி சாறு, பருப்புத் தண்ணீர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அரைத்த பொடியையும் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீறிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கீழே இறக்கி, எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

30. புதினா ரசம்
தேவையானவை: புதினா இலைகள் – ஒரு கப், மிள காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி சாறு (அ) புளித் தண்ணீர் – 2 கப், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: புதினா இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும் இந்த நீரில் உப்பு, மிளகாய்தூள், சீரகத்தூள் பெருங்காயத் தூள், தக்காளி சாறு அல்லது புளி தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

31. இஞ்சி ரசம்
தேவையானவை: இஞ்சித் துருவல் – கால் கப், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு – 2 கப், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: இஞ்சித் துருவலுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துவரம்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு, தக்காளி சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

32. இஞ்சி ரசம் வகை 2
தேவையான பொருட்கள்
புளி – லெமென் சைஸ்
தக்காளி – ஒன்று
துவரம் பருப்பு – 1 1/2 மேசைக்கரண்டி (வேக வைத்தது)
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
வறுத்து அரைக்க:
நெய் – ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – ஒன்று
மிளகு – 9
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – இரண்டு பல்
முழு தனியா – ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி – இரண்டு அங்குல துன்டு
தாளிக்க:
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஐந்து ஆர்க்
வெந்தயம் – மூன்று
கொத்தமல்லி தழை – சிறிது
செய்முறை
துவரம் பருப்பை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்.
புளியை நன்கு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் தக்காளி பழத்தை இரண்டாக (அ) நான்காக நறுக்கி போட்டு உப்பு அரை தேக்கரண்டி, மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி போட்டு கொதிக்க விட வேண்டும்.
வறுத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை தனியாக நெய்யில் வறுத்து ஆறியதும் அரைத்து தண்ணீர் அரை டம்ளர் சேர்த்து அரைத்து ஊற்றி கொள்ளுங்கள்.
உப்பு பார்த்து விட்டு கடைசியில் கூட சேர்த்து கொள்ளுங்கள்
தக்காளி வெந்ததும் வறுத்து அரைத்து வைத்துள்ளதையும் போட்டு, வேக வைத்த பருப்பு தண்ணியும் ஊற்றி கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
கடைசியில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

33. இளநீர் ரசம்
தேவையானவை: இளநீர் – 2 கப், தக்காளி சாறு – அரை கப், துவரம்பருப்பு, மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், இளநீர் வழுக்கை – கால் கப், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கடைசியில் இளநீர் வழுக்கையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் இளநீர், தக்காளி சாறு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும்.

34. ஸ்பெஷல் எலுமிச்சை ரசம் தேவையானவை: தக்காளி – 3, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், கடுகு, நெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், ஆகியவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும் இதனுடன் தேவையான தண்ணீர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். கடைசியாக, நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

35. பூண்டு ரசம் வகை 2
தேவையான பொருட்கள்
பூண்டு – 10 பல்
புளி – ஒரு எலுமிச்சம்பழ்ம் அளவு
மஞ்சபொடி – அரைஸ்பூன்
ரசப்பொடி – ஒருஸ்பூன்
மிளகு தூள் – அரைஸ்பூன்
ஜீரகத்தூள் – அரைஸ்பூன்
கடுகு – அரைஸ்பூன்
ஜீரகம் – அரைஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்
நெய் – ஒருடேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
புளியைக்கரைத்து வடிகட்டவும்.
புளிக்கரைசலில் மஞ்சதூள், மிளகுதூள்,ஜீரகதூள்,ரசம்பொடி,பெருங்காயம் உப்பு
சேர்த்து கொதிக்க விடவும்.
பூண்டை நசுக்கி கொள்ளவும்,கடாயில் நெய் ஊற்றிகடுகு, ஜீரகம்,பூண்டு தாளித்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும்.
கருவேப்பிலை சேர்க்கவும்.

36. அரைத்துவிட்ட பூண்டு ரசம் தேவையானவை: துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு பல் – 10, புளித் தண்ணீர் – 2 கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையானஅளவு. செய்முறை: துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். அதில் அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

37. ஸ்பெஷல் பூண்டு ரசம்
தேவையானவை: புளித் தண்ணீர் – 2 கப், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 4 பல், தக்காளி – ஒன்று, கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: சிறிதளவு எண்ணெயில் துவரம்பருப்பு, சீரகம், பூண்டு ஆகியவற்றை வதக்கி கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் தக்காளி துண்டுகளை வேகவிடவும். பிறகு அரைத்த விழுது, உப்பு சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

38. ஓமவள்ளி சாறு ரசம்
ஓமவள்ளி இலை 5, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு, தக்காளி, நெய் ( வதக்க), எண்ணெய், கடுகு, சீரகம் உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக அரைக்கவும். இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும்

39. உருண்டை ரசம்
தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், புளித் தண்ணீர் – 2 கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன். செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து, அரைத்து ஆவியில் வேக விடவும். வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீருடன் மஞ்சள்தூள் சேர்த்து, புளி வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வறுத்து அரைத்த விழுதை இதில் சேர்த்து, உப்பு போடவும். ஆவியில் வேக வைத்து எடுத்த பருப்பு கலவையிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ரசத்தில் போட்டு, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.

40. அரச்சுவிட்ட ரசம்
தேவையானவை:
*பருப்பு தண்ணீர் (அ) அரிசி களைந்த நீர் – 3 கப்
*தக்காளி – ஒன்று
*புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
*சீரகம் – ஒரு தேக்கரண்டி
*மிளகு – ஒரு தேக்கரண்டி
*பூண்டு – 4 பல்
*மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
*கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், எண்ணெய் – தாளிக்க
*கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- பருப்பு தண்ணீர் இல்லையென்றால் அரிசி களைந்து இரண்டாவதாக
- கழுவிய நீரில் புளியை ஊற வைக்கவும். சீரகம், பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- தக்காளியை சுடு நீரில் போட்டு தோலுரித்து நசுக்கி வைத்து கொள்ளவும். எண்ணெயை காய வைத்து தாளிக்க கூறியுள்ளதை தாளிக்கவும்
- தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்
- புளி கரைசலை சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவும்
- நுரைகட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்
இறக்கி வைத்து மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்

41. தேங்காய்ப் பால் ரசம்
ரசம் வகைகளிலே நாம் இன்று பார்க்க போவது தேங்காய் பாலில் செய்யக்கூடிய ருசியான ரசம் வகை. தேங்காய் பால் கொண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போமா..
தேவையான பொருட்கள்:
முதல் தேங்காய்ப்பால் – 1 கப், இரண்டாம் தேங்காய்ப்பால் – 1/2 கப், உப்பு – தேவைக்கு, புளிக்கரைசல் – 1/2 கப், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், துவரம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன்,
அலங்கரிக்க:
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
எண்ணெய், கடுகு, பெருங்காயம் – தலா 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் – 3, கறிவேப்பிலை – 1 கொத்து.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்து, நைசாக கெட்டியாக அரைத்து கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் இரண்டாம் பால், அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்க விட்டு, புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் இரண்டு கொதி விடவும்.
இப்பொழுது முதல் தேங்காய்ப்பால் ஊற்றி, நுரை தட்டியதும் கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களைத் தாளித்து கொட்டி இறக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

42. கண்டந்திப்பிலி ரசம்
தேவையானவை:
*கண்டந்திப்பிலி – ஒரு மேசைக்கரண்டி
*தக்காளி – ஒன்று
*கொத்தமல்லி – ஒரு கொத்து
*வேக வைத்த பருப்பு – கால் கப்
*புளி தண்ணீர் – அரை கப்
*உப்பு – ஒன்றரை தேக்கரண்டி
*மிளகு, சீரகப் பொடி – ஒரு தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
*நெய் – 2 தேக்கரண்டி
*எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை
- தக்காளியை கழுவி விட்டு நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும். கண்டந்திப்பிலியை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு எண்ணெய் சட்டியில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்.
- அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி கண்டந்திப்பிலிப் பொடி போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்
- ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் நன்கு சுவையாக இருக்கும்
- ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
- பிறகு இரும்பு குழிக்கரண்டி அல்லது சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்
- கடுகு வெடித்ததும் மீதம் உள்ள கண்டந்திப்பிலி பொடியை போட்டு தாளித்து அதை ரசத்தில் ஊற்றி அதே கரண்டியை வைத்து ரசத்தை கலக்கி விடவும்.
- இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார். உடல் அலுப்பினை போக்குவதற்கு இந்த கண்டந்திப்பிலி ரசம் கைகண்ட மருந்து. உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது இந்த கண்டந்திப்பிலி
ரசம்

43. மைசூர் ரசம்
தேவையானவை: வேக வைத்த துவரம்பருப்பு – அரை கப், தக்காளி – 6, வெல்லம் – சிறிய துண்டு, கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தனியா – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், நெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: நெய்யில் கடலைப்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவப்பாக வறுத்துக் கொள்ளவும் (சீரகத்தை வறுக்க வேண்டாம்). மிக்ஸியில் தண்ணீர் விட்டு, வறுத்து வைத்திருப்பவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். கூடவே சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தக்காளியை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தக்காளி சாறு, வேகவைத்து மசித்த துவரம்பருப்பு மற்றும் பருப்பு வேகவைத்த தண்ணீர் இவற்றுடன் அரைத்த விழுதையும் சேர்த்து, உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். வெல்லம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

44. மைசூர் ரசம்
ரச வகைகளில் மைசூர் ரசத்திற்கு என்றும் சிறப்பு உண்டு. மற்ற ரசங்களைவிட தயாரிப்பதற்கு சற்று நேரம் பிடிக்கும். தேங்காய் சேர்க்கப்படுவது இந்த ரசத்தின் சிறப்பு அம்சம். அலாதியான சுவையுடையது.
தேவையானவை:
*துவரம் பருப்பு – 4 மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் – 2
*மல்லி – 4 தேக்கரண்டி
*மிளகு – 2 தேக்கரண்டி
*சீரகம் – ஒரு தேக்கரண்டி
*தக்காளி – 2
*தேங்காய் துருவல் – கால் கப்
*மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை – 2 கொத்து
*புளி – சிறிய எலுமிச்சை அளவு
*கடுகு – ஒரு தேக்கரண்டி
*உப்பு – அரை தேக்கரண்டி
செய்முறை:
- தக்காளியை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்
- ரசப்பொடி தயாரிக்க, துவரம் பருப்பில் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மல்லி, மிளகு, சீரகம் ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.
- முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் பருப்பைப் போட்டு நன்கு வேகவிடவும். பருப்பு வேக சற்று நேரம் எடுக்கும். அந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் கீழ்கண்டவற்றை செய்துகொள்ளவும்
- வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடி தயாரிக்க வைத்துள்ள துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், மல்லி, மிளகு, சீரகம் போட்டு சிவக்க வறுக்கவும்
- வறுத்து எடுத்தவற்றை ஆறவைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெயில்லாமல் தேங்காய் துருவலை போட்டு வறுத்து எடுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும்
- புளியை ஒன்றரை கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.
- வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து தக்காளியை போட்டு 30 நொடி வதக்கவும்
- தக்காளி சற்று வதங்கிய பின்பு, புளிக்கலவையை ஊற்றி சுமார் 3 நிமிடம் கொதிக்க விடவும்
- அதில் 2 மேசைக்கரண்டி பொடித்த ரசப் பொடியை போட்டு ஒரு நிமிடம் வேகவிடவும். பிறகு வேக வைத்த பருப்பை மசித்துக் கொட்டி, ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய் பொடி 2 மேசைக்கரண்டி போட்டு கலக்கி விடவும்
- ரசம் கொதித்து நுரைத்தவுடன் இறக்கி விடவும்.மேலே சிறிது தேங்காய்ப் பொடியினை தூவலாம். மைசூர் ரசம் தயார். தேங்காய், பருப்பு அதிகம் சேர்ப்பதுதான் மைசூர் ரசத்தின் சிறப்பு

45. பைனாப்பிள் ரசம்
தேவையானவை:
*துவரம்பருப்பு – 100 கிராம்
*புளி – 10 கிராம்
*அன்னாசி – 4 துண்டுகள்
*உலர்ந்த மிளகாய் – 6
*தனியா – 5 கிராம்
*கொத்தமல்லி – சிறிது
*கறிவேப்பிலை – சிறிது
*கடுகு – அரைத்தேக்கரண்டி
*எண்ணெய் – 10 கிராம்
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.
- ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள்.
- பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள்.
- எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள்.
- மேலும் நன்றாகக் கொதித்ததும் மேலும் இருநூறு மில்லி தண்ணீர் விட்டுச் சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்குங்கள்.
- கடுகைத் தாளித்துக் கொட்டுங்கள். கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் போட்டு உபயோகியுங்கள்.

46. எலுமிச்சம் பழ ரசம்
தேவையானவை:
*துவரம் பருப்பு – கால் ஆழாக்கு
*உப்பு – ஒரு தேக்கரண்டி
*ரசப்பொடி – ஒரு தேக்கரண்டி
*தக்காளி – ஒன்று
*சிறிய எலுமிச்சம் பழம் – ஒன்று
*கடுகு – கால் தேக்கரண்டி
*பெருங்காயம் – ஒரு துண்டு
*தனியா – கால் தேக்கரண்டி
*மிளகு – கால் தேக்கரண்டி
*சீரகம் – கால் தேக்கரண்டி
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பருப்பை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- தண்ணீரில் தக்காளிப்பழத்தை பிசைந்து அதில் ரசப்பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- அதனுடன் வேகவைத்த பருப்பையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவிடவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் தனியா, மிளகு இவற்றை இரண்டு நிமிடங்கள் வறுத்து சீரகத்தோடு வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து ரசத்தில் தூவவும். சீரகத்தை வறுக்க வேண்டாம்.
- வாணலியில் எண்ணேய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் கொட்டவும்

47. வேப்பம்பூ ரசம்
தேவையானவை:
*புளி — எலுமிச்சம் பழம் அளவு [கரைத்த தண்ணீர்]
*மிளகு — 1/2 டீஸ்பூன்
*சீரகம் — 1/2 டீஸ்பூன்
*கரிவேப்பிலை — 2 இனுக்கு
*பெருங்காயம் — 1/2 டீஸ்பூன்
*எண்ணைய் — 1 ஸ்பூன்
*கடுகு,உளுத்தம் பருப்பு — 1 டீஸ்பூன்
*மிளகாய் வத்தல் — 3 என்னம்
*வெந்தயப் பொடி — 1/2 டீஸ்பூன்
*உப்பு — ருசிக்கேற்ப
*தக்காளி — 2 என்னம்[(நன்றாக பிசைந்து கரைத்தத])]கொத்தமல்லி தழை — 1 *டேபிள்ஸ்பூன் [பொடியாக நறுக்கியது)
*வேப்பம்பூ — 1 ஸ்பூன் [வெறும் வாணலியில் 1 நிமிடம் வறுத்தது]
செய்முறை:
- வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, வத்தல், கறிவேப்பிலை தாளித்து அதில் வெந்தய்ப் பொடி, பெருங்காயம் போட்டு புளித்தண்ணீரை ஊற்றவும்.
- அதனுடன், உப்பு, கரைத்த தக்காளி இவற்றை போட்டு நுரை ததும்பி வறும் போது அடுப்பை நிறுத்தவும்.
- நிறுத்தும் முன் கொத்தமல்லி, வேப்பம் பூவை சேர்த்து இறக்கவும்.
சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி. - சித்திரை மாதம் வருடப்பிறப்பு அன்று முக்கியமாக செய்யும் ரசம் இது

48. அரைத்து விட்ட வேப்பம்பூ ரசம் தேவையானவை: காய்ந்த வேப்பம்பூ – 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – ஒன்று, புளித் தண்ணீர் – 2 கப், கடுகு, நெய் (அ) எண்ணெய், உப்பு – தேவையான அளவு. வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன். செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கும்போது, தக்காளியையும் அரைத்து எடுக்கவும். இதனுடன் தேவையான புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும். நெய் அல்லது எண்ணெயில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

49. உடுப்பி ரசம்
தே.பொருட்கள்
தக்காளி -2
துவரம்பருப்பு -1/3 கப்
புளி -சிறிய எலுமிச்சை பழளவு
வெல்லம்- 1 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை -1 கைப்பிடியளவு
கறிவேப்பிலை- 1 கொத்து
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
உடுப்பி ரசப்பொடி- 2 டேபிள்ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய்- 2
உப்பு -தேவைக்கு
தாளிக்க
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 கொத்து
உடுப்பி ரசப்பொடி செய்ய
காய்ந்த மிளகாய்- 2
தனியா- 2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல்- 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
வெந்தயம்- 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
செய்முறை
*துவரம்பருப்பை நன்கு குழைய வேகவைக்கவும்.
*ரசப்பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை தனிதனியாக எண்ணெயில் வறுத்து பொடிக்கவும்.
*புளியை 2 கப் அளவில் கரைத்து மஞ்சள்தூள்+பச்சை மிளகாய்+பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி+ 1 டேபிள்ஸ்பூன் ரசப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும் .(ரசப்பொடி சேர்த்து கொதிக்கும் போது வீடே கமகமக்கும்).
*தக்காளி நன்கு குழைய வெந்ததும் வேகவைத்த துவரம்பருப்பு+தேவைக்கு நீர் +உப்பு+மீதமுள்ள ரசப்பொடி சேர்க்கவும்.
*1 கொதி வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

50. கொத்தமல்லி ரசம்
தேவையான பொருட்கள்:
அரைக்க:
கொத்தமல்லி தழை…….1 கைப்பிடியளவு
கறிவேப்பிலை……….4 இணுக்கு
பூண்டு………10 பற்கள்
மிளகு………10
சீரகம்……….1/2 மேசைக்கரண்டி
தாளிக்க:
சின்னவெங்காயம்……1 பொடியாக நறுக்கவும்
வறமிளகாய்….1 காரத்திற்கேற்ப
கறிவேப்பிலை…….1 இணுக்கு
கடலை எண்ணைய்….1/2 தேக்கரண்டி
கடுகு..சிறிது
உப்பு……..தேவையான அளவு.
அரைக்க கொடுத்தவற்றை அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் எண்ணைய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.
தாளிக்கவேண்டியவற்றைப் போட்டு வதக்கவும்.
அரைத்த விழுதினை போட்டு தேவையான அளவு நீர் விடவும்.
உப்பு சரிபார்க்கவும்.
கொதிக்காமல் , ரசம் நுரைத்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
கொதித்தால் ரசம் ருசி மாறிவிடும்.
விருப்பப்பட்டால் பெருங்காயம் சேர்க்கவும். நான் சேர்க்கவில்லை.
சூடான சாதத்தை குழைய பிசைந்து ரசம் விட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.

51. பருப்பு ரசம்
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு – கால் கோப்பை
தக்காளி – 2
புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
பூண்டு – 4 பல்
உப்பு – தேவையான அளவு
பொடி செய்ய
துவரம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
மல்லி – 3 தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
தாளிக்க
கடுகு – சிறிதளவு
உளுத்தம்பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
- துவரம்பருப்பு, மல்லி, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனியே கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
- துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
- புளியை ஒரு கோப்பைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- இதனுடன் தக்காளியைச் சேர்த்து நன்கு கரைக்கவும். பின்னர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- அதனுடன் பூண்டை எண்ணெயில் லேசாக வதக்கியோ அல்லது பச்சையாகவோ தட்டிப் போடவும்.
- இது கொதித்ததும் தனியே பொடித்து வைத்த பொடியைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் வேகவைத்த பருப்பை நீருடன் சேர்க்கவும்.
- அனைத்தும் கொதித்து நுரையுடன் பொங்கி வரும் போது இறக்கி வைக்கவும்.
- தனியே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கிவைத்துள்ள ரசத்தில் சேர்க்கவும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் தாளிக்கும்போது பெருங்காயமும் சேர்க்கலாம்.

52. கொள்ளு ரசம்
தேவையான பொருட்கள்
கொள்ளு – 50 கிராம்
தக்காளி – 1
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
பூண்டு – 10 பல்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
வரமிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
ரசப் பொடி செய்ய
துவரம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
மல்லி – 1/4 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயத் தூள் – 1/4 தேக்கரண்டி
செய்முறை
- கொள்ளை நன்றாக ஊறவைத்து களைந்து, வேகவைத்துக் கொள்ளவும்.
- வேக வைத்த தண்ணீரை வடித்து, அதில் சிறிதளவு மசித்த கொள்ளையும் கலந்து எடுத்துக் கொள்ளவும். (ஒரு கோப்பை அளவு)
- புளியை 2 மேஜைக்கரண்டி அளவு தண்ணிரில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
- புளிக்கரைசலில் தக்காளி, உப்பு போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
- பூண்டை ஒன்று இரண்டாக தட்டிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்து, நசுக்கிய பூண்டையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி-தக்காளி கரைசலையும், கொள்ளுத் தண்ணீரையும் சேர்க்கவும்.
- அதில் சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்று இரண்டாக பொடித்து சேர்க்கவும். அல்லது ரசப்பொடி 2 தேக்கரண்டி சேர்க்கவும்.
- பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
- ரசம் நுரைத்து பொங்கி வரும் போது மூடி வைத்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
குறிப்பு - கொள்ளு ரசம் உடல் வலிமைக்கு நல்லது. சளி தொல்லையிலிருந்து நிவாரணம் கிடடக்கும்.
- கொள்ளு பெண்கள் கருப்பைப்பையில் இருக்கும் அழுக்கை அகற்றும் சக்தி கொண்டது.
- கொள்ளு சூடான உணவுப்பொருள் என்பதால் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தவும்.

53. தக்காளி ரசம்
தேவையான பொருட்கள்
தக்காளி – 3
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
பூண்டு – 10 பல்
கடுகு – 1/4 தேக்கரண்டி
வரமிளகாய் – 2
கடலைப் பருப்பு – 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
ரசப் பொடி செய்ய
துவரம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
மல்லி – 1/4 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயத் தூள் – 1/4 தேக்கரண்டி
செய்முறை
- துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, மிளகு, சீரகம், வெந்தயத்தூள் ஆகியவற்றை தனியே நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
- சிறிது தண்ணீரில் தக்காளியை உப்பு சேர்த்து கையால் கரைத்து தோலினை எடுத்து விடவும்.
- புளியை ஒரு கோப்பைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- இதனுடன் கரைத்த தக்காளியை சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- பூண்டை தோல் உரிக்காமல் ஒன்று இரண்டாக தட்டிக் கொள்ளவும்.
- தனியே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, கிள்ளிய வரமிளகாய், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
- இதனுடன் நசுக்கிய பூண்டை போட்டு லேசாக ஒரு பிரட்டு பிரட்டி, தனி பாத்திரத்தில் வைத்துள்ள புளி, தக்காளி கரைசலில் சேர்க்கவும். பின்னர் இந்த கரைசல் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.
- பிறகு இதனுடன் ரசப்பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்து வேக விடவும். ரசம் நுரைத்து ஒரு கொதி வந்த உடனே மூடி வைத்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

54. நெல்லிக்காய் ரசம்
தேவையான பொருள்கள்:
நெல்லிக்காய் – 1 கப்
மிளகு – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
தனியா – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிதளவு
சீரகம் – அரை ஸ்பூன்
பெருங்காயம் – அரை ஸ்பூன்
புளி – எலுமிச்சையளவு
கடுகு – அரை ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காயை கழுவி விட்டு கொட்டையோடு அதனோடு மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு, பெருங்காயம், புளி ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
2 இதை 6 குவளை தண்ணீரில் கரைத்து தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் பொடி கலக்கவும். 3 எண்ணெய் காய விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
மருத்துவ குணங்கள்:
- நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி , ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கும்.
- பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும்.
- இரத்தத்தை தூய்மையாக்கும், மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி மஞ்சள் காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.

55. பொரித்த ரசம்.
தேவையான பொருட்கள்:
மிளகு – பத்து
சீரகம் – இரண்டு டீஸ்பூன்
பூண்டு – இரண்டு பல்
கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைகேற்ப
நெய் – இரண்டு டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
பூண்டை தோலுரித்து நசுக்கிக் கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரன்டாக உடைத்து போட்டு பொரிக்கவும்.
பின், அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இன்னொரு கடாயில் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அதில் கொட்டி இறக்கினால் சுவையான பொரித்த ரசம் தயார்.!

56. புளியாணம்
தேவையான பொருட்கள்
புளி – எலுமிச்சை அளவு
சீரகம்- 1ஸ்பூன்
சோம்பு- 1ஸ்பூன்
மிளகு- 1ஸ்பூன்
ப.மிளகாய்- 1
சி.மிளகாய் – 2
க.பிலை- ஒரு கொத்து
பூண்டு- 1
சி.வெங்காயம் – 2
மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்
தக்காளி – 2
உப்பு – தேவைக்கு
கடுகு – 1/2ஸ்பூன்
தேங்காய்ய்- 1துண்டு
எண்ணெய் – 2ஸ்பூன்
செய்முறை
புளியை தண்ணீரில் ஊறவைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி பிசைந்து எடுக்கவும்.
புளி கரைசலை தனியாக எடுத்து வைக்கவும்
உரலில் சீரகம், சோம்பு,மிளகு போட்டு இடித்து தூளக்கி புளி கரைசலில் போடவும்
அதே உரலில் வெங்காயம், ப.மிளகாய், வத்தல், தேங்காய்துண்டு, க.பிலை,பூண்டு போட்டு தட்டி புளி கரைசலில் சேர்க்கவும்
இந்த கரைசலுடன் மஞ்சள்த்தூள், உப்பு போடவும்.
தக்காளியை பிழிந்து விடவும்.
நன்றாக கலக்கவும்
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, க.பிலை போது தாளிக்கவும்
பிறகு புளி கரைசலை ஊற்றி சூடு பண்னவும். கொதி வரும் முன்பு இறக்கவும்.

You must be logged in to post a comment.