Nondichindu

மச்சேந்திர நாதர் என்ற நொண்டிச் சித்தர் பாடல்
நொண்டிச் சித்தரின் உண்மைப் பெயர் தெரியவில்லை. ஊரும்
தெரியவில்லை. காலமும் தெளிவாகப் புலப்பட வில்லை. சங்க காலத்தில்
ஐயூர் முடவனார் போல் இவரும் கால் ஊனம் உற்றவர் போலும். எனவே
காரணப் பெயராகவே நொண்டிச் சித்தர் என்று அழைத்தனர் போலும்.
ஆனால் பாடல்கள் எவையும் கால் முறிந்த சிந்தனையாகத் தெரியவில்லை.
எல்லாம் முழு நிறை மாந்த வடிவத்தின் நெடிய சிந்தனையையே
கொடுமுடியாய்க் கொண்டுள்ளன.

நொண்டிச் சித்தர் சக்தி உபாசகர். தம் பாட்டிலேயே தாம் நொண்டி
என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆங்காரமும் ஒழிந்தேன் – உண்மைநிலை
அறிந்திடும் நொண்டி எனச் சிறந்திழித்தேன்
பாங்காம் நிலை தெரிந்தேன் – குரு சொன்ன
பரபிரம்ம சொரூபத்தின் தெளிவறிந்தேன்

என்கிறார்.

சக்தி வழிபாட்டிற்கே உரிய நெறிமுறைகள், வழி முறைகள் இவர்
பாடல்களில் பாலும் நிறமும் போலப் பிணைந்துள்ளன. இவர் திருமூலரின்
சக்தி வழிபாட்டிலும், நந்தீசர் என்ற சித்தரின் நெறியிலும் செல்பவர் என்பது
இவர் பாடல்களில் அங்கும் இங்குமாகப் பற்பல குறிப்புகளால்
காணப்படுகின்றன.

தாம் சித்தர்கள் வழிவந்தவர் என்பதையும், இவர் மிக மிகப்
பிற்காலத்தவர் என்பதையும் தம் பாடலில் தெரிவிக்கின்றார்.

கவன குளிகை கொண்டு – அதனாலே
ககன மார்க்கம் தனிலே அகனமாய் சென்று
தவமொருமா சித்தர்கள் வாழ்கின்ற
சதுர கிரிக்குப் போய் குதூகளித்தேன்.

என்றும், மேலும்

தன்னையும்தான் உணர்ந்தேன் – எட்டுத்
தலங்கலும் ஒன்பது வாசல் உணர்ந்தேன்
பின்னுக் அக் கதவடைத்தேன் – மேலாம்
பெருவழி ஊடுசென்று திருவடைந்தேன்

என்கிறார். இனி, அவர் பாடிய பாடல்களைப் பார்ப்போம்.

நொண்டிச் சிந்து

ஆதி பராபரையாள் சிவசத்தி
அம்பிகையின் பாதமதைக் கும்பிட்டு நித்தம்
கோதிலாச் சுடரொளியில் திரிகோணக்
குஞ்சரத்தின் பாதமலர் தஞ்சமாய்க் கொண்டு 1

திருமூலர் காலாங்கி போகர்
தென்பொதிகைக் குருமுனி தன்வந்திரியர்
கருவூரார் இடைக்காடர் அத்திரி
கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே. 2

சுந்தரா னந்தர் கபிலர் கொங்கணர்
சூதமுனி கோசிகர் வேதமுனிவர்
நந்தீசர் சட்டைமுனிவர் தன்னை
நான்தொழு தேனடி தாள்பணிந்தேன். 3

அஞ்சுபுலக் கதவறிந்து பிரம
மந்திரத்தின் உண்மைவழி விந்தை தெரிந்து

சஞ்சலந் தனைப்பிரிந்து சித்தாதிகள்
தாள்பணிந் தேன் நான் துணிந்தே. 4

சரியையுங் கிரியையும் விட்டு அப்பாற்
சாதனாமா யோகமதின் பாதம் அதைத்தொட
உரியா தீதம்வெளிப்பட் டங்கு
சும்மாயிருந் ததைச்சொல்ல எம்மாலாகுமோ. 5

பராபர வெளிகைக்கொண்டு மனம்ஒன்றிப்
பற்றிடவே சிற்பரத்தின் உற்பனங் கண்டு
நிராதர மான பண்டு
நீங்கா ஆனந்தரசம் பாங்கதாய் உண்டு. 6

அடிநடு முடிவு கண்டேன் மோனநிலை
அறிந்து கொண்டேன் ஞானந் தெரிந்துகொண்டேன்
முடிவில்லாப் பரப்பிரம சொரூபத்தை
முற்றும் கண்டேன் இகப்பற்றும் விண்டேன். 7

சுத்தப் பரவெளியே ஒளியாகத்
தோன்றிட மெய்ஞ்ஞானச் சுகமடைந்தேன்
சத்துச்சித் தானந்தத்தைத் தெரிசிக்கச்
சகலமும் பிரமமயம் புகலரிதே. 8

நாசிமுனை நடுவில் விளங்கிய
நயனத்திடை ஒளியாம் பரவெளியில்
தேசிகன்திருக் கூத்தை
தெரிசித்தே மோனநிலை பரிசமுத்தே. 9

நினைவே கனவெனவும் தெளிந்தந்த
நினைவையும் மறந்தெழு கலைமறந்தே
தனதெனும் தனைமறந்தே சுத்த
சாகரத்தில் உழலாத பாகந் துறந்தே. 10

ஓமென்ற பிரணவத்தை இன்னதென
உண்மைகண்ட பின்புவெகு நன்மையும் பெற்றேன்
நாமெனும் அகங்காரந் தனைவிட்டு
நாட்டந் தெரிந்து கொண்டேன் தேட்டமுடனே 11

ஆசையை விட்டுஒளிந்து விரிந்தோடும்
ஐம்புலனைத் தான் அறுக்குந் தெம்பை அளித்துப்
பாசந் தனைக்கடந்து குருசொல்
படிதவ றாமல்அப் படிநடந்து. 12

கவனக் குளிகை கொண்டு அதனாலே
ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று
தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற
சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன். 13

தவசுப் பாரையின்மேல் இருக்கிற
சாமிபர ஞானநவ சித்தருடனே
சிவசொரூ பம்தெரிந்தேன் மனதினில்
தீபவொளி கண்டபின்பு ஆவலும் விண்டேன். 14

மூலாதாரந் தெரிந்தேன் தெரிந்ததந்த
முச்சுடரின் தீபவொளி கண்டுமகிழ்ந்தேன்
நாலா கலையறிந்தேன் என்பாட்டன்
நந்தீசர் கிருபையால் சந்தோடம் கொண்டேன். 15

யோகாம் அனுபவமறிந்தே மணிபூரகம்
உத்தமர்க்குச் சித்தியென மெத்தவுங் கண்டேன்
சாகா திருந்திடவே விசுத்திநிலை
தன்னில் இருந் தன்னிலையே நன்னிலையதாய். 16

கண்டதே அங்கு நின்றேன் சிவசத்தி
கற்பனையது தென்றுமகிழ்ந் தப்புறஞ்சென்றேன்.
பண்டுஅன்னைஉமையகட்கு அருளிய
பாதைகண்டு ரசபான போதையும் உண்டேன். 17

ஆரும் அறிய ஒண்ணாப் பூரணத்து
ஆச்சரியங் கண்டபின்பு பேச்சடங்கினேன்.
சீருஞ் சிறப்பும் மிக்க மனோன்மணி
தேவிஅருளால் அறிந்து மேவிக்கொண்டேன். 18

காமியங் கடந்தவிடம் தினந்தினம்
கண்டறிந்து கொண்டேன்முனி அண்டர்புகழும்
வாமியிவள் எனப்பேர் நன்றாக
வாங்கிக் கொண்டேன்பரத் தோங்கிக் கொண்டேன். 19

நாதாந்த மோனமெனும் நிலைகண்டு
நானிருந்தேன் உறக்கமூனு மற்றேன்.
வேதாந்த வழியறிந்தேன் அஞ்ஞான
வீட்டைக் கடந்துமேலாம் வீட்டையுங்கண்டேன். 20

சாத்திரம் பலபடித்தேன் பொல்லாச்
சண்டாளர் சவகாசந் தன்னை மறந்தேன்
பாத்திரம் அறிந்து கொண்டேன் அவருடன்
பத்தியொடு சேர்க்கைசெய்து முத்தியைக்கண்டேன். 21

உப்பிட்ட பாண்டமிது வந்தவழி வந்தவழி
உண்மைதெரி யாதமாந்தர் நன்மையீதென்று
செப்புக் குயமானார் ஆசைகொண்டு
தேசமதிலே அலைந்து பாசத்து உழல்வார். 22

நிலையிலாப் பொய்க்கூடு இத்தேகம்
நிச்சயம தற்றதென் அச்சமதோடு
மலைகுகை தனில் ஏகி சிவஞான
மார்க்கம் தெரிந்ததின் நேர்க்கையாகி. 23

ஆங்காரமும் ஒழித்தேன் உண்மைநிலை
அறிந்திடும் நொண்டியெனச் சிறந்திழித்தேன்
பாங்காம் நிலைதெரிந்தேன் குருசொன்ன
பரப்பிரம சொரூபத்தின் தெளிவறிந்தேன். 24

தன்னையும் தானுணர்ந்தேன் எட்டுத்
தலங்களும் ஒன்பது வாசல் உணர்ந்தேன்
பின்னுமக் கதவடைந்தேன் மேலாம்
பெருவழி .ஊடுசென்று திருவடைந்தேன். 25

மாதா மனோன்மணியாள் பீடமதில்
மணிச்சத்தத் தொனியது கணகணன
நாதகீ தங்கேட்டுச் சிவதிரு
நடனக்கண் காட்சியை உடனே கண்டேன். 26

மந்திரந் தனைத் தெரிந்தேன் ஓங்கார
வட்டமதைத் திட்டமதாஎட்டிஅறிந்தேன்
இந்திர பீடம்முணர்ந்தேன் மோனநிலை
இன்னதென்று கண்டுமனம் நன்னயங்கொண்டேன். 27

அழியாப் பொருளிதுதான் என்றுதொழுது
அகமகிழ்ந்தேன் ஞானச் சுகமடைந்தேன்
வழியாய் உணர்ந்தவர்க்கு மோட்சநிலை
வாய்க்குமென்று பேய்க்குணத்தைப் போக்கிப்புகழ்ந்தேன். 28

வேத முடிவுணர்ந்தேன் எங்கும்
விளங்கும் பொருளைக்கொண்டு உளங்குளிர்ந்தேன்
நாத வெளியில் உற்றேன் இந்த
நானிலத்தோர் புகழவே ஞானிபேர் பெற்றேன். 29

வெட்ட வெளிதானே யாமிது
வென்றறிந்துக் கொண்டவர்வே றொன்றையுமுன்னார்
பட்டப் பகலதனை இருளாகப்
பார்த்தவருக்குக் காணஞான நேத்திரமுண்டோ? 30

மூல முதலி மொள்ளே என்றுமுன்னாள்
மொழிந்தார் நமதுகுரு மூலரன்றே
சாலவே மறைநான்கும் சொன்னதோர்
சங்கைதெளிந் தானந்தம் பொங்கித் ததும்ப. 31

தான் நான் என அற்று குருவருள்
தன்னைமற வாமல் என்னை என்னாலறிந்தேன்
ஊனுடல் அழியாமல் நிட்டைதனில்
உற்றவிழி துயிலாத பெற்றிலிருந்தேன். 32

ஒருபொருள் விரிவாலே கண்டறிந்த
உற்பனமெல் லாம்விழலாங் கற்பனையென்றே
அறிவால் அறிந்து கொண்டு சிதம்பரத்து
ஆடல்கண்டு ஆனந்தப் பாடல் விண்டேன். 33