Thayumanavar

தாயுமானவர்

திருச்சி மன்னராக விஜயரங்க சொக்க நாயக்கர் பதவியேற்றதும் தமது அரசின் தலைமைக் கணக்கராக கேடிலியப்பப் பிள்ளையின் மகனான தாயுமானவரை நியமித்தார். சிவஞானபோதம் அறிந்த தாயுமானவர் அப்பணியை விரும்பாவிட்டாலும் மன்னரின் விருப்பபடி தலைமைக் கணக்கரானார். சிவநெறிச் சிந்தனையும், சித்த ஈடுபாடும் கொண்டவர்க்கு மனித வாழ்வின் கூட்டல்,கழித்தல் அவரை வாட்டியது. ஆன்ம லாபம் பெறும் சிந்தனை அவரை அல்லும், பகலும் வாட்டியது. ஞானதாகம் அவரின் இறை சிந்தனையை நிலை நிறுத்தியது.தாயுமானவரின் இறைமாட்சியும்,ஆன்மீக சித்திகளை, பாடல்களையும் பலவாறு கேள்வியுற்ற மன்னன் அவரது விருப்பத்திற்கு தடை சொல்லாது அவரின் ஆன்மீக பயணத்திற்கு மகிழ்சியுடன் ஒப்புதல் அளித்தார். நந்தீசர் சித்தரின் மாணவர் சாரமா முனிவர். திருமூலர் மரபில் வந்தவர்.

சாரமா முனிவர் கயிலாய மலையிலிருந்து தமது சீட கோடிகளோடு திருச்சி மலைக்குன்றில் ‘”சாரமா முனிவர் மடாலாயம்’’ என்ற பெயரில் விளங்கி வந்தது.மெளன குரு தேசிகர் சிவயோகி தருமபுரம் ஆதீனத்தில் உபதேசம் பெற்று, பல புண்ணியத்தலங்களை தரிசித்து இறுதியாக, சாரமா முனிவர் மடாலாயத்தில் வந்து தங்கினார். அது சமயம் ஒருமுறை தாயுமானவர் மெளன குரு மடம் வழியாக வந்தபோது மெளன குருவைக் கண்டு அவரது காலில் வீழ்ந்து வணங்கி, ஆசியும் பெற்றார். மெளன குரு சிவயோகி தாயுமானவரைக் கண்டவுடன் இவர் ஒரு சித்தயோகி என்பதை உணர்ந்து அவருக்கு தீட்சை அளித்து தமது சீடராக ஏற்றுக்கொண்டார். மெளன குரு உபதேசித்தருளிய யோக ஞான முறைகளை கடைப்பிடித்து, நிஷ்டைப் பயிற்சியில் ஆழ்ந்து தியானித்துவந்தார்.

வரலாற்றில் இடம் பெற்று சிறந்து விளங்கிய மதுரை நாயக்க மன்னர்களின் வம்சம் இராணி மங்கம்மாவுக்குப் பின் நிலை குலைந்தது. அரசியல் சூழ்ச்சியில் சிக்கித் தவித்தது. இராணி மங்கம்மாவின் பேரனாகிய விஜயரங்க சொக்கநாதர் தான் தாயுமானவர் காலத்தில் திருச்சியை ஆண்ட நாயக்க மன்னர்.இந்நிலையில் விஜயரங்க சொக்கநாதர் இராணி மங்கம்மாளைச் சித்ரவதை செய்து கொன்றதுடன் அரியணை ஏறினார்.ஆனால், அரியணையில் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.திடீரென மன்னர் இறக்க அவரது மனைவி மீனாட்சி மதுரை ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள். அப்போது மதுரை ஆட்சியின் கீழ்தான் திருச்சி இருந்தது.மதுரை அரசி மீனாட்சி தாயுமானரை அழைத்து தலைமைப் பொறுப்பையும், கணக்கையும் பரிசீலித்து சீர்செய்ய வேண்டுமென கூறினாள்.தாயுமானவரும் அதற்கு இணங்கி அரசவை சென்று பொறுப்பினை ஏற்றார்

தாயுமானவரின் உடல் தேசுஸ்சும், சுடர்விட்டு பிரகாசிக்கும் அழகும், வனப்பும் இராணி மீனாட்சியை வசீகரித்த்து. அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்ற கீழான எண்ணமும்,நோக்கமும் கொண்டாள்.கணவனை இழந்து விட்ட நிலையில் பல்வேறு அரசியல் சதுரங்க க.ளத்தில் போராடிக்கொண்டிருந்த காலக் கட்டத்தில் பெண்மையின் பலவீனமாய் தன்மீது கொண்டுள்ள ஒருதலை காமத்திலிருந்து தப்பிக்கவேண்டும் என்று தாயுமானவர் முடிவெடுத்தார். அரசி மீனாட்சிக்கு தக்க அறிவுரை கூறினார்.ஆனால், காமமே மேலோங்கி நின்றது.தன் விதியின் விளையாட்டினை எண்ணி, அதன் விளைவாக ஊரை விட்டே இரவோடு இரவாக தம்முடைய சிற்றன்னை மகனான அருளைய்யாரையும் அழைத்துக்கொண்டு நல்லூரை அடைந்தார். விதியின் விளையாடல் வேறு விதமாக அமைந்தது. அரசி மீனாட்சி தாயுமானவரைக் காணாது ஏக்கத்தில் மனம் மிகவும் பேதலித்துப் போனாள். தாயுமானவரின் வழித்தடம் அறிந்து இரகசியமாக நல்லூர் வந்தடைந்தாள்.

விதி வழி மதி என்பது போல் விபரீத புத்திக்கு ஆளானாள் அரசி மீனாட்சி. மாந்தீரீக வசியத்தில் சிறந்த மலையாள மந்திரவாதியைக் கொண்டு தாயுமானவரை எப்படியாவது தம் வழிக்கு கொண்டு வர எண்ணினாள். மனம் நொந்த நிலையில் தாயுமானவர் நிஷ்டையில் இருந்தபோது அவருக்குப் பின்னால் இருந்து வசிய மந்திரத்தை ஏவினாள். இதனை அறிந்து நிஷ்டையிலிருந்து தாயுமானவர் களைந்து ஆழ்ந்த புஷ்டியோடு திரும்பி பார்த்தார். அந்த ஆன்மீக ஒளியின் பார்வையில் இராணி முதன்முறையாக அதிர்ந்து போனாள். என்ன ஒரு தெய்வீகப் பார்வை. அடுத்த வினாடி தாயுமானவர் காலில் வீழந்து வணங்கினாள்.’’சுவாமி! என்னை மன்னியுங்கள். தங்களது தெய்வீக நாட்டமறியாது, வீணான ஆசையால் தங்களுக்கு மிகவும் துன்பம் கொடுத்துவிட்டேன். இனி தங்கள் வாழ்க்கையில் குறுக்கிடமாட்டேன்‘’ அங்கிருந்து விடைபெற்றாள், விராலிமலை சித்தர்களின் பயிற்சிக்களமாக இருந்தது. மலைகள் சூழ்ந்த விராலிமலை பல சித்தர் நடமாடும் இடமாக தளமாகவும் இருந்தது. தாயுமானவரும், அருளைய்யாரும் விராலிமலையில் வந்து தங்கி சாகாக்கலை போன்ற இரகசியங்களை கண்டறிந்தனர். சில காலம் அங்கு தங்கி அனுபவ அறிவுனை நேரிடையாக பெற்றனர். அதன் பின்னர் இராமேசுவரம் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் இறைவியாகிய மலைவர் காதலி மீது பாடல்களையும் பாடினார். இராமேசுவரத்திலிருந்து போது தமையனார் சிவசிதம்பரமும் அங்கு வந்து சேர்ந்தார் பின் இருவரும் திருமுறைக்காட்டிற்கு சென்றனர்.

அன்னையர், உற்றார் உறவினர் அவரைத் திருமணம் செய்துள்ள கொள்ள வற்புறுத்தினர்.திருமணத்தில் நாட்டம் இல்லாத காரணத்தால் நிர்வாண தீட்சை செய்து துறவு நிலையை அளிக்குமாறு தம் குருநாதரிடம் கேட்டார். சிறிது காலம் இல்லறத்திலிருந்து மீண்ட பின்பே உனக்கு அது வாய்க்கும் என குருநாதர் இடமிருந்து அருள் வாக்கு வந்தது. வேறு வழியின்றி இப்போது திருமணத்திற்கு சம்மதித்தார். மட்டுவார் குழலி எனும் குணவதியை தாயுமானவர் மணந்து கொண்டார். கனகசபாபதி எனும் ஒரு ஆண் மகவு பிறந்ததும், மனைவி இறைவனடி சேர்ந்தார். மிஞ்சியிருந்த இல்லறப்பற்றும் அறவே தீர்ந்து போக, தாயுமானவர்துறவு நெறிக்கு முற்றிலும் தம்மை தயார்ப்படுத்திக் கொண்டார். தம்முடைய செல்வத்தை எல்லாம் தமையாரிடம் ஒப்படைத்து விட்டு உலகப்பற்று நீக்கிக் கோவண சந்தியாசியானர் தாயுமானவர். .சிந்தையெல்லாம் யோக நெறி நின்று வாழும் சித்த வாழ்வு நிலைத்தது.-

வெயிலின் ஒளியிலே காய்ந்த பொருள் பலகாலம் சிதையாமலிருப்பது போல், சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவருக்கு உடலும் ஆன்மாவும் ஒரு நாளும் அழிவதில்லை.முக்திக்கு வழி அறிவால் ஐம்புலன்களைக் காத்து வாழ்வதும்தான். ஐம்புலன்களின் உணர்வுகளை வழிமுறையோடு தெரிந்து, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமானவர்.உணர்வும் நினைவும் ஒடுங்கிய பின்னர் மனமானது சுத்தசூன்யமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலற்று வெறுமையாக இருக்கும்.மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மனவெறுமை நிலையே தேவையாகிறது என்பதை அறிந்து தெளிந்தார் தாயுமானவர்.உடம்பினை முழுவதும் அழியாமல் காத்துக்கொள்ள முடியும்.அதற்கு வழி ஒன்றேதான் நெற்றிக்கு நேராகச் சுழுமுனையில் வியாபித்திருக்கும் ஞானக் கினியைக் காணவேண்டும். அப்படி கண்டுவிட்டால் உடம்பானது என்றைக்கும் அழியாதிருக்கும் என்ற மகரிஷிகளின் ஆழ்மனது தாயுமானவருக்குப் பிடிபட்டது.

மோன நிலையே குருவடிவமாகக் கண்டுணர்ந்து ஆனந்த மெய்விதிர்ப் பெய்த அந்த உணர்வைப் பாடல்களாகப் பாடினார்.திரிசிபுரம் வந்தடைந்து குருநாதரை வணங்கினார் தாயுமானவர். துறவு மேற்கொண்டு கனிந்த பழமாக இருந்த தாயுமானவரின் ஞானத்தோற்றம் கண்ட மெளனகுரு அவர் ஏற்கனவே அனுமதி கேட்ட நிரவாண தீக்ஷை செய்து வைத்து நிலையை அருளினார். ’’ ஐவரோடுங் கூடாமல் அந்தரங்க சேவை தந்த

தெய்வ அறிவே சிவமே பராபரமே “ …. . .என்று அதன்பின் மெளனகுரு மடத்தை விட்டு தனிமை நாடிச் சென்றார. சித்தர்களும் யோகிகளும் கற்றுத் தந்த அட்டமா சித்தி குறித்து மனம் ஓடுங்கச் சிந்தித்தார்.சிந்தையற்று சும்மா இருக்கப் பழகுவதே சாதனைகளில் மிக உயர்ந்த சாதனையாக உணர்ந்தார். இறுதியாக இராமநாதபுரத்தை வந்தைந்த தாயுமானவர் அவ்வூரின் கிழக்கேயுள்ள காட்டூரணி என்னும் இடத்தில் இருந்த புளிய மரத்தின் கீழ் நிஷ்டையில் அமர்ந்தார். உலக வாழ்க்கை முற்றிலும் புளித்துப் போகட்டும் என்று எண்ணி நிஷ்டையில் அமர்ந்து தமது சீடரான அருளைய்யருக்கும் கோடிக்கரை ஞானியார்க்கும் உபதேசம்அருளினார்.

காட்டூரணி புளியமரத்தடியில் துஷ்ட மிருகங்களும், கொடிய விஷ ஜந்துக்களும் இருக்கும் நிலையில், தாயுமானவ சுவாமிகள் நிஷ்டையில் இருப்பதை இலட்சுமி எனும் மாது அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கம். காட்டு விஷ ஜந்துக்களால் துன்பம் எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதால், காட்டூரணியிலிருந்து மேற்கு நோக்கி சற்று தொலைவில் இருந்த காட்டுப்பகுதியில் ஒரு குளம் வெட்டி பூச்செடிகளை வளர்த்து வந்தாள். அந்த இடத்தில் தாயுமானவர் எழுந்தருளி நிஷ்டையில் இருக்கலாம் என வேண்ட, புளிய மரத்தை விட்டு இலட்சுமி அமைந்த இடத்தில் வந்து நிஷ்டையில் அமர்ந்தார். தொடர்ந்து நிஷ்டையில் இருந்து வந்தால் தேகம் மெலிந்து எலும்பு தெரிய ஆரம்பித்தது. உணர்வை வயப்படுத்தி கருங்கல் போல் அசையாது யோகம் செய்ததால் அவர் முடிப்பெருத்து குருவிகளூம் கூடிகட்டி வாழ ஆரம்பித்தது. காட்டு இலைகளும், சருகுகளும் மண்டி அவர் மீது மூடி இருந்தது. அப்போது அவ்வழி இராமநாதபுரத்தை ஆண்டு வந்த சேதுபதி மன்னனின் காவலாளி இருவர் காவல் நிமித்தமாய் அவ்வழியே வந்தபோது எலும்பு கூடாக பேச்சு மூச்சுயின்றி இருந்த தாயுமானவர் இறந்துவிட்டார் என எண்ணி அங்கிருந்த சருகுகளை கூட்டி நெருப்பு மூட்டினார்கள். நெருப்பு தகதகவெனப் பற்றி எரிய சிறிது நேரத்திற்குப்பின் சூடு தாக்கி கண்விழித்துப் பார்த்தார் தாயுமானவர். அதனைக் கண்டு காவலாளிகள் அதிர்ச்சியுற்றனர். கண் விழித்த தாயுமானவர் காவலாளியின் செயல் கண்டு, அறிந்து விழித்த நிலையிலேயே இறை ஜோதியில் கலந்தார்.

எங்கும் எதிலும் ஆனந்தம் – தாயுமானவர்.

இறைவனே! ஆனந்தத்தின் மொத்தவடிவம். ஆனந்தம் பெறவே உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உழைப்பதும், உண்பதும், ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு வாழ்வதும் எல்லாம் ஆனந்தத்தின் பொருட்டே. நம்மால் என்றுமே ஆனந்ததை விடுத்து வாழவே முடியாது.எங்கும் ஆனந்தமே. எதிலும் ஆனந்தமே! இதற்காகவே, இறைவனும்சிற்சபையில் ஆனந்த நடமிடுபவனாக இருக்கிறான்.இறைவன் எல்லா திசைகளிலும் நிறைந்திருக்கிறான். நம் இதயத்தாமரையாகிய மனத்தில் தேனாக இருந்து தித்திக்கும் இனிமை உடையவன் இறைவன். அவனையே எப்போதும் சிந்திப்போமாக.பொருளின் மீது நாட்டம் கொண்டவனுக்கு அருட்செல்வம் என்றும் எட்டாக்கனியாகும். திருவோட்டையும், செல்வமாகிய நிதியையும் ஒன்று போல காணும் உத்தமர்களின் நெஞ்சத்தை தன் இருப்பிடமாக கொண்டிருப்பவன் இறைவன். குழந்தையின் மனதில் தான் என்னும் அகங்காரம் இல்லை. இவர் நல்லவர், கெட்டவர், வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதங்கள் தெரிவதில்லை. மனிதனும் குழந்தை போல வெள்ளை உள்ளம் கொண்டால் அவனே ஞானியாவான்.வாழ்வில் எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் மனம் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது கடவுளின் கழலடிகளையே வழிபட வேண்டும்