Thirumoolar Biography

திருமூலர்

திருமூலர் வரலாறு

செந்தமிழ்ச் சிவாகமம்:

சிவபூமி எனப் போற்றப் பெறுஞ் சிறப்புவாய்ந்த நம் நாட்டின் தொன்மை வாய்ந்த சமயமாகத் திகழ்வது; சைவ சமயமாகும்.

உலகமக்கள் உள்ளத்திலே தெய்வம் உண்டு என்னும் தெளிவினை நல்கி அன்பு நெறியில் ஒழுகப்பணித்து அறிவு நெறியை வளர்ப்பன தெய்வநெறிச் சிவம் பெருக்கும் சைவ சமய அருளாசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளாகும்.

திருமுறைப் பனுவலாகிய அருள் நூல்களுள் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது, தமிழ் மூவாயி ரமாகிய திருமந்திரமாகும்.

திருமந்திரமாலை என்னும் இத்திருமுறை, சைவசித்தாந்த சாத்திரமாகவும் இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திர மாகவும் விளங்கும் தனிச் சிறப்புடையது.

வேத நெறியாகிய உலகியல் ஒழுக்கத்தையும், நல் வாழ்க்கை முறையினையும் சிவநெறிச் செல்வர்களால் சிறப்பாக மேற் கொள்ளத்தக்க ஞானயோக நுண்பொருள்களையும் ஒருங்கே விளக்குவதாய்த் திகழ்வது இத்திருமந்திரமேயாகும்.

“காயமே இது பொய்யடா… வெறும் காற்றடைத்த பையடா” என்ற மாயாவாதத்துக்கு எதிராக, யதார்த்த வாதத்தை முன்வைத்த சிந்தனைச் சித்தர்தான் திருமூலர்.

உடம்பார் அழியின் உயிரால் அழிவர் திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே!

என்ற ஒப்பற்ற தத்துவத்தை இயற்றியவர்தான் திருமூலர்.

உள்ளம் பெரும் கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானுக்கு
வாய்கோபுர வாசல்
தெள்ள தெளிந்தமாருக்கு
சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும்
காணா மணி விளக்கே!

உடலும், அதில் திரண்டுள்ள ஊனும் எம்பெருமான் கோயில் என்று சொல்லும் திருமூலர், வாயைக் கோபுரம் என்றும், உயிரை சிவனென்றும் சித்தரிக்கிறார். புலன்கள் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பதால் அவற்றை கள்ளப் புலன்கள் என்கிறார்.

யோக மார்க்கமும், ஞானத் தேடலும் உள்ளவர்கள் திருமந்திரத்தைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது,

திருமந்திரத்தை அறிந்த அளவு அதை இயற்றிய திருமூலரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களின் தொகுப்பை “மந்திர மாலை” என்று அழைத்தனர். பிற்காலத்தில் அவற்றை ஆராய்ந்த சான்றோர் அதை திருமந்திரம் என்று பெயரிட்டு ஒன்பது பகுதிகளாக வகுத்தனர்.

திருமந்திரத்தில் பல யோக ரகசியங்களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் சொல்லியிருக்கிறார் திருமூலர்.

தாமறிந்த உண்மைகள் உலகத்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார் இவர்.

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே!”

“இறைவன் திருவருளால் யான் இறைவனது இன்பத்தைப் பெற்றனன். இவ்வின்பத்தினை இந்த மண்ணுலகமும் பெற வேண்டும்.

பெருமையினைத் தன்னகத்தே கொண்ட வேதத்தின் உண்மைப் பொருள் இன்னது என எடுத்துக் கூறினால், அதுவே நாவாகிய தசையினைப் பற்றி நின்ற உணர்ச்சி தரும் மந்திரமாகும்.

இந்த மந்திரத்தைப் பற்றப் பற்ற இறைவன் திருவடி ஞானம் கிடைக்கப் பெறும்.

பெரியோர்கள் தாம் அடைந்த இன்பத்தை பிறரும் அடையுமாறு செய்யும் இயல்பினர். ஆகவே, இவ்வையகம் பெறுக” என்றார்.

“மகாமந்திரம் என்பது சிவ சிவ எனப்படுதலையே. இதனை நாவால் உள்ளுக்குள் உச்சரிக்க வேண்டும். அதனால் ஊன் பற்றி நின்ற மந்திரம்” என்றார். அதுவும் இடைவிடாது உச்சரிக்கப்பட வேண்டும் என்றதனாலேயே “பற்றப் பற்றத் தலைப்படும்” என்றார் திருமூலர்.

ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி:

அருள்மிகு திருமூலர் காயத்ரீ மந்திரம்,

ஸ்ரீ திருமூலர் சித்தர் காயத்ரி வழிபாடு மந்திரம்.

ஓம் ககனசித்ராய வித்மஹே!
பிரம்மசொரூபிணே தீமஹி!
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்!

பந்தங்களிலிருந்து விடுபட்ட பின்னரும் மக்களின் மேல் கருணை கொண்டு உலகத்தில் வாழும், ககன மார்க்கத்தில் உலாவும் சித்தர் பெருமானை வணங்குவோம்!
பிரம்மசொரூபமாக திகழ்பவரைத்
தியானம் செய்வோம்!
திருமூலராய அவர் நம்மை காத்து அருள் செய்வார் என்பது இதன் பொருளாகும்.

ககன சித்ராய:

வல்லி நீ செய்த வல்லபமே ககனமும் வானும் புவனமும் காண – என்று பாடுகிறார் அபிராமி பட்டர்.

எல்லோரும் வானில் வாழ்பவர்களையும் மண்ணில் வாழ்பவர்களையும் மட்டும் சொல்லும் போது அபிராமி பட்டர் ககனத்தில் இருப்பவர்களையும் சொல்கிறாரே யாரவர்கள் என்றால்

மண்ணவர் என்பவர்
மண்ணில் பந்தத்தில் உழன்று மண்ணோடு நெருங்கி இருப்பவர்கள், விண்ணவர் என்பவர் வானில் எல்லா பந்தங்களும் விடுபட்டு முக்தி நிலை பெற்றவர்கள் என்று கூறிவிட்டு,

‘ககனம்’ என்பதன் மூலம்
பந்தங்களிலிருந்து விடுபட்ட பின்னரும் மக்களின் மேல் கருணை கொண்டு உலகத்தில் வாழும், ககன மார்க்கத்தில் உலாவும் சித்தர் பெருமான்களைச் சொல்கிறார்.

திருமூலரைக் ககன சித்ராய என்று வணங்குவதன் பொருளைத் உணரத் தக்கது.

திருமூலர் மூல மந்திரம்…

“ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!”

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

என்று பாடி சிவ தத்துவத்தை போதித்தவர் அருள்மிகு திருமூலர்.

1) ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
2) யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
3) அன்பே சிவம்.
என்றருளிய மகா ஞானி திருமூலர்.

திருமூலர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்.
மாபெரும் தவ யோகி. சிவ யோக சித்தி பெற்றவர்.

இவர் சைவ நெறி கொண்ட வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3 ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது.

திருமூலரின் இயற்பெயர் சுந்தரர். இவர் கயிலைக் குருகுலத்தில் சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் நேரடியாக உபதேசம் பெற்றவர். அருமறைகளையும் ஆகமங்களையும் நந்தியெம் பெருமானிடம் கற்றார். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். நந்தி அருளால் ‘நாதன்’ என்ற பட்டம் பெற்று, சுந்தர நாதர் ஆகித் தவம் செய்தார்.

கயிலையில் இவருடன் பாடங்கேட்டவர்கள்: சனகர் – சனந்தனர்- சானாதனர் – சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகிய ஏழுபேருடன், தானும் உடனிருந்து கற்றதாக அகச்சான்று கூறுகிறார்.

இவரைப் பற்றி,திருத்தொண்டர் புராணம், திருத்தொண்டர் திருவந்தாதி,சதுரகிரித் தலபுராணம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.

திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார். நந்தி அருளாலே மூலனை நாடினோம் (திருமந்திரம்-169) என்ற பாடல் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம்.

இவர் மூலனின் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப் பெயர் பெற்றார் என்பர்.

இவர் சீடர்களில் காலாங்கியும், கஞ்சமலைச் சித்தரும் இன்றியமையாதவர்கள்.

இவரது சமாதி சிதம்பரத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார், போகர் என்னும் சித்தர்.

திருமூலர் இயற்றியவை:
திருமந்திரம்,
வைத்தியம் ஆயிரம்,
கருக்கிடை வைத்தியம் 600,
பெருங்காவியம் 1600 என்பனவாகும்.
திருமந்திரம்,யோகத்தின் படிநிலைகளையும்,சித்தாந்த வேதாந்தக் கருத்துகள்,மந்திர,தந்திர முறைகளையும் விளக்கியமைக்கிறது.

திருமந்திரத்தை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒன்று என 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார்.இவர் சேக்கிழார் சுவாமிகளால் போற்றிப் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார்.

இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். திருமூலர் திருமந்திரம் கலிவிருத்தம் என்னும் யாப்பினால் ஆன நூல்.

இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத் திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார்.

திருக்கையிலாயத்தில் திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் திருமூலர். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அகத்தியரைக் காண பொதிகை நோக்கி வருகிறார். ‘குறு முனிபால் உற்றதொரு கேண்மையினால் உடன் சில நாள் உறைதற்கு, நற்றமிழின் பொதியமலை நண்ணுதற்கு வழிக் கொண்டார்’ என்கிறார் சேக்கிழார்.

வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாத் கோவில், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார்.

பின்னர் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார்.

எல்லாவுலங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார்.

சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.

பதஞ்சலி – வியாக்கிர பாதருடன் இவர் தில்லைக்கு வந்து திருக்கூத்து தரிசனம் செய்தார். பதஞ்சலி வியாக்கிர பாதர் இருவரும் தில்லையிலே ஆசிரமங்கள் அமைத்துக் தங்கிவிட்டனர்.

(*தில்லைக் கோபுரத்தில் திருமூலர் சிலையைக் காணலாம்.)

தில்லைத் திருநடங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்து, உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருவாவாடு துறையை அடைந்தார்.

திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு, அத் திருப்பதியினை விட்டு நீங்கா தொரு கருத்தும் தம் உள்ளத்தே தோன்ற ஆங்கே தங்கியிருந்தார்.ஆவடு துறை இறைவரை வழிபடுதலில் ஆராத பெருங்காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அகன்று செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கண்ணீர் சிந்தி அழுவதைக் கண்டார்.

சாத்தனூரிலே தொன்றுதொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் விடம் தீண்டி இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றி அழுது வருந்தின.

மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் ‘இப்பசுக்கள் உற்ற துயரத்தினை நீக்குதல் வேண்டும்’ என்றதோர் எண்ணம் திருவருளால் தோன்றியது.

‘இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா’ எனத் திருவுளத்தெண்ணிய தவமுனிவர், தம்முடைய திருமேனியைப் பாதுகாவலானதோரிடத்து மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப்பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அவ்விடையனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.

உயிர் பெற்றெழுந்த மூலனைக் கண்ட பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மட்டற்ற மகிழ்வுடன் தாம் விரும்பிய இடத்திற் சென்று புல் மேய்ந்தன.

திருமூலநாயனார் அதுகண்டு திருவுளம் மகிழ்ந்து ஆனிரைகள் மேயுமிடங்களிற் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள், கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் முன்துறையிலேயிறங்கி நன்னீர் பருகிக் கரையேற, அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினார்.

சூரியன் மேற்றிசையை அணுக மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைத்துத் தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைவனவாயின.

அப்பசுக்கள் செல்லும் வழியிலே தொடர்ந்து பின்சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார்.

அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரைத் தன் கணவன் என்று எண்ணி அவரைத் தளர்வின்றித் தம் இல்லத்திற்குள் அழைத்துச் செல்லும் கருத்துடன் அவர் உடம்பைத் தொடுவதற்கு நெருங்கினாள்.

திருமூலராகிய சிவயோகியார், அவள் தம்மைத் தீண்டவொண்ணாதவாறு தடுத்து நிறுத்தித் தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்று கூறினார்.

தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ட மூலன் மனைவி தன் கணவர் நிலையை அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், நிறைதவச் செல்வராகிய திருமூலர், அவளை நோக்கி ‘நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவேதும் இல்லை’ எனக் கூறிவிட்டு, அவ்வூரில் அருந்தவர் பலரும் தங்குவதற்கென அமைந்துள்ள பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்தார். தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகித் தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார்.

இதைக்கண்ட சான்றோர்கள்
அவரது நிலைமையை உணர்ந்து,
“இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்று எல்லாவற்றையும் ஒருங்கே அறியவல்ல முற்றுணர்வு உடையவராக விளங்குகின்றார்.
சித்த விகாரக் கலக்கங்களை யெல்லாம் அறவே களைந்து தெளிவு பெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்து உடையவராய் அமைந்துள்ளார். இந் நிலைமை யாவராலும் அளந்தற்கரியதாம்’ எனத் தெளிந்தனர்.

ஆகவே முன்னை நிலைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய வாழ்வில் ஈடுபடுவார் அல்லர்’ என மூலன் மனைவிக்கு எடுத்துரைத்தார்கள்.

மூலனின் மனைவியைத் தேற்றி அவளை அவளது மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

சாத்தனூரில் பொதுமடத்தில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலர், யோகம் கலைந்து எழுந்து முதல் நாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தம் உடம்பினைச் சேமமாக வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார்.

அங்கு அதனைக் காணாதவராகி, அதுமறைந்த செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.

பிறைமுடிக்கண்ணிப் பெருமானாகிய இறைவன், திருவருட்றிறத்தால் சிவயோகியாரது முந்தைய உடம்பினை மறைப்பித்தருளிய மெய்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளியவுணர்ந்தார்.

தம்மைப் பின் தொடர்ந்து வந்த ஆயர்குலத்தவர்கட்கும் தமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்பதை அவர்கட்கு விளங்க அறிவுறுத்தருளினார்; அவர்கள் எல்லாரும் தம்மைவிட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விட்டத்தை விட்டகன்று திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார்.

திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் அம்மையப்பராகிய இறைவரை வணங்கி அத்திருக்கோயிலின் மேற்கில் மதிற்புறத்தேயுள்ள அரச மரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்து அமர்ந்து, உள்ளக் கமலத்தில் வீற்றிருந்தருளும் அரும்பொருளாகிய சிவ பரம் பொருளோடு இரண்டறக்கூடி ஒன்றியிருந்தார்.

இங்கனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலநாயனார் ஊனோடு தொடர்ந்த இப்பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து விளங்கும் திருமந்திரமாலையாகிய நூலை

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே

என்னும் திருப்பாடலுடன் தொடங்கி ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாக இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து மூவாயிரம் திருப்பாடல்கள் அருளிச் செய்தார்.

எல்லாம் வல்ல பரம்பொருள் அன்பே உருவானவர் என்பதை தம் பாடல் மூலம் விளக்குகிறார்.அப்பாடல் பின் வருமாறு

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

இவ்வாறாக தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரத் திருமுறையினை நிறைவுசெய்து சிவபெருமான் திருவருளாலே திருக்கயிலை அடைந்து அம்முதல்வனுடைய திருவடி நீழலில் என்றும் பிரியா து உறையும் பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்று இனிதிருந்தார்.

”குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளஃன் றன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல நாகின்ற அங்கணனே”

என்று திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார்.

திருமூல நாயனார் குருபூசை: ஐப்பசி அசுவதி

திருமூலர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். யோகியாகவும் எல்லாம் வல்ல சித்தராகவும், பலகலை அறிந்த ஞானியாகவும், அருள் நிறைந்த நாயன்மாராகவும் விளங்கினார்!

திருமூலரின் திருமந்திரம் திருவா வடுதுறையிலிருந்தவாரே இயற்றப்பட்டதாக வரலாற்றில் காணக்கிடைக்கிறது. திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில்(இயல்கள்) மூவாயிரம் பாடல்களை உடையது.

‘மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது’ என்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம்.

வேறு பெயர்கள்: திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும்.

நூல் பெருமை: இந்நூல் பண்டைய சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புகளையும் வாழ்வியல் உண்மைகளையும் விளக்குகிறது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது.

மேலும் இந்தூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது.
இந்நூல் இறைவனைத் துதி செய்வதோடு நில்லாமல் பதி பசு பாசம் என்பனவற்றின் இணைப்பையும் உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளை விளக்கியும் நல் வாழ்க்கை வழிகாட்டி நூலாகவும் சாத்திர நூலாகவும போற்றப்படுகிறது.

தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர்.

மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினை கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்.

திருமந்திரம் 10ஆம் திருமுறை. தோத்திரமாகவும், சாத்திரமாகவும், யோகநூலாகவும், ஞானநூலாகவும், தந்திர நூலாகவும், மந்திரங்கள் அமைந்த பாராயண நூலாகவும், சமய, சமூக, ஒருமைப்பாட்டு நல்லிணக்க நூலாகவும் திகழ்ந்து உலகுக்கு உயிராக விளங்குகிறது திருமந்திரம்.

திருமூலர் தமிழின் பால் தணியாத ஈடுபாடு கொண்டவர்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..” என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம்.

முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்தவர் ஈசனை நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதியது விரும்பாரன்றே” (திருமந்திரம்)

திருமூலர் அகஸ்தியர் மீது பற்றும பாசமும் கொண்டவர்.

பொதிகை மேவு மகத்தீர ராலெனது போதத் தமிழ் வாக்கியம்” எனத் தன் தமிழ் ஆற்றல், பொதிகையில் வாழும் அகத்தியன் தந்த கொடை என்று போற்றுகிறார்.

இறை வாழ்வு என்பதே இயற்கையோடு இயைந்த வாழ்வுதான் என்பதே சித்தர்களின் சிந்தனை.

இயற்கைக்கு மாறான வெறுப்பும், சலிப்பும், விரக்தியும் மனிதனுக்கு சிறுமைப் பண்புகளைத்தான் அதிகரிக்குமே தவிர, பேரியல்புகளை வளர்க்காது.

திருமூலரின் ஞான மார்க்கம் இந்த அடிப்படையில் அமைந்ததுதான்.
பொதுவாக சித்தர்களின் தத்துவமே, இயற்கையோடு இயைந்து இறைமையை நாடுவதுதான்.

சித்தர்களின் சிறப்பை பற்றி சொல்ல வரும்போது, “பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தென்தரை மீதிற் றெளிந்தவர் சித்தரே” என்றும் பாராட்டுகின்றார்.

திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.

திருமூலர் சங்கன்னர் அவதாரமாக போற்றப் படுகிறார். சிதம்பரம் தில்லை நடராஜரின் சன்னதியில், நீண்ட காலம் நிட்டையில் அமர்ந்து
தியானித்து சமாதி நிலை கண்டவர் திருமூலர். திருமூலர் தன் ஆன் உடம்பைப் பிரித்து ஞான ஒளியாய் சிவபெருமான் திருவருளாலே திருக்கயிலை அடைந்து முழு முதல்வனுடைய திருவடி நீழலில் என்றும் பிரியாது உறையும் பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்று உலகம் உய்ய அருள் பாலித்து அருளுகிறார்.

திருமூலர்‌ சமாதி:

சென்னை சித்த மருத்துவ நூல்‌ ஆய்வு மைய நூல்கள்‌ திருமூலர்‌ சிதம்பரத்தில்‌ சமாதி அடைந்துள்ளார்‌ என்று கூறுகின்றன.

இதே கருத்தை போக முனிவரும்‌ கூறியுள்ளார்‌. போகர்‌ ஜனன சாகரம்‌ 312 ஆம்‌ பாடலின்படி திருமூலர்‌ சிதம்பரத்தில்‌ சமாதி கூடி லிங்க வடிவில்‌ உள்ளார்‌.

தில்லை நடராஜர்‌ கோவிலில்‌ அவர்‌ சன்னதி ஸ்ரீமூலன்‌ சன்னதி என்றே உள்ளது. அவருடன்‌ வாழ்ந்த பதஞ்சலி முனிவரும்‌, வியாக்ர பாதரும்‌ அக்கோவிலில்‌ சிலை வடிவில்‌ உள்ளனர்‌.

திருமூலர்‌ சன்னதியை மையமாகக்‌ கொண்டு தான்‌ பாண்டிய மன்னர்களின்‌ ஆதரவில்‌ கருவூர்த்தேவரால்‌ சிதம்பரம்‌ நடராஜர்‌ கோவில்‌ கட்டப்பட்டது.
(போகர்‌ ஏ. 5769).

திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

18 சித்தர்களும் ஜீவசமாதி அடைந்த இடங்களும்:

பதினெண் சித்தர்களின் சமாதித்தலங்கள் எனப்பின்வரும் பாடல்மூலமாக அறியலாம்:

“ஆதிகாலத்திலே தில்லையில் திருமூலர்
அழகர் மலை இராமதேவர்
அனந்தசயனம் கும்பமுனி திருப்பதி
கொங்கணவர் கமலமுனியாகி
சோதிரக் கஞ்சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லுமெட்டுக் குடியில் வான்மீகரோடு ஒர்
நெல்காசியில் நந்திதேவர்
பாதியரிச் சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனிமலை யோகநாதர்,
பரங்குன்ற மதில், மச்ச முனிபொய்யூர் கோரக்கர்
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீசுவரன்கோயிலில் தன்வந்திரி
திகழ் மயூரங்குதம்பை
சித்தருணை யோரிடைக்காடன் சமாதியிற்
சேர்ந்தன ரெமைக் காக்கவே”
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் சித்தர்களை துதித்து மச்சேந்திர நாதர் என்ற நொண்டிச் சித்தர் பாடல் நொண்டிச் சிந்து

ஆதி பராபரையாள் சிவசத்தி
அம்பிகையின் பாதமதைக் கும்பிட்டு நித்தம்
கோதிலாச் சுடரொளியில் திரிகோணக்
குஞ்சரத்தின் பாதமலர் தஞ்சமாய்க் கொண்டு 1

திருமூலர் காலாங்கி போகர்
தென்பொதிகைக் குருமுனி தன்வந்திரியர்
கருவூரார் இடைக்காடர் அத்திரி
கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே. 2

சுந்தரா னந்தர் கபிலர் கொங்கணர்
சூதமுனி கோசிகர் வேதமுனிவர்
நந்தீசர் சட்டைமுனிவர் தன்னை
நான்தொழு தேனடி தாள்பணிந்தேன். 3

அஞ்சுபுலக் கதவறிந்து பிரம
மந்திரத்தின் உண்மைவழி விந்தை தெரிந்து

சஞ்சலந் தனைப்பிரிந்து சித்தாதிகள்
தாள்பணிந் தேன் நான் துணிந்தே.

அகஸ்தியர் – திருவனந்தபுரம்
கொங்கணர் – திருப்பதி
சுந்தரனார் – மதுரை
கருவூரார் – கரூர்
திருமூலர் – சிதம்பரம்
தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் – பொய்யூர்
குதம்பை சித்தர் – மயிலாடுதுறை
இடைக்காடர் – திருவண்ணாமலை
போகர் ஜீவசமாதி, பழனி
இராமதேவர் – அழகர்மலை
கமலமுனி – திருவாரூர்
சட்டமுனி – திருவரங்கம்
வான்மீகர் – எட்டிக்குடி
நந்திதேவர் – காசி
பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்
போகர் – பழனி
மச்சமுனி – திருப்பரங்குன்றம்
பதஞ்சலி – இராமேஸ்வரம்