Moothurai

மூதுரை

ஒளவையார் அருளிச்செய்த மூதுரை

மூதுரை ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (மூப்பு + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம்” என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது.

இந்நூலில் 30 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.

இச்செய்யுள்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.

கடவுள் வாழ்த்து

மூதுரையின் கடவுள் வாழ்த்தில் விநாயகக் கடவுள் போற்றப் பட்டுள்ளார்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.

[நுடங்கு = வளை, துவள், தளர்; நுடங்காது = தளராது]

(மூதுரை)
(வாக்கு = சொல்வன்மை, மாமலராள் = திருமகள், நோக்கு = அருள் பார்வை, மேனி = உடல், துப்பு = பவளம், நுடங்காது = சோர்வு அடையாது, ஆர் = போன்ற, தும்பிக்கையான் = விநாயகப் பெருமான்)

எனும் கடவுள் வாழ்த்துப் பாடலில் தும்பிக்கையான் என்று விநாயகரைக் குறிப்பிடப்பட்டுள்ளார்.


இப்பாடலில் விநாயகனை வணங்குகிறவர்கள் பெறும் பயன்களாகப் பின்வருவனவற்றை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

1. சொல்வன்மை பெருகும்.
2. நல்ல எண்ணங்கள் உருவாகும்.
3. செல்வ வளம் பெருகும்.

என்பனவற்றில் ‘செல்வ வளம் பெருகும்’ என்னும் கருத்தைக் குறிப்பிடுவதற்கு, ‘மாமலராள் நோக்கு உண்டாம்’ என்று பாடியுள்ளார்.

‘மாமலராள்’ என்னும் சொல், தாமரைப் பூவில் வீற்றிருக்கும் திருமகளைக் குறிக்கும். ‘நோக்கு’ என்னும் சொல் அருள் பார்வையை உணர்த்தும். திருமகளின் அருள் பார்வையைப் பெற்றவர்கள், செல்வ வளம் பெற்று விளங்குவார்கள் என்று ஒளவையார் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பாடலில் விநாயகப் பெருமானின் நிறம் சிவப்பு என்பதற்கு ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார். ‘துப்பு’ என்றால் பவளம் என்று பொருள். பவளத்தின் நிறம் சிவப்பு, பவளம் போன்ற சிவந்த நிறம் கொண்டவன் விநாயகன் என்பதை விளக்குவதற்கு ‘துப்பு ஆர் திருமேனி’ என்னும் தொடரை ஒளவையார் பயன்படுத்தியுள்ளார்.

1.

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

[ஒருவற்கு = ஒருவனுக்கு; கால் = காலம், பொழுது; செய்தக்கால் = செய்தபொழுது; தருங்கொல் = தருமோ, தருவானோ?; தளரா = தளராமே; தெங்கு = தென்னை; தாள் = அடி, வேர்]

ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்வது மனித இயல்பு ஆகும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழும் இயல்பே குடும்ப வாழ்க்கையாக உருவாகியுள்ளது. இந்த உதவும் மனப்பான்மையானது குடும்ப வாழ்க்கையைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக நிலைத்திருக்க வேண்டும்.

• பயன் கருதா உதவி
உதவி செய்கிறவர்கள் பயனைக் கருதாமல் உதவிசெய்ய வேண்டும் என்பதைப் இந்த மூதுரைப் பாடல் விளக்குகிறது.

(நன்றி = உதவி, தெங்கு = தென்னைமரம், தாள் = அடிமரம்)
ஒருவருக்கு ஓர் உதவியைச் செய்தவுடன் அந்த உதவிக்கான பலனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

தென்னை மரத்தின் அடிப்பகுதியில் தண்ணீரை விட்டு வளர்க்கிறோம். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தலைப்பகுதி இனிய இளநீரைத் தருகிறது. அதைப்போல், பிறருக்கு நாம் செய்த உதவியும் பின்னர், பயனைத் தரும் என்று இப்பாடல் தெரிவித்துள்ளது.

2.

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்!

[உபகாரம் = உதவி, வேளாண்மை, ஒப்புரவு; அல்லாத = நல்லவர் அல்லாத; ஈரம் = இரக்கம், அன்பு; ஈந்த = கொடுத்த; நேர் = ஒப்பு, இணை]

உதவியின் பயன்
ஒருவர் செய்கின்ற உதவியைப் பெறுகின்றவரின் தன்மைக்கு ஏற்பவே அந்த உதவி, உயர்வாகவோ தாழ்வாகவோ கருதப்படும். நல்லவர்களுக்கு உதவி செய்தால் அந்த உதவி மதிக்கப்படும். தீயவர்களுக்கு உதவி செய்தால் அந்த உதவி அப்போதே மறக்கப்படும்.

(காணுமே = தெரியுமே, ஈரம் இலா = இரக்கம் இல்லாத, உபகாரம் = உதவி)
இந்தப் பாடல் நல்லவர்க்குச் செய்த உதவியையும் தீயவர்க்குச் செய்த உதவியையும் தெரிவிக்கிறது. நல்லவர்க்குச் செய்த உதவியானது கல்லில் பொறித்த எழுத்தைப் போல் நிலைத்து நிற்கும். தீயவர்க்குச் செய்த உதவியானது நீரின் மேல் எழுதிய எழுத்தைப் போல் உடனே அழிந்து போகும்.
இச்செய்யுளில் ஒளவையார் இரண்டு உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

கல்மேல் எழுத்து.

நீர்மேல் எழுத்து.

கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்து எந்தச் சூழ்நிலையிலும் நிலைத்து இருக்கும்; வெள்ளத்தால், காற்றால், தீயால் வேறு இயற்கைச் சீற்றங்களால் அழிந்து போகாது. அதைப் போன்று நல்லவர்க்குச் செய்த உதவி, காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்; நாட்டு மக்களால் விரும்பிப் போற்றப்படும். ஆனால், நீரில் எழுதிய எழுத்தானது, எழுதிய நொடியிலேயே அழிந்து விடும். அதைப்போல, தீயவர்களுக்குச் செய்த உதவி, அதன் பயனைப் பெற்றவர்களாலேயே கூட நினைக்கப்படாமல் உடனே மறக்கப்பட்டு அழிந்து விடும்.

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு


[இன்னா = துன்பம்; எய்தியக்கால் – எய்திய காலத்தில், அடைந்தபொழுது; இன்னா அளவில் = துன்பமான மூப்புக்காலத்தில்; இளமையில் வறுமை துன்பமானது; மூப்பில் இனியவையும் துன்பமாகிவிடும்; ஆள் = கணவன்; மங்கை = பெண்]

அட்டாலும் பால்சுவையில் குன்றா தளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளே;சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்!


[அடு = சுடு, சமை, வேகவை; அட்டாலும் = சுட்டாலும்; குன்றாது = குறைபடாது; அளவு = கலத்தல், பழக்கம், நெருக்கம்; அளவளவாய் = நெருக்கநெருக்கமாய், மிக நெருங்கிய பழக்கமாகி; நள் = நட்புக்கொள்; நட்டல் (*நள்த்தல்) = நட்புக்கொள்ளுதல்; நட்டால் = நட்புக்கொண்டாலும்; நண்பு = உண்மையான நட்பு]

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

(அட்டாலும் = காய்ச்சினாலும், குன்றாது = குறையாது, அளவளாய் = கலந்து பழகி, நட்டாலும் = நட்புக் கொண்டாலும், கெட்டாலும் = நிலையில் தாழ்ந்தாலும்)
அடுப்பில் வைத்து, பாலைக் காய்ச்சுவதால் பாலின் சுவை குறையாது. மாறாகச் சுவை கூடும். நெருப்பில் போட்டுச் சுடுவதால் சங்கின் வெண்மை குறையாது. மாறாக வெண்மை கூடும். இவற்றைப் போல, சான்றோர்கள் வறுமையால் துன்பப்பட்டாலும், தங்கள் நல்ல பண்பிலிருந்து மாறமாட்டார்கள். ஆனால், தீயோர்களிடம் எவ்வளவு நட்பாகப் பழகினாலும் அந்த நட்புக்குத் தகுதி உடையவர்களாகப் பழக மாட்டார்கள் என்பதே இப்பாடலின் கருத்து ஆகும்.


இந்தப் பாடலில் சான்றோர்களின் உயர்ந்த பண்பிற்கு இரண்டு உவமைகளைத் தெரிவித்துள்ள ஆசிரியர் தீயோருக்கு உவமை எதுவும் கூறாமல் விட்டுள்ளார்.


சான்றோருக்குக் கூறப்பட்டுள்ள இரண்டு உவமைகளிலும் வெண்மை நிறப்பொருள்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒன்று பால், மற்றொன்று சங்கு. இவை, சான்றோரின் மாசற்ற உள்ளத்தைக் குறிப்பாகக் காட்டுகின்றன.


இந்த இரண்டு பொருள்களும் வெப்பத்தால் தங்கள் இயல்பில் குறைவதில்லை.

இவற்றைப் போன்றே சான்றோர்களும் துன்பத்தால் தங்கள் நற்பண்புகளிலிருந்து மாறுவதில்லை என்பதை மூதுரை உணர்த்துகிறது.

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா!


[தொடுத்தல் = நெருங்கியிருத்தல், நெருக்கமாகக் கிளைத்து வளர்தல்; பழா = பழுக்கமாட்டா;]

உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ – கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்!


[உறு = நேர், நிகழ், இடையூறு நேர்; உற்ற இடத்தில் = தம் மானத்திற்கு இடைஞ்சல் நேரும் இடத்தில்; உயிர்வழங்கு = உயிரைவிடு; பற்றலர் = பற்றில்லாதவர், மதியாதார்; கற்றூண் = கல்லுத்தூண்; பெரும்பாரம் = தாங்கமுடியாத சுமை; இறு = உடை, நொறுங்கு; இறுவதல்லால் = நொறுங்குவதல்லாமல்; மானக்கேடு நேர்ந்தால் உயிர்விடும் குணமுடையவர் தம்மை மதியாதவரைக் கண்டாற் பணியமாட்டார்; எப்படியென்றால் கல்லுத்தூண் தாங்கமுடியாத சுமையைத் தாங்கநேர்ந்தால் அப்படியே பிளந்து நொறுங்குவதே அல்லாமல், துவண்டு வளையுமோ? வளையாது; அதுபோலவேதான் மானமுடையாரும்.]

நீர்அளவே ஆகுமாம் நீர்ஆம்பல் தான்கற்ற
நூல்அளவே ஆகுமாம் நுண்அறிவு – மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுங் குணம்!

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று!


[நன்றேஎ = நன்றே என்பதன் அளபெடை, பாட்டுக்காக நீட்டிப் பாடுதல்]

அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குபவர்களைச் சான்றோர் என்று கூறுவோம். இத்தகைய சான்றோர்களையே நாம் நல்லவர்கள் என்று போற்றுகிறோம்.

நல்ல பண்புகள் கொண்ட சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு வாழ வேண்டும் என்பதைப் இந்த செய்யுள் தெரிவிக்கிறது.

இச்செய்யுளில், நல்லவர்களின் தொடர்பு நான்கு நிலைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.நல்ல பண்பு உடையவர்களைக் காண்பது நன்மை தரும்.2.நல்லவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நன்மை தரும்.3.நல்லவர்களின் நற்பண்புகளைக் கூறுவது நன்மை தரும்.4.நல்லவர்களுடன் நட்புக்கொண்டு வாழ்வது நன்மை தரும்.
இச்செய்யுளில் மனிதனின் இன்றியமையா உறுப்புகளான கண், காது, வாய், மெய் ஆகியவற்றின் செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நல்லவர்களைக் காணும் கண்ணின் வேலையையும், நல்லவர்களின் அறிவுரைகளைக் கேட்கும் காதின் வேலையையும், நல்லவர்களின் நற்பண்புகளைக் கூறும் வாயின் வேலையையும் நல்லவர்களுடன் நட்புக்கொண்டு அருகிருக்கும் மெய்யின் வேலையையும் மூதுரை தெரிவித்துள்ளது.


ஐம்புலன்களில் மூக்கின் வேலையைத் தவிர ஏனைய உறுப்புகளின் வேலைகள் அனைத்தையும் தெரிவித்திருப்பதன் மூலம் நல்லவர்கள் தொடர்பின் பெருமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதேஎ – தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் தீது.


[திரு = நன்மை, பயன்;தீதேஎ = தீதே என்பதன் அளபெடை, பாட்டுக்காக நீட்டிப் பாடுதல்]

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!


[பொசி = ஊறு, கசி]

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டுமி போனால் முளையாதாம் – கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகா(து) அளவின்றி
ஏற்ற கருமம் செயல்.


[பண்டு = முன்பு; பண்டு முளைப்பது அரிசியே = உமி நீங்குதற்குமுன்பே முளைப்பது அரிசிதான்; விள்= பிள, உடை; அளவு = துணை, உதவி (வேங்கடசாமி நாட்டார் உரைப்படி); எப்படி முக்கியமான அரிசிக்குங்கூட அது முளைக்க எந்த மதிப்புமற்ற உமி தேவையோ அதுபோலப் பெரிய ஆற்றல் உடையவர்க்குங்கூடச் சிறிய வலிமையுள்ள மனிதர்களின் துணை என்னும் வலிமை தேவை]

மடல்பெரிது தாழை; மகிழ்இனிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா – கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்


[தாழை = தென்னை அல்லது தாழம்பூ; மகிழ் = மகிழம்பூ; கந்தம் = மணம், வாசம்; மண்ணீர் = கழுவும்நீர்;]

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – அவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்


[கவை = மரம் கிளையாகப் பிரியும் இடம்; கொம்பு = கிளை]
கல்வி அறிவு இல்லாதவனின் இழிவை விளக்குவதற்கு மூதுரை மேலும் ஒரு பாடலைத் தெரிவித்துள்ளது.

(கவை = கிளை, கொம்பு = மரக்கிளையின் ஒரு பகுதி, சபை = அவை, நீட்டு ஓலை = ஓலைச்சுவடி)

கற்றவர்கள் நிறைந்த அவையில் நிற்கும் ஒருவனிடம் ஓர் ஓலை கொடுக்கப்படுகிறது. அந்த ஓலையில் எழுதப்பட்டுள்ளதை அவன் படிக்க வேண்டும். கல்வி அறிவு இல்லாத அவனால் அதைப் படிக்க இயலவில்லை. எனவே அவன் அப்படியே நிற்கிறான். அவனை ‘மரம்’ என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார். கல்வி அறிவு இல்லாதவனை ‘மரம்’ என்று குறிப்பிட்ட ஒளவையார் மரங்களை ‘மரம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கிளைகளாகப் பிரிந்து நீண்ட கொம்புகளைக் கொண்டு காட்டில் நிற்கும். அவை மரங்கள் அல்ல. கற்றோர் அவையில் கொடுக்கப்பட்ட ஓலையைப் படிக்க இயலாமல் நிற்பவனும் அவையின் குறிப்பை அறியமாட்டாதவனும் ஆகியவனே ‘நல்ல மரம்’ ஆவான் என்று மேலும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி


[கானம் = காடு; பாவி = நினை; பொல்லா = கீழான]
(கானம் = காடு, பாவித்து = நினைத்துக்கொண்டு, பொல்லாச்சிறகு = அழகு இல்லாச் சிறகு, கவி = கவிதை)

கல்வி அறிவு இல்லாதவர்கள் பெருமை பெற இயலாது என்பதை மூதுரை தெரிவித்துள்ளது. கல்வி அறிவு பெற்றவர்களுக்குக் கிடைக்கும் பெருமையைப் பார்த்து, கல்வி அறிவு பெறாதவர்களும் அதுபோல் பெருமையைப் பெற விரும்பிச் செயல்பட்டால் அவர்களுக்குப் பெருமை வந்து சேராது.

இதை விளக்குவதற்கு ஓர் உவமையைக் காட்சியாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதோ அந்த உவமைக் காட்சியைக் காணுங்கள்.
காட்டில் ஒரு மயில் தனது தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து அதன் அழகிலும் ஆட்டத்திலும் ஒரு வான்கோழி மயங்கியது. தோகை உடைய மயில் ஆடுவதைப் போல் தோகை இல்லாத வான்கோழியும் ஆடுவதற்கு ஆசைப்பட்டது என்பதுதான் அந்த உவமைக் காட்சி.
இந்த உவமையில் மயிலைக் கல்வி அறிவு பெற்றவனுக்கும் மயிலின் தோகை விரித்த ஆட்டத்தைக் கல்வி அறிவு உடையவன் எழுதிய கவிதைக்கும் ஆசிரியர் உவமித்துள்ளார்.
வான்கோழியைக் கல்வி அறிவு இல்லாதவனுக்கும் அதன் ஆட்டத்தைக் கல்வி அறிவு இல்லாதவனின் கவிதைக்கும் உவமையாக்கியுள்ளார்.

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் – பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்


[வேங்கை = புலிவகை; விடகாரி = மருத்துவன்; ஆங்கதனுக்கு = ஆங்கு அதனுக்கு; ஆங்கதனுக்கு ஆகாரம் ஆனாற்போல் = அதன் நோயைத் தீர்த்த அங்கேயே அதற்கு உணவானாற்போல்;
பாங்கு = தகுதி, ஒழுக்கம்; புல்லறிவாளர் = அறிவிலிகள்; உபகாரம் = உதவி, வேளாண்மை; கலம் = பானை, கப்பல்]

(நோய் = துன்பம், விடகாரி = மருத்துவன், பாங்கு அறியா = பண்பு அறியாத, புல்லறிவாளர் = தீயவர், கலம் = பாத்திரம்)


இச்செய்யுளில், தீயவர்களுக்கு உதவி செய்தால், அந்தத் தீயவர்கள், உதவி செய்தவர்களுக்கே துன்பம் ஏற்படும்படி செய்து விடுவார்கள் என்னும் கருத்து விளக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தை விளக்குவதற்கு ஒரு காட்சி விளக்கத்தையும் ஓர் உவமையையும் மூதுரை பயன்படுத்தியுள்ளது.

விடகாரி என்பவன் உடலில் பரவியுள்ள நஞ்சை அகற்றும் மருத்துவன் ஆவான்.
ஒரு வேங்கைப் புலியானது உடலில் நஞ்சு பரவி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த நஞ்சு முறிவு மருத்துவர், அந்தப் புலிக்கு மருத்துவம் செய்து காப்பாற்றினார். உயிர் பிழைத்த அந்தப் புலிக்குப் பசி எடுத்தது. தன்னை உயிர் பிழைக்கச் செய்த மருத்துவன் என்றும் கருதாமல் அந்த மருத்துவனையே கொன்று தனது பசியைத் தீர்த்துக் கொண்டது.

இந்த நிகழ்ச்சியில், உயிர் பிழைத்த புலியானது, தனக்கு மருத்துவ உதவி செய்தவரையே கொன்றுவிட்டது.

அதைப்போல, தீயவர்களுக்கு உதவிசெய்தால், உதவி செய்தவர்களுக்கே தீமையாக முடிந்து விடும்.

இதை மேலும் வலியுறுத்துவதற்கு, ‘கல்லின் மேல் இட்ட கலம்‘ என்னும் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. கலம் என்பது பாத்திரத்தைக் குறிக்கும். இங்கே அது மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தைக் குறிக்கிறது.

மண்ணால் செய்யப்பட்ட பாத்திரம் கல்லில் விழுந்தால் எப்படி உடைந்து பயன் இல்லாமல் போகுமோ அதைப் போல, தீயவர்களுக்குச் செய்த உதவியும் பயன் இல்லாமல் போகும். மண் பாத்திரம் எவ்வாறு உடைந்து போகுமோ அதைப் போன்று, தீயவர்களுக்கு உதவி செய்தவர்களும் துன்பம் அடைவார்கள் என்பதை இப்பாடல் விளக்குகிறது.
இதே கருத்தை விளக்கும் வகையில் ‘பாத்திரம் அறிந்து பிச்சை இடு’ என்னும் பழமொழியும் உள்ளது.

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு


[கடக்க = வெல்ல; மடை = அணையிலிருந்து நீர் வெளியே பாயும் தொளை; தலை – இடம்;
மடைத்தலை = அணையிலிருந்து நீர் வெளியே பாயும் இடம்; உறு = பெரிய, கொழுத்த]

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு


[அற்ற = நீரற்ற, நீர்வற்றின; உற்றுழி = துன்பமுற்ற நிலைமை; தீர்வார் = நீங்குவார்]

சங்க காலம் முதல் தமிழ்ச் சமுதாயத்தில் நட்பு, சிறப்பிடம் பெற்றுள்ளது. பிசிராந்தையார் என்னும் புலவரும் கோப்பெருஞ்சோழன் என்னும் மன்னனும் ஒருவருக்கு ஒருவர் நேரில் பார்க்காமலேயே நட்புக் கொண்டிருந்தனர்.

ஒளவையாரும் அதியமான் என்னும் மன்னனும் நட்புடன் விளங்கியிருக்கிறார்கள்.

பாரி வள்ளலும் கபிலர் என்னும் புலவரும் நல்ல நண்பர்களாய் இருந்துள்ளனர்.

இத்தகைய நட்பின் சிறப்பை மூதுரை இரண்டு பாடல்களில் தெரிவித்துள்ளது.

• எது நல்ல நட்பு?
இருவர் சிலநாள் நெருங்கிப் பழகுவதால் ஏற்படுவது அல்ல நட்பு. அந்த இருவருக்கு இடையே அன்பாலும் அறிவாலும் ஏற்படும் இணைப்புத் தான் நட்பாகச் சிறந்து விளங்கும்.

நல்ல நண்பர்கள், நண்பனுக்குத் துன்பம் ஏற்பட்ட வேளையில் உதவுவார்கள். தீய நண்பர்கள், நண்பனுக்குத் துன்பம் ஏற்படும் போது அவர்களை விட்டு விலகி விடுவார்கள்.

(அற்ற = நீர் இல்லாத, அறு = அகன்று செல்லும், உற்றுழி = துன்பம் ஏற்பட்ட வேளை, தீர்வார் = விலகிச் செல்கிறவர், கொட்டி, ஆம்பல், நெய்தல் = நீர்த் தாவரங்கள், உறுவார் = நட்புக் கொள்கிறவர்)
என்னும் மூதுரைப் பாடல் நல்ல நண்பர்களையும் தீய நண்பர்களையும் அடையாளம் காட்டியுள்ளது.

குளத்தில் கொட்டி என்னும் நீர்க் கொடியும் ஆம்பல் என்னும் கொடியும் நெய்தல் கொடியும் நிறைந்து இருக்கும். அதே குளத்தில் உள்ள மீன்களை உண்ணும் நோக்கத்துடன் பறவைகளும் இருக்கும்.

குளத்தில் நீர் நிறைந்து இருக்கும் போது அங்கே தங்கி இருக்கும் பறவைகள், நீர் வற்றிவிட்டால் வேறு குளத்திற்குப் பறந்து போய் விடும். ஆனால் கொட்டி, ஆம்பல், நெய்தல் முதலிய நீர்க் கொடிகள் நீர்வற்றி விட்டாலும் அந்தக் குளத்திலேயே கிடந்து வாடும்.

குளத்தில் நீர்வற்றிய உடன் பறந்து விடும் பறவையைப் போன்றவர்கள் தீய நண்பர்கள். நீர்வற்றிய பிறகும் அங்கேயே கிடக்கும் கொட்டி, ஆம்பல், நெய்தல் முதலிய கொடிகளைப் போன்றவர்கள் நல்ல நண்பர்கள் என்று மூதுரை தெரிவித்துள்ளது.

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால்அங் கென்னாகும்? – சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்

பொற்குடம் உடைந்தாலும் பொன் ஆகும்!

சான்றோரின் பெருமை எந்த நிலையிலும் குறையாது. அவர்கள் செல்வ நிலையில் உயர்ந்து இருந்தாலும் தாழ்ந்து இருந்தாலும் அவர்களின் பெருமை குறைவதில்லை.

(சீரியர் = சான்றோர், கெட்டாலும் = செல்வத்தில் குறைந்தாலும், உடைந்தக்கால் = உடைந்தால்)
நல்ல சான்றோர்கள் ஏதோ காரணத்தால் தங்கள் நிலையிலிருந்து தாழ்ந்தாலும், தங்கள் உயர்ந்த பண்பிலிருந்து மாற மாட்டார்கள்; மதிப்பும் குறையாது என்பதை மூதுரை இச்செய்யுளில் குறிப்பிட்டுள்ளது. இதை விளக்குவதற்கு இரண்டு செய்திகளை அது சுட்டிக் காட்டியுள்ளது.

பொன்னின் குடம் உடைந்தால், பொன் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தால் என் ஆகும்?

என்பனவே அந்தச் செய்திகள்.
பொன்னால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் அது தண்ணீர் பிடிப்பதற்கு உதவாது. எனினும் உடைந்த அந்தப் பொன்குடத்தின் மதிப்புக் குறைவதில்லை. ஏனென்றால் பொன்குடத்திற்கு மதிப்பு, பொன்னால் வருகிறது. அதைப் போல, செல்வ நிலையிலிருந்து சான்றோர்கள் தாழ்ந்தாலும் அவர்களின் மதிப்புக் குறைவதில்லை. ஏனென்றால் சான்றோர்களின் மதிப்பு, அவர்களின் பண்பால் வருகிறது.

சான்றோரைப் பற்றித் தெரிவித்த மூதுரையின் இந்தச் செய்யுள், தீயோரைப் பற்றியும் தெரிவித்துள்ளது.

தீயோர்களின் செல்வ நிலையில் குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு மதிப்புக் கிடைப்பதில்லை. ஏனெனில் தீயோருக்கு அவர்களின் நற்பண்பால் மதிப்புக் கிடைக்கவில்லை. அவர்களின் செல்வ நிலையின் காரணமாகவே ஓரளவு மதிப்புக் கிடைத்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இக்கருத்தை விளக்குவதற்கு,
என் ஆகும், மண்ணின் குடம் உடைந்தக்கால்?
என்ற வினா எழுப்பப்பட்டுள்ளது.

மண்ணால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் அது தண்ணீர் பிடிப்பதற்கும் உதவாது; அதற்கு மதிப்பும் கிடையாது. அதைப்போல, தீயோர்களிடம் செல்வம் இல்லை என்றால் அவர்களுக்கு மதிப்புக் கிடையாது. ஏனென்றால் தீயோருக்குக் கிடைத்த ஓரளவு மதிப்பும் அவர்களின் செல்வத்திற்குக் கிடைத்தது ஆகும்.

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர
நாழி முகவாது நால்நாழி – தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.


[முக = மொள்; முகக்கினும் = மொண்டாலும்; நாழி = குழாயிற் செய்த முகத்தல் அளவுக் கருவி]

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு

சுற்றமும் நட்பும்


நம்முடன் பிறந்தவர்களும் சுற்றமும் மட்டுமே நமது உற்றத்தார் என்று முழுமையாக நம்பி இருக்க வேண்டாம். அந்த உடன்பிறந்தாரும் சுற்றமும் நமது உயிரைப் போக்கும் அளவிற்குத் துன்பம் செய்து விடுவதும் உண்டு. ஆனால் உடன்பிறவாத நண்பர்கள் நமக்கு நன்மை செய்வார்கள் என்பதை இந்த மூதுரைப் பாடல் விளக்குகிறது.

(சுற்றத்தார் = உறவினர், வியாதி = நோய், பிணி = நோய்)
நோயானது நமது உடலிலே தோன்றி நமது உயிரையே பறிக்கும் கொடுமை உடையது. ஆனால், நம்முடன் தோன்றாமல் தொலைவில் உள்ள மலையில் தோன்றிய அரிய மூலிகை மருந்து அந்த நோயைப் போக்கி நமது உயிரைக் காக்கும். அதைப் போன்று, நம் உடன் பிறந்தோர் நமக்குத் துன்பம் செய்வது உண்டு. ஆனால் உடன் பிறவாமல் தொலைவில் இருந்தே நமக்கு உதவும் நண்பர்களும் உண்டு. எனவே, நண்பர்களை நமது உறவினர்கள் இல்லை என்று ஒதுக்கிட வேண்டாம் என மூதுரை தெரிவிக்கிறது.

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்

எழுதியவா றேகாண் இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் – கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

கற்பிளவோ ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே – விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்

நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்


[கயம் = குளம்; காம் = விருப்பம்; காமுறு = விரும்பு; கற்பு = கல்வி, பயிற்சி, நன்னடத்தைப் பயிற்சி; முக, உக = விரும்பு]
(கயம் = குளம், காமுறுவர் = விரும்புவர், கற்புஇலா = கல்வி இல்லா, முகப்பர் = விரும்புவர், உகக்கும் = விரும்பும்)
தாமரைப்பூக்கள் பூத்திருக்கும் குளத்தில் அன்னப்பறவைகள் நீந்தி மகிழும். அதைப்போல, கற்றவர்களுடன் கற்றவர்கள் சேர்ந்து மகிழ்வார்கள். இடுகாட்டில் உள்ள பிணங்களைக் காக்கை விரும்பி உண்ணும். அதைப்போல, கல்வி அறிவு இல்லாதவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களுடன் விரும்பிச் சேர்ந்து வாழ்வார்கள்.
இந்தச் செய்யுளில் இரண்டு உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நல்தாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்.

முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்.

என்பவை அந்த உவமைகள் ஆகும். இவ்வுவமைகளில் கற்றவர்களின் பெருமையைக் குறிப்பிடுவதற்குத் தாமரைக் குளத்தையும் அன்னத்தையும் உவமையில் பயன்படுத்தியுள்ளார். ஆனால் கல்வி அறிவு இல்லாதவர்களின் இழிவைக் குறிப்பிடுவதற்குக் காக்கையையும் பிணத்தையும் உவமையில் பயன்படுத்தியுள்ளார். உயர்ந்த பொருள்களை உயர்ந்த கருத்திற்கு உவமையாகவும் இழிந்த பொருள்களை இழிந்த கருத்திற்கு உவமையாகவும் மூதுரை வழியாக ஒளவையார் தெரிவித்துள்ள நுட்பம் சிறப்பு உடையது ஆகும்.
கற்றாரைக் கற்றவர் விரும்புவர்
கல்வி அறிவு பெற்றவர்களால்தான் கற்றவர்களின் பெருமையை அறிய முடியும். கல்வி அறிவு இல்லாதவர்களால் கற்றவர்களின் அறிவுத் திறனை அறிந்து கொள்ள இயலாது.

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.


[கரந்து – மறைந்து, ஒளிந்து; அஞ்சா = அஞ்சாமல்; கரவு = மறைவு, வஞ்சம்]

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு

மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றில் அடிப்படையானது கல்வி. எனவே கல்விக்கு மூதுரை முதலிடம் கொடுத்துள்ளது. ஒரு மன்னன் கல்வி அறிவு இல்லாதவனாக இருந்தால் அவனுக்குப் பெருமை கிடையாது. ஆனால், கல்வி அறிவு உடையவன் மன்னனாக இல்லை என்றாலும் பெருமை உடையவன் ஆவான் என்னும் கருத்தைப் பின்வரும் மூதுரைப் பாடல் தெரிவிக்கிறது.

(மாசு அற = குற்றம் நீங்கும் படியாக, மன்னனின் = மன்னனை விட, கற்றோற்கு = கல்வி கற்றவனுக்கு, சிறப்பு = பெருமை.)
மன்னனுக்கு அவனது நாட்டில் மட்டும்தான் பெருமை உண்டு. ஆனால் கல்வி உடையவனுக்குச் சென்ற இடங்களில் எல்லாம் பெருமை வந்து சேரும். எனவே, மன்னனை விடவும் கற்றவனுக்கே பெருமை உண்டு என்று இப்பாடல் தெரிவிக்கிறது.
செல்வநிலையிலும் வாழ்க்கை முறையிலும் உயர்ந்த நிலையில் இருப்பவன் மன்னன். அந்த மன்னனை விடவும் கல்வி அறிவு பெற்றவனை உயர்வுபடுத்தியிருப்பதன் மூலம் கல்வி, பெருமைப்படுத்தப் பட்டுள்ளது.

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் – மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்தொழுகாப் பெண்.


[கூற்றம் = எமன்; மாந்தர் = மனிதர்; இல் = வீடு, குடும்பவாழ்க்கை; இசைந்து = ஒத்து; ஒழுகா = நடக்காத]

சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா(து;) ஆதலால் – தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.


[குறடு = கட்டை; கந்தம் = மணம்; தம் = செல்வம்; தார் = மாலை;

மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு போம்


[மருவு = பழக்கம், உறவு; வான் = உயர்ந்த; உரு = அழகு; மடந்தை = பெண், திருமகள்;

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.


[தனை = அளவு, வரை; சாந்தனை = சாகும் வரை; ஆந்தனை= ஆகுந் தனை; ஆகும்வரை; குறை = வெட்டு]