05. Thiru Naattup Padalam

5 திருநாட்டுப்படலம் (90 – 146)

90 அவ்வியல் பெற்றிடு மாற்றன் மள்ளர்கண்
மைவரு கடலுடை மங்கை தன்னிடை
மெய்வளங் கொள்வதை வேண்டி யந்நிலச்
செய்விக ணாடியே யினைய செய்குவார். 1

91 சேட்டிளந் திமிலுடைச் செங்க ணேற்றொடுங்
கோட்டுடைப் பகட்டினம் விரவிக் கோன்முறை
காட்டினர் நிரைபட வுழுப காசினி
பூட்டுறு பொலன்மணி யாரம் போலவே. 2

92 காற்றினு மனத்தினுங் கடுமை சான்றன
கோற்றொழில் வினைஞர்தங் குறிப்பிற் செல்லுவ
ஏற்றினஞ் சேறலு மிரிந்த சேலினம்
பாற்றின மருளவிண் படர்ந்து பாயுமால். 3

93 சால்வளை தரவுழும் வயலிற் றங்கிய
வால்வளை யினம்வெரீஇ யலவன் மாப்பெடைச்
சூல்வளை புகுவதங் கறிஞர் சூழ்விலைக்
கோல்வளை மகளிர்பாற் கூட்ட மொத்ததே. 4

94 உலத்தொடு முறழ்புயத் துழவர் பொன்விளை
புலத்தினும் வியத்தகு வயலிற் போக்கிய
வலத்திடைப் பிறழ்மணி வேள்வி யாற்றிடும்
நிலத்திடைப் பிறந்தமின் னிகர்க்கும் நீர்மைய. 5

95 நாறுசெய் குநர்சிலர் நார நீர்வயல்
ஊறுசெய் குநர்சில ரொத்த பான்மையிற்
சேறுசெய் குநர்சிலர் வித்திச் செல்லுநீர்க்
காறுசெய் குநர்சில ரளப்பின் மள்ளரே. 6

96 குச்செனப் பரிமிசைக் குலாய கொய்யுளை
வைச்செனத் தளிர்த்தெழு நாற்றின் மாமுடி
அச்செனப் பதித்தனர் கடைஞ ராவியா
நச்சின மகளிரை நினைந்து நைந்துளார். 7

97 வாக்குறு தேறலை வள்ள மீமிசைத்
தேக்கின ருழவர்தந் தெரிவை மாதரார்
நோக்குறு மாடியி னுனித்து நோக்கினர்
மேக்குறு காதலின் மிசைதன் மேயினார். 8

98 வாடுகின் றார்சிலர் மயங்கி நெஞ்சொடு
மூடுகின் றார்சில ருயிர்க்கின் றார்சிலர்
பாடுகின் றார்சிலர் பணிகின் றார்சிலர்
ஆடுகின் றார்சிலர் நறவ மார்ந்துளார். 9

99 அந்தரப் புள்ளடு மளிக டம்மொடும்
வந்தடுத் தவரொடு மயக்கு தேறலை
இந்திரத் தெய்வத மிறைஞ்சி வாமமாந்
தந்திரக் கிளைஞர்போற் றாமு மேயினார். 10

100 விள்ளுறு நாணினர் விரகத் தீயினர்
உள்ளுறு முயிர்ப்பின ருலையு நெஞ்சினர்
தள்ளுறு தம்முணர் வின்றிச் சாம்பினார்
கள்ளினு முளதுகொல் கருத்த ழிப்பதே. 11

101 பளிக்கறை யன்னதோர் படுகர்ப் பாங்கினுந்
தளிர்ப்புறு செறுவினுந் தவறுற் றேகுவார்
தௌ¤ப்பவ ரின்மையி னெறியிற் சென்றிலர்
களிப்பவர் தமக்குமோர் கதியுண் டாகுமோ. 12

102 இன்னன பற்பல வியற்றி யீண்டினர்
உன்னருந் தொல்லையி லுணர்வு வந்துழிக்
கன்னெடுந் திரள்புயக் கணவ ரேவலில்
துன்னின ரவரோடுந் துவன்றிச் சூழ்ந்துளார். 13

103 மள்ளர்தம் வினைபுரி மழலைத் தீஞ்சொலார்
கள்ளுறு புதுமணங் கமழும் வாலிதழ்
உள்ளுறு நறுவிரை யுயிர்த்து வீசிய
வௌ¢ளிய குமுதமென் மலரின் மேவுமே. 14

104 நட்டதோர் குழுவினை நடாத தோர்குழு
ஒட்டலர் போலநின் றொறுத்த லுன்னியே
அட்டன ராமென வடாத வான்களை
கட்டனர் வேற்றுமை யுணருங் காட்சியார். 15

105 ஏயின செயலெலா மியற்றி வேறுவே
றாயிடை வேண்டுவ தமைய வாற்றியே
மாயிரும் புவிமிசை மகவைப் போற்றிடுந்
தாயென வளர்த்தனர் சாலி யீட்டமே. 16

106 மன்சுடர் கெழுமிய வயிர வான்கணை
மின்சுடர் தூணியின் மேல கீழுறத்
தன்சுடர் பொலிதரச் செறித்த தன்மைபோற்
பொன்சுட ரிளங்கதிர் புறத்துக் கான்றவே. 17

107 பச்சிளங் காம்புடைப் பணையின் மீமிசை
வச்சிரத் தியற்றுமோ ரிலைகொள் வான்படை
உச்சிமே லுறநிறீஇ யொருங்கு செய்தெனக்
குச்சுறு சாலிமென் கதிர்கு லாவுமால். 18

108 சுற்றுறு ப·றலைச் சுடிகை மாசுணம்
பெற்றுறு குழவிகள் பெயர்த லின்றியே
முற்றுறு நிவப்பொடு முறையி னிற்றல்போ
நெற்றுறு பசுங்கதிர் நிமிர்தல் மிக்கவே. 19

109 மையுறு கணிகையர் மகிழ்நர் வந்துழிப்
பொய்யுறு மளியெனப் பயனில் புன்கதிர்
கையுறு முவகையாற் பணியுங் கற்பினோர்
மெய்யுறு பரிவென விளைந்து சாய்ந்தவே. 20

110 மாலுறு பொன்னகர் மருவு மன்னற்குப்
பாலுறு தீம்பதம் பலவு மார்த்தியே
மேலுறு சாலியின் விளைவு நோக்கியே
கோலிநின் றரிந்தனர் குழாங்கொண் மள்ளரே. 21

111 அரிந்திடு சுமைகளா லவனிப் பேருடல்
நெரிந்திடச் சேடனு நௌ¤ந்து நீங்கிடத்
தெரிந்திடும் போர்கள்சே ணளவுஞ் சேறலால்
விரிந்திடு கதிர்சுலா மேரு வாயவே. 22

112 ஏற்றொடு பகட்டின மிசைத்துப் போருரு
மாற்றினர் வலமுறை திரித்து வாழ்த்தொலி
சான்றினர் பரனொடு தமது தெய்வதம்
போற்றினர் மீமிசை பொலிகென் றோதுவார். 23

113 தொங்கலம் பூமுடித் தொழுவர் போரினை
அங்குறப் படுத்துவை யகற்றி யாக்கிய
பொங்கழிப் பதடிகள் புறத்து வீசியே
எங்கணு நெற்குவை யியற்று வாரரோ. 24

114 களப்படு கைவலோர் கால்க ளான்முகந்
தளப்புறு நெற்குழா மவற்றுண் மன்னவற்.
குளப்படு கடன்முறை யுதவி மள்ளருக்
களித்தனர் வேண்டிய தனைய நாட்டுளோர். 25

115 சொற்குவை வழிபடப் புகழிற் றோன்றுதம்
மிற்குவை வேண்டுவ தேவி யெஞ்சிய
நெற்குவை குரம்பையி னிரப்பு வித்தனர்
பொற்குவை யரிந்தனர் பொதிவித் தென்னவே. 26

116 தலத்திடை வேறிடத் தொதுங்குந் தண்ணிய
குலத்திடைப் பிறந்தவர் கூட்ட மாமென
நலத்திடை வந்திடு முதிரை நல்வளம்
நிலத்திடை யொருசிறை விளையு நீரவே. 27

117 பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்
திறப்பதும் வைகலு முலகி லேய்ந்தெனச்
சிறப்புட னடுவதும் பருவஞ் செய்வதும்
மறுப்பதுந் தொகுப்பது முலப்பின் றாயவே. 28

118 முழவொல விண்ணவர் முதல்வற் காக்குறும்
விழவொலி கிணையொலி விரும்பு மென்சிறார்
மழவொலி கடைசியர் வள்ளைப் பாட்டொலி
உழவொலி யல்கலு முலப்பு றாதவே. 29

119 காலுற நிமிர்ந்திடு காமர் சோலையும்
நீலமுங் கமலமு நிறைந்த பொய்கையும்
ஆலையங் கழனியும் கநங்கற் காயுத
சாலைக ளிவையெனச் சாற்ற நின்றவே. 30

120 நெறியிடை யொழுகலா விழுதை நீரரை
மறலிதன் னகரிடை வருத்தல் போலுமால்
குறைபடத் துணித்தவண் குவைசெய் கன்னலை
அறைபடு மாலைக ளிடையிட் டாட்டலே. 31

121 ஏறுகாட் டியதிற லிளைஞ ரெந்திரங்
கூறுகாட் டியகழை யழுங்கக் கோறலுஞ்
சாறுகாட் டியதரோ யாதுந் தம்மிடை
ஊறுகாட் டினர்க்கலால் உலோப ரீவரோ. 32

122 மட்டுறு கழையினும் வலிதிற் கொண்டபின்
இட்டகொள் கலங்களி னிருந்த தீம்புனல்
தொட்டிடு கடலெனத் தொன்று மன்னவை
அட்டதோர் புகைமுகி லளாவிற் றொக்குமே. 33

123 கூடின தேனிசை யிளமென் கோகிலம்
பாடின மயில்சிறை பறைய டித்தன
வாடின வஞ்சிதந் தலைய சைத்திடா
நாடின பாதவம் புகழ்வ நாரையே. 34

124 காசொடு நித்திலப் பொதியுங் காட்டியே
பாசடை மாதுளை சினையிற் பைங்குயில்
பேசிட நிற்பன பெறீஇயர் வம்மென
வீசுதல் கருதியே விளித்தல் போன்றவே. 35

125 சித்திரக் கதலிமா வருக்கைத் தீங்கனி
துய்த்திட வரும்பய னுதவுந் தோற்றத்தால்
உத்தம முதலிய குணத்தி னோங்கிய
முத்திறத் தவர்கொடை மொழிய நின்றவே. 36

126 வீசுகால் பொரவசை விசும்பிற் றாழைகள்
தேசுலாம் பரிதிமெய் தீண்டுஞ் செய்கைய
காசினி தன்கையாற் கலைவெண் டிங்கள்போல்
மாசுறா வகைதுடைத் திடுதல் மானுமே. 37

127 வாசநீள் பொதும்பரின் மைந்தர் மாதர்கள்
காசுநூன் மேகலை பரியக் கைவளை
பூசலிட் டலமரப் புணருஞ் செய்கைகண்
டாசைமிக் கழுங்குவ பிரிந்த அன்றிலே. 38

128 கானுலா நந்தன வனமுங் காரென
வானுலாந் தண்டலை மருங்கும் வைகலும்
வேனிலா னன்னவர் மகளிர் மேயினார்
ஊனுலாங் குரம்பையு ளுயிருற் றென்னவே. 39

129 அசும்புறு மகன்புன லறாத சூழலின்
விசும்புற வோச்சிய விரைமென் றாதினாற்
பசும்பொனிற் குயிற்றிய பதியிற் றூபிகைத்
தசும்பெலாம் வௌ¢ளிய தாக்குந் தாழையே. 40

130 உற்றிட வரிதவ ணுழவர் நீத்ததார்
சுற்றிடுந் தாண்மிசை யிடறுஞ் சூல்வளை
தெற்றிடும் பூங்கொடி புடைக்குஞ் சேலினம்
எற்றிடுந் தேம்பழ மிழுக்குந் தேன்களே. 41

131 கானிமிர் கந்திகள் கான்ற பாளைமேன்
மீனினம் பாய்தலுஞ் சிதறி வீழ்வுறா
வானதோர் மருதவைப் படையுந் தன்மைய
வானுறு தாரகை வழுக்கிற் றொக்குமால். 42

132 மாகுல வல்லியின் மஞ்ஞை யாடல்போல்
கோகில மார்தருக் குழத்தி னூசன்மேற்
பாகுல வின்சொலார் பணிக்கு மெல்லிடைக்
காகுலம் பிறர்கொள மகிழ்வி னாடுவார். 43
வேறு

133 ஊசலுற்றவர் குழைக்குடைந் திடுதலா லுவரை
வீச லொப்பன வாடுதல் கிளிமொழி வெருவிப்
பேச லொப்பன வீழ்ந்திலர் பிழைத்ததீ தென்னா
ஏச லொப்பன கோகிலப் பறவைக ளிசைத்தல். 44

134 கூர்ப்புக் கொண்டகட் கொடிச்சியர் குளிர்புனங் காப்போர்
ஆர்ப்புக் கொண்டுகை விசைத்தெறி மணிக்கல்வந் தணையச்
சார்ப்புக் கொண்டதஞ் சிறகரால் விலக்கியத் தடத்துப்
பார்ப்புக் கொண்டுகொண் டெழுவன தோலடிப் பறவை. 45
வேறு

135 கடற்பரு கியமுகில் பெய்யுங் காட்சிபோல்
அடற்பெரு மேதிக ளனைத்தும் புக்குராய்த்
தடப்பனல் வறிதெனப் பருகித் தம்முலைக்
குடத்திழி பாலினாற் குறையைத் தீர்க்குமே. 46

136 பாட்டிய லளிமுரல் பதுமக் கோயிலில்
நாட்டிய நிமலன்மு னந்தி நீரிடை
மாட்டிய பல்பெருஞ் சுடரை மானுமாற்
கோட்டுயர் தடந்தொறுங் குவளை பூத்தவே. 47

137 கலனிடைத் தருவதுங் கானத் துள்ளதும்
பொலனுடைப் பொருப்பிடைப் பொருளு மல்லது
நலனுடை நாட்டவர் நயதத லின்றிய்ந்
நிலனிடைப் பொருள்பகர் வழக்க நீத்ததே. 48

138 யாழ்க்கையர் பொருநருக் கிறைவ ரேழிசை
வாழ்க்கைய ரளவையின் வகுத்த பாடலைக்
கேட்குநர் நன்றென மருப்புக் கிம்புரிப்
பூட்கைக ளுதவுவார் பொதுவி றோறுமே. 49

139 கஞ்சிதேய்ப் புண்டகில் கமழும் பூந்துகில்
வஞ்சிதேய்ப் புண்டன மருங்கு லாரடி
பஞ்சிதேய்ப் புண்டன பணியத் தாக்கலாற்
குஞ்சிதேய்ப் புண்டன குமரர் கூட்டமே. 50

140 அன்றிலம் பெடைகளை யணுகி யன்னைகேள்
நன்றென வினையின்மே னடந்த நாயகர்
இன்றுவந் திடுவரிங் கெமபொ ருட்டினால்
ஒன்றுநீ யிரங்க்லென் றுரைக்கின் றார்சிலர். 51

141 ஆடியல் கருங்கணுஞ் சிவப்புற் றங்கமும்
வாடுவ தாகியே மதன வேர்வுறாக்
கூடிய மகளிருங் குமரர் தங்களை
ஊடிய மகளிரு முலப்பின் றாயினார். 52

142 அகனமர் கணிகைய ரடிகள் சூடியே
முகனுறு முவகையான் முயங்கி யன்னவர்
நகனுறு குறிகொளீஇ நாளுங் காமநூல்
தகைமைசெய் காளையர் தொகுதி சான்றதே. 53

143 வாளைக ளிகல்புரி வயலும் வாலியும்
பாளையொ டுற்பலம் பதும நாறுமால்
வேளயர் தடங்கணார் விரைமென் றாளினை
காளையர் குஞ்சியுங் காரமு நாறுமால். 54

144 சேவக மணைவன கரிகள் சேனைகள்
காவக மணைவன கலைகள் புள்ளினம்
பூவக மணைவன பொறிவண் டாயிடைப்
பாவக மணைவன பாட லாடலே. 55

145 ஆடக மாமதி லம்பொற் கோபுரம்
நீடிய மண்டப நெறிகொ ளரீவணம்
பாடலொ டாடிடம் பிறவும் பாலிநன்
னாடுள பதிதொறு நண்ணி யோங்குமே. 56

146 தெண்டிரை யுலகினிற் சீர்பெற் றோங்கிய
மண்டல மெங்கணு மதிக்க நின்றதோர்
தொண்டைநன் னாட்டணி சொல்லி னாமினித்
தண்டமிழ் வளநகர்த் தன்மை கூறுவாம். 57