நன்னெறி
(ஆசிரியர் : துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்)
கடவுள் வாழ்த்து
மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.
நூல்
1 . உபசாரம் கருதாமல் உதவுக
என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்போர் தீதற்றோர் – துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து?
2 . வன்சொல்லும் இனிமையாகும்
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க – ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஓண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு.
3 . இனிய வழியறிந்து ஒருபொருளை அடைக.
தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட்கு உரியவரால் தாங்கொள்க – தங்கநெடுங்
குன்றினால் செய்தனைய கொங்காய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து.
4 . செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியதாம்
பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் – பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.
5 . நட்பிற்பிரியலாகாது
நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் – பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்.
6 . தம்பதிகள் ஒற்றுமை
காதல் மனையாளும் காதலும் மாறின்றித்
தீதில் ஓருகருமம் செய்பவே – ஓதுகலை
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்ல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.
7 . கல்விச் செருக்குக் கூடாது
கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனையசெக்கு ஆழ்த்தி – விடலே
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.
8 . ஆறுவது சினம்
உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க – வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு.
9 . துணையுடையார் வலிமையுடையார்
மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தம்மைத்தான் மருவின் – பலியேல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவி யஞ்சாதே
படர்சிறைய புள்ளரசைப் பார்த்து.
- தன்னலம் கருதலாகாது
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் – திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகின்
நிறையிருளை நீக்குமேல் நின்று.
- அறிஞர் ஐம்புலன்கட்கு அடிமையாகார்
பொய்ப்புலன்கள் ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் – துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.
- உடம்பில் உயிர் அமைந்த வியப்பு.
வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை – தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.
- அன்பொடு உதவுக
பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் – சுரக்கும்
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.
- செல்வச் செருக்குக் கூடாது
தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று
கலையா யாவர் செருக்குச் சார்தல் – இலையால்
இரைக்கும்வண்டு ஊதுமலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு.
- அன்பற்ற செல்வம் பயனற்றது
இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் யிருந்துமவர்க் கென்செய்யும் – நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்
விழிலார்க்கு ஏது விளக்கு
- மேலோர் இழிந்தோர்க்கும் உதவுவார்
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை மதியார் தமையடைந்தோர் – தம்மின்
இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல்.
- வள்ளல்கள் வறுமையிலும் உதவிபுரிவார்கள்
எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் ஈகைமறுப்பரோ – பைந்தொடிஇ
நின்று பயனுதவி ல்லா அரம்பையின் கீழ்க்
மன்றும் உதவும் கனி.
- இன்சொல்லையே உலகம் விரும்பும்
இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே – பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல்.
- நல்லார் வரவு இன்பம் பயக்கும்
நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவால் அழுங்குவார் – வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துங் கழற்கால் வர.
- பெரியோர் பிறர் துன்பம் கண்டிரங்குவார்
பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவார் என்க – தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கழலுமே கண்.
- இலக்கணம் கல்லார் அறிவு கற்றார் அறிவுக்குமன் செல்லாது
எழுத்தறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம் – எழுத்தறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுடி கண்டளவில்
வீயும் சுரநீர் மிகை.
- அறிவுடையோர் உயர்குலத்தவர் அறிவிலார் இழிகுலத்தவர்
ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க – நீக்க
பவர்ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்
கவரார் கடலின் கடு.
- மனவுறுதி விடலாகாது
பகர்ச்சி மடவார் பயிலநொன்பு ஆற்றல்
திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் – நெகிழ்ச்சி
பெறும்பூரிக் கின்றமுலை பேதாய் பலகால்
எறும்பூரக் கல்குழியுமே.
- ஓருவர்தம் நற்குணத்தையே பேசுதல் வேண்டும்
உண்டு குணமிங்கு ஒருவர்க்கு எனினும்கீழ்
கொண்டு புகல்வதவர் குற்றமே – வண்டுமலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்பும் கனி.
- மூடர் நட்புக் கூடாது
கல்லா அறிவின் கயவர்பால் கற்றுணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே – வில்லார்
கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையில் புகுமொண் பொருள்.
- உருவத்தால் சிறியவரும் அறிவினால் பெறியவராவார்
உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் – மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணும் கதிரோளிதான்
விண்ணள வாயிற்றோ விளம்பு.
- அறிஞர்கள் கைம்மாறு வேண்டாமல் உதவுவார்கள்
கைம்மாறு கவாமல்கற் றறிந்தோர் மென்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம்செய்வர் – அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று.
- அறிவுடையோர் கோபத்திலும் உதவுவார்
முனிவிலும் நல்குவர் முதறிஞர் உள்ளக்
கனிவிலும் நல்கார் கயவர் – நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்து
ஆயினும் ஆமோ அறை.
- ஆண்டவர் அடியார் எதற்கும் அஞ்சார்
உடற்கு வருமிடர் நெஞ்சோங்கு பரத்துற்றோர்
அடுக்கும் ஒருகோடியாக – நடுக்கமுறார்
பண்ணின் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணில் புலியைமதி மான்.
- இறப்புக்குமுன் அறம்செய்க
கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே – வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு.
- பிறர் துன்பம் தாங்குக
பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவர் – நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாங்கும் கடிது.
- பகுத்தறிவற்றவர் அறங்கள் பயன்படா
பன்னும் பனுவல் பயந்தோர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே – நன்னுதால்
காழென்று உயர்திண்கதவுவலியுடைத்தோ
தாழென்று இலதாயின் தான்.
- பெரியோர்க்குப் பாதுகாப்பு வேண்டுவதில்லை
எள்ளா திருப்ப இழிஞர் போற்றற்குரியர்
விள்ளா அறிஞரது வேண்டாரே தள்ளாக்
கரைகாப் புளதுநீர் கட்டுகுளம் அன்றிக்
கரைகாப்புளதோ கடல்.
- அறிவுடையவர் பழிக்கு அஞ்சுவர்
அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும் – பிறைநுதால்
வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்ணஞ்சுமோ இருளைக்கண்டு.
- மேன்மக்கள் அறிவுடையோரையே விரும்புவர்
கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தாம் என்றும் மதியாரே – வெற்றிநெடும்
வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வாழைப்பழம்.
- தக்கார்கே உதவுக
தக்கார்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று
மிக்கார்குதவார் விழுமியோர் – எக்காலும்
நெல்லுக்கு இரைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புலலுக்கு யிரைப்ரோ போய்.
- பெரியேர் முன் தன்னை புகழலாகாது
பெரியோர் முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழும் – தெரியாய்கொல்
பொன்னுயர்வு தீர்த்த புணர் முலையோய் விந்தமலை
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.
- நல்லார் நட்பு நன்மை பயக்கும்
நல்லார்செயுங் கோண்மை நாடோ றும் நன்றாகும்
அல்லார்செயுங் கேண்மை ஆகாதே – நல்லாய் கேள்
காய்முற்றின் தினதீங் கனியாம் இளந்தளிர்நாள்
போய்முற்றின் என்னாகிப் போம்.
- மூடர் நட்பு கேடு தரும்
கற்றறியார் செய்யுங் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியுந் தீமைநிகழ் யள்ளதே – பொற்றொடிஇ
சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.
- புலவர்களுக்கு அரசர்களும் ஒப்பாகார்
பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம் மற்றெவ்வார் – மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனையாக்
காணும் கண்ணொக்குமோ காண்.