Uruthira Pasupathi Nayanar

உருத்திர பசுபதி நாயனார்

“முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை

உருத்திர பசுபதி நாயனார்
பெயர்:உருத்திர பசுபதி நாயனார்
குலம்:அந்தணர்
பூசை நாள்:புரட்டாசி அசுவினி
அவதாரத் தலம்:தலையூர்
முக்தித் தலம்:தலையூர்
பொன்னி நதியால் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஓரூர் திருத்தலையூர். இத்திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் என்னும் பெரியார் அவதரித்தார். இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தைக் காதலித்தோதி வந்தார். இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் அருமறையாகியப் பயனாகிய திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் நியதியுடையவராய் இருந்தார். இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவர் இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கியருளினார்.