காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றினைச் சிவனடியாருக்குப் படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினைக் கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனைச் சரணடைந்தார்.
இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.
இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.
வாழ்க்கை வரலாறு
இளமைக் காலம்
முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.
இல்லறம்
முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.
மாங்கனியில் திருவிளையாடல்
ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளைப் பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்குக் கொடுத்து விட்டார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று அமரச் செய்தார் அம்மையார். மத்திய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்குப் பல வகைப் பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.
மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படிக் கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்துச் சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். “மெய் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே” அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனைக் கணவனுக்குப் படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததைக் கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படிக் கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார். உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தார். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களும் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு கடலின்மீது பயணமாகச் சென்றார்.
பேய் வடிவு பெறுதல்
பின்னர் பரமதத்தன் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார்.சிலகாலம் கழித்து அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைத்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள், அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். அதன் பிறகு “கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்” என்று இறைவனிடம் வேண்டி நின்றார். தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்.
கயிலாயம் செல்லல்
அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் சென்றார். கயிலையில் இறைவனுடன் இடங்கொண்டு அமர்ந்திருந்த பார்வதி அம்மை, தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு இவர் யாரெனக் கேட்க “நம்மைப் பேணும் அம்மை காண்” எனக் கூறி “அம்மையே வருக” என்றழைத்து “வேண்டுவன கேள்” என விளித்தார், அதற்கு அம்மையார் “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க” என்றார்.அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.
எழுதியுள்ள நூல்கள் தொகு
காரைக்கால் அம்மையார் பதினொராம் திருமுறையுள் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பனுவல்களை பாடியுள்ளார். பதினொராம் திருமுறையுள் நான்கு பனுவல்கள் உள்ளன.
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 1 – 11 படல்கள் (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 2 – 11 படல்கள் (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)
திருவிரட்டை மணிமாலை – 20 பாடல்கள்
அற்புதத் திருவந்தாதி – 101 பாடல்கள்
தேவார காலத்திற்கு முன்பே இசைத்தமிழால் சிவபெருமானை பாடியவர் என்பதால் இசைத்தமிழின் அன்னை என்று அறியப்படுகிறார். இவருடையப் பதிக முறையைப் பின்பற்றியே தேவார திருப்பதிகங்கள் பாடப்பட்டன.
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் தொகு
காரைக்கால் அம்மையார் பாடிய இந்த பதிக முறையே முதன் முதலாகப் பாடப்பெற்றதாகும். அதனால் இவை மூத்த பதிகங்கள் என்றும், இறைவனை பதிக முறையில் பாடியமையால் திருப்பதிகம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் இறைவன் ஆடியதை பாடியமையால், இவை அனைத்தும் சேர்த்து திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது.
அற்புதத் திருவந்தாதி தொகு
அற்புதத் திருவந்தாதி என்பது சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும். இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூலாகும். இந்நூலுக்கு ஆதி அந்தாதி என்றப் பெயரும், திருவந்ததாதி என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.
திருவிரட்டைமணிமாலை தொகு
திருவிரட்டைமணிமாலை என்பது இரட்டை மணிமாலையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலினை காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்ததாதி நூலுக்குப் பிறகு படைத்துள்ளார். இந்நூலில் சிவபெருமானின் சிறப்புகளை புகழ்ந்து காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அம்மையாரை மூலவராக் கொண்ட கோயில் அமைந்துள்ளது. இதனை காரைக்கால் அம்மையார் கோயில் என அழைக்கின்றனர். அம்மையார் புனிதவதியின் தோற்றத்துடன் இளமையோடு உள்ளார். அவருடைய சன்னதியின் சுதைச் சிற்பங்களிலும், சுற்றுப் பிரகார ஓவியங்களிலும் காரைக்கால் அம்மையின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது.
மாங்கனித் திருவிழா தொகு
காரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க காரைக்கால் சோமநாதர் கோயில் சார்பாக மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
சிறப்புகள் தொகு
சிவபெருமானால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டவர்.
தனிக்கோயில் காரைக்காலில் உள்ளது.
இறைவனின் நடனமாடும் போது கீழே அமர்ந்து இசைத்தபடி இருப்பார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தினை கொண்டவர். மற்ற நாயன்மார்கள் நின்றபடியே பிரகாரத்தில் இருப்பர்.
அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.
திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையார் தங்கியமையால், ஞானசம்பந்தர் அத்தலத்தில் கால்பதிக்க தயங்கினார்.
அம்மையாரின் பாடல்களை மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சிறப்பிக்கப்படுகிறது.