லலிதா ஸஹஸ்ரநாமத்தில் கணித இயல்:
லக்ஷணம் என்றால் குறியீடு அல்லது இலக்கணம்.
ஸஹஸ்ரநாமம் – ஸஹஸ்ர (1000) + நாமம் (பெயர்கள்).
அம்பிகையை ஆயிரம் பெயர்களால் அழகுற துதிக்கச் செய்யும் மந்திரங்கள்.
பொதுவாக, ஸஹஸ்ரம் என்ற வார்த்தைக்கு வேத பாஷ்யங்கள் – எண்ணற்றது என்று அர்த்தம் தருகின்றன. (ஸஹ்ஸ்ரசீர்ஷா புருஷ: .. ஸஹஸ்ரபாத் – யஜுர் வேதம் – புருஷ ஸூக்தம் – இங்கு ஸஹஸ்ரம் என்ற வார்த்தைக்கு எண்ணிக்கையற்றது என்றே பொருள்.)
அதேபோல் ஸஹஸ்ரநாமம் என்றால் அம்பிகை எண்ணற்ற நாமங்களை, பெயர்களைக் கொண்டவள் என்று பொருள்.
நாமாவளி என்றால் பெயர்களை வரிசையாக அமைத்தல் என்று அர்த்தம். (தீபாவளி – தீபங்களை வரிசையாக அமைத்தல்)
ஸஹஸ்ரம் என்றால் ஆயிரம் (1000) என்றும் அர்த்தம் உண்டு. ஆகவே, அம்பிகைக்குரிய ஆயிரம் பெயர்களை வரிசையாக அமைத்து வழிபடும் பிரார்த்தனைக்கு ஸஹஸ்ரநாமாவளி என்று பெயர்.
ஸஹஸ்ரநாமம் என்றால் எப்படியெல்லாம் அமையவேண்டும் என்று இலக்கண சூத்திரங்கள் (formula) அறுதியிடுகின்றன.
சலாக்ஷ்ர சூத்திரம் என்பது வடமொழி இலக்கணத்தில் மிக முக்கியமான ஒன்று.
அது, ஸஹஸ்ரநாமம் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று நியதிப்படுத்துகின்றன.
அந்த வகையில் எல்லா விதங்களிலும் பரிபூரணமாக, மிகப் பொருத்தமாக அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம்.
எளிமையாகவும் (லகு), இனிமையாகவும் (லலிதம்), இலக்கணத்தின் முழுமை பெற்ற (லக்ஷணம்) வடிவமாகவும் லலிதா ஸஹஸ்ரநாமம் அமைந்திருப்பதனால் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது.
லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணங்கள் பல உண்டு. அவற்றில், சிலவற்றை மட்டும் காண்போம்.
ஸஹஸ்ரநாமம் அமைய வேண்டும் என்றால் ஆயிரம் பெயர்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அவை அந்த தெய்வத்தின் புகழைக் கூறவேண்டும். அவற்றை இலக்கணப்படி ஸ்தோத்திரமாக்க வேண்டும். அப்படி ஸ்தோத்திரமாக ஆனது, சந்தஸ் எனும் சந்தம் அல்லது செய்யுள் தன்மை மாறாமல் அமைய வேண்டும்.
உதாரணமாக,
- ஸ்ரீ மாத்ரே நம: (அன்னை வடிவான அம்பிகையை வணங்குகின்றோம்)
- ஸ்ரீ மஹாராக்ஞ்யை நம: (அகில உலகிற்கும் மஹாராணியை வணங்குகின்றோம்.)
- ஸ்ரீமத் ஸிம்ஹாஸநேஸ்வர்யை நம:
மேற்கண்ட மூன்று நாமாக்களையும் ஸ்தோத்திரமாக மாற்ற முடியவேண்டும்.
அது,
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீமத் ஸிம்ஹாசனேஸ்வரீ
இப்படி ஸ்தோத்திரமாக மாற்றப்பட்டது எவ்விதத்திலும் சந்தங்களில் மாறாமல் அமைய வேண்டும்.
அதே போல மாற்றப்பட்ட ஸ்தோத்திரத்திலிருந்து நாமாவளிகாக மறுபடியும் பிரிக்க ஏதுவாக இருக்க வேண்டும்.
சில ஸஹஸ்ரநாமங்களில் ஸ்தோத்திரத்துனுள், சந்தங்களுக்கு, செய்யுள் தன்மைக்கு ஏற்ப அமைய வேண்டி, சில அர்த்தமற்ற சப்தங்கள் அமைந்துவிடும். அவை, நாமாவளிகாக மாற்ற வேண்டிவரும்போது, அர்த்தமற்ற சப்தங்கள் (ஸ்தோத்திரத்தில் இருப்பவை) நாமாவளிகளில் வராது.
இது போன்று எந்தவொரு அர்த்தமற்ற சப்தங்களும் இந்த ஸஹஸ்ரநாமத்தில் கிடையாது. சொற்குற்றம், பொருட்குற்றம் இவையில்லாத, அப்பழுக்கற்றதாக லலிதா ஸஹஸ்ரநாமம் திகழ்கின்றது.
ஸஹஸ்ரநாமம் அமைவதில் மிக முக்கியமான மற்றொரு நிபந்தனை உண்டு. ஸஹஸ்ரநாமத்தில் ஒரு வார்த்தை இடம்பெற்று விட்டால், மறுபடியும் அந்த வார்த்தை வேறு எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது.
லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இடம்பெறும் எந்தவொரு வார்த்தையும் மறுபடியும் அதனுள் வருவதில்லை.
சில வார்த்தைகள் இருமுறை வருவது போல தோன்றக்கூடும்.
உதாரணமாக,
வரதா வாமநயனா …
விச்வகர்பா ஸ்வர்ணகர்பா வரதா வாகதீஸ்வரி …
மேற்கண்ட வரதா எனும் வார்த்தை, மறுபடியும் ஒரு இடத்தில் வருவதைக் காண்கின்றோம்.
அதை எப்படி அர்த்தம் கொள்வது என்பதை அறிஞர்கள் பகுத்தாய்கின்றார்கள்.
முதலில் வருவது வரதா,
பின்னால் அமைவது அவரதா எனக் கொள்ளவேண்டும்.
ஸுமுகீ நளினீ ஸுப்ரு: சோபனா ஸுரநாயிகா …
ஸுவாஸின்யர்ச்சனப்ரீதா சோபானா சுத்தமானஸா
இங்கு சோபனா எனும் வார்த்தை இரண்டாவது வரியில் அமைவதை, ப்ரீதா (ஆ)சோபனா எனக் கொள்ளவேண்டும்.
கடபயாதி சங்க்யை :
வடமொழி இலக்கணத்திற்கு மிகப் பெரும் பங்காற்றிய வரருசி என்பவர் கடபயாதி ஸங்க்யை என்ற நியதியை வகுத்தார்.
அது, க, ட, ப, ய என்ற எழுத்துக்களுக்கும், அதைத் தொடர்ந்து வரும் எழுத்துக்களுக்கும் எண்ணிக்கை மதிப்பைக் கொடுத்தார். ஆகவே அது க ட ப ய – என்னும் எழுத்துக்களை ஆதியாக, தொடக்கமாகக் கொண்ட ஒரு கணக்கு வழி – அதுவே கடபயாதி ஸங்க்யை.
க – 1, க(kha) – 2, க(ga) – 3, க(gha) – 4, ங – 5, ச – 6,
ச(cha) – 7, ஜ – 8, ஜ(jha) – 9, ஞ – 0
ட – 1, ட(tta) – 2, ட(da) – 3, ட(dda) – 4, ண – 5, த – 6,
த(ttha) – 7, த(dha) – 8, த(ddha) – 9, ந – 0
ப – 1, ப(pha) – 2, ப(ba) – 3, ப(bha) – 4, ம – 5,
ய – 1, ர – 2, ல – 3, வ – 4, ச – 5, ஷ – 6, ஸ – 7, ஹ – 8
எந்தெந்த எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள் (பெயர்கள்) அமையவேண்டும் என்பதை கடபயாதி ஸங்க்யை அறுதியிடுகின்றது.
உதாரணமாக, அருண எனத் தொடங்கும் பெயர்கள்.
கடபயாதி ஸங்க்யை படி அருண எனும் வார்த்தைக்கு 12 எனும் மதிப்பு வருகின்றது. (கடபயாதி ஸங்க்யை – சற்றே கடினமான சூத்திரங்களைக் கொண்டது. எளிதில் புரிபடாதது. தகுந்த ஆசிரியர் கொண்டு கற்க வேண்டும்)
அருணன் என்றால் சூரியன் என்று பொருள்.
சூரியன் ஒரு வருடத்தில் 12 மாதங்களைக் கடந்து வருகின்றார்.
சூரியனுக்கு 12 பெயர்கள் உள்ளதாக ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.
(மித்ரன், ரவி, சூர்யன், பானு, ககன், பூஷன், ஹிரண்யகர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவித்ரு, அர்க்கன், பாஸ்கரன்)
அதே போல மற்றொரு பன்னிரண்டு பெயர்களையும் புராணங்கள் கூறுகின்றன. (1.தபினீ, 2.தாபினீ, 3.தூம்ரா, 4.மரீசி, 5.ஜ்வாலினி, 6.ருசி, 7.ஸுக்ஷும்னா, 8.யோகதா, 9.விச்வா, 10.போதிணீ, 11.தாரிணீ, 12. க்ஷமா)
அருண எனும் பதத்திற்கு 12 எனும் மதிப்புடையதால், லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அருண எனும் தொடங்கும் பெயர்கள் 12 தான் அமைந்திருக்கின்றன.
இதே போல பல நாமாக்களுக்கு கடபயாதி ஸங்க்யைபடி – எண்ணிக்கையின் மதிப்பும், அதனைச் சார்ந்த நாமாவளிகளின் எண்ணிக்கையும் ஒன்றாகவே அமைவது பெரும் ஆச்சர்யத்தைத் தருகின்றது.
மேலே சொன்னது போல, மற்றும் ஒரு வகையில் லலிதா ஸஹஸ்ரநாமம் பகுக்கமுடிகின்றது. அது, 3 எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள், 8 எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள் என்றும் பகுக்கப்படமுடிகின்றது.
சந்திரனை ஒப்பிடாத எந்தவொரு அழகியல் இலக்கியமும் இல்லை.
அதன்படி, சந்திரனை வர்ணித்து லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பல பெயர்கள் அமைந்துள்ளன.
அம்பிகையின் நெற்றியானது – அஷ்டமீ சந்த்ர விப்ராஜ… என்ற நாமத்தின் படி, எட்டாவது தினத்திய சந்திரனைப் போன்று அழகுற விளங்குகின்றது என்று லலிதா ஸஹஸ்ரநாமம் கூறுகின்றது.
அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை 15 கலைகள் உள்ளன. அதில் எட்டாவது நாள் சந்திரன் – அரை சந்திர (7 1/2க்கும் அதிகமாக) வடிவத்திற்கும் சற்றே கூடுதலாக – விளங்கும். அந்த அர்த்தசந்திர வடிவம் அம்பிகையின் நுதலாக, நெற்றியாக விளங்குகின்றதாம்.
அப்படி தலையின் மேல் பாகமாகிய நெற்றி அரைச் சந்திர வடிவமும், கீழ் பாகம் அம்பிகையினுடைய சுயமான ஒளி பொருந்திய வடிவத்தினால் மற்றும் ஒரு அரை சந்திரன் வடிவமாகவும் திகழ்கின்றதாம்.
அப்படியானால், முகம் – இரு அரை சந்திர வடிவங்களும் இணைந்த – பௌர்ணமி நிலவு போல் என்றும் பிரகாசிக்கின்றதாம். (ஆகையினால் தான் அபிராம பட்டருக்கு அமாவாசையிலும் பௌர்ணமியை அம்பிகைத் தோன்றச் செய்தாள்.)
எட்டு என்ற எண்ணிக்கை அம்பிகைக்கு மிகவும் உகந்தது.
அஷ்டமியில் செய்யப்படும் ஸஹஸ்ரநாம பூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது என்று இதன் பலச்ருதி விளக்குகின்றது.
வேதங்களும் அம்பிகையின் புகழை எட்டு என்ற எண்ணிக்கை கொண்டு போற்றுகின்றன. (கௌரிமிமாய ஸலிலானி … அஷ்டாபதி … )
அம்பாள் வீற்றிருக்கும் ஸ்ரீ நகரத்தின் முதல் வாயிலில், அஷ்ட தேவதைகள் வீற்றிருப்பதாக ஸ்ரீ வித்யா பூஜை கூறுகின்றது.
எட்டின் மடங்கில் உள்ள எண்ணிக்கையை லலிதா ஸஹஸ்ரநாமம் பெரிதும் முக்கியத்துவமாகக் கொண்டுள்ளது.
(மஹா சதுசஷ்டி கோடி யோஹினி … 8X8 = 64 கோடி எண்ணிக்கை கொண்ட யோகினி எனும் தேவதைகளால் துதிக்கப்படுபவள்)
அம்பிகையின் நெற்றி – எட்டாவது நாளின் சந்திரனின் வடிவத்தினுடைய காந்தியைக் கொண்டுள்ளது என்றும், கீழ் முகம் மற்றும் ஒரு எட்டாவது சந்திரனுடைய ஒளியைக் கொண்டுள்ளது என்றும் புராணங்கள் கூறுகின்றன. (அதாவது 8 + 8 = 16 – பெளர்ணமி தினத்தை விட மேலான ஒரு ஒளியைக் கொண்டுள்ளவள் அம்பிகை)
16 என்னும் எண்ணிக்கையும், சாக்த உபாஸனையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஷோடச (16) அக்ஷரம் (எழுத்துக்கள்) – சோடஷாக்ஷரீ எனும் (16 எழுத்துக்களைக் கொண்ட) ஸ்ரீ வித்யா மந்திரமே அம்பிகையை வழிபட உகந்த மிக மிக மேன்மையான உபாஸனா மந்திரம் என்று சாக்த சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
அந்த 16ன் அம்சம் லலிதா ஸஹஸ்ரநாமம் முழுக்க விரவியிருப்பதைக் காணும்போது வியக்கத்தக்கதாக உள்ளது.
லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தின் ஒவ்வொரு வரியும் 16 எழுத்துக்களைக் கொண்டுள்ளன.
ஸ்ரீ மா தா ஸ்ரீ ம ஹா ரா க்ஞீ ஸ்ரீ மத் ஸிம் ஹா ச னே ச்வ ரீ –
இது லலிதா ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரத்தின் முதல் வரி.
இந்த வரியிலுள்ள எழுத்துக்களை எண்ணிவந்தால் 16 எழுத்துக்களில் அமையும். (புள்ளி வைத்த ஒற்றெழுத்துக்கள் இலக்கண விதிப்படி கணக்கில் வராது)
அது மட்டுமல்ல ஒவ்வொரு வரியுமே 16 எழுத்துக்களைக் கொண்டு தான் அமைகின்றது.
இரண்டாவது வரி,
சி தக் னி கு ண்ட ஸம் பூ தா தே வ கா ர்ய ஸ முத் ய தா – 16 எழுத்துக்கள்.
(ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தினைச் சொல்லிவந்தால் எண்ணற்ற முறை ஸ்ரீ வித்யா மந்திரத்தினை சொன்ன பலன் கிடைக்கும் என்பது உபாஸகர்களின் மேலான கருத்து)
இரண்டு வரிகள் சேர்ந்தது ஒரு ஸ்லோகம்.
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீ மத் ஸிம்ஹாசனேஸ்வரி
சிதக்னி குண்ட ஸம்பூதா தேவ கார்ய ஸமுத்யதா
இரு வரிகளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 16+16 = 32.
வடமொழியில் உள்ள எழுத்துக்கள் 51. (அ முதல் க்ஷ வரை)
இதில்,
அ எனும் எழுத்தில் தொடங்கும் அம்பிகையின் பெயர்கள் – 40
(அகாந்தா, அகுலா, அக்ஷமாலாதிதரா, அக்ரகண்யா…)
அதே போல, மற்ற எழுத்துக்களில் தொடங்கும் நாமாவளிகளைக் கீழே காணலாம்.
அ எனும் எழுத்தில் 40 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
ஆ எனும் எழுத்தில் 11
இ – 3
ஈ – 2
உ – 5
ஊ – 5
ஏ – 1
ஓ – 2
அம் – 4
க – 81
க(2) – 1
க(3) – 24
ச – 29
ச(2) – 1
ஜ – 18
ட(3) – 2
த – 46
த(3) – 37
த(4) – 14
ந – 75
ப – 81
ப(3) – 24
ப(4) – 37
ம – 112
ய – 13
ர – 38
ல – 14
வ – 79
ச – 59
ஷ – 5
ஸ – 122
ஹ – 11
க்ஷ – 9 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. (ஆக மொத்தம் ஆயிரம் நாமாவளிகள்)
வடமொழியின் 51 எழுத்துக்களில் நாமாவளிகள் ஆரம்பிக்காத எழுத்துக்கள்:
ஊ, ரு, ரூ, லு, லூ, ஐ, ஔ, அ:, க(4), ங, ஜ(4), ஞ, ட, ட(2), ட(4), ண, த(2), ப(2), ள – ஆகிய 19 எழுத்துக்களில் அம்பிகையின் பெயர்கள் ஆரம்பிக்கப்படவில்லை.
ஆக, 51-19 = 32 எழுத்துக்களில் மட்டுமே நாமாவளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் ஒரு ஸ்லோகத்தின் உள்ள எழுத்துக்களும் 32 எண்ணிக்கையே.
லலிதா ஸஹஸ்ரநாமம் மூன்று பகுதிகள் உடையது.
- பூர்வ பாகம் 2. நாமார்ச்சனா பாகம் 3. பலச்ருதி பாகம்
பூர்வ பாகம் – 51 ஸ்லோகங்களும்,
நாமார்ச்சனா பாகம் – 182 1/2 ஸ்லோகங்களும்,
பலச்ருதி – 86 1/2 ஸ்லோகங்களும் கொண்டதாக அமைந்திருக்கின்றது.
ஆக, மொத்த ஸ்லோகங்கள் = 320 (32ன் பத்தின் மடங்காக அமைவதைக் காணுங்கள்)
ஆதியந்தம் :
லலிதா ஸஹஸ்ரநாமத்தின் ஆதி (முதல்) பதம் (வார்த்தை) – ஸ்ரீ மாதா
ஆயிரமாவது நாமாவளி – லலிதாம்பிகா
ஆதி அன்னையாக விளங்குபவள் லலிதா அம்பிகை என்பதையும், முதலும் முடிவுமாக உள்ளதையும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகின்றது
Courtesy: நடராஜ தீக்ஷிதர்