Pathinen Keezh Kanakku Noolkal

பதினெண் கீழ்க்கணக்குநூல்கள்

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என வழங்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.

அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்குஅடிகளுக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். சங்ககாலச் சான்றோர்களின் அனுபவ உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக் கருத்துக்களாகப் போற்றினர். நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்கிற பதினொரு நூல்களும் நீதிநூல்களாகும்.

திருக்குறளும் நாலடியாரும்

திகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.நாலடியாரைத் தொகுத்தவர் பதுமனார். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’, ‘சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது’, ‘பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா:

“நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்,கடுகம்,கோவை,பழமொழி,மாமூலம்,
இன்னிலைய காஞ்சியோடு,ஏலாதி என்பவே,
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு.”
இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.

நீதி நூல்கள்

திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
திரிகடுகம்
ஆசாரக்கோவை
பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்
ஏலாதி
முதுமொழிக்காஞ்சி
அகத்திணை நூல்கள்

ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
கைந்நிலை
கார் நாற்பது
புறத்திணை நூல்

களவழி நாற்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை

வரிசைஎண் நூல்பெயர் பாடல் எண்ணிக்கை பொருள் ஆசிரியர்

  1. நாலடியார் 400 அறம்/நீதி சமணமுனிவர்கள்
  2. நான்மணிக்கடிகை 101 அறம்/நீதி விளம்பி நாகனார்
  3. இன்னா நாற்பது 40+1 அறம்/நீதி கபிலர்
  4. இனியவை நாற்பது 40+1 அறம்/நீதி பூதஞ்சேந்தனார்
  5. திரிகடுகம் 100 அறம்/நீதி நல்லாதனார்
  6. ஏலாதி 80 அறம்/நீதி கணிமேதாவியார்
  7. முதுமொழிக்காஞ்சி 10*10 அறம்/நீதி கூடலூர்க்கிழார்
  8. திருக்குறள் 1330 அறம்/நீதி திருவள்ளுவர்
  9. ஆசாரக்கோவை 100+1 அறம்/நீதி பெருவாயின் முள்ளியார்
  10. பழமொழி 400 அறம்/நீதி முன்றுரை அரையனார்
    11 சிறுபஞ்சமூலம் 104 அறம்/நீதி காரியாசான்
  11. ஐந்திணை ஐம்பது 50 அகம் பொறையனார்
  12. ஐந்திணை எழுபது 70 அகம் மூவாதியார்
  13. திணைமொழி ஐம்பது 50 அகம் கண்ணஞ் சேந்தனார்
  14. திணைமாலை நூற்றைம்பது 150 அகம் கணிமேதாவியார்
  15. கைந்நிலை 60 அகம் புல்லங்காடனார்
  16. கார்நாற்பது 40 அகம் கண்ணங்கூத்தனார்
  17. களவழி நாற்பது 40+1 புறம் பொய்கையார்

நாலடியார்
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவூம் பெயர் பெறும். ‘வேளாண் வேதம்’ என்ற பெயரும் உண்டு. பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலானதிருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.

வாழ்க்கையின் எளிமையான விடயங்களை உவமானங்களாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.
நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து : 1 அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்) பொருட்பால் : 260 பாடல்கள் (26 அதிகாரஙள்) காமத்துப்பால் : 10 பாடல்கள் (1 அதிகாரம்) மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
(2. பொருட்பால், 2.14 கல்வி, 131)

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரின் புணருமாம் இன்பம் – புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.
(2.25 அறிவுடைமை, 247)

கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும் புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் – தச்சன் வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்” சினமால் பொருத களத்து.

ஆங்கிலத்தில் போப்பையரால் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை உடைத்து இந்நூல். கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும் புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் – தச்சன் வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்” சினமால் பொருத களத்து.

நான்மணிக்கடிகை

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார்என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது. இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்மணிக்கடிகை எனப்பெயர் பெற்றது.

கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் இயமன் ஆகின்றன. வாழைமரம் தான் ஈனுகின்ற காயினாலேயே அழிந்துபோகிறது. செய்யத்தகாதவற்றைச் செய்பவர்களுக்குஅறமே இயமன். ஒரு குடும்பத்துக்கு, தீய ஒழுக்கம் கொண்ட பெண்ணே இயமனாவாள் என்ற பொருள்கொண்ட, நான்மணிக்கடிகைப் பாடலொன்றைக் கீழே காண்க.

கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்

இன்னா நாற்பது


கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல். நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற் தொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல்.

அறிவிற் சிறந்தவர்கள் வீற்றிருக்கின்ற சபையிலே அறிவில்லாத ஒருவன் புகுவது துன்பத்தைத் தரும். இருட்டிய பின்னர் வழியிற் செல்வது பெரிதும் துன்பம் விளைவிக்கும். விளையக் கூடிய துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆறல் இல்லாதவர்களுக்குத் தவம் துன்பம் தரும். தன்னைப் பெற்றஅன்னையைப் பேணிக் காப்பாற்றாமல் விடுவதும் துன்பமாகும். என்று மனித வாழ்வில் துன்பத்துக்குரிய நான்கு விடயங்களைக் கூறி நீதி புகட்டும் கீழ்க்காணும் பாடல் இந் நூலில் வருகிறது.

ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விட
நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட ‘இன்னா’, இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன. இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் ‘இன்னா’ என எடுத்துக் கூறுதலின் ‘இன்னா நாற்பது’ எனப் பெயர்பெற்றது. இந்நூலை இயற்றியவர் கபில தேவர். ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.

இனியவை நாற்பது


பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால்ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம்மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

எடுத்துக்காட்டு

சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று; சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு:

சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது. இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், ‘ஊரும் கலிமா’ எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது. வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து ‘இனிது’ என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது ‘இனியவை நாற்பது’ எனப்பட்டது. இதனை ‘இனிது நாற்பது’, ‘இனியது நாற்பது’, ‘இனிய நாற்பது’ என்றும் உரைப்பர்.

இனியவை நாற்பது – மூலம்

கடவுள் வாழ்த்து

கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.
(அருஞ்சொற்பொருள்: கண்மூன்றுடையான்- சிவபெருமான்; துழாய்மாலையான்- திருமால்/பெருமாள்; முகநான்குடையான்- பிரமன்; ஏத்தல்-போற்றித்துதித்தல்.)