Siva Vakyar 300 to 400

——————————————————

சிவ வாக்கியார் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு தல யாத்திரை மத வாதம் வேதம் ஓதல் சாதி யாசாரம் முதலானவற்றை எதிர்த்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் உள்ளமே கோயில் என்னும் கொள்கையை அவர் உலகிற்கு உணர்த்துகிறார்.

——————————————————

310 வரை
மூன்று பத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே
தோன்று சேரஞானிகாள் துய்யபாதம் என் தலை
ஏன் றுவைத்த வைத்தபின் இயம்பும் ஐந்தெழுத்தையும்
தோன்றோத வல்லிரேல் துய்யசோதி காணுமே (301)

உம்பர் வானகத்தினும் உலகபாரம் ஏழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே (302

பூவாலய ஐந்துமாய் புனலில் நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய் சிறந்தகால் இரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறு வேறு தன் மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர் காண வல்லரே (303)

அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்துவப்பு நான்குமாய்
ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை
சிந்தையில் தெளிந்தமாயை யாவர்காண வல்லரே (304)

மனவிவகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்
அனைவர் ஓதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல்
கனவுகண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே (305)

இட்டகுண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா
சுட்டமண் கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா
முட்டிநின்ற தூணிலே முளைத் தெழுந்த சோதியை
பற்றி நின்றது ஏதடா பட்டநாத பட்டரே (306)

நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை
நீரினோடு கூடி நின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பிரே (307)

உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
சிறந்தஐம் பலன்களும் திசைத்திசைகள் ஒன்றின் என்
புறம்புமுள்ளும் எங்ஙனும் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே (308)

ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்ற தன்றிது
நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே
ஏதுமன்றி நின்றதொன்றை யான் உணர்ந்த நேர்மையே (309)

பொங்கியே தரித்த அச்சு புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்
அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க்
கொம்புமேல் வடிவுகொண்டு குரு இருந்த கோலமே (310)

320 வரை


மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில்
கண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சு பஞ்சபூதமும்
பண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே (311)

ஒடுக்குகின்ற சோதியும் உந்தி நின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடத்துகாலில் ஏறியே
விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின்று அறிமினோ அனாதி நின்ற ஆதியே (312)

உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும்
மதித்த மண்டலத்தினும் மறைந்து நின்ற சோதிநீ
மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்தபின்
சிரித்தமண்டலத்துளே சிறந்ததே சிவாயமே (313)

திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ
குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள் வந்த சீடனும்
பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும்பட்டதே (314)

விழித்த கண்துதிக்கவும் விந்துநாத ஓசையும்
மேருவும் கடந்த அண்ட கோலமுங் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரஞான வெளியிலே
யானும் நீயு மேகலந்த தென்ன தன்மை ஈசனே (315)

ஓம்நமா என்றுளே பாவையென்று அறிந்தபின்
பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்
நானும் நீயும் உண்டடா நலங்குலம் அது உண்டடா
ஊனும் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடா எனக்குளே (316)

ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதாய்
நல்புலன்க ளாகி நின்ற நாதருக்கது ஏறுமோ
ஐம்புலனை வென்றிடாது அவத்தமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே (317)

ஆணியான ஐம்புலன்கள் அவையும் மொக்குள் ஒக்குமே
யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்த்திரேல்
ஊன்உறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே (318)

ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்க அஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள் மூன் றெழுத்துமே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே (319)

புவனசிக்க ரத்துளே பூதநாத வெளியிலே
பொங்கு தீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில்
தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே

மவுன அஞ்செழுத்திலே வாசிஏறி மெள்ளவே
வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்தபின்
அவனும் நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே (320)

330 வரை


வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமை என்ன வித்தைகாண்
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே (321)

வலுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்
கழின்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதுபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூக்ஷ சூக்ஷ சூக்ஷமே (322)

ஆகிகூவென் றேஉரைத்த அக்ஷரத்தின் ஆனந்தம்
யோகியோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்குமங்கும் இங்குமாய்
ஏகம்ஏக மாகவே இருப்பர்கோடி கோடியே (323)

கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை
நாடிநாடி நாடி நாடி நாளகன்று வீணதாய்
தேடி தேடி தேடி தேடி தேகமும் கசங்கியே
கூடி கூடி கூடி கூடி நிற்பர் கோடி கோடியே (324)

கருத்திலான் வெளுத்திலான் பரன் இருந்த காரணம்
இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்தில்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே (325)

வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான்
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளிமழுங்கி உளறுவான்
வீதி வீதி வீதி வீதி விடைஎருப் பொறுக்குவோன்
சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான் (326)

ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே
காண்மையான வாதிருபம் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையான நரலை வாயில் நங்குமிங்கும் அங்குமே (327)

மிங்குஎன்ற அட்சரத்தின் மீட்டுவாகி கூவுடன்
துங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியில் ஆகும் ஏகம் ஆகையால்
கங்குலற்றுக் கியானமுற்று காணுவாய் சுடரொளி (328)

சுடரெழும்பும் சூட்சமும் சுழிமுனையின் சூட்சமும்
அடரெழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும்
கடலெழும்பு சூட்சந்தன்னை கண்டறிந்தோன் ஞானியே (329)

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலாத சாகரத்தின் தண்மைகாணா மூடர்கள்
முனிலாமல் கோடி கோடி முன்ன றிந்த தென்பரே (330)

340 வரை


சூக்ஷமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடி இருந்த கோவிலே
தீக்ஷையான தீவிலே சிறந்ததே சிவாயமே (331)

பொங்கிநின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும்
தங்குநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமும்
கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே (332)

மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்த செஞ் சுடரிலே
ஞான மானமூலையில் நரலை தங்கும் வாயிலில்
ஒனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே (333)

உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்து நின்ற ஞானமும்
கொதித்தெழுந்து கும்பலாகி ஹூவும் ஹீயும் ஆனதே (334)

கூவுமுகியும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித் தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள்போல் பொருந்திநின்ற பூரணம்
ஆவிஆவி ஆவிஆவி அன்பருள்ளம் உற்றதே (335)

ஆண்மைகூறும் மாந்தரே அருக்கினோடும் வீதியை
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்து நின்ற நாதமே (336)

நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே (337)

ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்துகொம்பின் ஆவியே
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டல்கள் அறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே (338)

வித்திலே முளைத்த சோதி வில்வளைவின் மத்தியில்
உத்திலே ஒளிவதாகி யோனமான தீபமே
ந்ததிலோ திரட்சிபோன்ற நாதனை அறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே (339)

மாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே (340)

350 வரை


மோனமான வீதியில் முடிகி நின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகம் என்ன வேகமே
கானமான மூலையில் கனிந்து நின்ற வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே (341)

உச்சி மத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்து நின்றுலவுமே
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே (342)

அஞ்சு கொம்பில் நின்றநாத மாலைபோல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பறந்து நின்ற மோனமே (343)

சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே அரன் இருந்த ஹூவிலே
இடுதி என்ற சோலையில் இருந்த முச்சுடரிலே
நடுதி என்று நாதம் ஓடி நன்குற அமைந்ததே (344)

அமையுமால் மோனமும் அரன் இருந்த மோனமும்
சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தை உற்று நோக்கிலார் (345)

பாய்ச்ச லூர் வழியிலே பரன் இருந்த சுழியிலே
காய்ச்ச கொம்பின் நுனியிலே கனி இருந்த மலையிலே
வீச்சமானது ஏதடா விரிவுதங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டிநின்ற சோதியே (346)

சோதி சோதி என்று நாடித் தோற்பவர் சிலவரே
ஆதி ஆதி என்று நாடும் ஆடவர் சிலவரே
வாதி வாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர் (347)

சுடரதாகி எழும்பியங்கும் தூபமான காலமே
இடரதாய்ப் புவியும் விண்ணும் ஏகமாய் அமைக்கமுன்
படரதாக நின்ற ஆதிபஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம் எங்கும் ஆண்மையாக நின்றதே (348)

நின்றிருந்த சோதியை நிலத்தில் உற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேல் முனையின் காட்சி தன்னைக் காணுவார்
நன்றி அற்று நரலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும் (349)

வயங்கு மோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும்
கயங்கள் போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி இன்றியே படர்ந்து நின்ற பான்மையை
நயங்கள் கோவென்றே நடுங்கி நங்கையான தீபமே (350)

360 வரை


தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே
தாபமான மூலையில் சமைந்து நின்ற சூக்ஷமும்
சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே (351)

தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியன் இருந்த மூலையில்
நேச சந்திரோதயம் நிறைந்திருந்த வாரமில்
வீசிவீசி நின்றதேவிரிந்து நின்ற மோனமே (352)

உட்கமல மோனமில் உயங்கிநின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே (353)

உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தியில்
சந்திரன் ஒளிகிரணம் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்
கிந்துபோல் கீயில் நின்று கீச்சு மூச்சு என்றதே (354)

செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பர வெளியின் பான்மையே
இச்சையான ஹூவிலே இருந்தெழுந்த ஹீயிலே
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே (355)

ஆறுமுலைக் கோணத்தில் அமைந்த ஒன்பதாத்திலே
நாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திட
கூறுமென்று ஐவர் அங்கு கொண்டு நின்ற மோனமே
பாறுகொண்டு நின்றதுபரந்ததே சிவாயமே (356)

பறந்ததே கறந்த போது பாய்ச்சலூர் வழியிலே
பிறந்ததே பிராணன் அன்றிப் பெண்ணும் ஆணும்
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ
இறந்த போதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே (357)

அருளிருந்த வெளியிலே அருக்கன் நின்ற இருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கி நின்ற வலையிலே
குருவிருந்த வழியினின்று ஹூவும் ஹீயும் ஆனதே (358)

ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே
கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே
தானும் தானும் ஆனதே சமாந்தமாலை காலையில்
வேனலோடும் வாறுபோல் விரிந்ததே சிவாயமே (359)

ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்கும் உள் கமலமும்
மாறுகொண்ட ஊவிலே மடிந்ததே சிவாயமே (360)

370 வரை


வாயில்கண்ட கோணமில் வயங்கும் ஐவர்வைகியே
சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும்
காயவண்டு கண்டதும் கருவூர் அங்கு சென்றதும்
பாயும் என்று சென்றதும் பறந்ததே சிவாயமே (361)

பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையுன் மேவியே
பிறந்ததே இறந்தபோதில் பீடிடாமல் கீயிலே
சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே (362

வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே
மாதத்தி னால்எழுப்பி வாசல் ஐந்து நாலையும்
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரி ஆல யம் கடந்து மூலநாடி ஊடுபோய்

அடிதுலக்கி முடியளவும் ஆறுமா நிலங்கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதி எங்கள் சோதியை
உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே (363)

மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மரத்திலூறல் அன்றுகாண்
மந்திர்ரங்கள் ஆவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே (364)

மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றநீர் மரித்தபோது சொல்விரோ
மந்திரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்து எழுத்துமே (365)

உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவ்வேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச லைத்திறந்து காண வேண்டும் மாந்தரே (366)

ஓரெழுத்து லிங்கமாய் ஓதும் அட்சரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாவெழுந்து நாவிளே நவுன்றதே சிவாயமே (367)

முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த அப்புலன்கள் ஆகுமத்தி அப்புலன்
அத்தர் நித்தர் காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே (368)

மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம்
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்
தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே (369)

வெளியுருக்கி அஞ்செழுத்து விந்து நாத சத்தமும்
தளியுருக்கி நெய்கலந்து சகலசத்தி ஆனதும்
வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்த பின்
வெளிகடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே (370)

380 வரை


முப்புறத்தில் அப்புறம் முக்கணன் விளைவிலே
சிற்பரத்துள் உற்பனம் சிவாயம் அஞ்செழுத்துமாம்
தற்பரம் உதித்து நின்று தாணுஎங்கும் ஆனபின்
இப்புறம் ஒடுங்குமோடி எங்கும் லிங்கம் ஆனதே (371)

ஆடிநின்ற சீவன் ஓர் அஞ்சு பஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ குலாவிநின்ற மூலமோ
நாடுகண்டு நின்றதோ நாவுகற்ற கல்வியோ
வீடுகண்டு விண்டிடின் வெட்டவெளியும் ஆனதே (372)

உருத்தரித்த போது சீவன் ஒக்கநின்ற உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம் அஞ் செழுத்துமாம்
இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே (373)

கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது கரணம் இரண்டு கண்களாய்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்து நாதனே (374)

ஆன வன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு எட்டிலே
ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்தது
மானசோதி உண்மையும் அனாதியான உண்மையும்
ஆனதான தானதாய் அவலமாய் மறைந்திடும் (375)

ஈன்றறெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரம் கடந்தபின்
ஈன்றெழுந்த அவ்வினோசை எங்குமாகி நின்றதே (376)

எங்கும் எங்கும் ஒன்றலோ ஈரேழ் லோகம் ஒன்றலோ
அங்கும் இங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ
தங்கு தாபரங்களும் தரித்தவாரது ஒன்றலோ
உங்கள் எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே (377)

அம்பரத்தில் ஆடும் சோதியான வன்னி மூலமாம்
அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்தது
அம்பரக் குளியிலே அங்க மிட்டுருக்கிட
அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே (378)

வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்தது
மாடிஆடி அங்கமும் அகப்படக் கடந்தபின்
கூடிநின்று உலாவுமே குருவிருந்த கோலமே (379)

விட்டடி விரைத்ததோ வேர் உருக்கி நின்றதோ
எட்டி நின்ற சீவனும் ஈரேழ்லோகம் கண்டதோ
தட்டுவரும் ஆகிநின்ற சதாசிவத்து ஒளியதோ
வட்டவீடு அறிந்த பேர்கள் வானதேவர் ஆவரே (380)

390 வரை


வானவர் நிறைந்த சோதிமானிடக் கருவிலே
வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வாதேனவர்
வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின்
வானெலாம் நிறைந்த மண்ணு மாணிக்கங்கள் ஆனவே (381)

பன்னிரண்டு கால் நிறுத்தி பஞ்சவர்ணம் உற்றிடின்
மின்னியே வெளிக்குள் நின்று வேறிடத்து அமந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆனதே (382)

உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மைக் கண்டது எவ்விடம்
மச்சுமாளி கைக்குளே மானிடம் கலப்பிரேல்
எச்சிலான வாசல்களும் ஏகபோகம் ஆய்விடும்
பச்சைமாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே (383)

வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத்தொலியிலே
கோயிலிட்டு வாவியும் அம்கொம்பிலே உலர்ந்தது
மாயலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும்
வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே (384)

அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாம்
அச்சரத்தையும் திறந்து அகோரமிட்டு அலர்ந்தது
மட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே (385)

கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய்
மயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்
ஆயனை அரனையும அறிந்துணர்ந்து கொள்வீரேல்
தாயினும் தகப்பனோடு தான் அமர்ந்த துஒக்குமே (386)

கோயில் எங்கும் ஒன்றலோ குளங்கள் நீர்கள் ஒன்றலோ
தேயு வாயு ஒன்றலோ சிவனும் அங்கே ஒன்றலோ
ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துவாரது ஒன்றலோ
காயம் ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே (387)

காது கண்கள் மூக்கு வாய் கலந்து வாரது ஒன்றலோ
சோதி யிட்டெடுத்ததும் சுகங்கள் அஞ்சும் ஒன்றலோ
ஓதிவைத்த சாத்திரம் உதித்து வாரது ஒன்றலோ
நாதவீடு அறிந்தபேர்கள் நாதர் ஆவர் காணுமே (388)

அவ்வுதித்த அட்சரத்தின் உட் கலந்த அட்சரம்
சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்தது உண்மையே (389)

அகாரமென்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ
அகாரமென்னும் அக்கரத்தில் அவ்வுவந்து உதித்ததோ
உகாரமும் அகாரமும் ஒன்றி நன்று நின்றதோ
விகாரமற்றி ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே (390)

400 வரை


சத்தியாவது உன்னுடல் தயங்கு சீவன் உட்சிவம்
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே
சுத்தி ஐந்துகூடம் ஒன்று சொல்லிறந்நதோர் வெளி
சத்தி சிவமும் ஆகி நின்று தண்மையாவது உண்மையே (391)

சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே (392)

அக்கரம் அனாதி அல்ல ஆத்துமா அனாதி அல்ல
புக்கிலுந்த பூதமும் புலன்களும் அனாதி அல்ல
தக்கமிக்க நூல்களும் சாஸ்திரம் அனாதி அல்ல
ஒக்க நின்று உடன்கலந்த உண்மை காண் அனாதியே (393)

மென்மையாகி நின்றது ஏதுவிட்டு நின்ற தொட்டது ஏது
உண்மையாக நீயுரைக்க வேணும் எங்கள் உத்தமா
பெண்மையாகி நின்றதொன்றுவிட்டு நின்ற தொட்டதை
உண்மையாய் உரைக்க முத்தி உட்கலந்து இருந்ததே (394)

அடக்கினால் அடங்குமோ அண்டம் அஞ்செழுத்துளே
உடக்கினால் எடுத்த காயம் உண்மையென்று உணர்ந்து நீ
சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதிலாமையால்
விடக்கு நாயு மாயவோதி வேறு வேறு பேசுமோ (395)

உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும்
தன்மையான சக்கரம் காயமும் தரித்த ருபம் ஆனதும்
வெண்மையாகி நீறியே வீளைந்து நின்றதானதும்
உண்மையான ஞானிகள் விரித்துரைக்க வேண்டுமே (396)

எள்ளகத்தில் எண்ணெய்போல எங்குமாகி எம்பிரான்
உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள்
கொள்ளை நாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லிரேல்
வள்ளலாகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே (397)

வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணு உண்டு அங்கு என்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே
காணுமன்றி வேறியாவும் கனாமயக்கம் ஒக்குமே (398)

வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள்
உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள் ஈசன் மன்னுமே (399)

ஆடுகின்ற எம்பிரானை அங்கும்இங்கும் நின்றுநீர்
தேடுகின்ற வீணர்காள் தெளிவதொன்றை ஓர்கிலீர்
நாடிநாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல்
கூடொணாத தற்பரம் குவிந்து கூடல் ஆகுமே (400)